“அறிவித்தால் ஆயிற்றா…?” – தினமணி – தலையங்கம்


இன்றைய (16, மே, 2020 ) தினமணி நாளிதழ் கொரோனா
பாதிப்பையொட்டி, மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு
திட்டங்களை விவரமாக அலசுகிறது. அது அப்படியே கீழே
தரப்பட்டிருக்கிறது.

————————————–

அறிவித்ததால் ஆயிற்றா?
நிதியமைச்சரின் பொருளாதார ஊக்கத் திட்டம்
குறித்த தலையங்கம் –

By ஆசிரியர் |
Published on : 16th May 2020

பொது முடக்கத்தால் முடங்கிப்போய்க் கிடக்கும்
பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு என்ன செய்யப்
போகிறது என்கிற கேள்விக்கு, ஒன்றன் பின் ஒன்றாக
அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

பிரதமா் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரப்
புத்துயிர்ப்பு நிதியுதவித் திட்டத்தின் முதல் பகுதி கடந்த
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது,
பொது முடக்கம் தளா்த்தப்படும் நிலையில், அடுத்தகட்ட
ஊக்குவிப்பில் அரசு இறங்கியிருப்பது வரவேற்புக்குரியது.

ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த நாள்களில்
நிதியமைச்சா் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்படும்
அறிவிப்புகளின் முதல் கட்டமாக அவா் தோ்ந்தெடுத்து
அறிவித்தது குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை
உயிர்த்தெழ வைப்பதற்கான முயற்சி. கொவைட் 19
தீநுண்மித் தொற்றால் மிகப் பெரிய பின்னடைவைச்
சந்தித்திருப்பவை குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள்தான்
என்பதால், அவற்றுக்கு நிதியமைச்சா் முன்னுரிமை
வழங்கியிருப்பது, –

– பயனளிக்கிறதோ இல்லையோ நிச்சயமாக
ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

நிதியமைச்சா் நிர்மலா சீதாராமனின் சிறு, குறு, நடுத்தரத்
தொழில் நிறுவனங்களுக்கான பொருளாதார உதவித்
திட்டம், நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வரையறை மாற்றி
அமைக்கப்படுவது, உத்தரவாதம் இல்லாத ரூ.3 லட்சம்
கோடி அளவிலான வங்கிக் கடனுதவி, ரூ.200 கோடி
வரையிலான எல்லா அரசு ஒப்பந்தப்புள்ளிகளிலும்
உலக அளவிலான பங்களிப்பு ரத்து செய்யப்படுதல்,
அந்த நிறுவனங்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த
நிறுவனங்களின் நிலுவைகள் 45 நாள்களில் வழங்கப்படுதல்
என்பவைதான் இந்த நான்கு பிரிவுகள்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு
ரூ.3 லட்சம் கோடி அளவிலான உத்தரவாதம் இல்லாக்
கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 43 லட்சம்
தொழில்முனைவோர் பயனடைவார்கள். நான்கு
ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படும்
இந்தத் கடன்களுக்கு முதல் ஓராண்டுக்கு வட்டியும்
செலுத்த வேண்டியதில்லை.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையையும்
நிதியமைச்சகம் மாற்றி அமைத்திருக்கிறது. அதன்படி,
ரூ.10 கோடி முதலீடும் – ரூ.5 கோடி விற்றுமுதலும்
கொண்டவை குறு நிறுவனங்களாகவும், ரூ.10 கோடி
முதலீடும் ரூ.50 கோடி விற்றுமுதலும் கொண்டவை
சிறு நிறுவனங்கள் என்றும், ரூ.20 கோடி முதலீடு –
ரூ.100 கோடி விற்றுமுதல் கொண்டவை நடுத்தர
நிறுவனங்கள் என்றும் இப்போது நிர்ணயிக்கப்
பட்டிருக்கின்றன.

உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளிக்கு எப்போதோ
முற்றுப்புள்ளி வைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை
அரசு ஊக்குவித்திருக்க வேண்டும்.

ரூ.200 கோடிக்கும் கீழுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் இந்திய
நிறுவனங்களுக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது
தீநுண்மித் தொற்று இந்தியாவுக்குச் செய்திருக்கும்
மிகப் பெரிய நன்மைகளில் ஒன்று.

இந்த அறிவிப்பால், உடனடியாக எந்தவிதப் பயனும்
ஏற்பட்டுவிடப் போவதில்லை.

அரசின் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தயாரிப்பு மீண்டும்
முழு வீச்சில் நடக்கும்போதுதான் அதன் பயன் சிறு, குறு,
நடுத்தர நிறுவனங்களுக்குக் கிடைக்கப் போகிறது.

45 நாள்களில் பழைய நிலுவைகள் அனைத்தும்
வழங்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்திருப்பது
ஆறுதலானது மட்டுமல்ல, அவசியமானதும்கூட. அரசுத்
துறைகளும், அரசு நிறுவனங்களும் செயல்படத்
தொடங்கி, தேங்கிக் கிடக்கும் நிலுவைத் தொகையை –

உடனடியாகப் பட்டுவாடா செய்யுமா –
செய்ய முடியுமா –
என்பதை யார் உறுதிப்படுத்துவது?

இது குறித்து நிதியமைச்சகம் உத்தரவு போட முடியுமா?

அந்த நிலுவைத் தொகையை உடனடியாக வங்கிகள்
ஏற்றுக்கொண்டு குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு
வழங்கும் என்கிற உத்தரவாதம் வழங்கப்படாத
நிலையில், நிதியமைச்சரின் அறிவிப்பு ஆறுதல் தருமே
தவிர, உதவிக்கரம் நீட்டும் அருமருந்தல்ல!

ரூ.3 லட்சம் கோடி அளவிலான உத்தரவாதம் இல்லாத
வங்கிக் கடன் என்பதும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே
தவிர, நடைமுறை சாத்தியமாகுமா என்பதை
பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வங்கிகள் எந்தவித
இடரையும் (ரிஸ்க்) எதிர்கொள்ளத் தயாராக இல்லை
என்பதுதான் உண்மை நிலவரம்.

அரசியல் தலைமையின் அழுத்தத்தால் வழங்கப்பட்ட
கடன்கள் வாராக் கடன்களாக அழுத்துகின்றன. இதற்கு
வங்கி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டிய சூழல்
உருவாகியிருக்கிறது. அவா்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள்.

உத்தரவாதம் இல்லாக் கடனுக்கு அவா்கள் பொறுப்பேற்கத்
தேவையில்லை என்கிற உத்தரவாதம் அரசால்
வெளிப்படையாக வழங்கப்படாமல் –

எந்த வங்கியும்
குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் கதறலைச்
சட்டை செய்யும் என்று தோன்றவில்லை.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வரைமுறை
மாற்றத்திலும் ஒரு மிகப் பெரிய தவறு இருக்கிறது.
‘முதலீடு அல்லது விற்றுமுதல்’ என்று இருப்பதற்குப்
பதிலாக, ‘முதலீடும் விற்றுமுதலும்’ என்று
வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வரைமுறை
மாற்றத்தால் பெரிய அளவிலான பலன் ஏற்பட்டுவிடாது.

அது தெரிந்தே சொல்லப்பட்டதா அல்லது புரிதலின்மையா
என்பதை நிதியமைச்சா்தான் விளக்க வேண்டும்.

நிதியமைச்சரின் பொருளாதார ஊக்கத் திட்டத்தில்
குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர்கள் குறித்த
கவலை தெரிகிறது. அவா்களுக்கு உண்மையாகவே
உதவிக்கரம் நீட்டுவதற்கான அக்கறை தெரியவில்லை.

அரசுக்கு நேரடியாக எந்தவித நிதிச் சுமையும்
ஏற்பட்டு விடாமல், வங்கிகளைக் கைகாட்டி விட்டு,

நல்ல பெயரைத் தட்டிச் செல்ல நினைக்கும்
நிதியமைச்சகத்தின் சாதுா்யம் தெரிகிறது!

——————————-

பின் குறிப்பு –

இது குறித்து கருத்து சொல்ல விரும்பும் நண்பர்கள்
பின்னூட்டங்களின் மூலம் தெரிவிக்கலாம்.
என்னுடைய கருத்தையும் பின்னூட்டங்களூடே
தெரிவிக்கிறேன்.

.
—————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to “அறிவித்தால் ஆயிற்றா…?” – தினமணி – தலையங்கம்

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஏ மா ற் ற ம் ….

 2. புவியரசு சொல்கிறார்:

  எத்தனை காலந்தான் ஏமாற்றூவார் இந்த நாட்டிலே
  சொந்த நாட்டிலே; நம் நாட்டிலே ?

 3. Gopi சொல்கிறார்:

  ஏமாற்றாதே – ஏ
  மா றா தே –

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…. நிதியமைச்சரிடமிருந்து ஏராளமான தாராளமான அறிவுப்புகளை நான் நிறையக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். இதில் எதனையாவது செயல்படுத்தியிருக்கிறார்களா என்பதை முடிந்தால் அலசி எழுதணும். இதற்கு முன்பும் பல சமயங்களில் அறிவிப்புகள் வந்துள்ளன. அதனால் நான் வெறும் அறிவிப்புகளைக் கண்டு ஏதோ தீர்வு வந்ததுபோல நினைக்கவில்லை. இடுகையில் (தலையங்கத்தில்) குறிப்பிட்டுள்ள கவலைகள் உண்மையானதுதான்.

  //அரசியல் தலைமையின் அழுத்தத்தால் வழங்கப்பட்ட கடன்கள் வாராக் கடன்களாக அழுத்துகின்றன// – திரும்பத் திரும்ப நாம் ‘அரசியல் தலைமை அழுத்தம்’ என்று சொல்கின்றோம். சமூக அழுத்தத்தால் நான் கொலை செய்தேன் என்று ஒருவன் சொன்னால் அவனை கோர்ட்டில் விட்டுவிடுவார்களா? இவங்க காசு வாங்கிக்கிட்டு கடன் கொடுத்துவிட்டு, அரசியல் தலைமைமேல் பழியை எப்படிப் போடமுடியும்? CODE of conductல் இல்லாததை ‘அரசியல் அழுத்தத்தால் செய்தேன்’ என்று எப்படிச் சொல்லமுடியும்? முன்பு எத்தனை அதிகாரிகள் ‘செய்ய மாட்டேன் லீவில் போகிறேன்’ என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இவன் திருடன். அதனால் இன்னொரு திருடனை மாட்ட நினைக்கிறான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   தலையங்கத்தின் மையக்கருத்து –

   ” உண்மையாகவே உதவிக்கரம்
   நீட்டுவதற்கான அக்கறை
   தெரியவில்லை.

   அரசுக்கு நேரடியாக எந்தவித
   நிதிச் சுமையும் ஏற்பட்டு விடாமல்,
   வங்கிகளைக் கைகாட்டி விட்டு,

   நல்ல பெயரைத் தட்டிச் செல்ல நினைக்கும்
   நிதியமைச்சகத்தின் சாதுா்யம் தெரிகிறது! ”

   .
   – நீங்கள் வழக்கம்போல்,
   (பாஜக) அரசைப்பற்றிய
   விமரிசனத்தைத் தவிர்த்து விட்டு,
   திசை திருப்புவதில் உங்கள் சாமர்த்தியத்தை
   மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறீர்கள்… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. செல்வராஜ். ம சொல்கிறார்:

  இரண்டு மாதமாக தொழில் செய்ய முடியாமல் இருக்கும் தினக்கூலி ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் எங்களைப்பற்றி மத்திய அரசு எந்த கவலையும் பட்டதாக தெரியவில்லை.

 6. jksmraja சொல்கிறார்:

  பசு மாடு,
  ஜெய் ஸ்ரீ ராம்,
  பாக்கிஸ்தான்
  என்று சொன்னாலே ஓட்டு போடக்கூடிய கூட்டம் இருக்கும் வரை, யாரை பற்றியும் கவலை பட மாட்டார்கள்

  • புதியவன் சொல்கிறார்:

   இதே வழக்கம்தானே எதிர் முகாமிலும் இருக்கிறது. தில்லி காங்கிரஸுக்குப் போன 16% கண்ணை மூடிக்கொண்டு ஆம் ஆத்மிக்குப் போனதன் காரணம் என்ன? ஏதோ சிறுபான்மையினர் எல்லோரும் நாட்டு நலனை எண்ணி வாக்களிப்பதுபோல எழுதலாமா? சிறுபான்மையினர், அவங்க மதத்துக்காக வாக்களிக்கும்போது, சிறுபான்மையினரை காங்கிரஸ்/திமுக கும்பல் ஆட்டிவைத்து பயமுறுத்தி தங்களுக்கு வாக்களிக்கச் செய்யும்போது, பாஜக, அதைப் பயன்படுத்தி இந்து மதத்தவரை போலரைஸ் செய்கிறார்கள். அதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை.

   அதிமுகவை, எந்த மசூதி பக்கமும் வாக்கு சேகரிக்க விடவில்லை, எதிர்ப்பு காட்டினார்கள் என்பதை தொலைக்காட்சியில் பார்த்தோமே. அதன் காரணம் என்ன?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    இங்கேயும் அதே கதை தான்.
    காங்கிரஸ் மட்டும் யோக்கியமா…
    காங்கிரஸ் செய்ததைத் தானே
    பாஜகவும் செய்கிறது ….
    இது தான் உங்கள் வாதம்…

    “இவர்” செய்தது சரி இல்லை என்று
    சொன்னால் –

    “அவர்” செய்தது கூடத்தான் சரியில்லை
    என்பது உங்கள் நிரந்தரமான ஃபார்முலா.

    பேச்சு இவரைப்பற்றி தான்.
    ஆனால், இவர் செய்தது சரியில்லை
    என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவே
    மாட்டீர்கள்… 🙂 🙂
    பிரணமாதம்…

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • shan சொல்கிறார்:

   உண்மையில் இந்த கும்பலை உருவாக்கியவர்களும், மற்றும், பிஜேபி யை நோக்கி இந்த கும்பலை நகர்த்துபவர்களும் உங்களின் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையின காவலர்கள் என்று மார்தட்டி கொள்ளும் கட்சியினை சார்ந்தவர்களே. இவர்களை போன்றவர்கள் பெரும்பான்மை மதத்தை சார்ந்தவர்களை இழிவாக பேசும்போது, எப்பொழுதாவது எதிர்த்து கேள்வி கேட்டு இருக்கிறீர்களா.
   இவர்களை பிஜேபி அறுவடை செய்வதில் மாயம் ஒன்றும் இல்லை. பெரும்பான்மை மதத்தினருக்கு இந்த நாட்டில் நியாயம் (மத மாற்றம், கடவுளை கொச்சை படுத்துதல் எதிராக ) எப்பொழுது கிடைக்கிறதோ, அதுவரை
   பிஜேபிக்கு வக்காலத்து வாங்குபவர்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.
   நாடே குட்டிசுவரானாலும் அவர்களுக்கு இந்த கும்பல் தங்களுக்கு ஆதரவை தெரிவித்து கொண்டு தான் இருப்பார்கள். நீங்கள் அவர்களை சங்கிகள் , மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் என்று கேலி செய்ய செய்ய அவர்கள் மேலும் முனைப்பாக செயல் படுவார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.