( நேற்றைய தொடர்ச்சி…) ரமண மகரிஷி பற்றி இளையராஜா – பகுதி-2


( நேற்றைய தொடர்ச்சி…) –
டி. எஸ். சுப்ரமணியன்:
ஸ்ரீ ரமண மகரிஷி உடலைக் கடந்தவர் என்று
சொல்கிறீர்களா?

அவர் தனது உடலைக் கடந்தவர் என்று நான் சொல்லவே
இல்லை. உங்களுக்கு உடல் இருந்தால் மட்டுமே அதைக்
கடப்பதற்கான முயற்சிகள் தேவை. உடல் இல்லாதவன் எதற்கு
அதைக் கடப்பதற்கான தேவை என்ன இருக்கிறது.

தன்னைப் பார்க்க வரும் நபர் யாரையும் அவரவருடைய
உடல் வடிவாக பகவான் பார்க்கவில்லை. அவர் அப்படிப்பட்ட
லௌகீக தேகம் அல்ல. அவர் இணைசொல்ல முடியாத ஞானி.
தனக்கென்று தனியான வடிவம் இல்லாத நபர் தான் ஞானி.
“ஒரு இருப்பு. அதுதான் இருப்பு. அது வாழ்வதில்லை.” நமது
குறுகிய புத்தி சார்ந்த எண்ணங்களின் அடிப்படையில்
வாழ்க்கையை நடத்திச் செல்லும் நமது கணக்கை பகவானின்
மேல் போட்டுப் பார்த்தல் தகுமா?

அவருடையது அவருக்கேயான வாழ்க்கை. நாம் அவரை
உடல் ரீதியான, பௌதீக வடிவமாகவே பார்க்கிறோம்.
புற்றுநோய் அவர் உடலைத் தாக்கியது. அது அவரது உடலில்
இருப்பதை வெளிப்படுத்திய பின்னர், ஒரு உடல்
என்னவெல்லாம் அசௌகரியங்களைக் கடக்கவேண்டுமோ
அதையெல்லாம் கடந்தது- அவர், அவரது உடல் இல்லை
எனினும். அதனால், பகவான் அவர் உடல் மட்டுமே அல்ல.
அது பொய்யென்றால், இன்று அவரது இருப்பை எப்படி நாம்
அனுபவிக்க முடியும். அவர் இங்கே இருக்கிறார்.

அவர் இங்கே இப்போது இருக்கிறார். தனது பக்தர்களுக்கு
அவர் பதிலளிக்கும்போது, தனது ஆத்மா பிரத்யக்ஷமானது
என்று தெரிவித்துள்ளார். நான் அதை ஒவ்வொரு நிமிடமும்
உணர்கிறேன். பகவான் இங்கே தெளிவாக இருக்கிறார்.

பகவானுக்கு நீங்கள் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?

நான் எப்படி ஈர்க்கப்பட முடியும். பகவான் தான் என்னைப்
பிடித்தார். நான் ஒரு தெருநாய். சாக்கடையில் விழுந்துகிடந்த
தெருநாய் நான். அவர் தனது முழுக்கையால் அல்ல,
இரண்டு விரல்களால் என்னைத் தூக்கி வெளியே எடுத்துப்
போட்டுவிட்டு அவர் போய்விட்டார். அது மட்டுமே
சொல்லமுடியும்.

அவர்தான் இங்கே என்னைக் கொண்டுவந்தார். நான் வரவில்லை.
ரமணாசிரமம் வருவதற்கான நோக்கம் எனக்கு இல்லை.
அவர் தான் என்னைக் கொண்டு வந்தது. எப்படி என்னை
இங்கே கொண்டுவந்தார் என்பதை என்னால் விவரிக்க முடியாது.
அது மிகப் பெரிய விஷயம். ஒரு அனுபவத்தை பெறுவது வேறு,
அந்த உணர்ச்சிகளை உணர்வுபாவத்துடன் வெளிப்படுத்துதல்
என்பது வேறு. எதையும் அனுபவிக்காமல் ஊகத்தில் அதுபோன்ற
அனுபவங்களைப் பற்றி உளறிக்கொண்டிருப்பது வேறு.
நான் அடைந்ததை விவரிக்க முடியாது, அனுபவிக்க மட்டுமே
முடியும்.

‘நான் யார்?’, சுய விசாரம், உள் அமிழ்தல், சும்மா இரு போன்ற
விஷயங்களில் உங்களை ஈர்த்த ரமணரின் போதனை எது?

நமது குறுகிய புத்திதான் நாம் கேட்கும் அத்தனை
கேள்விகளுக்கும் அடிப்படை. நாம் கடந்து செல்லும் உண்மையான
அனுபவங்களின் அடிப்படையில் கேள்விகளைக் கேட்பதில்லை.

பத்திரிகை சார்ந்து ஒரு பதிலை வாங்கவேண்டித்தான் என்னிடம்
இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வியை பல
ஆண்டுகளாகப் பலர் மூலமாக நான் எதிர்கொண்டு வருகிறேன்.
நான் அப்படியான ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால்,
விஷயம் அத்தோடு முடிவுக்கு வந்துவிடாதா?

அப்படி முடிவுறாத விஷயமெனில், நீங்கள் அப்படிப்பட்ட
கேள்வியைத் திரும்பக் கேட்கமுடியாமல் ஆகிவிடுமல்லவா?
அந்த அனுபவத்துக்குள் செல்லாமல் நீங்கள் அதைப்
புரிந்துகொள்ளவே முடியாது. “ நான் யார் என்ற சுய விசாரத்தில்
எவ்வளவு தூரம் முன்னேறிப் போய் இருக்கிறீர்கள்? என்ற
கேள்வியைக் கேட்பதன் மூலம் உங்களுக்கு நியாயம்
கிடைத்துவிடாது. அதுசார்ந்த சுய அனுபவம் எனக்கு
இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒருவர் உங்களைப் பார்க்க ஒருவர் வருகிறார்
என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்த்து நீங்கள்
முகஞ்சுளித்து ஏன் இவன் இங்கே வந்திருக்கிறான் என்று
யோசிக்கிறீர்கள்.

ஆனால் வந்த நபரிடம் அந்த எண்ணங்கள் இல்லை.
நீங்கள்தான் அவரைப் பார்த்து முகம்சுளிக்கிறீர்கள். அதனால்
உங்களது எண்ணங்கள் தான் உங்களுக்குத் தீங்காகிறது.
அவருக்கு அது தீங்கு அல்ல. தீமை உங்களுக்குப் பிறரிடமிருந்து
நேர்வதில்லை. தீமையென்று உங்களது எண்ணம்தான் நினைக்கிறது.

சோதனை வரும்போது அதை துயரப்பாடாகப் பார்க்காதீர்கள்.
வாழ்க்கையின் ஒரு அங்கம் அவையெல்லாம். உங்கள் கேள்வி
ஆன்மிக ரீதியானது என்று நினைத்து என்னிடம் அந்தக்
கேள்வியைக் கேட்கிறீர்கள். உங்கள் உடல், புத்தி, இதயம் அல்லது
புத்திசாலித்தனத்தைச் சோதிக்கும் சம்பவங்களை எதிர்கொண்டு
செயலாற்றுங்கள். சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கஷ்டங்கள்
கஷ்டங்களாகத் தெரியாமலேயே மறைந்துவிடும். ஏன் உங்கள்
துயரங்களை எண்ணிக்கொண்டு காலத்தை வீணாக்குகிறீர்கள்.

பகவான் ரமணர் தொடர்பிலான அனுபவங்கள் சிலவற்றைச்
சொல்லமுடியுமா?

மகாத்மா காந்தி சுடப்பட்ட போது, மரண வேதனை 15 நிமிடங்கள்
நீடித்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, மரண வாதனை
மூன்று நாட்கள் இருந்தது.

பகவானுக்கு நான்கு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பொதுவாக அளிக்கப்படும் மயக்க மருந்து கொடுக்கப்படவேயில்லை.

அப்போது சிறுவனாக இருந்த திருச்சி சுவாமிகளுக்கு, நான்கு
முறையும் ரமணருக்கு நடந்த அறுவை சிகிச்சையை
அருகேயிருந்து பார்க்க வாய்த்துள்ளது. பெங்களூருவில்
புவனேஸ்வரி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்.

ரமணருக்கு நடந்த அறுவை சிகிச்சையை அவர் இப்படி
விவரிக்கிறார். “அங்கே ஆறு மருத்துவர்கள் இருந்தனர்.
பகவானுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட வேண்டுமென்று
வலியுறுத்தினார்கள். ரமணர் அதற்கான காரணத்தைக் கேட்டார்.

அப்போதுதான் வலி தெரியாது என்று மருத்துவர்கள்
சொன்னார்கள். அவர் மயக்க மருந்தை மறுத்து, அறுவை
சிகிச்சை செய்ய வேண்டிய புஜத்தைக் காட்டி முகத்தை மட்டும்
திருப்பிக் கொண்டார். நாங்கள் அவரைப் பார்த்தோம்.
அன்றலர்ந்த தாமரை போல அவர் முகம் இருந்தது.
முகத்தில் ஒரு சுருக்கம் கூடத் தெரியவில்லை.” என்று
நினைவுகூர்கிறார்.

பகவான் அவரது உடல் மட்டும் அல்ல என்பதற்கு
இதுவொரு சாட்சியம் போதாதா?

பகவானுக்கு நடக்க முடியாமல் போய், படுக்கையில்
கிடந்தபோது, துயருற்ற பக்தர்கள் அவரிடம் கேட்கின்றனர்.
“பகவானே, எங்களிடமிருந்து போய்விடுவீர்களா? இந்த
உடல் வடிவில் கூடுதல் பொழுது எங்களுடன் இருக்க
முடியாதா?” என்று கேட்கின்றனர். பகவான் இப்படிப்
பதில் சொல்கிறார்.

“இந்த ஆறடி உயரக் கட்டையையா பகவான் என்று பார்க்கிறீர்கள்?”
என்று கேட்டார் ரமணர். அவர் உடலைப் பற்றி கவலையே
படவில்லை. அவர் தன் உடலைவிட்டுச் சென்றபோது,
அருணாச்சலக் குன்றில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றி மறைந்தது.

“உங்களைப் புறக்கணிக்க ஒருவர் வேண்டும்” என்று அவர்
சொல்வதின் பொருளை அவர் தனது உடலை நடத்திய
விதத்திலிருந்து உணர முடியும்.

அவர் தனது வாழ்வை மிக இயற்கையாக, சாதாரணமாக
அதன் போக்கில் கழித்தார். தென்றலைப் போல காற்றைப் போல
இயற்கையின் சுத்த வடிவமாகக் கழிந்தது அவரது வாழ்க்கை.
நாம் தான் அவரை உடல் ரீதியான வடிவமாகப் பார்க்கிறோம்.

நாம் அவரை உடல் வடிவமாகப் பார்ப்பதால்தான், அவர் முக்தி
அடைந்தபோது அவரது பக்தர்கள் தாங்கமுடியாத துயரத்தை
அடைந்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில்
அமைந்திருக்கும் ரமணேஸ்வர சன்னிதி லிங்கத்தின் முன்னால்
நிற்கும்போதெல்லாம், அவர் உடல் புதைக்கப்பட்ட போது
அங்கே நிலவியிருந்த துயரத்தைப் பார்க்கிறேன்.

வாழ்வில் தங்களது ஒரே நம்பிக்கையாகவும், கண்ணுக்கு
முன்னால் நேரடியாகப் பார்த்த கடவுள் அவதாரமாகத் திகழ்ந்த
வழிகாட்டியாகவும் இருந்தவரின் பிரிவு அவரது பக்தர்களிடம்
ஏற்படுத்தியிருக்கும் துயரம் எப்படியிருந்திருக்கும் என்பதை
நினைத்துப் பாருங்கள். அந்த துயரத்தின் அதிர்வலைகளை
உணர்வதற்கு எப்போதும் முயன்றுகொண்டிருக்கிறேன்.

அவரது சன்னிதியில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்குபெறும்போதும்
அவரது பக்தர்களை மட்டுமே நினைப்பேன். பகவானின் உடல்
பூமிக்குள் இறக்கப்படும் போது உடைந்து அவர்கள் அழுது
அரற்றுவதை நினைத்துப் பார்ப்பேன்.

பகவானின் புனிதப் பிரகாசமும் அவரது இருப்பும் என்னைச்
சுற்றி இருந்துகொண்டிருக்கிறது. இந்த உணர்வுகளை விட,
அவரது புனித இருப்பு, களங்கமின்மையிலிருந்து
பகவானிடமிருந்து வரும் பரிசுத்த சக்தியிலிருந்து வரும்
அதிர்வுகளை பக்தர்கள் உணர்கிறார்கள்.

யாரை எப்போது இங்கே கொண்டுவர வேண்டுமென்று
அவருக்குத் தெரியும். இங்கே வரும் வெளிநாட்டினரைப்
பாருங்கள். அவர்களை அவர் எப்படிக் கொண்டுவந்தார் என்று
நமக்குத் தெரியாது. ஏதோ ஒன்றால் முடுக்கப்பட்டு அவர்கள்
இங்கே வரவழைக்கப்படுகின்றனர்.

நிறைய பேர் தங்களது மொத்த வாழ்க்கையையும் இங்கேயே
கழிக்கின்றனர். ஈராக்கிலிருந்து வந்த ஒரு பெண் என்னிடம்
சொன்னார். “பகவானை விட வேறு எதிலும் எனக்கு நாட்டம்
கிடையாது. பகவானைத் தவிர்த்து வேறு எதுவும் எனக்கு
வேண்டவும் வேண்டாம். இங்கே இந்தியவில் எனக்கு எதுவும்
கிடையாது. பகவான் எப்படி வேண்டுமானாலும் என்னை
நடத்திக் கொள்ளலாம். இந்தியாவுடன் அவரைத் தவிர
வேறு உறவு இல்லை.”

நான் சொன்னது ஒரே ஒரு உதாரணம்தான். அவரைப்
போன்று எண்ணற்றவர்கள் இங்கே இருக்கின்றனர்.
அன்னதானத்தின் போது இங்கே சாப்பிடுவதற்காக ஆசிரமத்துக்கு
தினம்தோறும் வருகின்றனர். ரமணரது புனித இருப்பின்
பிரகாசத்தைக் காட்டும் நிகழ்ச்சிகள் இவை.

“எங்கே போனாலும் மோட்சத்தை நீ அடையமுடியாது.
இங்கே அதற்கு வரவேண்டும்” என்று துறவிகள் சொல்வார்கள்.
ஆனால் பகவான் அப்படிப் பெருமை கொண்டதேயில்லை.
“நான் காக்காய்க்கு மோட்சம் கொடுத்திருக்கிறேன்.
நான் மானுக்கு மோட்சம் அளித்திருக்கிறேன். பசுவுக்கு, நாய்க்கு,
பாம்புக்கு மோட்சம் அளித்திருக்கிறேன்.” என்றெல்லாம் அவர்
சொல்லவேயில்லை. அவர் குரங்குக்குக் கூட மோட்சம்
அளித்திருக்கிறார். இதையெல்லாம் செய்ததற்குக் காரணம்
மிகப் பெரிய ஆன்மிக குரு என்று காட்டிக் கொள்வதற்காகவா?

அவர் வெறுமனே ஒரு கோவணத்தையே அணிந்தார். வெறும்
உடலுடன் கையில் தடியுடன், பார்ப்பவர்களிடம் எப்படி
இருக்கிறாய்? என்ன செய்கிறாய்? என்று பேசிக் கொண்டிருந்தவர்.

தியானத்தால் பெறக்கூடிய அத்தனை சக்திகளின் முழுவடிவம்
பகவான். அவரால் பல்வேறுவிதமான உலகங்களை உருவாக்க
முடியும். “உன்னுடன் இப்போது அரட்டை அடித்துக்
கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான்
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?
இருபது வித்தியாசமான ரூபங்களுடன் இருபது உலகங்களில்
இருக்கிறது.” என்று ஒருமுறை அவரே கூறியிருக்கிறார்.

அதேவேளையில் சாமானிய மனிதர்களுடன் அவரும்
சாமானியராக இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவரை உலகில்
வேறெங்காவது பார்க்க முடியுமா? அவரைப் போன்ற குருவை
வேறு எங்கே பார்த்திருக்கிறோம்?

குருக்கள் என்று தன்னைக் கூறிக்கொள்பவர்கள் யாரும்
குருவே அல்ல. ஒரே ஒரு முறை ஒருவனைப் பார்த்து,
மோட்சம் அளிப்பவன் தான் உண்மையான குரு.
எத்தனை பேருக்கு பகவான் மோட்சம் அளித்தார் என்று
நமக்குத் தெரியாது. அவரால் எத்தனை மனிதர்கள் புனிதகதி
அடைந்தார்கள் என்றும் தெரியவில்லை. அதைத் தெரிந்து
கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை.

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

…….

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…

…….

.
—————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ( நேற்றைய தொடர்ச்சி…) ரமண மகரிஷி பற்றி இளையராஜா – பகுதி-2

 1. Raghavendra சொல்கிறார்:

  அருமை.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  பகவானுக்கு நீங்கள் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?

  நான் எப்படி ஈர்க்கப்பட முடியும். பகவான் தான் என்னைப்
  பிடித்தார். நான் ஒரு தெருநாய். சாக்கடையில் விழுந்துகிடந்த
  தெருநாய் நான். அவர் தனது முழுக்கையால் அல்ல,
  இரண்டு விரல்களால் என்னைத் தூக்கி வெளியே எடுத்துப்
  போட்டுவிட்டு அவர் போய்விட்டார். அது மட்டுமே
  சொல்லமுடியும்.

  அவர்தான் இங்கே என்னைக் கொண்டுவந்தார். நான் வரவில்லை.
  ரமணாசிரமம் வருவதற்கான நோக்கம் எனக்கு இல்லை.
  அவர் தான் என்னைக் கொண்டு வந்தது. எப்படி என்னை
  இங்கே கொண்டுவந்தார் என்பதை என்னால் விவரிக்க முடியாது.
  அது மிகப் பெரிய விஷயம். – அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.