…
…
…
லாக்-டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுக்கு வருகிறது.
எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும்,
பகுதி பகுதியாக நாம் அனைவருமே நிச்சயமாக அடுத்த
சில நாட்களில் வெளியே வரத்தான் போகிறோம்.
45 நாட்களுக்கு மேல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்
கிடந்து விட்டு, வெளியே வரப்போகிறோம்.
இந்த கொரோனா நோய் பற்றிய செய்திகளும், உலகம்
முழுவதும் அது ஏற்படுத்தி இருக்கும் நாசங்களையும்,
உயிர்ப்பலிகளையும் 45 நாட்களாக தொலைக்காட்சிகளில்
பார்த்து பார்த்து, அனைவரின் மனதிலும் பய உணர்வு
மேலோங்கி இருக்கிறது.
வெளியே இன்னும் ஆபத்து முழுவதுமாக நீங்கவில்லை….
எப்போது வேண்டுமானாலும் நாம் தாக்குதலுக்கு உள்ளாகலாம்
என்கிற உணர்வோடு தான் வெளியே வர வேண்டும்.
தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும். குறைந்த பட்சம்
5 அடி இடைவெளியை கடைபிடித்தாக வேண்டும்.
எதையுமே தொடாமல் வெளியே நகர முடியாது. ஆனால்,
எதைத்தொட்டாலும், அச்சத்துடனும், சந்தேகத்துடனுமே
அணுக வேண்டும். நெருங்கிய நண்பர்களிடம் கூட – அருகில்
நின்று பேச முடியாது.
70-80 பேர்களுடன் பயணித்த பஸ்கள் இப்போது 25 பேருக்கு
அதிகமாக ஏற்றாது. காத்திருக்க வேண்டும். அதிக விலை
கொடுக்க வேண்டும். ஓட்டல்களில் சாப்பிட பயமாக இருக்கும்.
வெளியே ஒரு காப்பி /டீ சாப்பிடக்கூட பயமாக இருக்கும்…
தமிழகம் முழுவதும் சுத்தமாகி விட்டது என்று அறிவிக்க
குறைந்த பட்சம் இன்னும் 3 மாதங்கள் ஆகலாம்… அதுவரை
இந்த நிலை தொடரும். வெளியே நிலைமை சீரடைந்த
பிறகும் கூட, மனதளவில் அச்சமும், சந்தேகமும் போக
இன்னும் கூடுதல் நாட்கள் பிடிக்கலாம்.
எல்லாரிடமும் இருந்த கொஞ்சநஞ்ச சேமிப்புகள் அனைத்தும்
தீர்ந்திருக்கும். எல்லாருக்குமே பண நெருக்கடி இருக்கும்.
அவசரத்துக்கு நெருங்கிய நண்பர்களால் கூட / நண்பர்களுக்கு கூட
உதவ முடியாது.
மனம், உடல் – இரண்டுமே மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப
இன்னும் சில மாதங்கள் ஆகலாம்…
அதற்கு முதலில் –
நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு
அரசாங்கமோ, அலுவலகங்களோ உதவ முடியாது.
குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களோடு
மனம் விட்டுப் பேசி பாரத்தை, அச்சத்தை, சங்கடங்களை
குறைத்துக் கொள்ள வேண்டும்.
மனதிலிருக்கும் இறுக்கத்தை விலக்கி விட்டு,
விசாலமாக தளர்த்திக் கொள்ள வேண்டும்.
மனம் இருந்தால் – மார்க்கம் நிச்சயம் உண்டு.
இந்த அச்சத்தில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் –
நிச்சயமாக மீண்டு வருவோம்… துணிவும், தெளிவான
சிந்தனையும் தான் நமது உடனடி, வருங்காலத் தேவைகள்…
நேற்று திரு.சுகி சிவம் அவர்களின் காணொளி ஒன்றைப்
பார்த்தேன். சரியான நேரத்தில், சரியான
ஆலோசனைகளைச் சொல்கிறார்.
அனைவரும் காண வேண்டுமென்று நினைத்தேன்.
பகிர்ந்து கொள்கிறேன் – கீழே …
…….
…….
.
———————————————————————————————————–
இன்று நான் வங்கி வரைக்கும் சென்று வர வேண்டியிருந்தது. மக்களின் மன நிலை , நீங்கள் சொல்லுவது போல் இல்லை. கரோனா எந்த வித மாற்றங்களையும் ஏற்படுத்த வில்லை என்பதேஉண்மை. திறந்திருந்த டீ கடைகளும், அங்கு மாஸ்க் அணியாமல், ஒருவருக்கொருவர் அருகிலும், கும்பலாகவும் இருக்கும் நிலையையே கண்டேன்.
இது மேலும் நோய் தொற்றை அதிகப்படுத்தும் என்பதே உண்மை. ஆனாலும் இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதே நான் உணர்ந்தது
வாய்க்கு வந்ததை உளற வேண்டாம்.
தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் டீக்கடைகள் திறந்து இல்லை.