அற்புதமான பல சிறப்புத் திட்டங்கள் …!!!கொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் அனைத்துமே
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், தொழில் நிறுவனங்கள்
மூடப்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளதையடுத்து, பல நாடுகள், மக்களின் வாழ்வாதாரத்தை
பாதுகாக்கவும், தொழில் துறை மீண்டும் இயல்பு நிலைக்கு
திரும்பவும், ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன.

– நிதியமைச்சர், இதுவரை இல்லாத அளவிற்கு, சிறிய, பெரிய
தொழில் நிறுவனங்களுக்கான ஊக்கச் சலுகை திட்டங்களை,
பார்லிமெண்டில் அறிவித்துள்ளார். இதில், முதற்கட்டமாக,
31.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு உத்தரவாத
கடன்களை அறிவித்துள்ளார்.

இத்தொகை, ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும், வாடகை,
ஊதியம், மூலப் பொருட்கள் கொள்முதல், பங்கு முதலீடு
உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வழங்கப்படும்.

இத்துடன், நிறுவனங்கள், ஊழியர்களை தக்க வைத்துக்
கொள்ளும் திட்டத்தையும், நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு நிறுவனம், அதன் சில ஊழியர்களுக்கோ
அல்லது ஒட்டு மொத்த ஊழியர்களுக்கோ, மீண்டும் வேலை
துவங்கும் வரை, விடுப்பு அளிக்கும்பட்சத்தில், அவர்களின்,
80 சதவீத ஊதியத்தை, அரசே வழங்கும். எனினும், இது,
மாதம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் ஊதியம் பெறுவோருக்கு
மட்டுமே பொருந்தும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு, 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதனால்,10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோவது
தடுக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன், சுய
தொழில் செய்வோருக்கான வருவாய் ஆதார திட்டத்தின் கீழ்,
‘வாட்’ வரி தள்ளுபடி, வரி செலுத்த கூடுதல் அவகாசம்
உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தாண்டு சில்லரை விற்பனை, ஓட்டல், சுற்றுலா
ஓய்விடங்கள் ஆகிவற்றுக்கான வணிக வரி தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏழு லட்சத்திற்கும் அதிகமான
வர்த்தகர்கள் பயன்பெறுவர்.

இது தவிர, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள நிறுவனங்கள்,
வலைதளங்களில் புதுமையான தொழில் செய்யும்
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உதவ,
4,750 கோடி ரூபாய் முதலீட்டில், வருங்கால நிதியம்
என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய நிறுவனங்களுக்கு, 24 லட்சம் ரூபாய் வரை,
அரசின், 100 சதவீத உத்தரவாதத்துடன் கடன் வழங்கும்
திட்டமும், அரசின் பரிசீலனையில் உள்ளது.

– நிதானமாக எல்லா திட்டங்களையும் பார்த்து விட்டீர்களா…?

இந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டிருப்பது
நீங்கள் நினைத்தது போல் இந்தியாவில் அல்ல –
பிரிட்டனில்….!!! இருந்தாலும் நாமும் இதில் கொஞ்சம்
பெருமை கொள்ளலாம் …..

காரணம் – பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இத்தகைய
திட்டங்களை எல்லாம் அறிவித்திருப்பது பிரிட்டனின்
நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான
ரிஷி சுனக்…!!!
….

….

( லண்டனில் பிறந்த பஞ்சாபியரான ரிஷி சுனக்,
இந்தியாவின் மாப்பிள்ளை…!!! Infosys நிறுவனத்தை
உருவாக்கியவரான திரு N.R. நாராயணமூர்த்தி அவர்களின்
மகள் அக்-ஷதாவை திருமணம் செய்திருப்பவர்…!!! )

ஐரோப்பாவைச் சேர்ந்த, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின்,
ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும், பொருளாதார
மீட்புக்கான ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன.

பிரான்ஸ், 20 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்களுக்கு,
அவசர நிதி, 8.20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என,
தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக,
82 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன்,
வரி தள்ளுபடி சலுகையும் அறிவித்துள்ளது.

ஜெர்மனி, 5 ஊழியர்கள் வரை உள்ள தனியார்
நிறுவனங்களுக்கு, மாதம், 7.38 லட்சம் ரூபாய் வீதம்,
மூன்று மாதங்களுக்கு வழங்குகிறது.
இது, 10 ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு, 12.30 லட்சம்
ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது.

இதேபோல, 27 நாடுகள் இணைந்த, ஐரோப்பிய கூட்டமைப்பும்,
மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கி வருகின்றன.

அடுத்த, ஏழு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள
இத்திட்டத்திற்கு, மிகப்பெரிய அளவாக 125 லட்சம் கோடி
ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் என, தெரிகிறது.

எல்லாம் சரி…
இந்தியாவில் என்ன நிலை …?

இதைவிட அதிகமாக சலுகைகளையும்,
ஊக்கத்தொகைகளையும்
அரசு அறிவிக்கும் என்று நம்புவோமாக…
எதிர்பார்த்து காத்திருப்போமாக…!!!

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அற்புதமான பல சிறப்புத் திட்டங்கள் …!!!

 1. shan சொல்கிறார்:

  உலகின் எந்த நாடும், இலவசமாக fan,cylinder,gas stove,cycle, slippers, laptop , money for voting இது எதையும் வழங்கியதே இல்லை. நீங்கள் மேற்குறிப்பிட்ட அந்த அணைத்து நாடுகளுமே, இது வரை மக்களுக்கு என்று இலவசமாக எதையும் கொடுத்தது இல்லை. அவர்கள் இப்பொழுது கொடுப்பதை பற்றி நீங்கள் சிலாகிக்கிறீரகள். இது வரையும், மேலும் இந்திய தனது மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் சலுகைகளை என்றாவது எண்ணி பார்த்துள்ளீர்களா ?
  தயவு செய்து இந்தியாவை தூற்றாதீர்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப SHAN,

   நீங்கள் பின்னூட்டம் போடும் முன்னர்,
   கொஞ்சம் இடுகையை ஆழப் படித்து –
   அதற்கு தகுந்தாற்போல் எழுதினால் தேவலை….

   நான் இந்த இடுகையில் விமரிசனம்
   எதுவும் செய்யவே இல்லையே…
   செய்தியை மட்டும் தானே போட்டிருந்தேன்…?

   செய்தியே உங்களுக்கு விமரிசனமாகத்
   தோன்றினால், அது உங்கள் பார்வையில்
   நீங்கள் -நிலவரம் சரியில்லை என்று
   நினைப்பதைத் தானே
   பிரதிபலிக்கிறது …? 🙂 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புவியரசு சொல்கிறார்:

  இலவசமாக ‘ money for voting ‘; ?
  சிலர் முட்டாள்தனமாக பின்னூட்டம் எழுதுவதையே
  வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  // தயவு செய்து இந்தியாவை தூற்றாதீர்கள்.//
  இடுகையில் எந்த இடத்தில் இந்தியாவைத் தூற்றி
  எழுதி இருக்கிறது ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.