…
…
…
சென்ற பகுதியில் –
( பகுதி -11 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (தியாக பூமி..)- பார்க்க )
டைரக்டர் கே.சுப்ரமணியன் அவர்களைப்பற்றி
சொல்லிக் கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக
இந்த இடுகை….
தமிழ் சினிமாவின் முன்னோடி டைரக்டர்களில் ஒருவர்
கே.சுப்ரமணியன். ( இன்றைக்கு நமக்குத் தெரிந்த முகமான
நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியன் அவர்களின் தந்தை… ! )
கச்ச தேவயானி திரைப்படம் முதலில் 1938 ஆம் ஆண்டு
தெலுங்கில் வெளியானது. அதன் வெற்றியைக் கண்ட
கே. சுப்பிரமணியம் அதே படத்தைத் தமிழில் தயாரிக்கத்
திட்டமிட்டார்.
மகாபாரதத்தின் ஒரு ஸ்பெஷாலிடி, எண்ணற்ற சிறுகதைகள் –
அதனூடேயே, உபகதைகளாகவும், துணைக்கதைகளாகவும்
வருகின்றன. இவற்றில் பல வெகு சுவாரஸ்யமானவை.
இவற்றை ரசிப்பதற்கு ஒருவர் இந்தக் கதைகளை நம்ப வேண்டும்
என்கிற அவசியமே இல்லை… 5000-6000 ஆண்டுகளுக்கு முன்னர்
எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிற ஒரு காவியத்தில்,
அற்புதமான முடிச்சுகளுடன், பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்
உலா வருவதைப் படித்து/பார்த்து ரசிக்க ஒரு ஆர்வம் இருந்தால்
போதுமானது.
கச்சதேவயானி, மகாபாரதம், ஆதி பருவத்திலும்
மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு கதை…
வாசக நண்பர்களுக்காக அதன் சுருக்கம் கீழே –
———————————————————–
அசுரர்களின் குரு – சுக்கிராச்சாரியார்.
அவர் மகள் – தேவயானி.
தேவர்களின் குரு – பிருஹஸ்பதி
அவர் மகன் – கச்சன்.
தேவர்களுக்கு அசுரர்களுக்கும் ஓயாத போர்.
முடிவு காண முடியாமல், போர் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் அமிர்தசஞ்சீவனி
என்ற உயிர் காக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார்.
அதன் மூலம் இறந்தவர்களை மீண்டும் உயிர் பெறச்செய்ய
முடியும்.
தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதிக்கு இந்த வித்தை
தெரியவில்லை. அதனால் போர் ஏற்படும்போது இறந்த அசுரர்கள்
மீண்டும் உயிர் பெற்ற போது இறந்த தேவர்கள் இறந்தே
போனார்கள். இதனால் தேவர்கள் ஒன்று கூடி பிரகஸ்பதியின்
மகனான கச்சனை சுக்கிராச்சாரியரிடம் சீடனாகச் சேரும்படியும்,
அமிர்தசஞ்சீவனி வித்தையைத் தெரிந்து கொள்ளும்படியும்
அனுப்பினார்கள்.
கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். தான் பிரகஸ்பதியின்
மகன் என்றும் சுக்கிராச்சாரியாரிடம் சீடனாக ஆயிரம் வருடங்கள்
சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான். சுக்கிராச்சாரியாரும்
அவனை மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.
சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி,
கச்சன் மீது காதல் கொண்டாள். ஒரு சமயம் கச்சன்
சுக்கிராச்சாரியாரின் மாடுகளை மேய்ப்பதற்காக காட்டிற்குக்
கூட்டிச் சென்றான். அவன் தங்கள் எதிரியான பிரகஸ்பதியின்
மகன் என அறிந்து கொண்ட அசுரர்கள் இது தான் தக்க தருணம்
என தீர்மானித்து, காட்டுக்குப் போய் கச்சனைக் கொன்று
அவனது உடலை புலிகளுக்கு உணவாகக் கொடுத்து விட்டார்கள்.
மாடுகள் திரும்பி வந்தன.
கச்சன் வராததைக் கண்ட தேவயானி தந்தை சுக்கிராச்சாரியரிடம்
சென்று முறையிட்டாள். தான் கச்சனை விரும்புவதாகவும்
அவனை யாரோ கொன்றிருக்கவேண்டும் எனவும் அவன்
இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனவும் தந்தையிடம்
சொன்னாள்.
சுக்கிராச்சாரியார் தனது மந்திர சக்தியினால் கச்சனை உயிர்
பெறச் செய்தார். அவனும் நல்ல பலத்துடன் திரும்பி வந்தான்.
சில காலம் போனது. ஒரு நாள் கச்சன் மலர்கள் பறிப்பதற்காகக்
காட்டுக்குள் போனான். அசுரர்கள் அவனைக் கொன்று, அவன்
உடலை எரித்து அந்த சாம்பலை ஒரு பானத்தில் கரைத்து
சுக்கிராச்சாரியர் அருந்தக் கொடுத்தார்கள். அவரும் அதைப் பருகி
விட்டார். தேவயானி மீண்டும் தந்தையிடம் முறையிட்டாள்.
தன் சக்தியினால் கச்சன் தன் வயிற்றில் இருப்பதை
சுக்கிராச்சாரியர் அறிந்து கொண்டார். எனவே மகளிடம், “அவன்
இப்போது என் வயிற்றில் இருக்கிறான். அவனை உயிர் பெறச்
செய்தால் அவன் என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே
வருவான். அப்போது நான் இறந்து விடுவேன். ஆகையால்
உனக்கு அவன் வேண்டுமா, நான் வேண்டுமா?” என்று கேட்டார்.
அதற்குத் தேவயானி “எனக்கு அவரும் வேண்டும், நீங்களும்
வேண்டும். நீங்கள் தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்”
எனக் கேட்டுக் கொண்டாள். சுக்கிராச்சாரியார் யோசித்தார்.
இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அவர் தனது
வயிற்றுக்குள் இருக்கும் கச்சனுக்கு அமிர்தசஞ்சீவனி
மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் அந்த மந்திர
சக்தியினால் அவனை உயிர் பெறச் செய்தார். கச்சன் அவரது
உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். உடல்
கிழிந்ததால் சுக்கிராச்சாரியார் இறந்தார். ஆனால் கச்சன்
அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லி அவரை மீண்டும்
உயிர் பெறச் செய்தான். ஆயிரம் வருடங்கள் கழிந்தன.
தான் தேவலோகத்துக்குப் புறப்படுவதாக கச்சன் சொன்னான்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தேவயானி
அவனிடம் கேட்டாள். அதற்கு அவன் “நீ என் குருவின் மகள்.
ஆகவே நீயும் எனக்கு குருதான். அப்படியிருக்க உன்னை நான்
எப்படி மணம் செய்வது. மேலும் நான் உன் தந்தை
வயிற்றிலிருந்து வந்தேன். ஆகவே நீ எனக்கு சகோதரி
போன்றவள். எனவே திருமணம் செய்ய முடியாது” என்று
சொன்னான்.
தேவயானிக்குக் கோபம் வந்தது. “நீ வார்த்தைகளால்
விளையாடுகிறாய். நீ கற்றுக்கொண்ட வித்தை உனக்குச்
சமயத்தில் மறந்து போகும்” எனச் சாபமிட்டாள். கச்சன்
அவளிடம் “நீ தேவையில்லாமல் சாபம் போட்டுவிட்டாய்.
உன்னை ஒரு பிராமணனும் திருமணம் செய்ய மாட்டான்.
நீ நினைத்த எதுவும் வாழ்வில் நடக்காது” எனப் பதில் சாபம்
போட்டான். இவ்வாறு கச்சன், தேவயானி இருவர் வாழ்வும்
சோகத்தில் முடிகிறது…..
( இதன் பிறகு, பாற்கடல் கடையப்பட்டு, அமிர்தம்
எடுக்கப்படுவது தனிக் கதை…!!! )
——————————————————————–
கச்சதேவயானியில் கதாநாயகியாக நடிக்க டி.ஆர்.ராஜகுமாரி
தேர்ந்தெடுக்கப்பட்ட விதமே சுவாரஸ்யமானது.
அந்தக்காலத்தில் தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக
இருந்த திருமதி டி.பி.தனலட்சுமியை பேசித்தீர்மானிக்க
அவரது இல்லத்திற்குச் சென்றிருக்கிறார் டைரக்டர் கே.சுப்ரமணியன்.
தனலட்சுமியின் இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த
ராஜாயி என்கிற அவரது உறவுப்பெண் அங்கே அவருக்கு
காப்பித் தட்டை ஏந்தி வந்திருக்கிறார்….
ராஜாயியைப் பார்த்தவுடன்
கே.சுப்ரமணியனின் எண்ணமே மாறி விட்டது. ராஜாயி தான்
தனது தேவயானி என்று உடனடியாகத் தீர்மானித்து விட்டார்.
ராஜாயி கருப்பான தோற்றம் உடையவர். இருந்தாலும் களையான
முகம். கேமிரா கண்களில் அந்த உருவம் இன்னும் அழகாகவும்,
கவர்ச்சியாகவும் தோன்றும் என்பது கே.சுப்ரமணியனின் முடிவு.
மேலும், ராஜகுமாரி நன்றாக பாடக்கூடியவர் வேறு.
(கச்சதேவயானியில் மொத்தம் -25 பாடல்கள்…!!! )
அவ்வளவு தான்…தமிழகத் திரையுலகிற்கு முதல் கனவுக்கன்னி
கிடைத்து விட்டார்…
ராஜாயி, “டி.ஆர்.ராஜகுமாரி” என்கிற பெயருடன்
கச்ச தேவயானி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம்
செய்யப்பட்டார். டைரக்டர் கே.சுப்ரமணியனின் சூப்பர் ஹிட்
தமிழ்ப்படமாக வெளியாகியது “கச்சதேவயானி”…
அழகிய, கவர்ச்சிகரமான தேவயானியைப் பார்க்க -தியேட்டர்களில்
மக்கள் வெள்ளம் அலைமோதியது.
கச்சதேவயானி திரைப்படத்திலிருந்து கொஞ்சம் சாம்பிள் –
………….
………….
………….
.
————————————————————————————————–
Pingback: அறிஞர் அண்ணா….என்கிற C.N.அண்ணாதுரை, M.A …!!! ( பகுதி -13 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – கா