நம்மால் என்ன செய்ய முடியும் …???


நிறைய விஷயங்கள் செய்ய முடியும்.

ஊரடங்கு உத்திரவு இன்னும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட
போகிறது என்று வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.

விளைவுகள்…?
கொரோனா பரவுவது நிச்சயம் கட்டுப்படுத்தப்படும்..
அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆனால் –
வருமானம் எதுவும் இல்லாத அன்றாடங்காய்ச்சி
மக்களின் கதி என்ன…?
பஞ்சை, பராரிகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று
விட்டு விடலாமா…?
அரசுகள் கொடுக்கும் உதவிகள் – தேவைப்படும் அனைவரையும்
சென்றடைவதில்லை; அப்படி கிடைப்பதும் போதுமானதாக இல்லை;

” தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் –
இந்த ஜெகத்தினை அழித்து விடுவோம்” – என்று பாரதி சொன்னான்.

அது அடிமை இந்தியாவில்…

இன்றைய தினம் அப்படிச் சொல்வது –
நமது இயலாமையையே காட்டும்.

நாம் கையாலாகாதவர்கள் இல்லை.

இன்று யாரும் தனி ஒருவராக இல்லை என்பதை
உறுதிப்படுத்த வேண்டியது இந்த சமூகத்தில்,
3 வேளை சாப்பிடும் வசதி உள்ள
நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

யாரும், எந்த குடும்பமும், பட்டினி கிடக்க விடக்கூடாது.
அதற்கு நாம் அனைவரும், இந்த சமுதாயம் பூராவும் பொறுப்பு.

கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் – எதற்காக இருக்கின்றன…?
பூஜைகள் நடத்தவும், பிரார்த்தனைகள் செய்யவும் மட்டும் தானா..?
பசித்திருக்கும் மக்களின் வயிற்றை பாதியளவாவது
நிரப்பும் கடமை அவற்றிற்கு இருக்கின்றன.
இதை உணரவில்லையென்றால் –
அவை இருப்பதில் எந்த பயனும் இல்லை.

பெரிய, முக்கியமான கோவில்கள் அனைத்திலும் மதிய உணவு
வழங்கும் “அன்னதானம்” திட்டம், ஊரடங்கு சட்டம் வரும்
வரையில் அமலில் இருந்தது. மூடப்பட்ட கோவில்களின்
சமையல்கூடங்கள் திறக்கப்படட்டும்; மதிய உணவை,
உணவுப்பொட்டலங்களாக தயாரித்து, அருகிலுள்ள
பசித்து வாடும் மக்களுக்கு, தினம் ஒருவேளையாவது
உணவு வழங்கும் பொறுப்பினை அவை ஏற்கட்டும். கோவில்களில்,
சர்ச்சுகளில், மசூதிகளில் – உள்ள நிதி வசதி இதற்காக
முற்றிலுமாக பயன்படுத்தப்படட்டும்.

கஜானா காலியாவது குறித்து கவலையே வேண்டாம்.
கொரோனா பிரச்சினைகள் தீர்ந்ததும், மக்கள் தாமாகவே
முன்வந்து உண்டியல்களை நிரப்பி விடுவார்கள்.

3 வேளை சாப்பிடும் வசதியுள்ள ஒவ்வொருவருக்கும்
ஒரு கடமை இருக்கிறது; தங்கள் அருகில் உள்ள ஏழை
மக்களுக்கு தினமும் உணவு கிடைக்கிறதா என்று
கண்டறியுங்கள்; யாருக்காவது சாப்பிடக்கூட வழியில்லை
என்றால், உங்களிடம் இருப்பதில் கொஞ்சத்தை அவர்களுக்கு
கொடுங்கள்;

வசதி படைத்த செல்வந்தர்களின் மனம் இன்னும்
திறக்கவில்லை என்று உண்மை நிலவரம் சொல்கிறது.
பணம் வைத்துக்கொண்டு, இந்த சமயத்தில் தேவைப்படுவோர்க்கு
உதவவில்லையென்றால், இறைவன் உங்களை மன்னிக்க
மாட்டான்.

ஏழைகள் வயிறு பசியால் எரிந்தால்,
உங்கள் பணம் ஆபத்துக் காலத்தில் உங்களுக்கே
உதவாமல் போகும்… நீங்கள் நிம்மதியின்றி, நித்திரையின்றி –
தவிக்க நேரிடும்.

பின்னர் சம்பாதித்துக் கொள்ளலாம் …
தயவு செய்து உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு உதவுங்கள்;

பல தொண்டு நிறுவனங்கள் இன்னும் செயலில் இறங்கவில்லை’
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து,
தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் உடனடியாக,
தீவிரமாக பணியில் இறங்க வேண்டும்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்; இன்னும் 15-20 நாட்கள்
தாக்குப் பிடித்தால் போதும்; மீண்டும், தொழில்கள் துவங்கி விடும்.
அனைவரும் அன்றாடம் சம்பாதிக்கத் துவங்கி விடலாம்.
பிரச்சினைகள் படிப்படியாக தீரும்.

தன்னம்பிக்கை உடையவர்களை –
இரக்க மனம் உடையவர்களை –
பிறருக்கு உதவுபவர்களை –
இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் –
அத்தகையோருக்கு நிச்சயம் உதவி கிடைக்கும்.

“இதுவும் கடந்து போகும்.”

நம்மால் முடியும்;
நம்பிக்கையோடு செயல்படுவோம்.

.
————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நம்மால் என்ன செய்ய முடியும் …???

 1. Raghav சொல்கிறார்:

  WONDERFUL WRITING SIR.

  THIS IS THE NEED OF HOUR.
  EVERYONE SHOULD UNDERSTAND THAT IT IS
  OUR COMBINED RESPONSIBILITY TO SEE
  THAT NO ONE GOES HUNGRY.

 2. Geetha Sambasivam சொல்கிறார்:

  பல தொண்டு நிறுவனங்களும் உணவு அளிக்கின்றன. ஸ்ரீரங்கத்தில் ஒரு பட்டாசாரியார் தலைமையில் ஏழைகள் இருக்குமிடம் சென்று உணவளிக்கின்றனர். அதே போல் சிதம்பரம் தீக்ஷிதர்களும் கொடுத்து வருகின்றனர். மற்றவர்களும் ஏதேனும் ஒரு வகையில் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். முகநூலில் படங்களோடு விபரங்கள் வருகின்றன. நம் நாட்டில் மனித நேயம் மலிவாகிவிடவில்லை என்பதை இந்தச் செய்திகள் உணர்த்துகின்றன.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   திருமதி கீதா சாம்பசிவம்,

   நீங்கள் சொல்லி இருக்கும் அனைவரையும்
   நாம் மனமார பாராட்டுவோம்.
   அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வாழ்த்துவோம்.

   பல புண்ணீயஸ்தலங்கள் இருக்கின்றன…
   அனைத்து மதங்களையும் சேர்ந்தவை –
   ஸ்ரீரங்கம், சமயபுரம், மதுரை, பழனி,
   திருச்செந்தூர், வேளாங்கண்ணி, நாகூர்
   போன்றவை. இங்குள்ள ஸ்தாபனங்கள்
   அனைத்துமே மனம் வைத்தால்,
   ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
   5000 உணவுப் பொட்டலங்களை தயாரித்து,
   அவசியமாக தேவைப்படுவோருக்கு
   அளிக்க முடியும். அவர்களிடம் அதற்கேற்ற
   இட வசதியும், நிதிவசதியும் உண்டு.

   இது போன்றே, பெரிய பெரிய பணக்காரர்களைக்
   கொண்ட லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப் போன்ற
   ஸ்தாபனங்கள் இருக்கின்றன. இவையும்
   பெரிய அளவில், ஏரியா வாரியாக
   செயல்பட முடியும்.

   இன்னும் 15-20 நாட்கள் தான், எல்லாரும்
   மனசு வைக்க வேண்டும்..தீவிரமாக முனைய
   வேண்டும்… அவ்வளவே.

   செய்வார்கள் என்று நம்புகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.