மூர்க்கரா நெருங்கிய நண்பர் …?


” உன் இருப்பைப்பற்றி எனக்கு கவலையில்லை;
நான் கேட்பதை நீ கொடுக்கவில்லையெனில் –
அதற்கான பதிலடியை எதிர்கொள்ளத் தயாராக இரு…”

– என்று சொல்பவரை, அவர் இப்படிச் சொன்ன பிறகும்,
நெருங்கிய நண்பர் என்று சொந்தம் கொண்டாடிக்
கொண்டிருப்பவர்களுக்கு –

தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்டுவதற்காக இந்த இடுகை….

———————————–


மக்களுக்கான அடிப்படை தேவைகள் என்னென்ன…?

இருக்க இடம்,
உடுக்க உடை,
உண்ண உணவு –
ஆரோக்கியமான, அமைதியான வாழ்க்கை.

மக்களுக்கு இவை கிடைக்க என்ன தேவை…?

விவசாயம் செழிப்பாக நடக்க அரசு திட்டமிட்டு
உதவ வேண்டும்.

பணக்காரன், மேலும் மேலும் பணக்காரனாகிக் கொண்டே
போவதும், ஏழைகள் மேலும் மேலும் ஏழையாவதும்
செல்வம் ஒரு சிலரிடையே குவிந்து கிடப்பதும் –
மக்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடிக்கிடப்பதும் –
தவிர்க்கப்பட வேண்டும்.

நாட்டின் வளங்கள் –
அனைவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும்…
விரும்புவோருக்கு சுலபமாக உயர்கல்வி கிடைக்க
வேண்டும்…

அதற்கு கல்வியும், மருத்துவமும் அரசின் கட்டுப்பாட்டில்
கொண்டு வரப்பட வேண்டும்..

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவ வசதி –
இலவசமாக கிடைக்க வேண்டும்…

அத்தியாவசியமான உணவுப் பொருட்களை அனைவருக்கும்
அரசே விநியோகிக்க வேண்டும்…

உழைக்கும் சக்தியுள்ள அனைவருக்கும்
வேலை கிடைக்க அரசு வழி வகுக்க வேண்டும்…

நடக்கக்கூடிய காரியமா சார் இது ..? என்று கேட்கிறீர்களா…?
நடக்கும்… நல்ல தலைவர் தோன்றும் நாட்டில்…!!!

உலகில் எந்த நாட்டிலாவது இதுவெல்லாம் நடைமுறை
சாத்தியமாகி இருக்கிறதா….?

—————————————

முதலில் ஸ்பெயின் நாட்டிடமும்,
பின்னர் சுயநலவாத அரசியல்வாதிகளிடமும் சிக்கி,
சின்னாபின்னமாகி – இறுதியில் ஒரு நல்ல புரட்சியாளர் தன்
வசப்படுத்திய ஒரு நாடு.

அமெரிக்காவுக்கு மிக அருகாமையில் இருந்தாலும்,
முதலாளித்துவத்தின் சாயையே படாமல் இருக்கும் நாடு.

கிட்டத்தட்ட ஒரு கோடியே இருபது லட்சம் பேர்
ஜனத்தொகை கொண்ட நாடு … க்யூபா …!

இங்கே நான் க்யூபாவின் சரித்திரத்தை
சொல்லப்போவதில்லை – சில சாதனைகளை மட்டும்
சொல்ல விரும்புகிறேன்…

கரும்பு விளையும் பூமி…
சர்க்கரையும், புகையிலையும், காப்பியும்
நிறைய ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு.

கடைசியாக ஏற்றுமதி செய்வது டாக்டர்களை…!
ஆம் – உலகம் முழுவதும் மருத்துவ சேவை செய்ய
இங்கே நிரம்பிக் கிடக்கும் டாக்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

World Health Organisation சொல்கிறது…

Cuba is “known the world over for its ability to train excellent doctors and nurses who can then go out to help other countries in need”. As of September 2014, there are around 50,000 Cuban-trained
health care workers aiding 66 nations. Cuban physicians have played
a leading role in combating the Ebola virus epidemic in West Africa”

ஃபிடல் காஸ்ட்ரோ.. என்கிற நல்ல மனம் படைத்த
ஒரு சர்வாதிகாரியின் சாதனை இது….

——————————–

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா –
தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா-

எக்கச்சக்கமான அரசு மருத்துவ கல்லூரிகளை
உருவாக்கி, அதன் மூலம், ஏகப்பட்ட தேர்ச்சி பெற்ற
மருத்துவர்களை உருவாக்கி –
இன்று தன் நாட்டோடு அவர்களை இருத்திக் கொள்ளாமல்,
உலகில் அநேக நாடுகளுக்கு சேவை செய்ய அனுப்புகிறது
க்யூபா.

6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.
12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்….

2010-லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு
சதவீதம் 99.8. இங்கே மக்கள் அனைவருக்கும் இலவசமாக
கல்வி தரும் பொறுப்பினை அரசே ஏற்றுள்ளது.

கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில்
70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான
சம்பளம்.

மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது.
தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
‘உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு
க்யூபா’ என பிபிசி 2006-ல் அறிவித்தது.

மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம்
உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.

இன்றைய தினத்தில், க்யூபா குடிமக்கள் அனைவருக்கும்
சொந்தமாக வீடு உண்டு. அனைத்து மக்களும் தங்கள்
சொந்த வீடுகளில் வசிக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை.

இது எப்படி சாத்தியமானது…?
வீடு கட்டிக்கொள்ள, அரசாங்கம் தன் மக்களுக்கு
வட்டியே இன்றி கடன் கொடுத்தது.
யாருக்கும் சொத்து வரியும் கிடையாது.

விளைவு – 2015-ல் 95 சதவீதமாகி,
இன்று சொந்த வீடில்லாத க்யூபா குடிமகன் யாருமில்லை
என்கிற நிலையை அடைந்திருக்கிறது.

அது எந்த இஸமாக இருந்தால் என்ன…?
மக்கள் வளமாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக
வாழ வேண்டும்… அது தானே குறிக்கோள், தேவை
எல்லாமாக இருக்க முடியும் ?

சொந்த மக்களையே வதைக்கும் ஒரு அரசு,
கொடுத்த மான்யங்களை எல்லாம் ஒவ்வொன்றாக
பிடுங்கிக் கொள்ளும் ஒரு அரசு,
கல்வியை வியாபாரமாக்கும் ஒரு அரசு,
மருத்துவ, எஞ்சினீரிங்க் கல்வியை வைத்து
கொள்ளையடிக்கும் கும்பலோடு
கூட்டணி வைக்கும் ஒரு அரசு,
லஞ்ச ஊழலில் குளித்து முழுகி, அசிங்கச்சேற்றோடு
பவனி வரும் அமைச்சர்களை கொண்ட ஒரு அரசு –

– என்று மக்கள் விரோதமான அரசுகளையே பார்த்து வரும்
இந்த நாட்டு மக்களுக்கு – இவையெல்லாம் அதிசய
கனவாகத் தானே தோன்றும்….?

(இந்த இடுகை சுமார் 3 வருடங்களுக்கு முன்னரே
இந்த விமரிசனம் தளத்தில் வெளிவந்ததன் மறுபதிவு…! )

.
————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.