உலகத்திற்கே பாடம் சொல்லித்தரும் க்யூபா…(ஃபிடல் காஸ்ட்ரோ இன்று இல்லாவிட்டாலும், க்யூபாவின் இந்த
வளர்ச்சிக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் அவரே காரணம் என்பதை
மறக்க முடியாது …)

தனது மக்களை மட்டும் காப்பாற்றினால் போதாது என்று,
ஆயிரக்கணக்கில் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கி,
உலகம் பூராவும் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கும்
அவர்களை உதவிக்கு அனுப்பி மனித நேயத்திற்கு மிகச்சிறந்த
உதாரணமாக இன்று திகழ்கிறது க்யூபா…

இத்தாலி, சீனா உட்பட கொரோனாவால்
மிகக்கடுமையாக தாக்கப்பட்ட நாடுகளுக்கு ஏற்கெனவே
தனது மருத்துவக்குழுக்களையும், மருந்துப் பொருட்களையும்
அனுப்பி வைத்திருக்கிறது க்யூபா.
வெனிசுலா, நிகாராகுவா, ஜமைக்கா, சுரினாம்,
போன்ற பல நாடுகளுக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள்
கொண்ட குழுவை அனுப்பி வைத்திருக்கிறது கியூபா அரசு.

இத்தனைக்கும் மிக நீண்டகாலமாக கடுமையான அமெரிக்கத்
தடைகளால், எந்தவித வெளியுலக உதவிகளோ, இறக்குமதியோ
இல்லாத நிலையிலேயே இந்த சாதனையைச் செய்திருக்கிறது
க்யூபா.

மருத்துவச் சேவைகளிலும் நாட்டின் பொதுச் சுகாதாரம்,
அதிகமான சராசரி ஆயுட்காலம், குறைவான குழந்தைகளின்
இறப்பு விகிதம் போன்றவைகளால் அமெரிக்காவால் கூட
எட்ட முடியாத உயரத்தை இன்று எட்டியிருக்கிறது க்யூபா.
கியூபாவில் 10,000 பேருக்கு 67 மருத்துவர்கள் இருக்கிறார்கள்..
சுமார் 67 நாடுகளில் 50,000-க்கும் அதிகமான க்யூபா நாட்டின்
மருத்துவர்கள் வேலை செய்கிறார்கள்

க்யூபாவைப் பொருத்த வரை – கொரோனாவை,
இதுவரை சிறப்பாக கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இதுவரை 57 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது
உறுதிசெய்யப்பட்டுள்ளது, ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
950 பேருக்குத் தொற்று இருக்கலாம் எனச் சந்தேகித்து அவர்கள்
தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில்
வைக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாகத் தொற்று இருப்பவர்களைக் கண்டறிவது
நோய் மேலும் பரவாமல் தடுக்கிறது.
மேலும், மக்கள் அச்சம் கொள்வதால் மக்களிடையே
நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் என்பதால் – ‘keep calm’ என்று
அறிவுறுத்தியிருக்கிறது க்யூபா அரசு.

———————————-
இதையே தான் இந்த தளமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி
வருகிறது… “அச்சப்படாதீர்கள் – ஆனால் கவனமாக இருங்கள்;
அனைத்து விதிகளையும் கடைபிடியுங்கள்….”
———————————-

இதே கொள்கை காரணமாக க்யூபாவில் -பள்ளிகள்,
அலுவலகங்கள் மூடப்படவில்லை.
இருப்பினும் விளையாட்டுப் போட்டிகள், பெரும் விழாக்கள்
என மக்கள் பெருமளவில் கூடும் செயல்பாடுகள்
நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையில் அங்கு
பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவுவது உள்ளிட்ட
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து
மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது.

கியூபாவில் வழக்கமாகச் சீருடை தயாரிக்கும் தொழிற்சாலைகள்,
பெருமளவில் தற்போது முகமூடிகள் தயாரித்துக்கொண்டிருக்கின்றன.
பெரிய அளவில் மருந்துப் பொருட்களும் தயாராகி
உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன.

வியாபார நோக்கில் அல்ல – மனிதநேயத்தினால்…!!!

கொரோனா( Covid -19 )வைரஸ் தொற்றிற்கு மருந்து
கண்டுபிடிப்பதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது கியூபா.
இந்த நோயை எதிர்கொள்ளும் 30 மருந்துகளில் ஒன்றாக
கியூபாவின் கண்டுபிடிப்பான Interferon Alfa-2B, எனும்
மருந்தையும் பயன்படுத்தியது சீனா. இன்று உலகம் முழுக்கவே
இந்த மருந்து covid -19 கொரோனா வைரஸிற்கு எதிராகப்
பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மனித நேயத்தோடு உலகம் முழுவதற்கும் தனது சேவையை
செய்து கொண்டிருக்கும் க்யூபா நாட்டிற்கும், அதன்
உயரிய மக்களுக்கும் நமது வாழ்த்துகளையும்,
பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.