பயமாக இருக்கிறதா…?நடப்புகளைக் கண்டு பலர் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதை
கண்கூடாக காண முடிகிறது. இதற்கு மேல் என்ன ஆகுமோ
என்று பயப்படுகிறார்கள். நமக்கும் வந்து விடுமோ என்று
அச்சப்படுகிறார்கள். வந்து விட்டால் நம் கதி என்ன ஆகும் –
குடும்பம் என்ன ஆகும் என்றேல்லாம் கவலைப்படுகிறார்கள்.

நோய் பரவுவதால் ஏற்படுவதை விட இந்த அச்ச உணர்வால்
அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.

நான் சென்னையில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன்.
எங்கள் குடியிருப்பில் யாரும் வீட்டை விட்டே வெளி வர
பயப்படுகிறார்கள். முதியவர்களுக்கு ஒரு விதமான அச்சம்.
இளையவர்களுக்கு வேறு விதமான அச்சம்.

எனக்கு மேல் அடுக்கில் ஒரு இளம் தம்பதியினர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை . இருவரும் ஐ.டி.கம்பெனியில்
பணி புரிகிறார்கள். வேலை – பிரச்சினை இல்லை; வீட்டிலிருந்தே
பணி புரிகிறார்கள்.

தினமும் கீழே, வளாகத்திற்குள்ளேயே
நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அவர்களை பார்ப்பேன்.
4 நாட்களாக அவர்களைக் காணோம்.

கீழேயிருந்தே போன் செய்தேன்… எங்கே 4 நாட்களாக காணோம்
உடல் நலத்தோடு இருக்கிறீர்களா…? – என்று கேட்டேன்.
ஸ்பீக்கரில் போட்டு விட்டு, இருவருமே பேசினார்கள்.
” அங்கிள் ரொம்ப பயமா இருக்கு… இன்னும் என்னவெல்லாம்

நடக்குமோ; நமக்கெல்லாம் வந்து விட்டால் என்ன செய்வது..?
அதான் வீட்டுக்கதவை அடைத்துக் கொண்டு உள்ளேயே
இருக்கிறோம். யார் வந்தாலும் திறப்பதில்லை. பால் பாக்கெட்டை
மட்டும் வெளியே வைத்திருக்கும் கூடையில் போட்டுவிட்டு
போவார்கள்; எடுத்து, நன்றாக கழுவி வைத்துக் கொள்கிறோம்.”
என்றார்கள்.

“அடடா – பயம் இருக்கலாம் தான்..
ஆனால் இந்த அளவிற்கு அல்ல.”

– என்று சொல்லி விட்டு, அவர்களுக்கு சில செய்திகளைச்
சொன்னேன். இது எல்லாருக்கும் உதவும் என்பதால் இங்கேயும்
பதிப்பிக்கிறேன்.

1) நமக்கு வேண்டியது பயம் அல்ல -எச்சரிக்கை உணர்வு தான்.

2) மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அரசும், சுகாதார நிபுணர்களும் சொல்லும் அனைத்து
வழிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

3) நமக்கு வழக்கமான உணவு கிடைக்கவில்லையே என்று
கவலைப்பட வேண்டாம். இருக்கின்ற பொருட்களைக் கொண்டு
என்ன சமைத்து சாப்பிட முடியுமோ – அதைச் சாப்பிடுங்கள்.

4) இடையில், காய்கறி கிடைக்காத 2 நாட்கள் நானும் என்
மனைவியும் – மதிய உணவுக்கு மோர் சாதமும்,
எலுமிச்சை ஊறுகாயும் மட்டும் தான் உட்கொண்டோம்.
ஒன்றும் பிரச்சினை இல்லை;

5) இப்போது ஆன்லைனில் மளிகை சாமான்களும், காய்கறி,
பழங்களும் கிடைக்கின்றன. ஹோம் டெலிவரி செய்கிறார்கள்.
வீட்டிற்கு வெளியேயே வைத்து விடச் சொல்லுங்கள். பிறகு
உள்ளே எடுத்து வந்து ஒரு சல்லடையில்- கிச்சன் சிங்க்கில்
வைத்து குழாயை திறந்து விட்டு, நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.
பின்பாடு, ஒரு Fan கீழே அவற்றை நன்கு பரப்பிவைத்து,
காய விடுங்கள். பிறகு தேவைக்குத் தகுந்தாற் போல்
பயன்படுத்துங்கள்.

6) சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை
ஆன்லைனில் வரவழைத்துக் கொள்ளுங்கள். வீட்டிலேயே
கிரைண்டரில் நிறைய இட்லி/தோசை மாவு அரைத்து ஃப்ரிட்ஜில்
ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள்.

7) காலையில் இட்லி, மதியம் காய்கறியுடன் சோறு, இரவு
தோசை, சப்பாத்தி அல்லது உப்புமா… முடிந்த அளவு காய்கறி
வகைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

8) நாளேடு போடச் சொல்வதை நிறுத்துஙகள்;
டிவியிலும், கம்ப்யூட்டர் செய்தித்தளங்களில் வரும் செய்திகளுமே
போதுமானவை.

9) இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை செய்யும் வேலை
எதுவாக இருந்தாலும், பிரேக் விட்டு விட்டு, வீட்டுக்குள்
உலாவுங்கள்; வீட்டில் இருப்பவர்களோடு பேசுங்கள். உங்களுக்குப்
பிடித்த உறவினர்களோடு, நண்பர்களோடு – தொலைபேசியில்
நிறைய – பேசுங்கள்; ஸ்பீக்கரில் போடுங்கள்; உங்கள் பார்ட்னரும்
கேட்டு ரசிக்கட்டும்…!!!

உங்களுக்கு பிடித்தமான பாடல்களைக் கேளுங்கள்; டிவி
நிகழ்ச்சிகளைப் பாருங்கள்; நிறைய பக்தி சேனல்கள்
இருக்கின்றன; கடவுள் நம்பிக்கை இருந்தால் அவற்றைப்
பாருங்கள்; இல்லையேல் நிறைய காமெடி சேனல்கள்
இருக்கின்றன; பாருங்கள்.

3 வாரங்களில் நிச்சயம் நிலைமை கட்டுக்குள் வரும்.
அடுத்த ஒரு மாதத்தில், வழக்கமான காரியங்களில்
நாம் சகஜமாக ஈடுபட முடியும் என்று உறுதியாக நம்புங்கள்;
பயமுறுத்தும் நண்பர்களிடமும் இதையே உறுதியாகச்
சொல்லுங்கள்.

வீட்டிற்குள் வசதி இருந்தால், உடல் பயிற்சி செய்யுங்கள்:
இல்லையேல், மொட்டைமாடிக்கு அல்லது கீழே கார் ஷெட்டுக்குச்
சென்று நடைப்பயிற்சி செய்யுங்கள்; ( பெரிய வளாகங்களில்
நடைப்பயிற்சிக்கென்றே இடம் இருக்கிறது…) இந்த வைரஸ் காற்று
மூலம் பரவுவதில்லை; எனவே, தாராளமாக திறந்த வெளியில்
பயிற்சி செய்யலாம்.

ஹிந்துக்களாக இருந்தால், வேதமந்திரங்களை (ருத்ரம், கமகம்,
சமகம் போன்றவை) ஒலிப்பதிவு செய்து வீட்டில் ஒலிக்கச்
செய்யுங்கள். பஜனை, பிரார்த்தனை பாடல்களை ஒலிபரப்புங்கள்.

மற்ற மதத்தினருக்கு – இந்த விஷயத்தில் ஆலோசனை
சொல்ல எனக்குத் தெரியவில்லை; அவரவர்க்கு நம்பிக்கையான
கடவுள் சம்பந்தப்பட்ட, மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை
– வீட்டில் ஒலிக்கச் செய்யலாம்.

வதந்திகள் எதையும் நம்பாதீர்கள்;
மற்ற நாடுகளில் நடப்பதைக் கண்டு பயப்பட வேண்டாம்.
நாம் தனி – நம் நாடு தனி – நம் வழி தனி;
வெளியேயிருந்து வரும் அனைத்தையும் தடுத்து விட்டோம்.
இனி இங்கேயே இருப்பதை கண்டுபிடித்து, குணப்படுத்த
வேண்டும்; அவ்வளவு தான். அரசுகள் – குறிப்பாக தமிழக
மாநில அரசு இந்த விஷயத்தில் மிகச்சிறப்பாக வேலை செய்து
வருகிறது.

முதலில் – இந்த நோயை கட்டுப்படுத்துவதிலும், பின்னர்
ஒழிப்பதிலும் – நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இந்த வெற்றியை அடைய வேண்டுமானால் ஒவ்வொரு
தனி மனிதரும் இதை நம்ப வேண்டும். முழுமையாக
ஒத்துழைக்க வேண்டும். இந்த பரவல் செயினை உடைக்க வேண்டும்.

எனவே – யாரும் பயப்பட வேண்டாம்.
ஆனால், அவசியம் எச்சரிக்கையுடன் இருப்போம்.
நம்பிக்கையுடன் இருப்போம்.
எச்சரிக்கைகளை முழுவதுமாக கடைபிடிப்போம்.

இறைவனும், இயற்கையும் –
அவசியம் நமக்குத் துணை புரியும்.

.
—————————————-
பின் தொடர்ச்சி … மாலை 3.30 மணி…
—————————————

தற்போது கிடைத்த ஒரு உபயோகமான தகவலை
கீழே தந்திருக்கிறேன்… தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

————————–

Anyone needs online consultation we are available.. more than 50 doctors from Ramachandra hospital alumini group are there for help.. jus dial the above number and get ur consultation for free .. pls forward it to other groups.. all speciality doctors are there for help !
———————-

———————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பயமாக இருக்கிறதா…?

 1. M.Subramanian சொல்கிறார்:

  அவசியமானதை, மிக அழகாக, தெளிவாகச் சொல்லி
  இருக்கிறீர்கள். நன்றி கே.எம்.சார்.
  ஒன்று பட்டு இதை எதிர்கொள்வோம்.
  இறைவன் துணையுடன் வெல்வோம்

 2. புதியவன் சொல்கிறார்:

  நல்ல அறிவுரை. நமக்கு முக்கியத் தேவை, அரிசி-சாப்பாட்டு, இட்லி, துவரை, பாசிப் பருப்பு, உளுந்து. இதைத் தவிர, குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் டெட்ரா பேக் பால் வாங்கிவைத்துக்கொள்ளலாம். பொதுவா பால், தயிர் வரத்து இருக்கிறது. காய்கறி சிறிது விலை கூடுதலாக இருந்தாலும் தேவையானவை கிடைக்கின்றன. அதுனால, ரொம்ப கவலைப்பட்டு, சாமான்களை வாங்கித் தேக்கிவைக்க வேண்டாம்.

  இங்க எங்க வளாகத்துல, பிரதான நுழைவாயிலில், ஒருவேளை வெளியில் சென்றுவந்தால் (அருகில் காய்கறி, மளிகைக்காக) சானிடைசர் கொடுக்கிறார்கள். வெளியில் சென்றால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்துதான் செல்லமுடியும். வளாகத்துக்குள்ளேயே குறைந்தது 1 மீட்டர் இடைவெளியில்தான் நடக்க அறிவுறுத்துகிறார்கள். காய்கறி வண்டி வாரம் இருமுறை வருகிறது. ஆன்லைன் ஆர்டர்களும் பிரதான நுழைவாயில் செக்யூரிட்டி அறையில் டெலிவர் செய்கிறார்கள். நாம் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  ஒவ்வொரு ஃப்ளாட்டினரும் தனித்தனியாக இருக்கிறோம். (அருகில் உறவினர்கள் இருந்தபோதும், யாரும் யார் வீட்டிற்கும் செல்வதில்லை). இந்த 21 நாட்கள் இன்னும் சில வாரங்கள் நீட்டிக்கப்படலாம் (அதன் பிரதான காரணம், அரசு உத்தரவை மதிக்காமல் சுற்றுபவர்களால்தான்). லிஃப்ட் நுழைய, தளம் தேர்ந்தெடுக்க இங்கு டூத் பிக் வைத்துள்ளார்கள். அது இல்லாத இடங்களிலும், வீட்டிற்குள் வந்த உடனேயே கையை நன்கு கழுவிவிடலாம்.

  இதுவும் கடந்துபோகும்.

  நமக்குப் பெரும்பாலும் பிரச்சனை இல்லை என்றபோதும் நமக்குக் கீழ் இருப்பவர்களைப் (ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், கீழ்மட்டத் தொழிலாளர்கள்-வடநாட்டு… போன்ற) பற்றிய கவலை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அரசாங்கம் உதவுவது போல் தெரிகிறது.

 3. புதியவன் சொல்கிறார்:

  தொலைக்காட்சிகள் பரவலாக எல்லா வீடுகளிலும் இருப்பதால், பிரிண்டட் செய்தித் தாள்கள் எப்படி ‘அவசியம்’ என்ற கேடகரியில் வரும்? எதற்காக அவைகளின் விநியோகம் நடைபெற வேண்டும்? அதனை விநியோகிப்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது விநியோக செயினில் பிரச்சனை இருந்தாலோ, செய்தித்தாள்களை வாங்குபவர்களுக்குத்தானே ஆபத்து. இதனை எப்படி அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? (இது மேகசின்களுக்கும் பொருந்தும்)

 4. D. CHANDRAMOULI சொல்கிறார்:

  KM this is a very timely and useful info. Recently, I was in a fix how to approach a doctor. Thanks a lot.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.