வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் நாய்-மனிதர்கள்….


உச்ச பதவியில் இருக்கும்போது, அந்தப் பெண்மணி கொடுத்த
பாலியல் புகாரில் எந்த அளவு உண்மை இருந்திருக்கும்
என்பது இப்போது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

உச்சபட்ச அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருக்கும்
ஒரு நபர் மீது என்ன தான் உண்மையான புகாரைச்
சொன்னாலும், தன் வழக்கில் தானே தீர்ப்பு கொடுத்துக்
கொள்ளும் வசதியும், வாய்ப்பும் உள்ளவரை யார் தான்
என்ன செய்திருக்க முடியும்…?

jurisprudence என்கிற நீதித்துறையின் அடிப்படைத்
தத்துவத்தையே காலால் மிதித்துப்போட்டு விட்டு,
ஊர் சிரிக்க, வெட்கம் சிறிதுமின்றி, தன் மீது குற்றம்
சாட்டப்பட்ட வழக்கில் தானே தீர்ப்பு எழுதிய அந்த “உச்ச”
மனிதரை என்னசொல்லி வர்ணிப்பது … ?

மீடியாக்கள், பொது மனிதர்கள் ஓரளவிற்குத்தான்
எதிர்ப்புக்குரல் கொடுத்தன. அந்தப் பதவிக்கு உரிய
மாண்பை அவர் காப்பாற்றா விட்டாலும்,
காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் மற்றவர்கள் இருந்தார்கள்
என்பதால், ஓரளவிற்கு மேல் அழுத்தம் கொடுக்கத்
தவறினார்கள்.

அதன் விளைவு – இப்போது காட்டப்படும்
அசாத்திய துணிச்சல்.

மானத்தை துறந்தவர்க்கு வானமே எல்லை.

பதவியை வைத்து பேரங்கள் நடத்தி
ஓய்வுபெற்ற பின்னரும்
வாய்ப்பை புதுப்பித்துக் கொள்வது –
கண்ணியமா அல்லது கயமைத்தனமா…?

பாராளுமன்றத்தின் உள்ளே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த
மக்கள் பிரதிநிதிகள், எதிர்த்துக் குரல் கொடுக்க –
அந்தப் பதவியேற்பை எள்ளி நகையாட,

வெளியே பொதுமக்களும், பத்திரிகைகளும்,
தொலக்காட்சிகளும் அதனை விவாதப் பொருளாக்க –

வெட்கமின்றி, மானமின்றி –
சிரித்துக்கொண்டே பதவியேற்றுக் கொண்டது அவருக்கோ
அந்தப் பதவிக்கோ கிடைக்கக்கூடிய கௌரவமா என்ன …?
நாளைய வரலாற்றில் இந்தக்கறையை என்ன செய்தாலும்
நீக்க முடியுமா…?

எதிர்காலத்தில், மக்களிடையே – எந்த தீர்ப்பைப்பற்றியும்
சந்தேகம் எதாவது எழுமேயானால், அதற்கான முழுமுதற்
காரணமாக இவரது நடத்தை தானே அமையும்…?

அரசியல்வாதிகளையும், ஆளும்கட்சியையும் குறை சொல்லி
என்ன பயன்…? கடந்த காலத்தில் கிடைத்த பயன்கள்,
இவருக்கு இன்னமும் இருக்கும் தொடர்புகளால்,
எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள் –

ஆகியவற்றை எண்ணி,
விலைக்கு கிடைக்குமேயானால்,
அது நீதியாகவே இருந்தாலும் வாங்கத்தானே
முயற்சி செய்வார்கள்…?
என்ன விலை கேட்டாலும் கொடுக்கத்
தயாராகத் தானே இருப்பார்கள்…?
அரசியல்வாதிகளின் இயல்பு தானே அது…?

தன் – மானத்தை காத்துக் கொள்வது யார் பொறுப்பு…?
கௌரவத்தை காற்றில் பறக்க விடத்துணிந்து,
பதவியின் பின்னால் அலைவது –

சீச்சீ – எலும்புத்துண்டை வீசிப்போட்டால், வாலைக்
குழைத்துக்கொண்டு ஓடிவருமே – அந்த நாயும் பிழைக்கும்
இந்தப் பிழைப்பு….

வெட்கக்கேடு… மானங்கெட்ட மனிதர்…

.
——————————————————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் நாய்-மனிதர்கள்….

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தியாவில், அதிகாரிகள், வங்கித் தலைவர்கள் (முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள்), நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் யாருக்குமே, தங்கள் பதவிக்காலத்திற்குப் பிறகு வேறு பதவிகளில் அமரக்கூடாது என்று சட்டம் போட்டால்தான் இந்த மாதிரி அனர்த்தங்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். தான் நினைத்தபடி இனப்படுகொலை செய்ததற்காக முக்கிய அதிகாரிக்கு கவர்னர் பதவி கொடுத்ததும், நீதிபதிகளுக்குப் பல்வேறு பதவிகள் கொடுத்ததும், அரசியல் கட்சியின் மாவட்டச்செயலாளருக்கு நீதித்துறையில் பதவி வாங்கித்தந்ததும், வ்ங்கியில் ஏகப்பட்ட பணத்தை கடன் என்ற பெயரில் விசிறியடித்தவர்களுக்குப் பெரிய பதவிகளைக் கொடுத்ததும், கட்சிக்காரரை சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆக்கியதும் இந்தத் தேசத்தில் காலம் காலமாக நடந்துவரும் ஒன்று. சாதாரண நியமன எம்.பி பதவி என்பது பெரிய விஷயமல்ல என்பது என் எண்ணம். ஏன்.. நீதிபதி குன்ஹா தனக்கு வேண்டியவருக்கு என்ன செய்தார் என்பதும் பத்திரிகைகளில் வந்ததுதானே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   நான் எலும்புத்துண்டுக்காக ஆசைப்பட்டு
   ஓடி வரும் நாய்-மனிதர்களைப்பற்றித்தான்
   குறை கூறி எழுதி இருக்கிறேன்.

   நீங்கள் தவறுதலாக எலும்புத்துண்டை
   வீசுபவர்களைப்பற்றி நான் குறை கூறுகிறேன்
   என்று நினைத்து விட்டீர்கள்… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Prabhu Ram சொல்கிறார்:

  // சாதாரண நியமன எம்.பி பதவி என்பது
  பெரிய விஷயமல்ல என்பது என் எண்ணம்.//

  பாஜக விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் கூட
  நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  • புதியவன் சொல்கிறார்:

   @பிரபு – இங்க சொல்லும் விஷயத்தை விட்டுவிட்டு நீங்க கட்சிக்குப் போயிட்டீங்க. அது சரி.. எம்.கே. நாராயணனுக்கு கவர்னர் பதவி கொடுத்த போது நீங்க கடலுக்குள்ள இருந்தீங்களா? இல்லை திமுக மாவட்டச் செயலாளர் நீதித்துறையில் புகுந்தபோதோ அல்லது கிருஷ்ண ஐயர் நீதிபதி ஆனபோதோ இது மாதிரி பல விஷயங்கள் நடந்தபோது நீங்க பிறக்கவே இல்லை போலிருக்கு. 2004-2014 வரை என்ன என்ன அட்டூழியங்கள் நடந்திருக்கு என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

   @ கா.மை. சார்…. நீங்க சொல்லும் குணம் (அதாவது பிறரிடமிருந்து எதையும் பெறாமை) மிக மிக மிக அபூர்வமானது. அது ஜீவா, நல்லக்கண்ணு, கக்கன், காமராசர் போன்று வெகு வெகு அபூர்வமான மனிதப் புனிதர்களிடம் உள்ளது. ஆனா இவங்களை பெரும்பாலான பொதுமக்களுக்குப் பிடிக்காது. (விதிவிலக்கு எம்.ஜி.ஆர்). மற்றவர்களெல்லாம் மற்றவர்களின் நிலங்களைத் திருடி தன் கட்சிக்கு, வீட்டிற்குச் சேர்த்துக்கொள்ளும் கருணாநிதி கும்பலைப் போன்றவர்கள்.

   நீதித்துறையிலிருந்து விலகியதும் இவரும் சாதாரண மனிதர் போல, பட்டம் பதவிக்கு ஆசைப்பட்டிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. (பாரதரத்னா விருது பெறுவதற்காக சச்சின் முக்கியமான மேட்சுகளில் தன் காங்கிரஸ் தலைமை பெட்டிங்கில் பணம் சம்பாதிப்பதற்காக இந்தியாவைத் தோல்விக்கு அழைத்துச்சென்றார் என்று கற்பனை செய்வது போன்றது நீங்கள் எழுதியது என நான் நினைக்கிறேன்)

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    உங்களது இந்த ஸ்டேட்மெண்ட் –
    நாய் மனிதருக்கு வக்காலத்து வாங்குவதில்
    உங்களுக்கு இருக்கும் ஆர்வமாக
    எனக்குத் தோன்றவில்லை.

    எலும்புத்துண்டை வீசி, நாய்-மனிதர்களைப்
    பிடிப்பவர்களுக்கு வாங்கப்படும் வக்காலத்தாகவே
    தெரிகிறது.

    // எம்.கே. நாராயணனுக்கு கவர்னர் பதவி
    கொடுத்த போது//

    எம்.கே.நாராயணன் எப்போது நீதிபதி பதவி
    வகித்தார் என்றும் நீங்களே தெளிவுபடுத்தினால்
    தேவலை.

    // நீதித்துறையிலிருந்து விலகியதும் இவரும்
    சாதாரண மனிதர் போல, பட்டம் பதவிக்கு
    ஆசைப்பட்டிருக்கிறார் என்றே எனக்குத்
    தோன்றுகிறது. //

    பதவியிலிருந்து விலகிய பிறகு இவர்
    ஆசைப்பட்டிருந்தால், இவர் ஆசையை
    நிறைவேற்றி வைக்க பாஜக தலைமையில்
    இருப்பவர்கள் இளிச்சவாயர்களா ?

    பதவி போன பிறகு கூட இந்த மாதிரி
    ஆசையெல்லாம் படுகிறவர், பதவியில்
    இருந்தபோது இன்னும் எதெதெற்கெல்லாம்
    ஆசைப்பட்டிருப்பார்…? அதற்காக
    என்னெனன்ன சமரசம் எல்லாம்
    செய்திருப்பார்…?

    பதவியில் இருக்கும்போதே காட்டப்பட்ட
    எலும்புத்துண்டு இல்லையென்று சொல்ல
    உங்களிடம் என்ன பின்னணித்தகவல்
    இருக்கிறது ?

    அது கிடக்கட்டும் விடுங்கள்.
    அதென்ன தவறு செய்கிறவர்களை
    குறைகூறி இந்த தளத்தில் எழுதும்போது,
    அவர்கள் பாஜகவினராக அல்லது
    ஆதரவாளர்களாக இருந்தால் மட்டும் –
    அது தவறே இல்லை;
    இயற்கை தான் என்று வாதிக்கிறீர்களே;

    காங்கிரஸ் கூடத்தான் விபச்சாரம் செய்தது;
    அதையே பாஜக இப்போது செய்தால்
    அதில் என்ன தவறு என்று கேட்பது
    உங்களுக்கே ஆபாசமாகத் தெரியவில்லை…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… உங்க பாயிண்ட் என்ன? நீதித் துறையில் உயர் பதவியில் வகிப்பவர்கள், தங்கள் பதவிக்காலத்திற்குப் பிறகு அரசாங்கம் தரும் பதவிச் சலுகைகளை ஏற்கக்கூடாது. அப்படி ஏற்றுக்கொண்டால், அது அவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் தந்த தீர்ப்புகளைச் சந்தேகப்பட வைக்கும்.

    ‘ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்’ என்று பல விசாரணக் கமிஷன்கள் நடக்கிறதே. அதன் பின்னணி உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?

    அரசின் கொள்கை அதிகாரி, தன் பதவிக்காலத்திற்குப் பிறகு அரசாங்கம் அளிக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டால் (அதுவும் தொடர்ந்து), அதன் பின்னணியும் மோசமாகத்தானே இருக்கும்?

    இந்தச் செய்கை காலம் காலமாக நடந்துவருகிறது. சி.பி.ஐ. தலைவரே, தன்னைப் பதவியில் உட்கார்த்தி வைத்தவர்களுக்காக என்ன என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். என்னைப் பொறுத்த வரையில் இந்தப் பதவி (நியமன எம்.பி.) ஒரு பெரிய விஷயமே இல்லை. வெறும் கெளரவம் தவிர வேறு பெரிய லாபங்கள் கிடையாது.

    தனிப்பட்ட முறையில் நான் சிந்திக்கும்போது, இக்கட்டான பிரச்சனையில் (இந்திய அரசாங்கத்துக்கு) இவர் சரியாகச் செயல்பட்டு (அவுட் ஆஃப் தெ வே), தர்மசங்கடங்களைத் தவிர்த்திருக்கலாம். அதை கெளரவிக்கும் வகையில் நியமன எம்.பி. ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். இதைத்தான் நான் நம்புகிறேன்.

    சாதாரண மாவட்ட, மாநில அளவு நீதிபதிகளுக்கு எவ்வளவு வாய்ப்புகள் இருக்கு என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மறந்திருக்கலாம். ஒரு நியமன எம்.பி.க்கு என்ன கிடைக்கும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். மிஞ்சிப்போனால் 5 வருடங்களில் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். சுப்ரீம் கோர்ட் என்ற அளவில் வந்துவிட்டவர்களுக்கு பணம் என்பது விஷயமே இல்லை. கெளரவம் என்பதுதான் பெரிய விஷயம்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     என் கேள்விகள் எதற்கும் உங்களிடமிருந்து
     பதில் இல்லை.

     மாறாக, அவன் விபச்சாரம் செய்தான்.
     எனவே இவன் விபச்சாரம் செய்வது ஒன்றும்
     பெரிய விஷயமே இல்லை என்கிற ரீதியில் தான்
     நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.

     இந்த தளத்தில், நான் தவறான விஷயம் என்று
     ஒன்றை கண்டிக்கும்போதெல்லாம்,
     நீங்கள் (அது பாஜக சம்பந்தப்பட்டதாக இருந்தால்)
     தவறு நடப்பது என்ன புதிய விஷயமா
     என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
     தவறைத் தவறு என்று சொல்லும் என் முயற்சியையும்
     குறை சொல்கிறீர்கள்.

     இது குற்றங்களை கண்டிக்க வேண்டும் என்கிற
     சமுதாய நோக்கத்திற்கு எதிரானது.

     பாஜக சார்பு என்கிற உங்கள் பார்வை –

     உண்மையை உண்மையாக பார்க்க முடியாமல்,

     தவறைக் கண்டிக்க நடக்கும் முயற்சிகளை
     வரவேற்க முடியாமல் –

     -தடுக்கிறது.

     இந்தக் கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது –

     ————
     பதவி போன பிறகு கூட இந்த மாதிரி
     ஆசையெல்லாம் படுகிறவர், பதவியில்
     இருந்தபோது இன்னும் எதெதெற்கெல்லாம்
     ஆசைப்பட்டிருப்பார்…? அதற்காக
     என்னெனன்ன சமரசம் எல்லாம்
     செய்திருப்பார்…?

     ———-
     ஆமாம் – அந்த பாலியல் புகார் சொன்ன
     பெண்மணியின் கதையை ஏன் மறந்து
     விட்டீர்கள்…?

     அந்தப் பெண்மணிக்கு அதைத் தொடர்ந்து
     நடந்த அநியாயங்களை, போலீஸ் மிரட்டல், சிறை,
     வேலை பறிபோனது போன்ற விஷயங்களை
     எல்லாம் வசதியாக பதில் சொல்லாமல்
     விட்டு விட்டீர்களே…

     தனக்குத் தானே தீர்ப்பு சொன்னாரே –
     அதையும் மறந்து விட்டீர்களே…?

     மீடியாக்கள் செய்த விமரிசனங்கள் எதற்காவது
     இவரால் பதில் சொல்ல முடிந்ததா…?

     இல்லை உங்களால் தான் முடியுமா …?

     தவறுகளுக்கு – கண்களை மூடிக்கொண்டு
     வக்காலத்து வாங்கும் போக்கை – தயவுசெய்து
     மாற்றிக்கொள்ளுங்கள்.

     -உண்மைக்காக, நியாயத்திற்காக பேசுங்கள்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     Your point is valid கா.மை. சார்… எந்தத் தவறையும் ‘இது சின்னத் தவறுதானே’ என நினைக்க ஆரம்பித்தால் தவறுகளுக்கு அளவில்லாமல் போய்விடும். பெண் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கு அவர் நடந்துகொண்டது (விசாரணை) நாகரீகமில்லாமல்தான் இருந்தது. அரசு ‘எதற்கு நமக்கு வம்பு’ என்று இருந்திருக்கலாம். ஆனால் அவரின் பதவிக்கு அந்த நடத்தை மாண்பு சேர்க்கவில்லை.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  2004-2014 வரை என்ன என்ன அட்டூழியங்கள் நடந்திருக்கு
  என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? என புதியவன் கேட்கிறார் .

  இது எப்படி பதில் ஆகும் ?

  அப்ப சும்மா இருந்த மாதிரி இப்பவும் சும்மா இருக்கணும் .
  அதுதான் தேசபக்தர்களுக்கு அடையாளம்

 4. Thiruvengadam Thirumalachary சொல்கிறார்:

  The Indian Express has three articles in its opinion columns on this issue-one against ,one in favor and one neutralIn India judges are not prohibited from post retirement employments.Justice Sathsivam made a governor and that too after a colourable judgment.Many judges were appointed to head various enquirer commissions many of which did not bring out the deficiencies of the govt. In the Gujarat riots two or three commissions gave differing opinions.It is well known the US Supreme Court judges are appointed on partisan basis. We also find most of the drafting of laws are woefully ambiguous confirming the statement The Indian Constitution was made of the lawyers by the lawyers for the lawyersJudgments are based on opinion and on the canvassing and convincing capacity of the lawyers and a single judge cannot be held responsible.Thiruvengadam

 5. ponnivalavan சொல்கிறார்:
  • ponnivalavan சொல்கிறார்:

   ரஞ்சன் கோகாய்க்கு பாஜக செய்யும் கைமாறு தான் எம்.பி பதவி! – சவுக்கு சங்கர்
   நன்றி : சத்தியம் டிவி

   • ponnivalavan சொல்கிறார்:

    https:// www. facebook.com/theekkathir/videos/169515150670870/UzpfSTEwMDAwNzM4NDc4NzU0MToyMzc0MTkwOTk5NTAzNzAz/?fref=search&__tn__=%2Cd%2CP-R&eid=ARCswFEnB5IsqVBwsoFg91L6CLgMCgtfu5HspZa1GEkE0TStSkJUw6IvK_x6sl2J0XfrbJI6S0funHbW

    could not send the above link in my comments above…
    hence space is given after https:// and after www.
    the link can be viewed in another browser after removing these spaces.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.