தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுவது தொடர்பாக …..


பெறுநர்,

செயலாளர்,
பள்ளிக் கல்வி துறை,
தமிழ் நாடு அரசு, சென்னை
schsec@tn.gov.in.

அனுப்புநர் :
காவிரிமைந்தன், விமரிசனம் சமூக வலைத்தளத்தின் சார்பாக…
( kavirimainthan@gmail.com )

பொருள் – பள்ளிக் கல்வித்துறையில் கொரோனா வைரஸ் பரவுதலைத்
தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள்….

பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நலன்
கருதி கீழ்க்காணும் யோசனை தங்களின் கவனத்திற்கு கொண்டு
வரப்படுகிறது.

இதனை தக்க முறையில் பரிசீலித்து,
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையின்
பொதுநலனுக்கேற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

1) கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில்,
தற்போது மார்ச் 31-ந்தேதி வரை அனைத்துப்பள்ளிகளும்
மூடப்பட உத்திரவிடப்பட்டுள்ளது.

இந்த தேதி முடிந்தவுடன் பள்ளிகளை மீண்டும் திறக்கும்
வாய்ப்பு நிச்சயமற்று உள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படவே
வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிகிறது.

2) பல பள்ளிகளில், பள்ளிகள் அளவிலான தேர்வுகள்
துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சில பள்ளிகளில் இனி தான் தேர்வுகள் துவங்க வேண்டும்.

3) 10-வது மற்றும் 12-வது வகுப்புத் தேர்வுகள் மாணவர்களின்
உயர்கல்வி தொடர்தலுக்காக, பொதுத் தேர்வாக
நடத்தப்படுகின்றன. எனவே இவை எந்த சூழ்நிலையிலும்,
இடைவெளி விட்டாவது, நடத்தப்பட்டு
முடிக்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது.

4) ஆனால், மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள்,
பள்ளி அளவிலேயே நடத்தப்படுகின்றன. இவை இடையே
நிறுத்தப்பட்டதாலும், மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது
தெரியாததாலும், மாணவர்களும் பெற்றோர்களும்
குழப்பத்தில் இருக்கின்றனர்.

கோடை விடுமுறையை எப்படி பயனுள்ள வகையில்
உபயோகப்படுத்திக்கொள்வது என்பது குறித்து பலருக்கும்
பலவித யோசனைகள் இருக்கின்றன.

ஆனால், பள்ளித்தேர்வுகள் – இடையே – இடைவெளியாக
தற்போது நிச்சயமற்ற காலத்திற்கு விடுமுறை,
மீண்டும் பள்ளி எப்போது துவங்கும், எப்போது தேர்வுகள்
நடக்கும் என்பதெல்லாம் எல்லாருக்கும் குழப்பமாகவே
இருக்கிறது.

5) எனவே, இந்த குழப்பங்கள் தீர, அனைவருக்கும்
வசதியான தீர்வு ஒன்றை தேர்ந்தெடுத்தல் நல்லது.

அ) ஏற்கெனவே பள்ளிகள் மூடப்பட்டு விட்ட நிலையில் –
அதையே கோடை விடுமுறை துவங்கி விட்டதாக
அறிவிக்கப்பட்டு,

ஆ) இடைப்பட்ட காலத்தை ஈடுசெய்ய,
(வழக்கமான ஜூன் முதல் வாரத்திற்கு பதிலாக )
மே மாதம் 3-வது வாரத்திலேயே பள்ளிகளை மீண்டும்
துவக்குவதாக இப்போது முடிவெடுத்து அறிவிக்கப்பட்டால்,
இந்த நிச்சயமற்ற தன்மை நீங்கி, பல பிரச்சினைகள்
எளிதாக முடிவிற்கு வந்து விடும்.

இ) கூடவே அனைத்து வகுப்புகளிலும், இந்த கல்வியாண்டில்
முழுமையாகப் பயின்ற அனைத்து மாணவர்களும்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த மேல் வகுப்பிற்கு
மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டால்,

அது அனைத்து குழப்பங்களையும் முடித்து வைத்து,
மாணவர்களின், பெற்றோர்களின், ஆசிரியர்களின் –
பல கவலைகளைத் தீர்த்து வைக்கும்.

ஈ) அல்லாமல், நிச்சயமற்ற இடைக்கால விடுமுறைக்குப் பிறகு,
மீண்டும் பள்ளிகளைத் துவங்கி, பள்ளி அளவிலான தேர்வுகளை
நடத்தி, மீண்டும் கோடை விடுமுறையை அறிவிப்பது
அனைவருக்கும் சங்கடங்களையே ஏற்படுத்தும்.

உ) மேற்கண்ட யோசனைகளை ஏற்பதன் மூலம்,
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளைத் திறக்க
இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் என்பதால் –
கொரோனா நோயின் தாக்கமும், வீரியமும் முற்றிலுமாக
நீங்கி இருக்கும் என்பதோடு,

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைத்து
பிரிவினரும் உற்சாகத்தோடு, மற்ற விஷயங்களில்
கவனம் செலுத்த அது பேருதவியாக இருக்கும்.

மேற்கண்ட யோசனைகளை உரிய முறையில் பரிசீலித்து,
அனைவருக்கும் உகந்ததான ஒரு முடிவை விரைவில்
அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினரின்
சார்பாகவும் வேண்டுகிறேன்.

நன்றி.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
20/03/2020

பின் குறிப்பு – முக்கியமான ஒரு விஷயம்…

எனக்கு பள்ளி செல்லும் வயதில் குழந்தைகள் எதுவுமில்லை
என்பதால், மேற்கண்ட கோரிக்கையில், என் சுயநலம் ஏதுமில்லை
என்பதையும், இது முழுக்க முழுக்க பொதுநலன் சம்பந்தப்பட்ட
கோரிக்கை என்பதையும் இங்கே தெரிவித்துவிட விரும்புகிறேன்.

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுவது தொடர்பாக …..

 1. jagadisan சொல்கிறார்:

  Dear sir The concern pointed out by you is correct. At the same time we cannot predict the situation after May As to wether corals will subside . So other than 10th and 12th they can declare all pass and reopen the class if the situation is normal anytime after June.

  On Fri, Mar 20, 2020 at 21:23 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் wrote:

  > vimarisanam – kavirimainthan posted: “… … … பெறுநர், செயலாளர், > பள்ளிக் கல்வி துறை, தமிழ் நாடு அரசு, சென்னை schsec@tn.gov.in. அனுப்புநர் > : காவிரிமைந்தன், விமரிசனம் சமூக வலைத்தளத்தின் சார்பாக… ( > kavirimainthan@gmail.com ) பொருள் – பள்ளிக் கல்வித்துறையி” >

 2. Gopi சொல்கிறார்:

  Wonderful move.

 3. சுந்தரம் சுப்பு சொல்கிறார்:

  தேர்வுகளை நீக்கி விட்டு, ‘ஆல் பாஸ்’ அறிவித்து, விடுமுறையை நீட்டிப்பது என்ற கோரிக்கை சரி.

  ஆனால், மே மூன்றாம் வாரம் பள்ளிகள் திறக்கக்க் கோருவது சிக்கல்களுக்கே வழி வகுக்கும்.

  அவ்வளவு எளிதில் இந்த வைரஸ் பரவல் நீங்காது. சீனாவில் 60% பரவிய பின்பு தான் குறைந்தது. அதையே முன் மாதிரியாக இங்கே எடுத்துக் கொள்ள முடியாது. கட்டுப்படுத்துவதால் மட்டும் வைரஸ் வீரியம் இழந்து விடாது. கட்டுக்குள் இருக்கும் அது அந்தக் கட்டுப்பாடுகள் நீங்கியதும் முன்னை விட வேகமாகப் பரவும் என்பதே உண்மை.

  ஆகவே, ஜூலை முதல் வாரத்திற்குப் பிறகே – அதுவும் நிலைமையை நன்கு பரிசீலித்த பின்பே – இரண்டாம் வாரம் முதல் பள்ளிகளை இயக்கலாம்.

  அதற்கு முன் பள்ளிகளைத் திறந்தால் நோய் மேலும் வீரியமாகப் பரவுவதைத் தடுக்கவே இயலாது.

  அது, அதன் வேலையைக் காட்டாமல் போகாது, ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாவத் பாதிப்பை ஏற்படுத்தாமல் நீங்காது.

  நன்றி

 4. Gopi சொல்கிறார்:

  இப்போது மார்ச் 21 தானே.
  எப்போது பள்ளிகளை மீண்டும் திறப்பது
  என்பதை இன்னும் ஒன்றரை மாதங்கள் கழித்து
  நிலைமையை பரிசீலனை செய்து
  முடிவெடுத்துக்கொள்ளலாம். இப்போதே
  அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவானேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.