இந்தியா – இத்தாலி-யாக விடமாட்டோம் ….இத்தாலியில் என்ன ஆயிற்று….?

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை நேற்று(19/03/2020) ஒரே நாளில் 427 அதிகரித்து
மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது.

இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக
கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள்
ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

ஏன் இந்த நிலைமை …?

முழுக்க முழுக்க அலட்சியம் … நமக்குத்தான் இல்லையே…
நாம் ஏன் வீணாக கவலைப்பட வேண்டுமென்கிற மனப்பான்மை …

அரசாங்கமும், மருத்துவ நிபுணர்களும் அறிவித்திருக்கும்
கட்டுப்பாடுகளிலிருந்து எந்தெந்த விதங்களில் தப்பித்துக்
கொள்ளலாம் என்கிற குறுக்குத்தனமான / கிறுக்குத் தனமான
யோசனைகள்…

கொரோனா பரவுவதைப்பற்றிய சில தகவல்கள் –

கொரோனா பாதிப்பு மொத்தம் 4 ஸ்டேஜ் கொண்டதாக
அறியப்படுகிறது. அதில் இந்தியா தற்போது
2-வது ஸ்டேஜில் உள்ளது.

ஸ்டேஜ் 1: கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து
வந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய். வூஹான், இத்தாலி,
ஈரானிலிருந்து பிற நாடுகளுக்கு சென்றவர்களுக்கு இப்படி
நோய் பரவல் ஏற்பட்டிருந்தால், அது ஸ்டேஜ் 1 என்று
அழைக்கப்படுகிறது.

ஸ்டேஜ் 2: பாதித்த நாடுகளிலிருந்து வந்தவர்களுடன்
பழகியவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படும்.
இப்படித்தான் டெல்லியை சேர்ந்த மூதாட்டிக்கு அவரது
மகனிடமிருந்து கொரோனா பரவி பலியானார். இந்த
நிலையில், எங்கே, யார் மூலம் யாருக்கு, ஏன், எப்படி
பரவியது என்கிற தகவல்கள் கிடைக்கின்றன. எனவே,
அது தொடர்ந்து பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள்
எடுக்க முடிகிறது.

இந்தியாவில் கொரோனா தற்போது
இந்த 2வது ஸ்டேஜில் உள்ளது.

இதற்கு அடுத்தது – ஸ்டேஜ் 3:
அது கொரொனா நோய் வந்த ஒருவருக்கு யாரிடமிருந்து
பரவியது என்பதை, கண்டறிய முடியாது.

சென்னையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட இரண்டாவது
நபருக்கு யார் மூலம் பரவியது என்பதே, தெரியவில்லை.
கண்டுபிடிக்கவும் முடியவில்லை; இவர் வெளிநாடு பயணம்
செல்லவில்லை. ஆனால், இவர். டெல்லியிலிருந்து சென்னைக்கு
ரயிலில்தான் வந்திருக்கிறார்.

உள்நாட்டிலேயே மனிதருக்கு
மனிதர் நோய் பரவுவது தான் 3-வது ஸ்டேஜ்.
இந்திய அரசு, இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில்,
அத்தகைய நிலை இன்னும் ஏற்படவில்லை என மறுப்பு
தெரிவித்துள்ளது.

————————

ஸ்டேஜ்-3 பற்றி ஒரு பயங்கரமான உணர்தல் இருக்கிறது.
ஸ்டேஜ் -2 லிருந்து ஸ்டேஜ் – 3-க்கு போகும்போது,
அது பல்லாயிரக்கணக்கில் பெருகும் என்பது தான் அந்த புரிதல்.
100 ஆக இருப்பது திடீரென்று 10,000 ஆனால்…?
இத்தாலியிலும், ஈரானிலும் நடந்தவை இதைத்தான்
நமக்கு தெரியப்படுத்துகின்றன.
எனவே, நாம் ஸ்டேஜ்-3 -க்கு போகாமல் தடுப்பது
மிக மிக மிக அவசியம்.
————————-

ஸ்டேஜ் 4: சீனா, இத்தாலி, ஈரான் நாடுகளைப் போல,
எங்கு.. எவர் மூலமாகப் பரவியது என்பதை அறிய
முடியாத வகையில் அதிதீவிரமாக நோய் தொற்று பரவும்
நிலை தான் 4வது ஸ்டேஜ்.
——————————————————————–

இத்தாலியில் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட
இரண்டே வாரங்களில் அந்த நாடு 3-வது ஸ்டேஜுக்கு சென்று,
மிகப்பெரிய பாதிப்பை சந்தித்ததற்கான முக்கிய காரணம் –

அலட்சியம்… அலட்சியம்…
அலட்சியம் மட்டுமே.

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள்
தங்கள் சுற்றங்களை இழந்து தவிக்கிறார்கள்.

இந்தியாவில் மார்ச் முதல் வாரத்தில் தான் அறிகுறிகள்
தோன்றின. இப்போது இங்கு 2-வது ஸ்டேஜில் இருப்பது –
புயலுக்கு முன்பு அமைதி நிலவுவதை போல் 3-வது
ஸ்டேஜுக்கு முன் உள்ள ஒரு நிலையோ என்கிற அச்சம்
இந்த நோயைப்பற்றிய விவரங்களை உணர்ந்தவர்களுக்கு
ஏற்பட்டுள்ளது.

இந்த அச்ச உணர்வு அனைவருக்கும்
ஏற்பட வேண்டும்….

அதன் விளைவாக, மக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை
100 % கடைபிடிக்க வேண்டும்.

நோய் வந்தால் – அதைப் போக்குவதற்கான மருந்து
கண்டுபிடிக்கப்படவில்லை;
வராமல் தடுப்பதற்கான தடுப்பு ஊசிகளும் இல்லை –
என்கிற நிலையில் –

சொல்லப்படுகிற அனைத்து முன்னெச்சரிக்கைகளையும்
அனைத்து மக்களும் நூறு சதவீதம் கடைபிடிப்பது
ஒன்றே உயிரிழபையும், நோய் மேற்கொண்டு தீவிரமாக
பரவுவதை தடுக்கவும் உதவும்.

சீனா கொடுத்த விலை மிக அதிகம்.
அந்த நிலை நமக்கு வந்துவிடக் கூடாது என்றால்,
இருப்பது ஒரே உபாயம் தான். மக்கள் -மிகுந்த சுத்தத்தைப்
பேண வேண்டும், மிக மிக அவசியம் இல்லாமல்
வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

இதைச் செய்தால் மட்டும்தான் ஸ்டேஜ் 3 என்ற
கொரோனா வைரசின் கொடூர முகத்தில் இருந்து
நாம் தப்ப முடியும்.

இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்காத
நிலையில், நமக்கு நாமே செய்து கொள்ளும்,
மக்கள் ஊரடங்கு மட்டுமே இந்த நோயிடமிருந்து
நம்மை பாதுகாக்கும் ஒரே வழி என்பதை
மக்கள் உணர வேண்டும்.

எனவே, அரசு சொல்கிறது என்பதற்காக மட்டுமல்ல….
நம்மையும், நம்மைச் சேர்ந்தவர்களையும், இந்த
கொடூர உயிர்க்கொல்லியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள
வேண்டும் என்கிற –

சுயநலம் காரணமாகவாவது, இந்த நாட்டின் ஒவ்வொரு
குடிமக்களும், இந்த கட்டுப்பாடுகளை உறுதியாக
100 % மேற்கொள்ள வேண்டும்.

என்ன – மிஞ்சி மிஞ்சிப் போனால் அடுத்த 3-4 வாரங்கள்.
நாம் உறுதியாக இருந்தால், நிச்சயம் இந்த பேரழிவிலிருந்து
தப்பலாம்…

இந்தியா – இத்தாலியாக விடமாட்டோம் என்று
உறுதி கொள்வோம்.

———————————————————————————————————————————————————-

இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்..
வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லி விடுவது சுலபம்.
ஆனால், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கக்கூடியவர்கள்,
அன்றாடம் உழைத்தால் தான் சாப்பாடு என்கிற நிலையில்
இருக்கும் ஏழை மக்கள் வீட்டோடு இருந்து விட்டால் –
சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்…?

மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி – இது குறித்து
தீவிரமாக ஆனால் அவசரமாக யோசித்து ஒரு முடிவெடுக்க
வேண்டும்… இத்தகைய மக்களுக்கு அத்தியாவசியமான
உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

பள்ளிக்கூடங்கள் எல்லாம் இப்போது காலி தான்.
மாநில அரசுகள் இந்த கட்டிடங்களை இதற்கு
பயன்படுத்திக் கொள்ளலாம். காய்கறி, அரிசி, பருப்பு,
எண்ணை போன்ற சாப்பாட்டிற்கு மிகவும் அவசியமான
பொருட்களை இந்த இடங்களில் வைத்து,
அடித்தட்டு மக்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு தடவை
என்று கொடுத்து உதவலாம்… நம்மிடையே தொண்டு நிறுவனங்கள்
பல இருக்கின்றன. அவையும் இந்தப்பணியில்
சேர்ந்து கொள்ளலாம்.

ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும்.
சேர்ந்து செய்வோம். சங்ககடங்களை கடந்து முன்னேறுவோம்.

.
—————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இந்தியா – இத்தாலி-யாக விடமாட்டோம் ….

 1. vgchandrasekaran சொல்கிறார்:

  இன்று இல்லை என்றால் என்றுமே இல்லை
  இப்போது இல்லை என்றால் வேறு எப்போதும் இல்லை
  நாளை என்ற ஒன்று வேண்டுமென்றால்
  இன்று தனித்து இருப்போம்…
  நேற்றுவரை சேர்ந்திருந்தோம்
  ஒன்றாய் களித்து இருந்தோம்
  நாளையும் சேர்ந்திருப்போம் களித்திருப்போம்
  அதற்காக இன்று தனித்திருப்போம்
  விழி உறங்கா இரவுகளுக்கு விடை கொடுப்போம்
  வீதிகள் இளைப்பாற சற்று இடம் கொடுப்போம்
  காற்றினிலே வாள்வீசும் வித்தை கற்றிடுவோம்
  கண்களுக்குப் புலனாகா எதிரியை வென்றிடுவோம்
  நாளைய பொழுது நன்றாய் விடியும் என்றே நம்பிடுவோம்
  அதற்காக இன்றே தனித்திருப்போம் …
  வெகச

  என்னுடைய அலுவலக நண்பர்களுக்காக புனைந்த கவிதை. படித்தவர்கள் மத்தியிலேயே தனித்திருக்கும் தேவையை புரியவைக்க முடியவில்லை இதில் கிராமப்புற பகுதிகளில் எவ்வாறு இதனை புரிய வைக்க முடியும்? நிச்சயம் அரசு ஒரு அதிரடியான தன்னிச்சையான முடிவினை எடுத்தே தீர வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சந்திரசேகரன்,

   அழகிய தமிழ்…
   பொருள் பொருந்திய கவிதை…

   உங்கள் தமிழையும், ஆர்வத்தையும்
   உளமாற பாராட்டுகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. vgchandrasekaran சொல்கிறார்:

  நாட்டினை பீடித்துள்ள தற்போதைய கேடு விரைவில் விலகி புதிய விடியல் உதயமாக சேர்ந்துழைப்போம். நன்றி ஐயா..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.