…
…
…
நான் சொல்லி வருகிற அந்த காலகட்டத்தில்,
என்னென்ன இருந்தது… இப்போதிருக்கும் எதெது
அப்போது இல்லை என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தால்,
ஆச்சரியமாக இருக்கிறது….
—————————————————————————
( பகுதி -9 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…பார்க்க
—————————————————————————–
இவையெதுவும் இல்லாமல் நாம் எப்படி வாழ்ந்தோம்
என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது…!!!
அப்போது என்னென்ன இல்லை ….?
(வரிசையாக கீழ் நோக்கிப் போய் பார்க்கலாமே…! )
வண்ணத் தொலைக்காட்சி
கருப்பு வெள்ளை தொலைக்காட்சி
வீடியோ ப்ளேயர்,
வீடியோ ரிக்கார்டர்,
ஆடியோ, வீடியோ சிடி,
ஆடியோ வீடியோ டேப்,
பென் ட்ரைவ்,
லாப்டாப் கம்ப்யூட்டர்,
பி.சி. கம்ப்யூட்டர்,
செல்போன்,
சாதாரண தொலைபேசி (Land line)
டேப் ரிக்கார்டர்,
ட்ரான்ஸிஸ்டர்,
பைக், டூவீலர், ஸ்கூட்டர், மோபட் வகையறா…
வீடுகளில் ஏ.சி. படுக்கை அறை
ஷாப்பிங் மால்ஸ்,
ஏசி சினிமா தியேட்டர், மல்டிப்ளெக்ஸ்,
கம்ப்யூட்டர் அட்வான்ஸ் ரிசர்வேஷன்…
எலெக் ட்ரிக் ட்ரெயின்….
ரேடியோவும், மின் விசிறியும் அறிமுகமாகி இருந்தன.
ஆனால், 85-90 % வீடுகளில் அவை இல்லை.
சமையலறை தொடர்பானவை –
கேஸ் ஸ்டவ், (Gas stove)
கெரோசின் ஸ்டவ்,
ப்ரஷர் குக்கர்,
water purifier,
டிஷ் வாஷர்,
கிச்சன் வாஷ் பேசின்,
கிச்சனில் குழாய் / தண்ணீர்,
க்ரில் (Grill),
ஃப்ரிட்ஜ்,
மிக்சி, வெட் கிரைண்டர்
இட்லி கிரண்டர்,
வெஜிடபிள் கட்டர்,
– இவை எதுவுமே இல்லாத ஒரு வாழ்க்கையை கொஞ்சம்
கற்பனை செய்து பாருங்கள்…!!!
அது தான் 60-70 வருடங்களுக்கு முந்தைய நம் வாழ்க்கையாக
இருந்தது.
இவை எதுவும் இல்லாவிட்டாலும் அன்றைய வாழ்க்கை
ஆனந்தமாகவும், இயல்பாகவும் தான் இருந்தது. எப்படி…?
அதற்கான காரணங்கள் பல …
முக்கியமான சில –
– குடும்பங்கள் பெரியவை. வீட்டில் நிறைய மனிதர்கள்
இருந்தார்கள். நிறைய உறவுகள்; அக்கறையோடும்,
பாசத்தோடும் பழகினார்கள். எதையும் எதிர்பார்க்காமல்,
ஆனால், விட்டுக்கொடுக்காமல் – எல்லாவிதங்களிலும்,
எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிக்க
கைகொடுக்கும் சுற்றங்கள்;நட்புகள்.
இப்போதைய தலைமுறைகளில் –
எத்தனை குழந்தைகளுக்கு –
அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா,
மாமன் மகன் /மகள், அத்தை மகன்/மகள் – போன்ற
உறவுகளைத் தெரியும்…? இருந்தால் தானே தெரிவதற்கு…!!!
அவ்வளவு தூரம் போவானேன்…?
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உள்ளவர்கள்
இன்றைய தலைமுறையில் எத்தனை பேர் இருக்கின்றனர்…?
முக்கால்வாசி வீடுகளில் –
ஒண்ணே ஒண்ணு ; கண்ணே கண்ணு தான்;
அபூர்வமாக சில வீடுகளில் இரண்டு.
மற்றொரு முக்கியமான காரணம் –
அப்போது, இத்தகைய மாடர்ன் கேட்ஜட்களின் சுகங்களை
எல்லாம் நாம் அனுபவித்ததில்லை;
எதையுமே, அனுபவித்து விட்டு,
இழந்தால் தான் துக்கம்; இப்போது இவை இன்றி
நம்மால் இருக்க முடியாது; ஆனால் அப்போது, இத்தகைய
வசதிகளைப்பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. எனவே,
அவஸ்தைகளை இது இப்படித்தான் இருக்கும் என்று
சகஜமாக ஏற்றுக்கொண்டு பழகி விட்டோம்.
10-11 பேர் இருந்த எங்கள் வீட்டில், 2 நாட்களுக்கு ஒருமுறை
கல் உரலில் (ஆட்டுக்கல்) இட்லி மாவு அரைப்பார்கள் –
அம்மாவும், பாட்டியும் மாறி மாறி….
பல சமயங்களில், நான் கூட இடையிடையே அவர்களுக்கு
உதவியாக இருந்து கல்லைச் சுழற்றியது இன்னமும்
பசுமையாக இருக்கிறது…. துவையல், சட்னி, மசாலா
அரைக்க வேண்டுமென்றால் – அம்மி தான்.
இந்த வாழ்க்கையை எல்லாம் ஏற்கெனவே அனுபவித்த
முந்தைய தலைமுறையினர் இவற்றையெல்லாம் –
கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள்;
அனுபவிக்காத அடுத்தடுத்த தலைமுறையினர்
தங்கள் அதிருஷ்டத்தை மகிழ்ச்சியோடு நினைத்து,
தங்கள் முந்தைய தலைமுறையின்
வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்…!!!
(தொடருவோம்…..)
——————————————————————————————————————————————————————
50-55-ல் வெளிவந்த தமிழ்ப்படங்களிலிருந்து
எனக்குப் பிடித்த சில பாடல்கள் –
…..
பாரதியின் – காணி நிலம் வேண்டும்
சி.எஸ்.ஜெயராமன், எம்.எல்.வி… – அந்தமான் கைதி
…
….
பாரதிதாசனின் – ஓர் இரவு –
துன்பம் நேர்கையில் –
…
…
பாரதியின் – சின்னஞ்சிறு கிளியே
மணமகள் – எம்.எல்.வி.
…
…
.
—————————————————————————————————————————————————————
எங்கெங்கோ அழைத்துப் போகிறீர்கள்.
கண்களை மூடிக்கொண்டு, உங்கள் வர்ணனைகள் மூலம்
அனுபவித்துக் கொண்டே பின் வருகிறோம்.
உண்மை !! அத்தனையும் உண்மை !! நீங்கள் சொன்ன அந்த லைப் ஸ்டைல், குறைவான வசதிகள் நிறைவான வாழ்க்கை நாற்பது வருடங்கள் முன்பு வரை நீடித்தது ! நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுதே !
குறிப்பாக ஓரிரவு பாடல் உங்கள் சாய்ஸ் அருமை. இயல்பான நடிப்பில் பின்னும் லலிதா, பேந்த பேந்த விழிக்கும் நாகேஸ்வரராவ், ‘ஆடிக் காட்டமாட்டாயா?’ என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக்கொண்டு சிங்கார நடனத்தை புகுத்திய சாதுர்யம், ஆஹா…. வெல்டன் சுசீலா … சாரி …வெல்டன் காமை சார்
இவை எவையும் இல்லாத வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறேன். வீட்டில் உள்ள டாய்லட் உபயோகிப்பதே ஒரு லக்ஸுரி (ரொம்ப ரொம்ப அபூர்வமாக அனுமதிக்கப்படும் ஒன்று) மற்றபடி ஆற்றின் கரையோரம்தான். பிறகு டியூப் லைட் ஒன்று வீட்டில் போடப்பட்டதே பெரிய லக்சுரியாக 70களில் இருந்தது. வீட்டிலிருந்து கல்லூரிக்கு 35 பைசா பஸ் பயணம் என்பதும் அபூர்வமாக அனுமதிக்கப்பட்டதாகவும் இருந்தது. மிகச் சிறிய கூடத்தில் பத்து பேர்கள் படுத்துக்கொள்வோம். நீங்கள் சொல்லியிருப்பதைவிட விட்டுவிட்டதுதான் அதிகம் என்றே என் மனசுக்குத் தோன்றியது. அன்றன்றைக்கான காய்கறி, கீரை, தன் வீட்டுக்குத் தேவையானவற்றைத் தாங்களே செய்துகொள்வது (அப்பளாம், ஊறுகாய். கடைகளில் செய்த எந்த பொருளும் சமையலறையில் உபயோகிப்பதில்லை), தலையணைக்குப் பதிலாக, நிலைப்படியைத் தலையணையாக பாவிப்பது, உமிக்கரி, 6 மணிக்கு முன்னால் எழுந்து ஆற்றை நோக்கிச் செல்வது… என்ன என்னவோ எழுதலாம்.
வாழ்க்கையை வாழ்ந்தோம் ஒரு சமூகமாக, கூட்டமாக, நெருக்கமாக. இப்போ சுகமான வாழ்க்கை ஆனால் தனித் தனித் தீவாக. உலகம் சுருங்கச் சுருங்க மனமும் சுருங்குகிறது.
புதியவன்,
// நீங்கள் சொல்லியிருப்பதைவிட
விட்டுவிட்டதுதான் அதிகம் என்றே
என் மனசுக்குத் தோன்றியது.//
1) நான் இந்த தொடரை இன்னும்
முடிக்கவில்லை… 🙂 🙂
இன்னும் நிறைய எழுத நினைத்திருக்கிறேன்.
2) வாசக நண்பர்கள், தங்கள் தங்கள்
அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வது
ஒரு ஆனந்தமான அனுபவமாக இருக்கும்.
எனவே, உங்களையும், இதர நண்பர்களையும் கூட
இங்கே வரவேற்கிறேன். உங்களது பழைய
சுவாரஸ்யமான அனுபவங்களையும் இங்கே
பகிர்ந்து கொள்ளலாம்.
வாழ்க்கை அனுபவங்கள் – அதுவும் அந்தக்காலத்திய
அனுபவங்கள் – ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானவை.
நகரங்களில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு மாதிரியும்,
கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு வேறு மாதிரியும்
இருந்திருக்கும். அதே போலவே நாட்டின் வெவ்வெறு
பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கும்…
இயன்றவரை இந்த இடுகைத் தொடரில்
பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நண்பர்கள்
அனைவரையுமே அழைக்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Pingback: ( பகுதி -11 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (தியாக பூமி..) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
ஒரு நாற்பது வருடங்கள் முன்பு பேமிலி டாக்டர் என்று இருந்தார் .
போனால் நாக்கை நீட்ட சொல்லி , நாடி பார்த்து , ஸ்டெத் வைத்து
பார்ப்பார் .
‘எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்ப்போம் ‘ என்று
சொன்னதில்லை .
மெய்ப்பொருள்,
சரியாகச் சொன்னீர்கள்.
ப்ரிஸ்க்ரிப்ஷனை எடுத்துக்கொண்டு மருந்துக்கடைக்கு
வேறு போக வேண்டாம். டாக்டரே உதவியாளரிடம்
சொல்வார். என்ன கொடுக்க வேண்டுமென்று.
பெரிய பாட்டில்களில் மருந்துக் கரைசல்கள்
வைத்திருப்பார்கள்.
நாம் கொண்டு போகும் சிறிய பாட்டில்களில்
ஊற்றிக் கொடுப்பார்கள். இத்தனை வேளைக்கு என்று
சொல்வார்கள். அதில் ஒரு லேபிள் – அளவைக் காட்ட –
ஒட்டப்பட்டிருக்கும்.
2-3 நாட்களுக்கு சேர்த்து மருந்து கொடுப்பார்கள்.
குணமாகவில்லை என்றால் வந்தால் போதும்
என்பார்கள்.
என் அம்மா, 12 குழந்தைகள் பெற்றவர்….
ஆனால், தன் வாழ்நாளில் ஒரு எக்ஸ்ரே கூட
எடுத்துப் பார்த்ததே இல்லை.
அந்த டாக்டர்கள் எல்லாம் மனித தெய்வங்கள்.
நாலணா, எட்டணாவுக்கு டாக்டர்…
என்ன அற்புதமான காலம்…. !!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்…. இதை ஒரு உதாரணத்துடன் விளக்கலாம்.
எனக்கு அலர்ஜி வந்தது (அது ஒரு 10 வருடத்துக்கு மேல் இருக்கும்). அப்புறம் 6 மாதத்துக்கு ஒரு முறை அப்புறம் 3 மாதத்துக்கு ஒரு முறை வரும். என்ன காரணம்னு தெரியாது. அலர்ஜி வந்தால், உடம்பில் மெல்லிய எரிச்சல் வரும், பிறகு ஆங்காங்கே கொஞ்சம் மரு அளவிற்கு தடிக்க ஆரம்பிக்கும். 30-40 நிமிடங்களில் ப்ரெஷர் குறைய ஆரம்பிக்கும். மருத்துவமனையில் சலைன், அலர்ஜிக்கான ஊசி போன்றவை போட்டு, ஒரு 1-2 மணி நேரம் அங்கு இருந்துவிட்டு வரவேண்டியிருக்கும்.
நல்ல அனுபவமுள்ள மருத்துவர் அவர். (நான் சொல்வது வெளிநாட்டில்). அவரிடம், இது எதனால் வருகிறது என்று கண்டுபிடித்துவிட்டால் அதனைச் சாப்பிடுவதை நிறுத்தலாம் என்று பார்த்தால், உணவின் பேட்டர்ன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன். (ஒரு தடவை ஒரு கடையில் சப்பாத்தி குருமா சாப்பிட்ட பிறகு, இன்னொரு தடவை இன்னொரு இடத்தில் பனீர் பர்ஜி சாப்பிட்டபோது என்று ஒவ்வொரு தடவையும் உணவு வேறுவேறு). அப்புறம் பலரிடம் கேட்டு சென்னையில் அதற்கான ஒரு கிளினிக் இருக்கு, அங்கே 2 நாட்களில், 48 விதமான ஊசிகள் போட்டு கண்டுபிடிப்பார்கள் என்றார்கள். சென்னைக்கு வந்தபோது ஒரு அனுபவமுள்ள மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர், இந்த மாதிரி அலர்ஜி டெஸ்ட்லாம் மிகச் சரியான காரணத்தைச் சொல்லாது. இப்போ வரும் உணவுகளில் ஏகப்பட்ட கெமிக்கல் சமாச்சாரம் கலந்துள்ளது, அதனால் எந்த காம்பினேஷன் உங்க உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதெல்லாம் கண்டுபிடிப்பது கடினம், அதனால் அதிலெல்லாம் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள் என்றார்.
உணவு என்ற ஒரு விஷயம் போதும். நாம் 50 வருடங்களில் எந்த இடத்தில் வந்து நிற்கிறோம் என்பதை அறிந்துகொள்ள.
என்னுடைய உணவாக, காலை சாதம், சாம்பார், கறி, கூட்டு, மோர், மதியம் மோர் சாதம் ஊறுகாய், இரவு மோர் சாதம் ஊறுகாய், வாரத்தில் ஒரு நாள் இரவில் சாதத்தோடு, தோசையோ உப்புமாவோ இட்லியோ கிடைக்கும். இதில் எதிலுமே சொல்லத்தக்க அளவு கெமிக்கல் கிடையாது (அந்தக் காலத்தில்தான் ஸ்பிக் யூரியா பெயர் பெற ஆரம்பித்தது).
உணவுதான் நம் உடல் நிலை பொதுவாக மோசமானதில் பங்கு வகிக்கிறது.
நான் வளர்ந்த பிறகு, தினமும் டிபன் என்ற முறை வந்தது. அதுவும் நம் நிலத்து டிஃபன். (பராத்தா, சேமியா, சப்பாத்தி/பூரி, பிரியாணி என்பதெல்லாம் நம் நில உணவு அல்ல)
அடுத்த தலைமுறையோ, அரிசிச் சாதம் கார்போ ஹைட்ரேட், அதுனால ஓட்ஸ், சாண்ட்விச், நூடுல்ஸ் என்று நம் நிலத்துக்குச் சம்பந்தமில்லாத உணவை நோக்கிச் செல்கிறது.
நீங்க கேட்ஜட்ஸ் பற்றி எழுதியிருக்கீங்க…எனக்கு நம் உணவு முறை மாற்றம் நினைவுக்கு வந்துவிட்டது.
புதியவன்,
நீங்கள் சொல்வது மிகவும் சரியே.
இந்த அலர்ஜி சமாச்சாரம் – யாராலும் கண்டுபிடிக்க
முடியாத ஒரு அதிசய ரகசியம்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று அலர்ஜி.
சில சமயங்களில், ஒரே நபருக்கு வெவ்வேறு
பொருட்கள் அலர்ஜி.
சின்ன வயதில் ஒரு சமயம் என் பெண்ணுக்கு
அலர்ஜி வந்து உடல் பூராவும் அரிச்சலும் தடிப்பும்
ஏற்பட்டபோது, கடைசியாக, டாக்டர் அவளுக்கு
ரோஜாப்பூவும், ஐஸ்க்ரீமும் அலர்ஜி என்று
கண்டுபிடித்தார்… 🙂 🙂
அன்றைக்கு அந்த இரண்டின் பக்கத்தில் கூட
அவள் போகவில்லை.
ஒரு சமயம் நான் அலுவலக வேலையாக கல்கத்தா
போயிருந்தேன். திரும்ப வர, ஹவுரா ஸ்டேஷனுக்கு
ரெயில் பிடிக்க சென்றபோது traffic -ல் மாட்டிக்
கொண்டேன். கல்கத்தா ட்ராஃபிக் உலகப்பிரசித்தி
பெற்றது. மாட்டிக்கொண்டால், வெளியே வர
குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது ஆகும். முன்னால்
2 கி.மீ. வாகனங்கள், பின்னால் 2 கி.மீ. வாகனங்கள்
இடையில் என் டாக்சி மாட்டிக் கொண்டது.
ரெயில் கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டே
இருந்தது. நான் ஜஸ்ட் ஹவுரா ப்ரிட்ஜின் அந்தப்
பக்கத்தில் இருந்தேன்… ப்ரிட்ஜை தாண்டினால்,
அடுத்த பக்கத்தில், அரை கி.மீ. தூரத்தில்
ரெயில்வே ஸ்டேஷன். வேறு வழியே
இன்றி, நான் சூட்கேசை தலையில் தூக்கி
வைத்துக் கொண்டு, ஹவுரா ப்ரிட்ஜில் ஓடினேன்…
ஓடினேன்..
கடைசியாக நான் ஸ்டேஷனுக்குள் நுழையும்போது,
ரெயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
அப்படியே ரன்னிங் ரேஸ் மாதிரி ஓடிவந்து,
கடைசி பெட்டியில் ஓடிக்கொண்டிருக்கும்போதே
ஏறி விட்டேன். என் முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட்,
உள்ளே எங்கேயோ இருந்தது… அப்போதெல்லாம்
ட்ரெயின் உள்ளுக்குள்ளேயே நடமாடும் வசதிகள்
எல்லாம் கிடையாது.
ட்ரெயின் உள்ளே ஏறிய 2 நிமிடங்களில் எனக்கு பயங்கர
சுவாசக்கோளாறு ஏற்பட்டு விட்டது…
மூச்சே விட முடியவில்லை.. தவித்தேன்.
( அதற்கு முன்னால், எனக்கு எந்தவித அலர்ஜி
அனுபவமும் கிடையாது…ஹவுரா ப்ரிட்ஜ் கொடுத்த
கொடை என்று நினைக்கிறேன்…)
என் கையில் எந்த மருந்தும் கிடையாது.
பெட்டியில் எனக்கு சீட்டும் கிடையாது.
(அது unreserved compartment )
இன்ஹேலர் வாங்க வேண்டுமென்றால் கூட,
அடுத்த ஸ்டாப் ஒடிஷாவின் கரக்பூர் தான். அதற்கு
இரண்டரை மணிநேரம் ஆகும்.
அன்றைக்கு நான் தவித்த தவிப்பு இருக்கிறதே…
ஜென்மத்தில் மறக்க முடியாது…
16 மணி நேரத்திற்குப் பிறகு, நான் விஜயவாடா
அடைந்தபோது, என் கோளாறு போன இடம்
தெரியவில்லை…!!! அதற்கான காரணமும்
தெரியவில்லை…!
(ஒருவேளை விஜயவாடாவில் நான் இருந்த
4 பெர்த் கூப்பேயில், அந்நாள் ஹீரோயின்
மாதவி (ராஜபார்வை, தில்லுமுல்லு ஞாபகம்
இருக்கிறதா…!!! ) ஏறி,
சென்னை வரை கூடவே பயணம் செய்தது
காரணமாக இருக்குமோ… 🙂 🙂 )
உண்மையில் அலர்ஜியை கண்டுபிடிக்க எந்த
விஞ்ஞானமும் உதவுவதில்லை.
தெரிந்த சில விஷயங்களில் மட்டும் நாம்
அனுபவபூர்வமாக உணர்ந்து தவிர்க்க முடிகிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்