கொடுப்பதைக் கெடுத்து விடாதீர்கள் ……


“அக்ஷய பாத்ரா” என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தின்
உதவியோடு, சென்னையில் சில பள்ளிக் குழந்தைகளுக்கு
காலை உணவு கொடுக்கப்படும் திட்டம் அண்மையில்
துவங்கப்பட்டிருக்கிறது.

சுமார் 800 மாணவர்களுக்கு – இட்லி, பொங்கல், உப்புமா
போன்ற காலை உணவை எல்லா பள்ளி வேலை நாட்களிலும்
கொடுப்பதோடு துவங்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை,

கொஞ்சம் கொஞ்சமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
அரசு/மாநகராட்சி பள்ளிச் சிறுவர்/சிறுமிகளுக்கும்
விரிவடையச் செய்ய தமிழக அரசு உத்தேசித்திருப்பதாக
சொல்லப்பட்டிருக்கிறது.

அதற்குள்ளாகவே சில அரசியல்வாதிகள், எதிர்க்கட்சிகள்
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கி விட்டன…
அதற்குள்ளே போகும் முன்னர் இந்த திட்டம் செயல்படும்
விதத்தைப் பற்றிய சில காணொளிகளைப் பார்த்து விடுவது
உதவியாக இருக்கும்….

…..

Akshaya Patra – How Our Kitchens Work

———-

Akshaya Patra’s Mega Kitchen | The Cooking Process

———-

இன்றைய அரசு மதிய உணவை அளிப்பதற்குரிய
நிதிச்சுமையையே தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது.
உண்மையில் டாஸ்மாக் மது வருவாய் வழியாகவே
இலவச மதிய உணவு முதலிய திட்டங்கள் ஈடு
செய்யப்படுகின்றன. மதிய உணவுத்திட்டத்தில் ஒருபகுதி
மத்திய அரசின் பங்களிப்பாக இருந்தாலும், அதற்கு மேலும்
தேவைப்படும் நிதிக்கு வசதியின்றி மாநில அரசு
திணறிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் காலையுணவையும் அரசே
அளிப்பதென்பது இயலக்கூடிய செயலல்ல…. எனவே,
அத்தகைய திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் –
இஸ்கான் போன்ற ஓர் அமைப்பு காலையுணவை
குழந்தைகளுக்கு இலவசமாக அளிக்க முன்வந்தால் –
அது எந்த அரசாக இருந்தாலும் வரவேற்கப்படவேண்டிய
ஒன்றே.

இதில் அரசின் பங்காக அவர்கள் சமையலறை
அமைத்து செயல்பட உரிய இடமும் மாநில அரசிடமிருந்து
துவக்ககாலத்தில், அந்த சமையலறையை உருவாக்கவும்,
உரிய இயந்திரங்களை வரவழைத்து செயல்படுத்தவும்
தேவைப்படும் சிறிய அளவிலான நிதியுதவியும் மட்டுமே.
இதற்கு மேல், வழக்கமாக அந்த அமைப்பும், திட்டமும் –
முழுக்க முழுக்க அந்த தொண்டு நிறுவனத்தின்
பங்கீட்டின் மூலமாகவே நிகழும்.

அந்த நிறுவனம், தனது உறுப்பினர்களான பக்தர்களின்
மூலமும், சர்வதேச நன்கொடைகளின் மூலமும்
அந்த செலவை பார்த்துக் கொள்ள தயாராக இருக்கிறது.

இந்த திட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் முன்வைக்கும்
சில முக்கிய காரணங்கள் –

ஒன்று) இஸ்கான் என்பது ஒரு இந்து மத நிறுவனம்.
இதனை இந்தத்துறையில் அனுமதிப்பது மதரீதியான
ஒரு அமைப்புடன் அரசு இணைந்து செயல்படுவதாகும்….
– என்பது ஒரு குறை.

இஸ்கான் இந்த உணவை அளிப்பதற்கு எந்தவித மத
நிபந்தனையையும் முன்வைக்கவில்லை.
உணவு அளிக்கும் முன் பிரார்த்தனை இல்லை;
உணவை அளிப்பது யார் என்கிற பிரச்சாரம்
எதுவும் இல்லை.

இந்த நல்ல காரியத்தை, இஸ்கான் தவிர்த்த – வேறு
எந்த மத நிறுவனமாக இருந்தாலும், தொண்டு
நிறுவனங்களாக இருந்தாலும், தாங்கள் விரும்பும்
பகுதியில் ஏற்று செயல்படலாம் என்று அரசு
வெளிப்படையாக அறிவித்து விட்டால் –
இந்த குறைகாணலில் எந்தவித அர்த்தமும் இருக்காது…

இந்த தொண்டில் ஈடுபட ஆர்வமும், வசதியும் உள்ள
யார் வேண்டுமானாலும், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்துகொண்டு, செயலில் இறங்கலாம். இதனை மக்களும்
மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள்.

இரண்டாவது )- பூண்டு, வெங்காயம் சேர்ப்பதில்லை;
மாமிச உணவு கொடுப்படுவதில்லை….

எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கேள்வி –
காலை பலகாரத்துடன், எந்த வீட்டில் மட்டன், சிக்கன்
சேர்க்கிறார்கள்…? அல்லது பூண்டு வெங்காயம்
போட்டுத்தான் எல்லாரும் இட்லி, பொங்கல்
செய்கிறார்களா…? வீட்டில் என்ன இருக்கிறதோ,
என்ன கிடைக்கிறதோ – அதை வைத்துக்கொண்டு தான்
காலைஉணவு தயாராகிறது.

காணொளிக் காட்சிகளில் கண்டோம்…
பார்க்கும்போதே – நமக்கு கூட சாப்பிட ஆசை வருகிறது…
காலை 8 மணிக்கு, சுடச்சுட, சுகாதாரமான முறையில்
தயாரிக்கப்பட்டு, தினம் ஒரு அயிட்டமாக, குழந்தைகளுக்குப்
பரிமாறப்படும் இந்த காலையுணவை குறை சொல்பவர்கள்
மனசாட்சி இல்லாத அரசியல்வாதிகளாக மட்டுமே இருக்க
முடியும்.

எந்த பெற்றோரும் இதை கூற மாட்டார்கள்.

அதிகாலையில் எழுந்து வேலைக்குப் போக வேண்டிய
கட்டாயத்தில் உள்ள எத்தனையோ பெண்கள்
( மீன், காய்கறி, பூ, பழம் விற்பனையில் இருப்பவர்கள்,
வீட்டு வேலை செய்பவர்கள் என்று எத்தனையோ ரகம்…)
இதை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்….

பள்ளிக்குப் போகும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு
நல்ல காலையுணவு பள்ளியிலேயே சுடச்சுட கிடைப்பது
அவர்களுக்கு பெருத்த நிம்மதியையும்,
காலை வேளைகளில் சங்கடமின்றி வேலைக்குப்போகும்
சந்தோஷத்தையும் தரும் திட்டம் இது.

இதை துவக்கத்தில் எதிர்த்த அரசியல்வாதிகள் –
அத்துடனேயே நிறுத்திக் கொள்வது நல்லது.

அல்லாமல், தொடர்ந்து குறுக்கே நின்றால் –
இத்தகைய குடும்பப் பெண்களாலேயே அவர்கள் அடித்து
விரட்டப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் ……..

பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் இந்த
திட்டத்தை உளமாற, மகிழ்ச்சியோடு வரவேற்போம்….
சென்னையில் துவங்கியது, தமிழகம் பூராவும் செயல்படவும்,
தமிழகத்தின் மூலமாக அகில இந்தியாவிற்கும் இன்னொரு
நல்ல திட்டம் அறிமுகமாகட்டும்…!!!

…….

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கொடுப்பதைக் கெடுத்து விடாதீர்கள் ……

 1. Kathiresan சொல்கிறார்:

  மிகவும் அருமையான திட்டம்
  எந்த தடங்கலும் இல்லாமல் சிறப்பாக நடை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
  இதை எங்களுக்கு தெரியப்படுத்திய கா.மை சாருக்கு நன்றி.

 2. புதியவன் சொல்கிறார்:

  இந்த மாதிரித் திட்டங்களைக் குறை சொல்லும் அரசியல்வாதிகளை தேசவிரோதிகள் என்றே அறிவித்துவிடலாம். சென்னை வெள்ளத்தில் மூழ்கினபோது, இஸ்லாமிய அமைப்புகள் திருவல்லிக்கேணி கோவில் வெளிமண்டபத்தில் உணவு விநியோகம் செய்ததை மக்கள் எவ்வளவு பாராட்டினார்கள் என்பதை அப்போது படித்திருந்தால் தெரிந்திருக்கும். இந்த அரசியல்வாதிகளுக்கு படிப்பறிவு என்பது எங்க இருக்கப்போகுது.

  இந்தத் திட்டம் கர்நாடகத்தில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இலாப நோக்கு மற்றும் ஆர்கனைசேஷனல் செலவு அதிகமாக இல்லாததால், இதில் பலர் பங்குபெற்று, அளிக்கும் பணம் குழந்தைகளின் உணவுக்குச் செல்கிறது என்று நினைத்துச் செய்வதால், வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

  இந்த மாதிரித் திட்டங்களில் குறைகாணுபவர்கள் ‘அரக்கர்கள்’ என்றுதான் சொல்லணும். இவர்கள் சமுதாயத்தின் கொரோனாக்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.