எதிர்பாராத ஆதரவு …..இதற்கென்ன அர்த்தம்…?


திரு.ரஜினிகாந்த் நேற்று தெரிவித்த கருத்துகளுக்கு –
ஊக்கம் தரும் எதிர்பாராத ஒரு ஆதரவு …..

————————————————————–

ரஜினி போட்ட மூன்று முடிச்சு..!!
காண்டிராக்ட் எடுக்க கட்சிக்கு வராதீங்க..!!
–ரஜினி பொங்கிய சிறப்பான,
தரமான சர்க்கரைப் பொங்கல்..!!

கட்சி நிர்வாகிகள் குறைக்கப்படுவர் ;
இளைஞர் அரசியலை ஊக்குவிப்பேன்;
வென்றால் நான் முதல்வரில்லை –

என்று மூன்று முடிச்சுகளை தனக்குத்தானே
போட்டுக்கொண்டு தனது அரசியல் பயணத்தில்
அடுத்த அடி எடுத்துவைத்துள்ளார் ரஜினி..

தன் தீவிர ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு,
அரசியல் ஆலோசகர்களின் வலியுறுத்தல் ,
வழக்கமான அரசியல் நடைமுறை –
இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு
“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை” எனத் தீர்க்கமாக
ரஜினி அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய புதிய அரசியல்
அணுகுமுறையாகவே கருதுகிறோம்.

கட்சிப் பதவியைத் “தொழிலாகக்” கருதி,
“டெண்டர்”-”காண்டிராக்ட்” எடுத்து சம்பாதிக்க
நினைப்பவர்கள் தனது கட்சிக்கு வரவேண்டாம் என்று
பத்திரிகையாளர்கள் முன்பு கூறுவதிலிருந்தே,

“இலஞ்ச-ஊழலற்ற” ஆட்சி
நிர்வாகத்தைத் தருவதற்கு
ரஜினி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று
புரிந்துகொள்ள முடிகிறது.

கட்சியையும்-ஆட்சியையும் பிரிப்பேன்.
ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது.
கட்சியானது, ஆட்சி நிர்வாகத்தின் குறைகளைச்
சுட்டிக்காட்டும் “எதிர்கட்சியாக” செயல்படும்
என்ற அரசியல் பார்வை வரவேற்புக்குரியது.

மேலும், தேர்தல் முடிந்தபிறகு கட்சியில் பதவிகள்
குறைக்கப்படும்.”..பதவிக்காகத்தான் கட்சிக்கு வருகிறேன்
என்ற மனநிலையில் உள்ளவர்கள்..
எனது கட்சிக்கு வரவே வேண்டாம்”

– என்று கூறியிருப்பது
துணிச்சலான நிலைப்பாடாகும்.

அரசியல் வாரிசுகளாக இல்லாத இளைஞர்களுக்கு,
அறிவார்ந்த ஆளுமைகளுக்கு, களத்தில் மக்கள்
பணியாற்றியவர்களுக்கு அரசியலில் வாய்ப்பே
இல்லை என்ற நிலையை மாற்றி –

தேர்தலில் இளைஞர்களுக்கு, ஆளுமைகளுக்கு,
களப்பணியாளர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும்
என்றும் ”அரசியலில் இளரத்தம் பாய்ச்சப்படவேண்டும்”
என்றும் ரஜினி பேசியிருப்பது பாராட்டுக்குரியது.

”வல்லுனர்கள் குழு” (Council of Experts) அமைத்து
அதன் வழிகாட்டலில் ஆட்சி நடத்தப்படும் என்றும்,
அப்படிப்பட்ட வல்லுனர்கள், ஓய்வுபெற்ற
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள் போன்றவர்களை
அரசியலுக்குக் கொண்டுவர அவர்கள் வீடு தேடிச் சென்று
அழைப்பேன் என்றும் ரஜினி பேசியிருப்பது
நல்ல முன்மாதிரி ஆகும்.

தனது சினிமா புகழ் மற்றும் ரசிகர் கட்டமைப்பை
மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிப்பது
சாத்தியமில்லை என்ற எதார்த்த நிலையை,
வெளிப்படையாக ரஜினி பேசியிருப்பது அவரின் அரசியல்
புரிதலை தெளிவாக்குகிறது. மேலும்,
அதீத கற்பனையின் அடிப்படையில் இறங்கி தன்னுடைய
ரசிகர்களை பலிகடா ஆக்கமாட்டேன் என்று
சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது..

ரஜினியின் அறிவிப்புகள்,அணுகுமுறை எல்லாம்
அறிவிப்புகளாக இல்லாமல் செயல்பாட்டுக்கு கொண்டுவர
ரஜினி தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

இளைஞர்கள், அறிவார்ந்த ஆளுமைகள்,
களப்பணியாளர்களைத் தனது கட்சிக்குள் கொண்டுவர
வரும்நாட்களில் ரஜினி எடுக்கும் முயற்சிகளின்
மூலம்தான் இது நிரூபணம் ஆகும்.

இப்படி ரஜினி எடுக்கும் முயற்சிகளின் மூலம்தான்,
அவர் குறிப்பிட்ட தரமான-சிறப்பான சர்க்கரைப் பொங்கல்,
தமிழக மக்களுக்குக் கிடைக்கும்.
அவர் குறிப்பிட்ட “கெட்டுப்போன சிஸ்டம்” சீராகும்.!!

இன்று போட்ட ”மூன்று முடிச்சு” மூலம்
ரஜினி முன்னெடுக்கும் ”
”மாற்று அரசியல்” வெற்றியடைய வாழ்த்துகள்..!!

————-

– மேலே கூறப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு சொந்தக்காரர்கள்
யார் என்று நினைக்கிறீர்கள்….?

– திரு.செந்தில் ஆறுமுகம் மற்றும்
திரு. சிவ.இளங்கோ ஆகியோர்…!)
( சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தலைவரும், செயலாளரும்…)

———————————————–

பின் குறிப்பு – இப்போதுள்ள சாக்கடை அரசியலில்
ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ அல்லது
அதன் கூட்டாளிகளாகவோ இருந்து ஊழலில் ஊறித்திளைத்து
கொள்ளையடித்து சாப்பிட்ட கட்சிகளான – திமுக, வி.சி.க.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் அதிமுக கட்சிகள்
ரஜினியின் புதிய திட்டத்தை கேலியும், கிண்டலும் செய்து,
தங்களது கைப்பாவையான தொலைக்காட்சி ஊடகங்களின்
மூலம் அவரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றன.

ஆனால், தொடர்ந்து ஊழலை
எதிர்த்துப் போராடி வரும் இயக்கங்கள்,
இதுவரை ரஜினியை ஆதரித்துப் பேசாத
இயக்கங்கள் எல்லாம் –

-இப்போது ரஜினி தனது திட்டத்தை வெளியிட்டதும்,
தாமாகவே அவரை ஆதரிக்க முன்வருவது –

எதைக் காட்டுகிறது….???

.
—————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to எதிர்பாராத ஆதரவு …..இதற்கென்ன அர்த்தம்…?

 1. Gopi சொல்கிறார்:

  இதுவரை ரஜினியை கடுமையாக எதிர்த்து வந்த

  பாரதிராஜா, அமீர், சீமான், ஆகியோர் ரஜினியின்
  கருத்துகளை முழுமையாக வரவேற்று
  தங்களது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  //வரவேற்புக்குரிய புதிய அரசியல் அணுகுமுறையாகவே//

  ரஜினி 1996ல் அரசியலுக்கு வந்திருந்தால் ஏதேனும் சாதித்திருக்கலாம். இனி சாதிக்க வாய்ப்பே இல்லை.

  நிற்க… நீங்கள், ரஜினி சொன்னதுபோலவே, முதல் முதலாக ஆக்கபூர்வமான அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் செய்யப்புகுந்த பாமக, அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி செயல்பட முனைந்ததைக் குறிப்பிட்டிருக்கலாம்.

  அன்புமணி அவர்கள், வன்னியர்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக சாதீய கொள்கைகளை முற்றிலும் விலக்க முடியாமல் பாமக என்றால் வன்னியர் கட்சி என்ற லேபிள் இல்லாமல் இருந்திருந்தால், ரஜினி கொண்டுவர நினைக்கும் மாற்றங்களைக் கொண்டுவர முனைந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன்.

 3. Gopi சொல்கிறார்:

  ரஜினிகாந்த் பாஜகவில் சேர்ந்திருந்தால்
  இதே புதியவன் சார் அவரை இந்திரன் சந்திரன்
  என்றெல்லாம் கூறி ஆதரித்திருப்பார்.

  • புதியவன் சொல்கிறார்:

   கோபி… இந்த பழைய பித்தளை வாதத்தை வைக்காதீங்க. ரஜினியின் லைம் லைட் ஓவர் (2000க்கு முன்பே). இதனை எழுதி வச்சுக்கோங்க. (ஏன் என்று டீடெயிலாக என்னால் எழுத முடியும். அரசியல் என்பது வேறு, நம் மனதில் உள்ள உயரிய கொள்கைகள் என்பது வேறு. அதிமுகவை ஜெ. எப்படி உயிர்ப்புடன் வைத்திருந்தார், எந்த மாதிரி செயல்பட்டு என்றெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடும்-கட்சி நடத்துவதில் உங்களுக்குத் தெரியாது. நீ விரல் சூப்பு, நான் மகுடம் சூட்டிக்கறேன் அல்லது நான் மகுடம் சூட்ட ஒரு ஆளை ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்பவர்கள் தோற்றதுதான் வரலாறு). அதிமுகவில் ஒருவேளை ஜெ. அவர்கள் அஜீத்தை முன்னிலைப்படுத்தியிருந்தால் (தன் கொள்கைகளையே தொடர) அது மிக வலிவுடன் இருந்திருக்கும். இப்போதும் எடப்பாடி அவர்கள் நன்றாகவே ஆட்சி செய்கிறார் என்பது என் எண்ணம் (உடனே பாஜக அழுத்தம் என்றெல்லாம் காவடி தூக்காதீங்க. காங்கிரஸ், கையில் சாட்டையை வைத்துக்கொண்டு கருணாநிதியை ஆட விட்டு 65 சீட்டுகள் வாங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள், 2 மணி நேரம் ஏசி கூலரில் படுத்துக்கிடந்தபின் ப.சி யை விட்டு மிரட்டியதில் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு வீடு நோக்கிக் கிளம்பியதையும் மறந்திருக்க மாட்டீர்கள். கழுத்தைப் பிடித்து முக்கிய இரண்டு ஆட்களை திகாரில் அடைத்ததையும் சக்கர நாற்காலியில் கருணாநிதி சிறைச்சாலை முன்பு காத்துக்கிடந்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள். அப்போதும் காங்கிரஸுக்கு 5% வாக்குகளுக்கு மேல் தமிழகத்தில் இல்லை. பாஜகவுக்கு 2-3% வாக்குகள் தற்போது இருக்கலாம்,. பாஜக, அதீதமாக அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது-அது வெறுக்கத்தக்கது என்பதுதான் என் எண்ணம். ஜெ. இருந்திருந்தால்… அப்போ பார்த்திருக்கணும்… பாஜக எப்படி வாலைச் சுருட்டிப் பம்மிக்கொண்டிருந்திருக்கும் என்று). இன்றைக்கும் அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கோ இல்லையோ அதிமுகவுக்குத்தான் பொதுமக்கள் வாக்களிக்கணும் என்பது என் எண்ணம், அவங்களை ஸ்டெரெந்தென் பண்ணணும், பாஜகவை கழுவி ஊற்றணும்-தமிழக அளவில். திமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழன் தனக்கு வைத்துக்கொள்ளும் ஆப்பு என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மற்ற கட்சிகளெல்லாம் வாக்கினைப் பிரித்து யாருக்கும் உபயோகம் இல்லாமல் செய்பவர்கள் என்பது என் எண்ணம், கம்யூ, விசி போன்றவர்கள் முதல்கொண்டு. தமிழகத்துக்கு அதிமுக, திமுக, பாமக போதும்.

 4. tamilmani சொல்கிறார்:

  ரஜினி என்னவோ அரசியலுக்கு வரமாட்டார் என்று என்று திமுக சார்பு டிவிக்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்ற்ன . திமுக 350 கோடி கொடுத்து பிரஷாந்த் கிஷோர் என்பவரை நியமித்து இருக்கிறது.ஸ்டாலின் என்ன சட்டை போடவேண்டும், எப்படி நடக்க வேண்டும் எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் tuition எடுக்க படுகிறது. ஒரு election ஏஜெண்ட்டுக்கு 350 கோடி கொடுப்பவர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன். அதிமுக வெற்றி பெறஎவ்வளவு செலவழித்தாலும் ரஜினி என்ற நபர்
  களத்துக்கு வரும்போது திமுக vs ரஜினி என்ற நிலை ஏற்படும்.
  தேர்தலில் செலவழிக்க அவரிடம் நிச்சயம் அவ்வளவு பணம் இல்லை.
  எனவே அவர் நடு நிலை வாக்காளர்களை
  மனச்சாட்சி உள்ள வாக்காளர்களை , தாய்மார்களை நம்பி களத்தில் இறங்குகிறார்

  அவரிடம் ஒரு தயக்கம் .இருப்பதை போல டிவி ஊடகங்கள் பொய் செய்தி பரப்புகின்றன .
  ரஜினி மக்கள் மன்றம் சேர்ந்தவர்கள் ரஜினியின் நல்ல நோக்கத்தை மக்களுக்கு
  கொண்டு சென்றால் ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்த முடியும். மேலும் தேர்தல் நேரத்தில்
  திமுக அதிமுக வேண்டாம் என்ற நிலைப்பாடு எடுத்த கட்சிகளும் இணைய வாய்ப்பு உண்டு.
  குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் மயங்காத வாக்காளர்கள் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் வாய்ப்பு உண்டு .

 5. Pugal சொல்கிறார்:

  ரஜினி மீதான நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரது அரசியல் வரவை ரஜினி ரசிகர்கள், சில காவிகள் உட்பட உண்மையான மாற்றம் தேவை என்று விரும்பும் பொதுமக்களும் ரஜினியின் அரசியல் வரவை எதிர்நோக்கி ஆதரவளித்து வந்தனர்.

  ஆனால் ரஜினி நான் ஆட்சிக்கு வரமாட்டேன் கட்சி போதும் என்று கூறுவது புதுமை போல தோன்றலாம். ஆனால் அது அவரது அரசியல் பயணத்திற்கு அவரே போட்டு கொள்ளும் endcard.

  ரஜினியின் மாற்றம் தேவை, சிஸ்டம் சரியில்லை, ஆன்மீக அரசியல், கட்சி வேறு ஆட்சி வேறு என்பதெல்லாம் வரவேற்க வேண்டிய விஷயங்கள் தான் ஆனால் அவை ரஜினியின்‌ கட்சியை போயஸ் தோட்டம்‌ கூட தாண்ட செய்யாது.

  ரஜினி கட்சியின் USP சாட்சாத் ரஜினியே தான். அவர் இல்லாத ஒரு ஆட்சியை மக்கள் நிச்சயம் அமைக்க ஓட்டு போட போவதில்லை. ரஜினி தன்னை முன்னிறுத்தி அவர் சொன்ன மாற்றங்களை செய்வாரேயானால் அது அவரை நம்பும் மக்களுக்கு அவர் செய்யும் நன்றி.

  வேறோருவரை முதல்வராக முன்னிலைப்படுத்தி அவர் அரசியல் கட்சி துவங்குவாரேயானால் அவரது அரசியல் உதயமாவதற்கு முன்பே அஸ்தமனமாகிவிடும்.

  குறிப்பு: ரஜினி நின்றால் கிடைக்கும் ஓட்டு அவர் சொன்னால் நிச்சயம் கிடைக்காது..

  இதையும் மீறி ரஜினியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் ஒருவரை CEO போல நியமித்தாலும் கூட தமிழக அரசியலும் ஊடகமும் அவரை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர் என்று தான் கூறும். ஏற்கனவே அத்தகைய பெயர்களை பக்தவத்சலம், பன்னீர்செல்வம் போன்றோர் பெற்று விட்டனர்.

  எதிர்கட்சிகளும் குறிப்பாக திமுக ஆட்சி க்கு எதிராக மிக சுலபமாக கலவரங்களை தூண்டி துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

  அப்போது ரஜினி என்ன கூறுவார்? உளவுத்துறை குறைபாடு, காவல்துறை குறைபாடு, முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று. டெல்லி கலவரத்திற்கு அமித் ஷா வை பதவி விலக சொன்னவர் தானே ரஜினி?

  சரி இவர் சொன்னவுடன் இவர் நியமித்த அந்த முதல்வர் பதவி விலகி விடுவாரா? தர்ம போராட்டம் என்று கிளம்புவார். அல்லது அவரோடு ஒன்றிணைந்து சக கட்சியினர் ரஜினியையே ஓரம் கட்டிவிடுவார்கள்.

  அன்று இந்திரா காந்தியை காமராஜர் வெளியேற்ற நினைத்து கடைசியில் கட்சியை இழந்தார். அருகிலுள்ள ஆந்திராவில் யாரென்று தெரியாத சந்திரபாபு நாயுடு வின் பின் தெலுங்கு தேச கட்சியினர் அணி வகுத்து தேவுடுவாக போற்றப்பட்ட என்.டி.ராமராவ் ஆட்சியிலிருந்தும் கட்சியிலிருந்தும் தூக்கி வீசப்பட்டார். இது ரஜினி க்கு நிகழாதா?

  பதவி ஆசை என்பது அடுத்து. மக்களே கேட்பார்கள், ரஜினி நீங்கள் யார் நாங்கள் வாக்களித்து தேர்வு செய்த முதல்வரை, அமைச்சரை வழிநடத்த, நியமிக்க, நீக்க என்று. அனைத்து மக்களும் ரஜினி என்ன சொன்னாலும் சரி தலைவா என்று தலையாட்ட அவரது ரசிகர்கள் அல்ல.

  சினிமா நடிகர் ரஜினி இதை பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் அரசியல்வாதி ரஜினி நிச்சயம் இவை அனைத்தையும் யோசிக்க வேண்டும்.

 6. Pugal சொல்கிறார்:

  ரஜினியின் பிரஸ் மீட் பார்த்தேன். வருத்தமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. இன்னும் குழப்பமான மனநிலையில் அவர் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

  திமுக, அதிமுகவின் அடுத்த நகர்வை திறம்பட உரைப்பதற்கு எந்தவித அரசியல் சாணக்யத்தனமும் தேவையில்லை. இருவருக்கும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதை விட சிறப்பாக வேறு கொள்கை இல்லை. அதனால் இந்த கட்சிகளை பற்றி அவர் சொன்னதில் புதிதாக எதுவும் இல்லை.

  தலைவர்களை உருவாக்கவேண்டும் என்கிறார். ஆனால் அதற்கு தலைவர் என்ன செய்ய போகிறார் என்று பார்த்தால்.. ஒன்றுமே இல்லை. இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்த ரசிகர் மன்றத்திலிருந்தே ஒரு நல்ல தலைவரை கூட உருவாக்க முடியாதவர் இனி எதுவும் செய்வார் என்பதும் சந்தேகமே.

  தமிழக மக்கள் ஊழலை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக அதாவது தவிர்க்க முடியாதது என ஏற்று கொண்டு விட்டனர். தேர்தலின் போது அரசியல் வாதிகள் கொடுக்கும் பணத்தை ஏற்று கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர். இவர்களிடம் எப்போது எழுச்சியை காண முடியும்? ஏதாவது பெரிய அளவில் வாழ்க்கை நஷ்டம் அரசியல் கட்சிகளால் ஏற்பட்டதால் இவர்கள் எழுச்சி அடைவார்கள் …இந்த மக்களிடம் எழுச்சி உண்டாக வேண்டும் என்கிறார். அது பேரலையாக மாறின பின்னர் அதற்கு தலைமையேற்று அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். இதை அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன அந்த டிசம்பர் கடைசி நாளிலேயே சொல்லியிருக்கலாமே. சுருக்கமாக மலையை தூக்கி தலையில் வையுங்கள் சுமக்கிறேன் என்கிறார்.

  கூடவே பத்திரிக்கைகள் மக்கள் மனதில் மாற்றங்களை விதைக்க வேண்டும் என்கிறார். ஆனானப்பட்ட சோ ராமசாமி ஐம்பதாண்டுகள் கரடியாக கத்தியும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனையில் ஊறி போயிருக்கும் இன்றைய பத்திரிக்கைகள் செய்யும் என்று அவர் நம்புவது பேராச்சர்யம்.

  மக்கள் விழிப்படைய வேண்டும்.. அவர்களிடம் ஒரு எழுச்சி உருவாக வேண்டும்.. தலைவர்கள் தானாக உருவாக வேண்டும்..இதையெல்லாம் இன்றைய பத்திரிக்கை உலகம் செய்ய வேண்டுமாம்…அட போங்க சார்….அரசியல் என்பது சினிமா அல்ல என்று எப்போது உணரப்போகிறார்?

  சந்தர்ப்பங்கள் தானாக அமையாது, நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சினிமாவில் வசனம் பேசிவிட்டு நிஜத்தில் அதற்கு நேர்மாறாக பேசுகிறார்.

  அரசியலில் அவசரப்பட்டு இறங்கி ஓட்டுக்களை பிரிக்க காரணமாக இருக்க கூடாது என்ற புரிதல், சொந்த பணத்தை செலவழித்து வருபவர்கள் நொடித்து போக நினைக்காதது, தற்காலிக கட்சி பதவி, 40-50 வயதானோருக்கு முன்னுரிமை..எல்லாவற்றையும் விட தான் முதல்வர் இல்லை என்றது.. இவற்றுக்காக கட்டாயம் ரஜினியை பாராட்டலாம்.

  ஆனால் அரசியலில் வெல்ல மக்களை புரிந்து கொள்ளவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டமுள்ள ரஜினிக்கு அவர் வழியிலேயே புரிய வைக்க வேண்டும் என்றால் குரு என்பவர் தான் இருக்கும் உயரத்துக்கு சிஷ்யனை கூட்டி செல்ல அவர் சிஷ்யன் இருக்கும் மட்டத்துக்கு கீழே வந்து தான் அவனை உயரத்துக்கு வழிகாட்டி அழைத்து செல்வார். குரு- சிஷ்யனில் ஜாலி குருவாக இருந்தால் சினிமாவுக்கு போதும். நிஜ வாழ்விலும் குருவாகவேண்டுமானால்.. சிஷ்யர்களுக்காக குரு இறங்கி வந்து தான் ஆகவேண்டும்.. வருவாரா?

  எங்கெல்லாம் புரட்சி உருவாகியதோ, அதற்க்கு பின் ஒரு தலைவன் இருப்பான். தலைவன் இல்லாத புரட்சி தானாக உருவாகாது. புரட்சி உருவாகட்டும், நான் வந்து அதில் குளிர் காய்கிறேன் என்பது பொருந்தாத பேச்சு. மேலும் புரட்சி வெடிக்கும் அளவுக்கு இங்கே கொடுங்கோல் ஆட்சி நடக்கவில்லை(1996 -இல் அப்படி ஒரு நிலை இருந்தது ) பிறகு எப்படி புரட்சி நடக்கும்…இவர் வர போகிறார்… ?

 7. Pugal சொல்கிறார்:

  நடைமுறை சாத்தியமில்லாத சினிமாவில் மட்டுமே சாத்தியமாக கூடிய விஷயங்களை முன் எடுத்துள்ளார் ரஜினி..

  நல்ல மனிதர்,நல்ல எண்ணம் கொண்டவர்.நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்…ஆனால் அவர் முன்வைப்பது..?

  வோட்டுக்கு பணம் வரலை என சாலை மறியல் செய்த புண்ணிய பூமி அல்லவா தமிழகம்…இவங்க கிட்ட போய் எழுச்சி வேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்பு தான்..

  அடுத்து கட்சி பதவி கூடாது என்பதை முன் எடுத்துள்ளார்..

  திமுக அதிமுக கலைஞர்,எம்ஜிஆர்,ஜெயலலிதா போன்றவர்கள் கூட நினைத்து பார்க்க முடியாத யோசனை இது..

  தேர்தல் முடிந்த பிறகு கட்சி பதவிகள் கலைக்கப்படும் என்பது தற்கொலைக்கு சமம்..

  ஒரு கட்சியோ ஆடசியோ உயிர்ப்புடன் இருக்க இந்த பதவிகள் என்பது அவசியம்..அவர் சொன்னபடி 50000 பதவிகள்..இந்த பதவிகள் என்பது வெறுமனே கட்சிபதவி தானே என ஒதுக்கிட முடியாது..இவங்க தான் கட்சியின் சல்லி வேர்கள்..இந்த வேர்கள் நீக்கப்பட்டால் ஆணிவேர் சாய்ந்து மரமே சாய்ந்து விடும்…கட்சிக்கும் மக்களுக்கும் ஆட்சிக்கும் பாலமாக இருப்பது இவங்க தான்..தேர்தல நேரத்தில் வந்தா போதும் மீதி நேரத்தில் நீங்க வேண்டாம் என சொல்ல இவங்க காண்டராக்ட் லேபர்ஸ் இல்ல…கட்சி தொண்டர்களின் மன குறை தீர்க்க இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் பதவிகள் என்பது அவசியம்..

  எம்எல்ஏ ஆக முடியாது அட்லீஸ்ட் ஏதாவது வாரியம் கட்சி பதவி பெறலாம் என்ற எண்ணத்தில் தனது வாழ்நாளை ஒரே கட்சியில் ஓட்டி வரும் கூட்டம் அதிமுக திமுக…

  இவர்களுக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்தும் ரஜினி இதனை தனது ரசிகர் மன்றங்களில் சோதனை முயற்சியாக கூட செய்து பார்ககவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..இப்பவும் நீங்க பார்ககலாம் தமிழகம் முழுவதும் ஒரே ஊரில் பல பெயரில் ரஜினி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.என்ன காரணம் என சொல்லி தெரியவேண்டியதில்லை..கட்சி வாக்கு வங்கி அரசியல் என வரும் போது கோவிலில் பெருந்தெய்வங்கள் மேலே இருக்கும் போது வாசலில் குட்டி குட்டி சன்னதிகள் இருப்பது போல இது போன்ற பதவிகள் அவசியம்..வேண்டாம் என ஒதுக்கி சினிமா வசனம் பேசலாம் நடைமுறை சாத்தியப்படாது..

  மற்றபடி ரஜினி புதிய விவாதத்தை கிளப்பி உள்ளார்..இது குறித்து பேசுவோம்..விவாதிப்போம்…மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது அல்லவா..ரஜினி முன் வைத்துள்ள இது எந்த அளவு சாத்தியம் என பார்ப்போம்..

  வழக்கம் போல இந்த முறையும் இந்த பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு போகுமா இல்லையா என்பதை சஸ்பென்ஸ்சிலேயே உள்ளது..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   Pugal,

   உங்கள் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள
   முடியாது என்றாலும் கூட, சில நடைமுறை
   உண்மைகளை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
   அவை யோசிக்கப்பட வேண்டியவையே.

   மொத்தத்தில், ரஜினியே ஆட்சிப்பொறுப்பை
   ஏற்றுக்கொள்ள முன்வந்தாலொழிய, அவர்
   உருவாக்கப்போகும் கட்சி வெற்றி பெற
   வாய்ப்பில்லை என்பது உங்கள் கருத்து.

   இது யதார்த்தமான உண்மை தான்.

   ஆனால், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,
   ஒரு தரப்பிலாகவே பேசும் தொலைக்காட்சி
   விவாதங்கள் மட்டுமன்றி,

   இது குறித்து இன்னும் பல்வேறு மட்டங்களில்
   பொதுமக்களிடம் எடுத்துச்சென்று பேசப்பட்டு,
   இதைப்பற்றி இன்னும் விரிவான கருத்துகள்
   உருவாக வேண்டும்…

   பார்ப்போம்…!!!

   நல்லது நடக்க வேண்டுவோம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.