( பகுதி -9 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…


சின்ன வயதில் தமிழ்/ஹிந்தி -படங்கள் பார்க்க
வேண்டும் என்கிற ஆசை மனம் நிறைய உண்டு….

ஆனால் –
———————————–

(பகுதி-8 ) நினைக்கத் தெரிந்த மனமே – பார்க்க ….

———————————–

சினிமா போக வேண்டுமென்றால் –
வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமோ,
பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமோ – எதுவுமே இல்லை.
யாரும் தேட மாட்டார்கள்…
வீட்டில் ஏகப்பட்ட பேர் இருந்ததால், வந்தது யார்,
போனது யார் என்று யாருக்கும் தெரியாது.
யாரும் கவலைப்படவும் மாட்டார்கள்… அப்படியே நினைப்பு
வந்தாலும் கூட, எங்கேயாவது விளையாடிக்கொண்டிருப்பான்
என்று நினைத்துக் கொள்வார்கள்.

ஆனால், எங்கே போனாலும் இருட்டுகிற நேரத்தில்
வீட்டிற்கு வந்து விட வேண்டும். இல்லையென்றால்
கேள்விகள் வரும்…!!!

ஆனால் சினிமா போக காசுக்கு எங்கே போவது…?
வீட்டில் கேட்க முடியாது; தரவும் மாட்டார்கள்..

நானே தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்….!

பள்ளியில் படிக்கும் 8-9 வயதுச் சிறுவன் எப்படி சம்பாதிப்பது…?

அதற்கும் வழி காட்டினான் அந்த ஆண்டவன்…!!!

சில வருடங்கள் நாங்கள் குடியிருந்த வீடு, ஊருக்கு வெளியே
தாபோடி என்கிற இடத்தில் இருந்தது. நான் படிக்கும் பள்ளி
ஊருக்கு நடுவே, பஸ் ஸ்டாண்டு எதிரே இருந்தது.
இரண்டுக்குமிடையே சுமார் மூன்று-மூன்றரை
கி.மீ. தூரம் இருக்கும்.

8 வயதுப்பையன் தினமும் ஸ்கூல் போகவர 7-8 கி.மீ.
நடப்பது கஷ்டமான காரியம் தான். என் பெற்றோர்களும் அதை
உணர்ந்தார்கள்.

வீட்டிலிருந்து ஸ்கூல் போக பஸ் கட்டணம் ஓரணா.
போக-வர இரண்டணா ஆனது. தினம் 2 அணா கொடுக்க
வீட்டில் வசதிப்படவில்லை. எனவே ஒரு compromise- ஆக
ஒருவேளை நடை, இன்னொரு வேளை பஸ் என்று
முடிவு செய்தார்கள். தினமும் காலையில் பள்ளி கிளம்பும்போது
ஒரணா கொடுப்பார்கள். ” போகும்போது பஸ்ஸில் போ…
திரும்ப வரும்போது மெதுவாக நடந்து வா..”

நான் இதை காசு சேர்க்க பயன்படுத்திக் கொண்டேன்.
கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே 2 வேளையும் நடப்பேன்.
தினம் ஒரணா சேர்த்தால், வாரத்திற்கு 6 அணா.
சினிமா டிக்கெட் 5 அணா தான். எனவே சுலபமாக,
வாரம் ஒரு சினிமா பார்க்கலாம்.

காலையில் பள்ளிக்கு போகும்போது, மிக வேகமாக நடக்க
வேண்டும். இல்லையென்றால் ‘லேட்’ ஆகி விடும்…
சில சமயங்களில் கொஞ்ச தூரம் ஓடக்கூட வேண்டியிருக்கும்.

ஆனால், திரும்பும்போது, நம்ம ராஜ்ஜியம் தான்.
என் கூட, அதே வழியில் வீடு இருக்கும் இன்னும்
2-3 பையன்களும் சேர்ந்து கொள்வார்கள்.
அரட்டை அடித்துக்கொண்டே நடப்போம். அருமையான,
அகலமான ரோடு. கொஞ்ச தூரம் நடந்தபிறகு பாம்பே-புனா
ஹைரோடு வேறு… அப்போதெல்லாம் அதிகம் ட்ராஃபிக்
இருக்காது… ரோட்டின் இரண்டு பக்கமும் நிழல் தரும்
பெரிய பெரிய மரங்கள்… அவற்றில் பாதிக்கு மேல்
புளிய மரங்கள்.

நீங்கள் பச்சை புளியங்காய் பார்த்திருக்கிறீர்களா..?
சாப்பிட்டு…? மிக ருசியாக இருக்கும்… துவர்ப்பும், புளிப்பும்
சரியான கலவையில் சேர்ந்து…!!!
மேல் ஓட்டை கடித்து துப்பி விட்டு, உள்ளே வெள்ளை-பச்சை
கலரில் இருக்கும் ஏரியா தான் சாப்பிட வேண்டிய பகுதி….

மரங்களில் நிறைய புளியங்காய்கள், கொத்து கொத்தாக தொங்கிக்கொண்டிருக்கும். முற்றியதை(பழங்களை)
தவிர்த்து விட்டு, காயாக பறிக்க வேண்டும். கீழ் மட்டத்தில்
இருப்பவற்றை எல்லாம், ஏற்கெனவே யாராவது
அடித்து காலி பண்ணி இருப்பார்கள்…

எனவே, உயரத்தில் இருப்பவற்றை, குறி பார்த்து கல் அடித்து
விழ வைக்க வேண்டும். எல்லா பசங்களும், மாற்றி மாற்றி
அடித்துக்கொண்டே செல்வோம்… விழுபவற்றை எல்லாரும்
பகிர்ந்து கொள்வோம்…. மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும் …
இப்போது நினைத்தால் கூட நாக்கில் நீர் …!!!

இப்படி ஆட்டம் போட்டுக்கொண்டே வீடு போய்ச்சேர
ஐந்து-ஐந்தரை மணியாகி விடும்… வழியில் ஒவ்வொருவர்
வீடாக வர, பசங்கள் பிரிந்து விடுவார்கள். கடைசி அரை கி.மீ.
நான் தனியாகத்தான் போக வேண்டியிருக்கும்….

மறக்க முடியாத பள்ளிப்பருவம்…!

அப்போதே – கவலைகளும், வேதனைகளும்
நிறைய உண்டு தான்…
ஆனால் அவை தனி…வித்தியாசமானவை…!
பகிர்ந்து கொள்ளக்கூடியவற்றை மட்டும்
அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

.
தொடரும்…..
————————————————————————————————————————————————————

நான் சிறுவனாக இருந்தபோது வெளியான ஒரு
அற்புதமான ஹிந்தி திரைப்படம் 1952-ல் வெளிவந்த
“பாய்ஜு பவாரா” …

இந்தப் படம் அக்பர் காலத்தில் வாழ்ந்த ஒரு
இசைக்கலைஞனின் வாழ்வில் நடப்பதாக புனையப்பட்ட
ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது.

பாடல்களுக்காகவே பெரும்புகழ்பெற்று, பல வாரங்கள்
ஓடி, வசூலை அள்ளிக்குவித்தது இந்தப்படம்.

இந்தப் படத்தில் அநேகமாக அனைத்து பாடல்களுமே
நன்றாக இருக்கும் என்றாலும் கூட, மாதிரிக்கு இரண்டை
மட்டும் கீழே பதிகிறேன்.

ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக்
கொண்டு, இசையமைப்பாளர் நௌஷாத் அவர்கள்
பாடல்களை வடிவமைத்தார்.

நான் கீழே தந்திருக்கும் பாடல்களின் ஒரு விசேஷம் –

இசையமைப்பாளர் நௌஷாத்,
பாடலை இயற்றிய ஷகீல் பதாயுனி,
பாடிய முகம்மது நபி ஆகிய மூவருமே இஸ்லாமியர்கள்.
ஆனால் கீழே தந்திருக்கும் பாடல் -இந்துக் கடவுளான
சிவனைக்குறித்தது- மிக மிக உருக்கமானது ….!!!

அனுபவித்து ரசிக்க வேண்டிய பாடல்…
2-ம் முறை கேட்டுப் பாருங்கள்…
இன்னும் அதிகம் பிடிக்கும்.

.
————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ( பகுதி -9 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

 1. BVS சொல்கிறார்:

  முதல் பாடல் அப்படியே மனதை உருக்குகிறது.
  நீங்கள் சொன்னது போலவே மீண்டும் மீண்டும்
  கேட்கத் தூண்டுகிறது. எனக்கு ஓரளவு ஹிந்தி
  தெரியும். 60-70 வ்ருடங்களுக்கு முன்னால் இன்றும்
  தொடர்ந்து ரசிக்கிற மாதிரி இவ்வளவு அருமையான
  பாடல்கள் வந்திருக்கின்றன என்பதை பார்க்கும்போது
  ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனையும் யூ-ட்யூபில்
  ரெடியாக இருந்தும், நல்ல, ரசிக்கத்தகுந்த விஷயங்கள்,
  பாடல்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன, எவை என்பது
  தெரியாததால், இவற்றை எல்லாம் அனுபவிக்க
  முடியவில்லை.
  நீங்கள் இதையெல்லாம் உங்கள் அனுபவத்தில்
  பார்த்து இது இது நன்றாக இருக்கிறது;பாருங்கள் என்று
  சொல்வது மிக மிக உதவியாக இருக்கிறது. உங்களின்
  இந்த கட்டுரைத் தொடர் எனக்கும், என் போன்ற
  மற்றவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
  பல தரப்பட்ட விஷயங்களை உணர்ந்து ரசித்து
  நீங்கள் எழுதுடது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
  இந்த மாதிரி விஷயங்களை நிறைய எழுதுங்கள்
  என்று கேட்டுக்கொள்கிறேன. நன்றி.

 2. Pingback: ( பகுதி -10 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.