( பகுதி-5 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…எப்படியோ தெரியவில்லை… இயற்கையாகவே
சின்ன வயதிலிருந்தே எனக்கும் திரைப்படத்துறைக்கும்
ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்து வந்திருக்கிறது…..
என்னுடைய ஆர்வமும், ஈடுபாடும் இந்த வயதிலும் கூட
அதில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
என்ன – தமிழ்ப்படங்கள், ஹிந்தி படங்கள்
என்றிருந்தது இப்போது உலகத் திரைப்படங்கள் என்கிற
அளவில் விரிந்திருக்கிறது.

என்னுடைய இந்த இடுகைத் தொடரில் –
தமிழ், ஹிந்தி – திரைப்படத் துறையைப்பற்றி,
பழைய திரைப்படங்களைப்பற்றி,
பழைய பாடல்களைப்பற்றி, கலைஞர்களைப்பற்றி
யெல்லாம் அவ்வப்போது நிறைய செய்திகளையும்
கலந்து தரலாமென்று இருக்கிறேன்….

இன்றைய திரைப்படங்களுக்கும், பழைய
திரைப்படங்களுக்கும் டெக்னிகலாக நிறைய
வித்தியாசங்கள் இருக்கின்றன.

இன்று எல்லாமே டிஜிடல் மயமாகி விட்டது.
நிகழ்காலத்தில் – புகைப்படச் சுருளே ( film roll ) இல்லாமல்
டிஜிடல் காமிராவில் திரைப்படம் எடுப்பதும்,
பிரிண்ட் போடாமலே அவற்றை சாட்டிலைட்
மூலம் திரையிடுவதும் பற்றியெல்லாம் நண்பர்கள்
அறிந்திருப்பீர்கள்.

இதனால், இன்றைய தினங்களில் – டெக்னிகலாக
திரைப்படங்களை எடுப்பதும் சரி, திரையிடுவதும் சரி –
மிகவும் சுலபமாகி விட்டது.

ஆனால், இந்த தொழில் நுணுக்கங்கள் எல்லாம் கடந்த
10-15 ஆண்டுகளில் தான், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக
நிதானமாக வந்தவை….

அதற்கு முன்பெல்லாம் ஒரு திரைப்படம் எடுப்பதோ,
தற்போது போல் ஏராளமான திரையரங்குகளில்
ஒரே சமயத்தில் திரையிடுவதோ –
அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்கவில்லை.

படம் ஷூட்டிங் எடுப்பதற்கும், பிறகு பிரிண்ட்கள்
போடுவதற்கும் – ஃபிலிம் சுருள் எனப்படும் கச்சா ஃபிலிம்
நிறைய தேவைப்படும். ஃபிலிம் சுருள்களுக்காகவே
நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும்.

இப்போதெல்லாம் திரைப்படங்களின் நீளம் மீட்டரில்
குறிப்பிடப்படுகிறது. முன்பெல்லாம் இவை அடி’யில் ( feet )
தான் குறிப்பிடப்படும். ஒரு திரைப்படம் ( தமிழானாலும் சரி,

ஹிந்தியானாலும் சரி…) சாதாரணமாக 15,000 அடிமுதல்
18,000 அடி வரைக்கும் இருக்கும். கொடுக்கின்ற பணத்திற்கு
3 மணி நேரம் படம் பார்த்தால் தான் ரசிகனுக்கு
திருப்தி ஏற்படும் என்பதால், நீளமான படங்கள் சகஜம்.

சுமார் 1000 அடிகள் கொண்டது ஒரு ரீல்(எனப்படும் வட்ட
வடிவிலான தகர டப்பா பெட்டி…!!! சாதாரணமாக
ஒரு படத்திற்கு 15 முதல் 18 ரீல்கள் வரை போகும்.

இந்த ரீல்கள் அனைத்தின் மீதும் வரிசையாக ரீல் நம்பர்
லேபிள் இடப்பட்டு ஒரு பெரிய தகரப்பெட்டியில்
பாதுகாப்பாக வைத்து எடுத்துச் செல்லப்படும். இதைத்தான்
“ஃபிலிம் பெட்டி” என்பார்கள்.

அந்தக் காலங்களில், வெள்ளிக்கிழமைகளில்,
புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது, ஃபிலிம் சுருள் பெட்டிகள்

தியேட்டருக்கு கொண்டு வரப்படுவதைப் பார்க்கும் ரசிகர்கள்
“பொட்டி வந்தாச்சு” “பொட்டி வந்தாச்சு” என்று சந்தோஷக்
கூத்தாடுவதைப் பார்ப்பது தனி அனுபவம்.

இப்போதெல்லாம், படம் எடுக்கும்போது, லைட்டிங்
ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. டிஜிடல் காமிராவில்
தான் படம் ஷூட் செய்யப்படுவதால், கம்ப்யூட்டர் தொழில்

நுட்பத்துடன்வெளிச்சத்தை கூட்டிக்கொள்ளவே, குறைத்துக்
கொள்ளவோ முடியும்.

ஆனால் முன்பெல்லாம் லைட்டிங் ஒரு பெரிய பிரச்சினை.
ஓளிப்பதிவின் மிக முக்கிய அம்சம் லைட்டிங். பெரும்பாலான
படங்கள் ஸ்டூடியோக்களின் உள்ளே தான் எடுக்கப்பட்டன.
எனவே ஷூட்டிங் சமயத்தில், அதிக அளவு ஒளி பாய்ச்சப்பட

வேண்டும். லைட்பாய் என்கிற நபரின் அவசியம் தவிர்க்க
முடியாததாக இருந்தது. செட்’களில் மேலேயிருந்து
வெளிச்சம் பாய்ச்சப்பட, 30-40 அடி உயரங்களில் எல்லாம் கூட
லைட்பாய்ஸ் அமர்ந்து விளக்குகளை கையாள
வேண்டியிருந்தது.

நான் இங்கே முக்கியமாகச் சொல்ல வந்தது வேறு விஷயம்.
ஒரு ப்ரிண்ட் போட குறைந்த பட்சம் 50-60 ஆயிரம்
ரூபாய்கள் வரை ஆகும் என்பதால், தமிழ்ப்படங்களுக்கு
சாதாரணமாக 40 ப்ரிண்டுகள் போட்டாலே அதிகம்.

எனவே படம் ரிலீசாகும்போது, ஒரே சமயத்தில் அதிக பட்சம்
40 திரையரங்குகளில் தான் திரையிடப்பட்டு வந்தன… அதுவும்
முக்கியமான, பெரிய நகரங்களில் மட்டும் தான். சென்னையில்
சாதாரணமாக 3 திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது வழக்கம்.
(இப்போது – 50-60 திரையரங்குகள் – டிஜிடல் கைங்கரியம்…! )

பெரிய நகரங்களில் முதல் ரவுண்டு ஓடி முடிந்த பிறகு தான்,
(அது 6 வாரமோ, 8 வாரமோ ஒருவேளை வெற்றிகரமாக
அமைந்தால், 100 நாட்களோ) இரண்டாம் கட்ட
நகரங்களுக்கு வரும்…. அங்கே 2-3 வாரங்கள் ஓடிய பிறகு,
கடைசியாக சின்ன சின்ன ஊர்களுக்கும், அதன் பிறகு டூரிங்
கொட்டகைகளுக்கும்…!!!

இதே 40 ப்ரிண்டுகள் தான் தமிழ்நாட்டில் ஊர் ஊராக
வலம் வந்து கொண்டிருக்கும்.

வட இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வழக்கம்
சற்று வித்தியாசப்படும்….
(அடுத்த பகுதியில் இது குறித்து தொடர்கிறேன். )

——————————————————————
இன்னொரு விஷயம் –
இனி, ஒவ்வொரு இடுகையின் இறுதிப்பகுதியிலும்
ஒரு நல்ல பழைய தமிழ்ப்பாடலை பதிவிட்டு
நினைவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன்.

இது – இந்த தளத்தின் மூத்த வாசகர்களுக்கு
சந்தோஷமான அனுபவமாக இருக்கும்.
அதே சமயம், இளைய வாசகர்களுக்கு,
ஒரு நல்ல பழைய பாடலை அறிமுகப்படுத்திக் கொண்ட
திருப்தி ஏற்படும்…

இந்த இடுகையில் –
1955-ல் வெளிவந்த “மங்கையர் திலகம்” படத்திலிருந்து
ஒரு இனிமையான பாடல். இந்தப்படத்தில், சிவாஜி, பத்மினி
இருவரும் நடித்திருந்தாலும், சிவாஜியை எடுத்து வளர்க்கும்
அண்ணியாக பத்மினி அவரை விட மூத்த வயதினராக
வருவார்….

மராட்டியிலும், ஹிந்தியிலும் ஹிட்’டான
பாபி கீ சுடியான்…(அண்ணியின் வளையல்கள் )
என்கிற படத்தின் கதையை வைத்து
தயாரிக்கப்பட்டது தமிழ் மங்கையர் திலகம்.

….

நீலவண்ண கண்ணா வாடா –
நீ ஒரு முத்தம் தாடா….
தட்ஷிணாமூர்த்தி இசையமைப்பில்,
பாலசரஸ்வதி பாடியது….

….

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ( பகுதி-5 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

 1. புவியரசு சொல்கிறார்:

  பழைய நினைவுகளிலிருந்து நீங்கள் தருவது
  எங்களுக்கு புதிதாகவும் சுவாரஸ்யமாகவும்
  இருக்கின்றன. இதுபோல தொடர்ந்து நிறைய
  எழுதிக்கொண்டே இருங்கள்.

 2. D Chandramouli சொல்கிறார்:

  Similar to the lovely song “Neela vanna kannaney,,,,,” there is another beautifully tuned Vaali’s song “Chella Kiliye Mella Pesu’, my favorite. One of the best from Vaali was from Padagoti, Nee Oru Kuzhandai which takes the cake with its great lyrics and sweet tunes.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.