வருமான வரி ஏய்ப்பவர்கள் …..


வருமான வரி செலுத்துவோரில், அதிகம் சம்பாதிக்கும்
ரியல் எஸ்டேட் சிவில் எஞ்சினீயர்கள், தனியாக பிராக்டீஸ்
செய்யும் பிரபல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள்,
திரையுலக பிரபலங்கள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

ஆனால், அவர்களில், ஆண்டிற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல்
வருவாய் காண்பித்து, வருமான வரி செலுத்துவோர்,
2,200 பேர் மட்டும் தான் என்று ஒரு தகவலை வெளியிட்டு,
அப்படியானால், உயர்தரமான கார்களை வைத்திருப்போர்,

வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வோர்,
வெளிநாடுகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்போர்
ஆகியோரை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது…?’
என்று இந்த நாட்டின் தலைமை நிர்வாகி, ஒரு நிகழ்ச்சியில்
உரையாற்றும்போது கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவர் தெரிவித்த 2200 பேர் மட்டுமே என்கிற தகவல்
தவறானது என்றும் இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கு மேல்,
வருவாய் காண்பிப்போர் எண்ணிக்கை –
97 ஆயிரத்து, 689 என்று சிலர் வருமான வரித்துறையின்
வலைத்தளத்தில் இருந்து தகவல்களைச் சுட்டிக்காட்டினர்.

பிறகு வருமான வரித்துறையே
முழுத் தகவல்களையும், வெளியிட்டது.
அதன்படி, 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் காட்டி,
வரி கட்டுவோர் எண்ணிக்கை, 8,600 என்று தெரிவித்தது.

இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற
புரொபஷனல்கள், 2,200 பேர் தான் என்பதை வருமான
வரித்துறை உறுதி செய்தது.

இங்கே ஒரு கேள்வியை அவசியம் கேட்க வேண்டி
இருக்கிறது….

உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் ஆஜராகும்
சீனியர் வழக்கறிஞர்கள் ஒரு நாளைக்கு 10 லட்சம், 20 லட்சம்
என்று ஃபீஸ் வாங்குவது ஊருக்கு தெரிந்த உண்மை.
இத்தகைய வழக்கறிஞர்கள் எவராவது தாங்கள் பெறும்
உண்மையான தொகைக்கு ரசீது தருகிறார்களா…?

அதே போல், உயர், Super Speciality மருத்துவ மனைகளில்
பணியாற்றும் ஸ்பெஷலிஸ்டு டாக்டர்கள், (இதயம், கிட்னி….)
அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஒரு ஆபரேஷனுக்கு
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குவதும் ஊரறிந்த உண்மை.

இதைத்தவிர சென்னை, மும்பை, டெல்லி, பங்களூர்,
கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களில்
தனியாக மருத்துவமனை, consulting centre நடத்தும்
மருத்துவர்கள், ஒரு நோயாளிக்கு, ஒரு தடவைக்கு
500 ரூபாய் வாங்குவதும் மக்கள் நடைமுறையில்
அறிந்துள்ள உண்மை. பெரும்பாலான மருத்துவர்கள்
தாங்கள் பெறும் தொகைக்கு ரசீது கொடுப்பதில்லை என்பதும்
ஊரறிந்த விஷயம்.

வருமான வரித் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களிலிருந்து
மற்றொரு விஷயமும் தெரிய வருகிறது.
அதாவது, மொத்த மக்கள் தொகையான 130 கோடி பேரில்,
இந்தியாவில் 1.46 கோடி தனிநபர்கள் தான் வருமான வரி
கட்டுகின்றனர்.

அதிலும், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய்
காண்பிப்பவர்கள், 1 கோடி பேர்.

10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் காட்டுவோர்,
46 லட்சம்.

இதிலும், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய்
காட்டுவோர், 3.16 லட்சம் பேர் தான்.

அதாவது, நேர்மையாக வரிகட்டுபவர்கள்
மாத சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் துறை
ஊழியர்கள் மட்டும் தான்.

வருமான வரி செலுத்துவோரில் –
சுயதொழில் செய்யும், மாதச் சம்பளம் பெறாதவர்கள்
என்று ஒரு வகையினரும் இருக்கின்றனர்.

2018- – 19 பட்ஜெட்டில், இவர்கள் கட்டும் வரியின்
அளவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாதச் சம்பளம் பெறாத (சுயமாக தொழில் செய்வோர்)
சராசரியாக ஆண்டொன்றுக்கு, 25 ஆயிரத்து, 753 ரூபாய்
தான் வருமான வரி செலுத்துகிறார்கள்.

மாதச் சம்பளம் பெறும், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள்
இவர்களைப் போல் பல மடங்கு, அதாவது, சராசரியாக,
76 ஆயிரத்து, 306 ரூபாய் வருமான வரி செலுத்துகின்றனர்.

மேலும் – விவசாய வருமானத்திற்கு வருமான வரியிலிருந்து
மொத்தமாக விலக்கு அளிக்கப்படுகிறது.

– 2012 விவரங்களின்படி, இந்தியாவில் எட்டு லட்சம் பேர்,
தங்களை விவசாயிகள் என்று அறிவித்து, கோடிக்கணக்கில்
சம்பாதித்து கொண்டு, வரி கட்டாமல் இருக்கிறார்கள்.
ஆனால், இவர்களும் வருமான வரி ரிடர்ன் சமர்ப்பிப்பதால்,
இவர்களின் வருமான விவரங்கள் அரசிடம் இருக்கின்றன.

நாட்டின் தலைமை நிர்வாகியே – மக்கள் ஒழுங்காக
வருமான வரி கட்டுவதில்லை என்று பொதுவெளியிலேயே
புகார் தெரிவித்தால் –

இத்தனை தகவல்கள் அரசிடம் இருக்கையில்,
இவர்களை வரி கட்டுவதிலிருந்து தப்ப விடுவதும்,
மறைக்கப்படும் வருமானத்தை கண்டுபிடித்து,
தவறு செய்பவர்கள் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை
எடுக்கும் பொறுப்பிலிருந்து தவறுவதும் – யார்…?

பொதுவெளியில், பொது மக்களிடம் –
அதிகம் சம்பாதிப்பவர்கள் ஒழுங்காக வருமான வரி
செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று புலம்புவதில்
என்ன அர்த்தம்….?

சட்டத்தை வளைப்பவர்களையும், ஏமாற்றுபவர்களையும் –
வளைத்துப் பிடித்து, உரிய நடவடிக்கை எடுப்பதிலிருந்து
அதிகாரத்தில் உள்ளவர்களை தடுப்பது யார்…?

பொதுமக்களா…?

.
—————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to வருமான வரி ஏய்ப்பவர்கள் …..

 1. VS Balajee சொல்கிறார்:

  Sir
  Most the big business man ,have a few agri land and they show black money as agri income (our past chief minster JJ , former fin minster , shown crs of rs, as agri income in IT return and no tax paid for that.. Big agri ,who earn more than Rs10 lahks pa should taxed. Fake Agri business man should be stopped. NO one from BJP or Congress had guts to speak on this…This India.. only weak will hurt first..VS Balajee

 2. Ezhil சொல்கிறார்:

  ஆனால் அய்யா, எல்லாவற்றையும் திடுதிடுவென இரும்புக்கரம் கொண்டு (சாதக பாதகங்களை ஆராயாமல்) செய்து முடிக்கும் மிகப்பெரும் தலைவர்களான திருவாளர் மோடிக்கும், மேதகு அமித் ஷா அவர்களுக்கும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எவ்வளவு நேரம் ஆகும் ? ஏன் செய்யவில்லை என்று நினைக்கின்றீர்கள் ?

 3. புவியரசு சொல்கிறார்:

  மனம் என்னும் மந்திரச் சாவியை காணோமாம்.
  மனமிருந்தால் தானே ?

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  //வளைத்துப் பிடித்து, உரிய நடவடிக்கை எடுப்பதிலிருந்து அதிகாரத்தில் உள்ளவர்களை தடுப்பது யார்…?//

  அதற்கு நம் நாட்டின் சட்டங்களும் நீதி மன்றங்களும்தான் காரணம் என்று நினைக்கிறேன். அரசியல்வாதிகள், கட்சி முக்கியஸ்தர்கள் என்பது பல்வேறுபட்ட மனிதர்களின் தொகுப்பு. ஒரு தலைவரோ இல்லை ஓரிருவரோ இதனைச் சுத்தம் செய்ய முடியாது. (மதம், ஜாதி என்று பல்வேறுபட்ட பிரச்சனைகள், அதனைச் சார்ந்து வாக்களிக்கும் மக்கள் என்ற பிரச்சனைகள்).

  திருடன், அயோக்கியன் என்று பலரை நிறுத்தினாலும், மக்கள்தான் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால், நடக்கும் அனர்த்தங்களுக்கு (அரசியலில்) பொதுமக்கள்தாம் பொறுப்பு.

  அடுத்தது இந்த நாட்டின் சாபக்கேடுகள் என்று நாம் நாட்டை கண்ட்ரோல் செய்யும் நீதிமன்றங்கள் (அதனைச் சார்ந்த வழக்கறிஞர்கள்), அவை அளிக்கும் நகைச்சுவைத் தீர்ப்புகள், எந்த ஒரு பிரச்சனைக்கும் நீதி சொல்லாமல், ஆயிரம் வருடங்கள் எந்த வழக்குகளையும் தாமதம் செய்வது, வழக்கை நடத்தவேண்டிய கறுப்பாடுகள் இவைதான் நாட்டின் பிரச்சனைக்கு மூலக் காரணம்.

  சாதாரண மனிதர்களுக்கு (அரசியல் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு) யார் யார் அரசியலில் கொள்ளையடித்தார்கள், அடிக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் சட்டப்படி இவர்களுக்கு காப்பு கட்ட முடிவதில்லை. ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். ப.சி. எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. நம் எல்லோருக்கும் இந்த உண்மை தெரியும். ஆனால் நீதிமன்றத்துக்கு இது தெரியாது. அவர்கள் அந்த வழக்கை இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் பல வாய்தாக்கள் போட்டு. ஆனால் சாம்பாரில் உப்பு குறைவு என்பதை அவசர வழக்காக எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் கொலைகாரர்கள் என்று நீதிமன்றத்துக்குத் தெரியும். ஆனால் தெரியாததுபோல நடிப்பார்கள் பலப் பல வருடங்களாக.

  மக்களாகிய நாம் என்ன செய்யணும்? நீதிமன்றத்தை நாம் எதுவும் செய்ய முடியாது. அரசியல்வாதியை, நீ நேர்மையற்றவன், நீ அரசியலுக்கு வராதே, நீ தேர்தலில் நின்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லணும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ‘அவன் திருடன் என்றாலும், அது வேறு, அவன் இப்போது சொல்லும் நியாயம் என்பது வேறு என்று அவனுக்கு வக்காலத்து வாங்குகிறோம் (நான் சொல்வது கறை படிந்த அரசியல்வாதியை. எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியையும் அல்ல). இதனால் அரசியலில் நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் பொதுமக்கள்தாம் பொறுப்பு.

  இதனால், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் நேரத்தை வழக்கு போட்டு அதை நிரூபிக்க நீதித்துறையோடு மல்லுக்கட்டுவது, அறிவற்ற மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்வது என்று தங்கள் நேரத்தைச் செலவு செய்வதில்லை. வழக்கை நடத்தவேண்டிய அரசுத் துறையிலும் ஏகப்பட்ட கறுப்பாடுகள். இதனால்தான் நியாயம் யாருக்கும் கிடைப்பதில்லை.

 5. Gopi சொல்கிறார்:

  நெல்லைத்தமிழன்
  // நடக்கும் அனர்த்தங்களுக்கு (அரசியலில்)
  பொதுமக்கள்தாம் பொறுப்பு. //

  உண்மை தான்.
  சுயநலவாதிகளையும்,
  தொழிலதிபர்களுக்கு வால் பிடித்து
  சேவா செய்பவர்களையும்,
  மத உணர்வு ஒன்றை மட்டுமே
  அடிப்படையாகக்கொண்டு தேர்ந்தெடுத்து,
  இரண்டாம் முறையும் தேர்ந்தெடுத்து
  பதவியில் அமர்த்திய அந்த மக்கள் தான்
  அனைத்திற்கும் காரணம்.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நெல்லைத்தமிழன்,

  .
  —-உங்களுக்கு ஒரு straight question –

  கடந்த 6 வருடங்களாக பதவியில்
  இருக்கும் அரசு,

  வருமான வரிச்சட்டத்தில் ஏகப்பட்ட
  திருத்தங்கள் கொண்டு வந்துள்ள ஒரு அரசு –

  வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல்
  விவசாய வருமானம் காட்டுபவர்களுக்கு
  மட்டும் இன்னமும் வரி ஏதும்
  போடாமல் இருப்பது ஏன்?

  இதைத் தடுப்பது யார்…?
  முட்டாள் பொதுமக்களா…?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   அரசில் காங்கிரஸ், பாஜக என்று வித்தியாசமே கிடையாது. இருவரும் தொழிலதிபர்கள், அரசியல் ப்ரோக்கர்கள்-சரத்பவார் போன்று, நடிகர்/நடிகை/பிரபலமான ப்ரோக்கர்கள்-இதில் அமிதாப் பச்சன் முதல்கொண்டு அனைவரும் உண்டு – இவர்களுக்கு வால் பிடிப்பவர்கள். இதனைத் தட்டிக் கேட்காததால் (அதாவது சரத்பவாரை இந்தக் காரணத்துக்கு தோற்கடிக்காதவர்கள், அவரை ஆதரித்தவரைத் தோற்கடிக்காதவர்கள்) பொதுமக்களுக்குத்தான் இதில் பங்கு உண்டு. இது ஏதோ 6 வருட கதை இல்லை. அமிதாப், சரத்பவார் போன்றோர் தாங்கள் விவசாயிகள் என்று கோடிக்கணக்கான ரூபாய்களை லபக்குகிறார்கள்.

   வீட்டில் கணக்குக் காண்பிக்காத 80 லட்ச ரூபாய் வைத்திருந்த விஜயை அதிகாரிகள் கணக்குக் கேட்டால், மதம், மக்கள் ஆதரவு என்று தமிழகத்தில் திசை திரும்புவது தெரியவில்லையா? அப்போ நாம் அந்த மாக்களைத்தானே குறை சொல்லணும்? வைகுண்டராஜன் மணல், மினரல் கொள்ளைகளுக்கு, காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் மணல், மினரல் கொள்ளைகளுக்கு, அதனை ஆதரித்து கோஷம் எழுப்பி சட்டப்படியான நடவடிக்கைகளை வாக்குப்பிரச்சனையாக ஆக்குவது அந்த மக்கள்தானே.

   இந்த சி.ஏ.ஏ. சட்டத்திற்கு, சம்பந்தமில்லாமல் தமிழகம், திமுக பொங்குவது ஏன்? இதனைக் கண்டுகொள்ளாத மக்கள்தானே அதற்கும் காரணம்?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    //கடந்த 6 வருடங்களாக பதவியில்
    இருக்கும் அரசு,

    வருமான வரிச்சட்டத்தில் ஏகப்பட்ட
    திருத்தங்கள் கொண்டு வந்துள்ள ஒரு அரசு –

    வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல்
    விவசாய வருமானம் காட்டுபவர்களுக்கு
    மட்டும் இன்னமும் வரி ஏதும்
    போடாமல் இருப்பது ஏன்? //

    -என் கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து
    பதில் கிடைக்கவில்லை. 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     இயலாமை. வாக்கு வங்கி பாதிக்கப்படும், அரசுக்கு எதிராக பிரபலமானவர்கள் (மக்கள் ஆதரவு உடையவர்கள்) கிளம்புவார்கள் என்ற அச்சம், பாஜகவிலேயே அத்தகையவர்கள் இருக்கக்கூடும்-அந்த புரிதலாகக்கூட இருக்கக்கூடும்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      ஆக – காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வித
      வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறீர்கள்… 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      ஆமாம். விவசாய வருமானம் என்று அரசியல்வாதிகள் கணக்குக் காட்டுவதைக் கண்டுகொள்ளாததில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு வித்தியாசம் இல்லை.

      பாஜக ஹிந்து ஆதரவு, காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு மட்டும் ஆதரவு என்ற விதத்தில் இருவருக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.

      ஊழலில் காங்கிரஸ் எட்டிய அளவை யாராலும் மிஞ்ச முடியாது என்றே நினைக்கிறேன். தேசவிரோதச் செயலிலும் அப்படித்தான்.

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  NRI மேல் வரி வசூலிக்க இந்த பட்ஜெட்டில் ஒரு ஷரத்து உள்ளது

  வருமான வரி இல்லாத நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்
  இந்தியாவில் இருப்பதாக கருதப்படும் .
  அவர் வெளிநாட்டில் சம்பாதிப்பதை இங்கு வரி கட்ட வேண்டும் .

  மிடில் ஈஸ்ட்டில் வருமானவரி கிடையாது .
  அப்ப டாக்ஸ் கட்டணுமா ? இதற்கு தெளிவான பதில் இன்னும் இல்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.