( பகுதி-3 ) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!


அந்தக் காலத்தில், சந்திரலேகாவின் பிரம்மாண்டத்தைப்
பார்த்து இந்தியத் திரையுலகே வியந்து போனது.

ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளர் திரு.எஸ்.எஸ்.வாசன்,
தனது சந்திரலேகா படத்தின் மூலம் அகில இந்திய அளவில்
பல புதிய சாதனைகளைப் படைத்தார்.

அந்தக்காலத்தில், யாரும் நினைத்துக்கூட
பார்க்க முடியாத அளவிற்கு – அதுவரை இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிகச் செலவுடன்
அவரது சந்திரலேகா-வை… சுமார் 30 லட்சம் ரூபாய்..
அதுவும் 1948-ல்.. பிரம்மாண்டமாக உருவாக்கினார்….!!!

எஸ்.எஸ்.வாசன் அவர்களைப்பற்றியும், அவரது திறமைகள்/
சாதனைகள் பற்றியும் இன்றைய இளைஞர்களுக்கு அதிகம்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கையின் அடித்தட்டில்
இருந்த வாசன் அவர்கள், திறமை, தன்னம்பிக்கை, உழைப்பு
-ஆகியவற்றையே மூலதனமாகக் கொண்டு படிப்படியாக
முன்னேறி சாதனைகள் படைத்த கதை மிகவும்
சுவாரஸ்யமானது. அதை வேறொரு சமயத்தில் எழுதுகிறேன்.

இங்கே அவரது சந்திரலேகா பற்றிய சில சாதனைகள் மட்டும் –

1943-ல் படப்பிடிப்பு துவக்கப்பட்ட சந்திரலேகா(தமிழ்)
9 ஏப்ரல் 1948-ல் தான் திரையிடப்பட்டது. பிரம்மாண்டமான
அந்தப்படத்தின் தயாரிப்பு கிட்டத்தட்ட 5 வருடங்களை
சாப்பிட்டு விட்டது. எல்லா பட்ஜெட் எதிர்பார்ப்புகளையும்
மீறி அந்தப்படத்தின் தயாரிப்புச்செலவு எஸ்.எஸ். வாசன்
அவர்களை ஒரு மிகப்பெரிய சூதாட்டத்தில் இறக்கி விட்டது.

படத்தை முடிக்கப் பணம் இல்லாத வாசன், தன் சொத்துக்கள்
அனைத்தையும் அடகு வைத்தார். தன்னிடம் இருந்த
நகைகள் அனைத்தையும் விற்று விட்டார். மிகப்பெரிய
அளவிற்கு வெளியிலும் கடன் வாங்கினார்.

தமிழில் சாதாரணமாக – 40 பிரிண்டுகள் போடப்படும்
நிலையில், சந்திரலேகாவிற்கு 70 பிரிண்டுகள் போடப்பட்டு,
தமிழில் முதல் தடவையாக அதிக திரையரங்குகளில்
வெளியிடப்பட்டது.

அதுவரை யாருமே செய்யாத அளவிற்கு மிகப்பெரிய,
பலத்த விளம்பரங்களுடன் தமிழில் ரிலீஸ் செய்யப்பட்ட
அந்தப்படம், நல்ல வரவேற்பையும், வசூலையும்
பெற்றாலும் கூட, அதீதமாக செலவழிக்கப்பட்ட
பணத்தை திரும்பக் கொண்டு வரவில்லை.

எனவே, வாசன், செலவை ஈடுகட்ட, அதை ஹிந்தியிலும்
எடுக்கத் தீர்மானித்து, சில காட்சிகளை மட்டும் மாற்றி,
அவற்றை மட்டும் ஹிந்தியில் தனியாக படப்பிடிப்பு நடத்தி
சேர்த்து, அதே வருடம்,(1948) டிசம்பர் 24-ந்தேதி ஹிந்தியில்
ரிலீஸ் செய்தார்.

600 பிரிண்டுகளுடனும், பிரம்மாண்டமான விளம்பரங்களுடனும்
இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட ஹிந்தி சந்திரலேகா,
வாசன் இழந்த செல்வங்கள் அனைத்தையும் அவருக்கு
மீட்டுத் தந்தது….

ஹிந்தியில் மட்டும் சுமார் 70 லட்சம் ரூபாய்
வசூலித்துக் கொடுத்தது. மெட்ராஸ் என்கிற பெயருக்கு
வட இந்திய திரையுலகில் தனிப்பெயரை தேடித்தந்ததுடன்
அடுத்த 5 வருடங்களுக்கு மெட்ராசை நோக்கி பல
ஹிந்திவாலாக்களை வரவழைத்தது. தமிழக திரைப்பட
தயாரிப்பாளர்களுக்கு அகில இந்திய அளவில் ஒரு புதிய
மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்தது.

அந்தப்படத்தில் வரும் முரசு நடனத்திற்கான செலவில்
மட்டுமே ஒரு முழு தமிழ்ப்படத்தை எடுத்து விடலாம்…
அந்த நடனக்காட்சியை உருவாக்கவும், நூற்றுக்கணக்கான

நடனைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து, ஒத்திகை நடத்தி
படம் பிடிக்க மட்டுமே 100 நாட்கள் தனியாகத்
தேவைப்பட்டதாம்.

இரண்டு சர்க்கஸ் கம்பெனிகள் (கமலா சர்க்கஸ் மற்றும்
பரசுராம் லயன் சர்க்கஸ்..) ஒரு மாத காலத்திற்கு,
ஜெமினி ஸ்டுடியோ காம்பவுண்டிற்குள்ளேயே
தங்க வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ரசிகர்களை
வரவழைத்து, லைவ் நிகழ்ச்சிகளை நடத்தி,
4 காமிராக்களை வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரம் துணை நடிகர்கள் நடித்த இந்தப்படத்திற்கான
கலைஞர்களின் உடைகளைத் தைக்க மட்டுமே ஒரே சமயத்தில்
70 தையல்கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டார்களாம்… கதாநாயகிக்கு

மட்டுமே 19 வித உடைகள் தயாரிக்கப்பட்டனவாம்…

கருப்பு-வெள்ளை சந்திரலேகாவை,
வண்ணத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்…..?

————————–
தொடரும் ….
.
———————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ( பகுதி-3 ) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

  1. subash சொல்கிறார்:

    பேசாம பாழாய்ப்போன அரசியலை விட்டுட்டு,
    இது மாதிரியே எழுதுங்க சார். நல்ல சுவாரஸ்யமா
    இருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.