(பகுதி-2) -(வீர்…?) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…?


இந்த இடுகையின் முதல் பகுதியில் தடைசெய்யப்பட்ட
புத்தகம் தொடர்பாக சாவர்க்கர் லண்டனில் பிரிட்டிஷ்
அரசால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு
அனுப்பப்பட்டார் என்று எழுதி இருந்தேன்…

அதில் ஒரு சிறு மாற்றம் –

முதலில் – சாவர்கரின் சகோதரர், மஹாராஷ்டிராவில்,
நாசிக் மாவட்ட கலெக்டர் ஜாக்சனின் கொலை தொடர்பாக
1910-ல் கைது செய்யப்பட்டார்.

அந்தப் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு
துப்பாக்கியை லண்டனில் இருந்து தனது சகோதரருக்கு
அனுப்பியதாக சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டு,
அதன் காரணமாக அவர் கப்பல் மூலம் இந்தியாவுக்கு
அழைத்து வரப்பட்டார்.

——————————————

இனி, பகுதி-1-ன் தொடர்ச்சி….

செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அனுபவித்த
கொடுமைகள், அவரது ஆங்கிலேயர் மீதான எதிர்ப்பை
மழுங்கச் செய்து விட்டது. எப்படியாவது விடுதலை
பெற்று வெளியே வந்து விட வேண்டும் என்று துடித்துக்
கொண்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தை
எதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதி
சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு
சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட்
29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக்
கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில்,
அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். ”

அந்தமான் சிறைச்சாலை பதிவுகள் – மாதந்தோறும் மூன்று
அல்லது நான்கு கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று
காட்டுகின்றன. மரணதண்டனை வழங்கப்பட்ட இடம்,
சாவர்கர் இருந்த அறைக்குக் கீழே இருந்தது.
இதுவும் சாவர்க்கரை பாதித்திருக்கலாம்.

தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில்
உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் அவர்
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை
விடுத்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும்
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக
இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு
முறைமையில் தனக்கு நம்பிக்கையை உண்டாக்கி
யுள்ளதாகவும், இப்போது வன்முறையின் பாதையை
விட்டுவிட்டதாகவும் சாவர்க்கர் கூறினார்.

இதன் விளைவாகத்தான், 1919 மே 30 மற்றும் 31ஆம்
தேதிகளில் அவருடைய மனைவி மற்றும் தம்பியைப்
பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்கருக்கு
அனுமதி வழங்கப்பட்டது என்று ஒரு தகவல் சொல்கிறது.

பின்னர் சாவர்க்கரும் அவரது ஆதரவாளர்களும்
பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கோருவதை நியாயப்படுத்தி
யிருந்தனர். சாவர்க்கர் தனது சுயசரிதையில், “நான்
சிறையிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால்,
இந்தியாவுக்கு கடிதம் அனுப்பும் உரிமையை என்னிடம்
இருந்து பறித்திருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒருவழியாக 10 ஆண்டுகள் அந்தமானில் சிறைவாசத்தை
அனுபவித்த பிறகு, 1921-ல் அந்தமான் சிறையிலிருந்து
பிரிட்டிஷ் அரசால் விடுவிக்கப்பட்டார். ஆனால்,
இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் சிறையில்
வைக்கப்பட்டார்.

இறுதியாக, 1924 ஆம் ஆண்டில் – எந்தவித அரசியல்
நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட
ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு
வெளியேறக்கூடாது என்கற இரண்டு நிபந்தனைகளோடு
சாவர்க்கர் – புனேவில் உள்ள எர்வாடா சிறையிலிருந்து
விடுவிக்கப்பட்டார்.

————

அந்தமான் சிறையிலேயே துவங்கி விட்டாலும்,
ரத்னகிரியில் தங்கியிருந்த காலத்தில் தான் அவர் தீவிரமாக
ஹிந்துத்வா கொள்கைகளை வகுத்தார்.

அந்தமானில் இருந்து திரும்பிய பிறகு, ‘இந்துத்துவா –
இந்து யார்?’ என்ற புத்தகத்தை சாவர்க்கர் எழுதினார்.
அதில் தான் முதல் முறையாக இந்துத்துவத்தை ஒரு
அரசியல் சித்தாந்தமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.

இந்துத்துவத்தை வரையறுத்து,
இந்த நாட்டின் மக்கள் அடிப்படையில் இந்துக்கள் என்று
கூறுகிறார். இந்த நாட்டை தனது மூதாதையர் நிலமாகவும்,
தாய் மண்ணாகவும் மற்றும் புனித பூமியாக
நினைப்பவர்கள் மட்டும் தான் இந்நாட்டின் குடிமக்களாக
இருக்க முடியும் என்பதே சாவர்கரின் உறுதியான
நம்பிக்கை.

“மூதாதையர் மற்றும் தாய்வழி நிலம் யாருக்கு
வேண்டுமானாலும் சொந்தமானதாக இருக்கலாம், ஆனால்
இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள்
மட்டுமே இந்தியாவை புனித நிலமாக கருதுவார்கள்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இது
புனித நிலம் அல்ல. இந்த வரையறையின்படி,
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில்
இருந்தாலும் கூட ஒருபோதும் இதன் குடிமக்களாக
இருக்க முடியாது” என்கிறார் சாவர்கர்.

அவர்கள் இந்துக்களாக மாறினால் மட்டுமே இங்கே
அவர்கள் இருக்க முடியும் என்று நினைத்தார் அவர்.
ஒருவர் இந்துவாக இருந்தாலும் கூட இந்து மதத்தையோ,
மத நம்பிக்கையையோ பின்பற்றாமல் இருக்கலாம்
என்ற முரண்பாட்டை அவர் புரிந்து கொள்ளவே இல்லை.

காந்தி, அவரது காங்கிரஸ் கட்சி, மற்றும் முஸ்லிம்களை
தான் எதிர்ப்பதாகவும், அதற்கு காரணம் அவர்களுக்கு
ஒரே நோக்கம் இருப்பதாகவும் கூறி, வைஸ்ராய்
லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வ
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் ஆங்கிலேய அரசால், அவருக்கு
ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கப்பட்டது.
அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு
ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்?
அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரணம் என்ன
என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல்,
இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர்
சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவர்க்கரைப்பற்றிய சில சுவாரஸ்யமான
தனிப்பட்ட தகவல்கள் –

தீவிரமான கருத்துக்களை கொண்டவராக இருந்தபோதிலும்,
அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களை
விரும்பினார். அவருக்கு சாக்லேட்டுகளும் ‘ஜிண்டான்’
பிராண்ட் விஸ்கியும் மிகவும் பிடித்தமானது.

அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது.
அந்தமான் சிறைச்சாலையில் புகையிலை கிடைக்கவில்லை.
அதற்கு பதிலாக, சிறை சுவர்களில் இருந்த சுண்ணாம்பை
சுரண்டி சாப்பிடப் பழகிக் கொண்டார். இதனால் அவரது
ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார்.
ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. எப்போதாவது
மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த
முட்டைகள் இரண்டை சாப்பிடுவார், பகலில் பல முறை
தேநீர் அருந்துவார். சாவர்க்கருக்கு காரசாரமான உணவுகள்
அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது

அல்போன்சோ மாம்பழம், ஐஸ்கிரீம் போன்றவை
சாவர்க்கருக்கு மிகவும் பிடித்தமானவை. எப்போதும்
ஒரே மாதிரியான உடைகளை உடுத்துவார் … கருப்பு தொப்பி,
வேட்டி அல்லது கால்சராய், கோட் இதுதான் சாவர்க்கரின்
ஆடை அணியும் பாணி. எப்போதும் கோட் பாக்கெட்டில் ஒரு
சிறிய ஆயுதம், ஒரு பாட்டில் வாசனை திரவியம்,
ஒரு கையில் குடை மற்றும் மறு கையில் மடித்து
வைக்கப்பட்ட செய்தித்தாள் என்பதே சாவர்க்கரின்
தோற்றத்திற்கான அடையாளம்.

1948 ஜனவரி 30ஆம் தேதியன்று, மகாத்மா காந்தியை
நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இந்த படுகொலையில்
சம்பந்தம் இருப்பதாக கைது செய்யப்பட்ட 8 பேரில்
சாவர்க்கரும் ஒருவராக இருந்தார்.
ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில்
அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

செங்கோட்டையில் நடைபெற்ற காந்தி கொலை வழக்கின்
தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, நாதுராம் கோட்சே மற்றும்
நாராயண் ஆப்தே ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து,
சாவர்க்க்ரை நீதிபதி விடுவித்தார்.

அப்போது, சிலர் சாவர்க்கரின் கால்களில் விழுந்து
வணங்கினார்கள். அவர்கள், ‘இந்து – இந்தி – இந்துஸ்தான்;
என்கிற முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

————

சாவர்க்கர் பற்றிய முழுவிவரங்களையும்
ஒருசேரப் படிக்கும்போது
ஒரு ஆச்சரியம் எழுகிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாத,
ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத,
ஹிந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்களில்
நம்பிக்கை இல்லாத,
பசு வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாத –

ஒரு நபரான சாவர்க்கர் – எப்படி “ஹிந்துத்வா” கொள்கைகளை
உருவாக்கினார்…? அதை எப்படி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக உட்பட
பல அமைப்புகளும் ஏற்றுக் கொள்கின்றன…?

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to (பகுதி-2) -(வீர்…?) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…?

 1. புவியரசு சொல்கிறார்:

  // கடவுள் நம்பிக்கை இல்லாத,
  ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத,
  ஹிந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்களில்
  நம்பிக்கை இல்லாத,
  பசு வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாத –

  ஒரு நபரான சாவர்க்கர் – எப்படி “ஹிந்துத்வா” கொள்கைகளை
  உருவாக்கினார்…? அதை எப்படி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக உட்பட
  பல அமைப்புகளும் ஏற்றுக் கொள்கின்றன…? //

  இது நல்ல கேள்வி கே.எம்.சார்.

  பாஜக காரர்கள், ஆர்.எஸ்.எஸ். காரர்கள்
  யாராவது இதற்கு விளக்கம் தர வேண்டும்.

  • Rajavelu சொல்கிறார்:

   பாஜகவினர் பலருக்கும் சாவர்க்கர் குறித்த
   இங்கே வெளியிடப்ப்ட்டிருக்கும் செய்திகள்
   எல்லாம் தெரிந்திருக்காது.
   தெரிந்தால் அவர்களே இவரை ஆதரித்ததற்காக
   வெட்கப்படுவார்கள்; நொந்துகொள்வார்கள்.

 2. vgchandrasekaran சொல்கிறார்:

  வீர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, மற்றும் காந்தி நவீன இந்தியாவின் வரலாற்றினை படிக்க முற்படும் எவருக்கும் இந்த மூன்று பெயர்கள் ஒரு முரண்பாடான ஒற்றுமையுடன் இருப்பது தெரியவரும்.காந்தி இந்திய பன்மைத்துவத்தின் முகமாக பார்க்கப்படும் பொழுது சாவர்க்கரும் கோட்சேயும் அதற்கு எதிரான முகாமில் ஒற்றைத் தன்மை இந்தியாவின் பிரதிநிதிகளாக இங்கே கட்டமைக்கப்படுகிறார்கள். வீர் சாவர்க்கருக்கு ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஹிந்து மத சடங்குகளை அவர் புறக்கணித்து இருக்கலாம் பசு மாமிசம் உண்பவராக மது அருந்துபவர் ஆகவும் இருக்கலாம் ஆனால் அவருக்கு இந்த நாடு யாருடைய கைகளில் இருக்க வேண்டும் யாரால் ஆளப்பட வேண்டும் என்ற தெளிவு இருந்தது அதுவே அவரது இந்துத்துவக் கோட்பாடாகவும் வெளிப்பட்டது. இன்று நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம்
  ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் முகமதியர்களும் கிருத்துவர்களும் இந்தியாவை ஆக்கிரமித்த அன்னியர்களே. சாவர்க்கரின் இந்துத்துவக் கோட்பாடு இதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான். மேலும் அன்றும் சரி இன்றும் சரி காந்தி அவரால் போற்றப்படும் பெரும்பாலானோரால் ஒரு முகமூடியாக தான் பயன்படுத்தப்படுகின்றாறே தவிர அவரது உள்ளார்ந்த கருத்துகளின் அடிப்படையில் அவரை யாரும் இங்கு கொண்டாடவில்லை. அந்தப் புரிதலும் தெளிவும் காந்திக்கு இருந்த காரணத்தினால்தான் சுதந்திரம் பெற்றவுடன் காங்கிரசை கலைத்து விட வேண்டும் என்று கோரினார். ஒருவேளை காந்தி கோட்சேவின் கைகளினால் மரணம் அடையாமல் அவர் கூறியது போல் ஒரு 130 வருடங்கள் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய காந்தியின் நிலை என்னவாக இருந்திருக்கும்அதைவிட ஒரு வேதனையான அனுபவத்தை வலியை காந்தி மரணம் அடையும் போதும் கூட அடைந்திருக்க மாட்டார். நேற்றைய இன்றைய காந்தி ஆதரவாளர்களின் செயல்கள் அவ்வாறுதான் உள்ளது. நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை சட்டத்தின் ஒரு சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் தள்ளிக்கொண்டே போகின்றது. சட்டத்தின் ஒரு சிறு வாய்ப்பையும் பயன்படுத்த எந்த ஒரு குற்றவாளிக்கும் அவரது இறுதிவரை உரிமை உள்ளது என்று நீதிமன்றமே கூறுகிறது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு காரணமான எழுவரின் விடுதலைக்காக அரசியல் கொள்கைகளை மறந்து அதே அரசியல் லாப நோக்கங்களுக்காக காங்கிரசைத் தவிர அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.சட்டத்தின் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடாமல் தொடர் சட்டப் போராட்டம் நடந்து கொண்டே இருக்கின்றது.ஆனால் இத்தகைய வாய்ப்புகள் நாதுராம் கோட்சே விஷயத்தில் கிடைத்திருக்குமா அன்றைக்கு இருந்த மனநிலையில் அவரது வாய்ப்புகள் எவ்வாறு இருந்திருக்கும் கேள்விக்குரிய ஒன்றுதான்.இதனாலெல்லாம் நான் நாதுராம் கோட்சேவின் செயலை நியாயப்படுத்தி விடவில்லை. இன்று வீர் சாவர்க்கரையும் நாதுராம் கோட்சேவையும் அவமானப்படுத்த அல்லது அவர்களை குற்றவாளிகளாக்க முனையும் ஒவ்வொருவருக்கும் அதற்கான தார்மீக உரிமை உண்டா என்பதே என் கேள்வி.நெருக்கடிநிலை காலத்தில் அடித்து நொறுக்கியவரை ரத்தத்தின் ஈரம் காயும் முன்பே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதை ராஜதந்திரம் என்பவர்கள் வீர் சாவர்க்கரின் தனது விடுதலை தொடர்பான நிலையினை மட்டும் கோழைத்தனம் என்று கூறுவது ஏன்.முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓலம் அடங்கும் முன்பே ராஜபக்ஷவுடன் கைகுலுக்கியவர்கள் வீர் சாவர்க்கரை கேலி செய்வது எதனால்.

 3. Prabhu Ram சொல்கிறார்:

  நண்பா நீங்கள் கூறுவது, கூற விரும்புவது என்ன ?
  என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
  கொஞ்சம் தெளிவாக புரியும்படி சொல்லுங்களேன்.
  சாவர்க்கருக்கு அவசியம் பாரத ரத்னா கொடுக்க
  வேண்டுமென்று
  சொல்கிறீர்களா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.