( பகுதி-2 ) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!


எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல்
சினிமா – சந்திரலேகா அதுவும் ஹிந்தி பதிப்பு …!
அதைப் பார்க்கும்போது எனக்கு 6-7 வயது இருக்கும்.

அப்போது மஹாராஷ்டிராவில், புனா நகருக்கருகே,
கர்க்கி என்கிற ஊரில் எங்கள் குடும்பம் இருந்தது. நான்
பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது அங்கே தான்.

எங்கள் வீட்டில், நாங்கள் – பிள்ளைகள் 6 பேர்,
பெண்கள் 2 பேர், அம்மா, அப்பா, பாட்டி (அப்பம்மா….??? )
என்று மொத்தம் 11 பேர்….!!!

( இன்றைய தலைமுறை to note please. அப்போதைய
குடும்பங்கள் எல்லாம் இப்படித்தான் -பெரிய்ய குடும்பங்கள்..!)
சில வீடுகளில், திருமணம் ஆகாத சித்தப்பா, அத்தைகளும்
கூட உண்டு…

ஆனால், என் அப்பா அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை…
ஆகையால் எங்களுக்கு சித்தப்பா, பெரியப்பா, அத்தை –
– பாக்கியங்கள் கிடைக்கவில்லை. அப்பாவுக்கு
5 வயதாகும்போதே, அவரது அப்பா காலமாகி விட்டார்.

சந்திரலேகா படத்தை கர்க்கியில் “எக்சல்சியர்” தியேட்டரில்
திரையிட்டிருந்தார்கள். அந்தப்படத்திற்கு செய்யப்பட்ட
பயங்கரமான விளம்பரங்கள் காரணமாக -தியேட்டரில்
எக்கச்சக்க கூட்டம்.

அப்போதெல்லாம், (1949-50 ) ரிசர்வேஷன், ஏ.சி. எல்லாம்
கேள்விப்படாத விஷயங்கள். முதல் காட்சியின் இண்டர்வெல்
முடிந்தவுடன், Gate-ஐ திறந்து விடுவார்கள். வெளியே
திரண்டிருக்கும் கூட்டம் ஓஓஓஓஓடிப்போய், அந்தந்த
டிக்கெட் கவுண்டரிலிருந்து துவங்கும் க்யூவில் நின்றுகொள்ள
வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக,
டிக்கெட் கொடுக்கத் துவங்கும் வரையில் –
அந்த க்யூவை விட்டு நகர முடியாது; வெளியேறவும்
முடியாது; அப்படி மேலே விழுந்து அழுத்தும் கூட்டம்…!

அப்போதெல்லாம் மொத்தம் 3 வகுப்புகள்.
சாய முடியாத, சாதாரண பென்ச் -3-ஆம் வகுப்பு – 5 அணா.
சாயும் (முதுகு)வசதியுள்ள பென்ச் -2-ஆம் வகுப்பு – 10 அணா.
நாற்காலி – முதல் வகுப்பு – ஒரு ரூபாய்.
அம்புடுதேன்…!!!
(5 அணா= இன்றைய 31 பைசா; 10 அணா =62 பைசா…)

நான் என் அண்ணாக்களில் (..!!!) ஒருவருடன் அன்று
என் வாழ்க்கையின் முதல் முதல் சினிமாவிற்கு
எக்சல்சியர் தியேட்டர் போயிருந்தேன்.

Gate திறந்தவுடன் ஓடிப்போய், 3-ஆம் வகுப்பு க்யூவில்
தடுப்பிற்குள் சென்று நின்றுகொண்டும் விட்டோம்.
முதலில் நிற்கும் 30-40 பேர் மட்டும் ஒரு தடுப்பிற்குள்
மாட்டிக்கொள்வார்கள். 40 பேர் என்பது சாதாரண சமயங்களில்…

ஆனால், இந்த மாதிரி கூட்டங்களில் தடுப்பிற்குள்ளேயே
100 பேருக்கு மேல் நுழைந்து விடுவார்கள்.
உள்ளே தாங்க முடியாத அழுத்தம் இருக்கும்.

மற்றவர்கள் எல்லாரும் வெளியே கும்பலாக…
டிக்கெட் கொடுக்கும் வரையில் தொடர்ந்து –
ஒருவரைஒருவர் முண்டிக்கொண்டு, தடுப்பிற்குள் நுழைய
போட்டிபோட்டுக்கொண்டு காத்திருப்பார்கள்…!!!.

நேரம் செல்லச் செல்ல, உள்ளே என்னால் தாங்க
முடியவில்லை. சிறுபையன் என்பதால், என் உயரத்திற்கு
மேல் எல்லாரும் அழுத்திக்கொண்டிருந்ததால் மூச்சு விட
முடியவில்லை… கொஞ்ச நேரம் கழித்து அலற ஆரம்பித்து
விட்டேன். கொஞ்ச நேர அலறலுக்குப் பிறகு, கூட்டத்தை
விலக்கிக்கொண்டு, எங்கிருந்தோ போலீஸ்காரர் ஒருவர்
வந்தார்.

உள்ளே புகுந்து, அலறிக்கொண்டிருந்த என்னைத்
தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்… வீட்டுக்கு திரும்பிப்
போகிறாயா என்று கேட்டார்.
இல்லை என் அண்ணாவும் உள்ளே க்யூவில் இருக்கிறான்.
எனக்கு சினிமா பார்க்க வேண்டும் என்றேன்…
அண்ணா யார் என்று கேட்டவர், தடுப்பிற்குள்ளே க்யூவில்
நின்றுகொண்டிருந்த அவனையும் பார்த்துவிட்டு
சிரித்துக்கொண்டே –

( அப்போது எனக்கு 6-7 வயது…
களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி –
ஒரு அப்பாவிக் குழந்தை முகம்… 🙂 🙂 )

– என்னை தூக்கிக்கொண்டு போய் டிக்கெட் கவுண்டர் எதிரில்
முதல் ஆளாக நிறுத்தி விட்டார் அந்த போலீஸ்காரர்…

நான் தான் போணியே… அவ்வளவு தான் -பயங்கர குஷி
எனக்கு…டிக்கெட் அப்போதே உறுதியாகி விட்டது… !!
( என் அண்ணா பொறாமை கலந்த சந்தோஷத்துடன்,
திணறிக்கொண்டே தடுப்புக்கு உள்ளேயிருந்து
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்…!!! )

சந்திரலேகாவைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
பல இருக்கின்றன…

முதலில் அதன் வில்லன் என்று
சொல்லப்பட்ட ஹீரோ … யார் தெரியுமா…?
ஸ்ரீமான் “ராமநாராயண வெங்கட ரமண சர்மா… !!! 🙂 🙂
(1918 -1983 )

ஆமாம் – நடிகர் ரஞ்சனின் ஒரிஜினல் பெயர் இதுதான்.
(ரஞ்சன் எங்கள் ஊர்க்காரர் – ஆனால்
படித்ததும் வளர்ந்ததும், சென்னை மைலாப்பூரில்…)

படிப்பு – மெட்ராஸ் யுனிவர்சிடியில் M.Litt., பட்டம்.
கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் முறைப்படி
கற்றிருந்தார்… விமானம் ஓட்டத்தெரியும்…
பைலட் லைசென்ஸ் உண்டு.
எழுத்தாளரும் கூட… “நாட்டியம்” என்கிற பெயரில்
ஒரு பத்திரிகை நடத்தி வந்தார்….

இவ்வளவு தகுதிகளுடன் – அந்தக்காலத்தில்
சினிமாவுக்குள் நுழைந்தது இவர் ஒருவர் தான்.

சந்திரலேகா படத்தின் புகழ் பெற்ற சர்க்கஸ்
காட்சிகள்+பார் விளையாட்டுகள் – கீழே காணொளியில் ….

( முதல் 2 நிமிடங்களும், பிறகு புகழ்பெற்ற
டி.ஆர். ராஜகுமாரியின் அந்த bar விளையாட்டுகள் துவங்கும்
8-வது நிமிடத்திலிருந்து இறுதி வரையும் காட்சிகள்
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்…. )

….

————
தொடரும்….

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ( பகுதி-2 ) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  70 ஆண்டுகளுக்கு முன்னரே,
  சர்க்கஸ் காட்சிகள் வெகு திறமையாக
  படமாக்கப்பட்டிருக்கின்றன.
  முரசு நடனம், சர்க்கஸ் காட்சிகள் என்று
  உண்மையிலேயே சந்திரலேகா
  பிரம்மாண்டம் தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.