C.A.A. (குடியுரிமைச் சட்டத்திருத்தம்) – ஜெயமோகன் என்ன சொல்கிறார்…?


நமது கருத்துகள், விமரிசனங்கள் எப்போதும்
இருக்கவே இருக்கின்றன… இந்த தளத்தின் வாசகர்கள்
அவற்றை நன்கு அறிவார்கள்.

நம்மை விடுங்கள்…
நாம் எதைச் சொன்னாலும் பாஜகவினர்
ஏற்கப்போவதில்லை.

இது குறித்து –
அரசியல்வாதி அல்லாத – விவரம் தெரிந்த,
அனுபவசாலியும், இலக்கியவாதியுமான
திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய விவரமான
ஒரு கட்டுரையைப் படித்தேன். அவரது கருத்துகளை
விமரிசனம் தளத்து நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

எல்லா தரப்பு உண்மைகளையும் –
நிஜமான பின்னணியையும் –
தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு –
இந்த கட்டுரை ஓரளவு உதவும்…
சில உண்மைகள் கசக்கவும் செய்யும்…!!!

கொஞ்சம் விரிவான கட்டுரை… ஆனால்,
நிறைய விவரங்களைத் தரும் கட்டுரை.
விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற
ஆர்வம் இருப்பவர்கள் –
அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

——————————————————

……

இது – எழுதப்பட்டது….டிசம்பர், 18, 2019 அன்று….

இப்போது குடிமக்கள் கணக்கெடுப்பு, குடியுரிமைச்
சட்டத்திருத்தம் ஆகியவற்றைப் பற்றிய என்
எண்ணங்களைப் பலரும் கேட்கிறார்கள்.

அரசியல் நோக்கங்களுக்கு உட்பட திரித்து, மிகையாக்கி,
கூறப்படும் கூற்றுக்களே நீண்ட கட்டுரைகளாகக்
கிடைக்கின்றன…. இருதரப்பிலும் …!

ஆனால் தெளிவாகவே ஒன்று புரிகிறது.
இஸ்லாமியர்களிடம் உருவாகியிருக்கும் அச்சமும்,
ஆவேசமும். அது இப்பிரச்சினையில் இருந்து
தொடங்குவதல்ல. அது இந்த அரசு முஸ்லீம்
பங்களிப்பே அற்றது என்பதிலிருந்து தொடங்குகிறது.

அத்தகைய அரசு இஸ்லாமியர்களின்
பங்களிப்பில்லாமலேயே அவர்களின் சமூக
அரசியல்நிலைகளை மாற்றியமைக்க
முயல்கிறது என்பதில் வளர்கிறது.

முத்தலாக்,
காஷ்மீர் சட்டத்திருத்தம்,
ராமர்கோயில் தீர்ப்பு என ஒவ்வொன்றாக
கூர்கொண்டிருக்கிறது.

இச்சட்டம் அந்த அவநம்பிக்கையையும் அச்சத்தையும்
பெருக்குகிறது. இது அப்பட்டமாக
ஃபாஸிஸம் நோக்கிய நகர்வே.

ஜனநாயகம் என்பது பங்களிப்பினூடாக முன்னகரும்
அரசியல். இந்த அரசு அதில் நம்பிக்கை
கொண்டிருக்கவில்லை.

தேசம் பொருளியல் சீரழிவை நோக்கிச்
சென்றுகொண்டிருக்கையில் இச்சட்டத் திருத்தம்
கொண்டுவரப்பட்டிருப்பது,
நாடெங்கும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்
என்னும் அறைகூவல்கள் -சிறுபான்மையினர் மீதான
உளவியல் வன்முறை,
நேரடி வன்முறைக்கான திட்டம் என
அவர்களை எண்ணவைக்கும் உத்தி.

பொருளியல் தளத்தில் இந்த அரசு அடைந்திருக்கும்
முழுத்தோல்வியை மறைக்க, அதற்கு ஆக்கபூர்வமாக
ஏதும் செய்யமுடியாத நிலையில் சில முதலாளிகளின்
கைப்பாவையாக செயல்படவேண்டியிருப்பதை –

-விவாதத்தில் இருந்து
அகற்ற, செய்யப்படும் சூழ்ச்சி.

ஆனால் இதன் விளைவு இந்திய குடிமக்களில்
கணிசமானவர்கள தேசிய எண்ணங்களிலிருந்து
விலக்குவது. அவர்களின் ஜனநாயகப் பங்களிப்பை
மறுப்பது.

நீண்டகால அளவில் மிக ஆழமான
பின்விளைவுகளை இச்செயல் உருவாக்கும்.

இது இந்தியாவின் குடிமக்களுக்கு, சற்றே வறுமையை
விட்டு வெளியே வரத்தொடங்கியிருக்கும்
கோடானுகோடிகளுக்கு எந்த நன்மையையும் செய்யாது.

இது கண்மூடித்தனமான வெறியின்,
எதிர்காலத் திட்டங்களே இல்லாத
குருட்டுத்தனத்தின் வெளிப்பாடு மட்டுமே.

இஸ்லாமியரின் அச்சம் ஒரு பக்கம்.
அதைவிட நவீன ஜனநாயக குடியரசில் நம்பிக்கை
கொண்டிருப்பவர்களின் அச்சம் பெரிது.

அதில் பங்கெடுக்கிறேன்

————————————————————————————————————–

குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…
-இது எழுதப்பட்டது ஜனவரி 19, 2020 அன்று.

குடிமக்கள் கணக்கெடுப்பு குறித்த முதன்மையான
ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன்.
அதைப்பற்றிய எல்லா முக்கியமான தரப்புகளையும்.
மிகமிகக் குறைவாகவே நடுநிலையான, உண்மையைச் சொல்லும்
பதிவுகளைக் கண்டேன்.

பெரும்பாலானவை தங்கள் அரசியலுக்கேற்ப
எல்லாவற்றையும் வளைத்துக்கொள்பவை. அதற்கேற்ற
தரவுகளை சமைப்பவை. மிகையுணர்ச்சிக் கொந்தளிப்புகள்;

இன்றைய சூழலில் ஒருவன் உண்மை நிலையை உணர
முதலில் தன்னை எளியகுடிமகனாக நிறுத்தி
தன் புரிதலை நம்பி,
நீதியுணர்வைச் சார்ந்து பேசவேண்டியிருக்கிறது.


பொருளியல் கணக்குப்புலிகள், அரசியல் தர்க்கச்சிங்கங்கள்
இருபுறம் நின்று இணையாகப் போரிடும் சமரில் இருந்து
நாம் எதையும் புரிந்துகொள்ள முடியாது.

எதைச் சொன்னாலும் அதை ‘ஆதாரபூர்வமாக’ இரு தரப்பும்
மறுப்பார்கள். நாமறியும் நம் வாழ்க்கையே நமக்கு ஆதாரம்.
அதில் நாம் அறிவதே உண்மை.

அது பொய் என எவர் நம்மிடம் சொல்லும்போதும்
நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை

நாடு பொருளியல் அழிவைநோக்கிச் சென்று
கொண்டிருக்கிறது. தொழில்களின் வீழ்ச்சி என்பது
ஒரு வளரும் நாட்டில் சிறிய விஷயம் அல்ல.

ஒவ்வொரு நாளுமென வேளாண்மையிலிருந்து
வெளியே வரும் தொழிலாளர்களை உள்ளே இழுத்து
வைத்திருப்பது தொழில்துறை. குறிப்பாக நாடெங்கும்
பரவியிருக்கும் சிறுமுதலீட்டுத் தொழில்துறை.
அது நலிவடைந்து கொண்டே செல்கிறது.

படித்த இளைஞர்களுக்கான பெரும்பகுதி வேலை
வாய்ப்புகளை உருவாக்குவது சிறுதொழில்துறையே.

ஒர் அடிநிலைக் குடும்பம் வாழ்க்கையில் மேலே
செல்வதற்கான வழி என்பது படிப்பு,
அதன்பின் ஒரு வேலை என்பது.

அந்த வாய்ப்புகள் அடைபடுமென்றால்
எதிர்காலமே இல்லாத சூழல் என்றே பொருள்.
அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சட்டென்று நாடு முப்பதாண்டுகள் பின்னகர்ந்து விட்டது.

பெட்ரோலியப் பொருட்கள் உலகச்சந்தையில்
மிகக்குறைந்த விலையில் கிடைத்தபோது உள்ளூரில்
விலையை குறைக்காமல் வைத்திருந்தார்கள்.

அது விலையில் நிலைத்தன்மையை உருவாக்குவது என
நமக்குச் சொல்லப்பட்டது. அந்த வணிகத்தால் உருவான
மிச்சப்பணம் சேமிக்கப்பட்டு உலகச்சந்தையில்
விலை கூடும்போது உள்ளூர்விலை கூடாமலிருக்க
பயன்படுத்தப்படவேண்டும்.

ஆனால் அந்நிதி பொதுக்கணக்குக்கு எடுக்கப்பட்டு
செலவிடப்பட்டது. இப்போது பெட்ரோலியப் பொருட்கள்
விலையேறுமென்றால் பெரிய விலைவாசி ஏற்றம்
உருவாகக்கூடும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை நிலையாக
இருக்கவேண்டுமென ஏன் சொல்கிறார்கள் என்றால்
ஏற்றுமதி ஒப்பந்தம் போட்டுக்கொண்ட சிறு தொழில்கள்
அவ்விலையேற்றத்தால் கடுமையான நெருக்கடிக்கு
உள்ளாகக்கூடாது என்பதனால்தான்.

ஆனால் அந்த நம்பிக்கை இன்றில்லை.
ஒவ்வொருவரும் பதறிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு எல்லாவகையிலும் பொறுப்பேற்றுக்கொள்ள
வேண்டியவர்கள் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியினர்.

முதிர்ச்சியற்ற பொருளியல் அணுகுமுறையும்,
தங்களுக்கு அணுக்கமான பெருந்தொழிலதிபர்களுக்குச்
சாதகமான நெறிவகுப்பும் கொண்டு நமக்கு இந்நிலையை
உருவாக்கியவர்கள் அவர்கள்.

ஆனால் அவர்கள் இச்சரிவைப்பற்றி கவலையே
படாமலிருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை
நமக்கு அளிக்கிறார்கள்.

அடிவயிற்றிலிருந்து எழும் ஐயங்களைக்கூட
வன்மமும் வஞ்சமும் கொண்டு எதிர்க்கிறார்கள்,
தேசத்துரோகம் எனத் திரிக்கிறார்கள்

இந்த குடிமக்கள் கணக்கெடுப்புத் திட்டமும்,
அதன் சட்டத்திருத்தமும் ஒற்றைவரியில்
சொல்வதென்றால் நாம் சென்றுகொண்டிருக்கும்
இருள்மிக்க எதிர்காலத்தைப் பற்றிய உண்மையான
அச்சங்களை திசைதிருப்ப செய்யப்படும் மாபெரும்
நாடகம் அன்றி வேறல்ல.

நாள் செல்லச் செல்ல
அந்த எண்ணம் வலுப்பெறவே செய்கிறது

குடிமக்கள் கணக்கெடுப்புத் திட்டத்தின் அரசியலைப்
பற்றிய நம் அனுபவ உலகமே மெய்யானது.

நான் அஸாமிலும் வங்கத்திலும் வடகிழக்கு
மாநிலங்களிலும் வங்கதேச மக்கள் குடியேற்றத்தால்
உருவாகியிருக்கும் நெருக்கடிகளை நன்றாகவே அறிவேன்.
அதைப்பற்றி தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன்.
அக்குடியேற்றக்காரர்கள் மிக வறியநிலையில்
வருகிறார்கள். லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைந்து
இங்கே நிலைகொள்கிறார்கள். ஆனால் மிகமிக விரைவில்
அவர்களின் இன-மத அடையாளத்துடன் ஒருங்கிணைந்து
கும்பல் அதிகாரமாக ஆகிவிடுகிறார்கள்.

அஸாமிலும் வங்கத்திலும் நாகாலாந்திலும் எல்லாம்
பல ஊர்களில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான
பாப்புலர் ஃப்ரண்டின் கொடி பறப்பதை, அவ்வமைப்பினர்
வழியில் சாலை தடை வைத்து சோதனை செய்த
பின்னரே பயணிகளை உள்ளே விடுவதை நேரில்
கண்டிருக்கிறேன்.

பல ஊர்களை ‘விடுவிக்கப்பட்ட பகுதி’ என அவர்கள்
அறிவித்திருக்கிறார்கள் என்பதை கண்டிருக்கிறேன்.
இவர்களின் ஒருங்கிணைந்த வாக்குவல்லமையே
வங்கத்தில் முன்பு இடதுசாரிகளை நிலைநிறுத்தியது.
இன்று மம்தாவுக்கு அவர்கள் வாக்கு திரும்பியிருக்கிறது.

வங்கத்தில், அஸாமில் இந்துக்களிடையே இதைப்பற்றிய
கடுமையான கசப்பு உள்ளது. நாகாலாந்தில்
கிறித்தவர்களிடையேகூட அக்கசப்பு உள்ளது.அதை
அங்கே பயணம் செய்து கண்டு நான் எழுதியபோது
அது அப்பட்டமான பொய் என வசைபாடினர் நம்மூர்
முற்போக்கர். சிலநாட்களிலேயே திமாப்பூர் கலவரம்
உண்மை நிலையை வெளிக்காட்டியது.

இந்த வங்கக்குடியேறிகள் இந்தியதேசிய
ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவர்கள். எல்லாவகையிலும்
இந்திய சிவில்வாழ்க்கைக்கு எதிரானவர்கள். இதில்
போலிமனிதாபிமான நிலைபாடெல்லாம் என்னிடமில்லை.

இங்கே அவர்களுக்காக ஆதரவுக் கூச்சலிடும்
இஸ்லாமிய தீவிரவாத நோக்கு கொண்டவர்களிடம்
நல்லெண்ணமும் இல்லை.

இனிமேல் குடியேறிகள் வராமல் முற்றாக
கட்டுப்படுத்தவேண்டும், வந்தவர்களைக்
கணக்கெடுக்கவும் வேண்டும். இன்றிருக்கும்
குடியேறிகளின் இடங்கள் முழுமையாகவே
அரசுக்கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.

அதற்கு அங்கிருக்கும் ஊழல்மிக்க அரசுநிர்வாக அமைப்பு
அகற்றப்பட்டு நேரடியான மைய அரசுக்கட்டுப்பாடு
வரவேண்டும். உள்ளூர் அரசியலை பயன்படுத்தி
அவர்கள் எல்லைமீற அனுமதிக்கக்கூடாது.

ஆனால் அவர்களில் மிதவாதிகள் உருவாகி வர,
அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் பகுதியாக எழ
வாய்ப்பளிக்கப்படவேண்டும்.
அவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கப்படவேண்டும்.
இந்தியாவின் கல்வி, ஜனநாயக அமைப்புக்குள்
அவர்கள் இழுக்கப்படவேண்டும், வேறுவழியே இல்லை,
இதை மட்டுமே செய்யமுடியும் இன்று.

அஸாமில் குடியேறி அம்மாநிலத்தின் வாக்காளர்
விகிதத்தையே மாற்றிய வங்கக்குடியேறிகளுக்கு எதிராக
எழுந்த அஸாமிய கிளர்ச்சியாளர்கள் முப்பதாண்டுகளுக்கு
முன்பு எழுப்பிய கோரிக்கை குடியேற்றக் கணக்கெடுப்பு.
அஸாம் ஒப்பந்தத்தில் ராஜீவ்காந்தியால் ஏற்கப்பட்டது.

ஆனால் அதன்பின்னரும்கூட முப்பதாண்டுகள்
எந்த தடையுமில்லாமல் வங்கக்குடியேறிகள் அஸாமில்
அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் காங்கிரஸின்
வாக்குவங்கியாக அமைந்தமையால் அது ஏற்கப்பட்டது.

ஊடுருவல்காரர்கள் இன்று இத்தனை பெரிய சிக்கலாக
ஆகியமைக்கு காங்கிரசும் இடதுசாரிகளும் திருணமூல்
காங்கிரஸும் முதன்மைக்காரணம் என்பதை இன்றைய
சூழலில்கூட நாம் மறந்துவிடவேண்டியதில்லை.

அவர்கள் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும்.
நாளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதை மீண்டும்
செய்யமாட்டாரகள் என்ற உறுதியாவது
அவர்களிடமிருந்து வரவேண்டும்.

இன்று குடிமக்கள் கணக்கெடுப்பு அஸாம் வங்கம்
வடகிழக்கு மாநிலங்களில் தேவை என்பதில் ஐயமில்லை.

ஒரு தேசம் தன் நிலத்தில் அகதிகளாகக்
குடியேறியவர்களை பற்றிய செய்திகளை சேகரிப்பதில்
பிழையே இல்லை. அது அதன் கடமை. பாதுகாப்புக்கு
இன்றியமையாதது. அதை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதில்
எனக்கு உடன்பாடும் இல்லை.

ஆனால் அது ஒரு நிர்வாகச் செயல்பாடு மட்டுமே.
அதில் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்
உண்டு.

ஒன்று, இன்று அதை இன்று உரியமுறையில்
செய்வதற்கான நேர்மையான, திறமையான நிர்வாக
அமைப்பு நம் அரசிடம் இல்லை. இன்னொன்று,
அவ்வாறு குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தும்
அதிகாரிகள்தான் முன்பு பணம் வாங்கிக்கொண்டு
ஆதார் அட்டை வரை அகதிகளுக்கு அள்ளி அளித்தவர்கள்.

இந்த யதார்த்தத்தை கருத்தில் கொள்ளாது
மூர்க்கமாக செய்யப்படும் ஒரு கணக்கெடுப்பு
அரசதிகாரிகளுக்கு தடையற்ற அதிகாரத்தை அளிக்கிறது.
அவர்களின் கருணையில் மக்களை வாழச்செய்கிறது.

அரசதிகாரிகளுக்கு அளிக்கப்படும் எந்த மிகையதிகாரமும்
ஊழலையே உருவாக்கும் – அரசுத்துறையில்
வேலைபார்த்த எவரும் இதை மறுக்கமாட்டார்கள்

ஆகவே ஒருபக்கம் அத்தனை ஆதாரங்களையும்
எளிதில் பணம் கொடுத்துப்பெற முடியும் என்னும் நிலை.

இன்னொரு பக்கம் பணமில்லாமல் எவரும்
அசல் ஆதாரங்களைக்கூடப் பெறமுடியாது
என்னும் நிலை.

இதனால் பாதிக்கப்படுபவர்கள் எளிய குடிகள்.
இதை கருத்தில் கொண்டு
இந்தக் கணக்கெடுப்பை நடத்த செலவுகுறைவான,
நம்பகமான வழிமுறைகளை நாடியிருக்க வேண்டும்.

உண்மையில் ஒரு வழக்கமான மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின் பகுதியாக, சத்தமில்லாமல் இதைச்
செய்திருக்கவேண்டும்.

அப்படி எத்தனையோ கணக்குகளை அரசுகள்
எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு தனியார்
அமைப்புக்களை நாடியிருக்கவேண்டும்.

ஆவணங்களை கணினிப் பதிவுகளாக்கி
ஒப்பிட்டிருக்கவேண்டும். மிகநிதானமாக, சீரான
கண்காணிப்புடன், நம்பகத்தன்மையை உருவாக்கியபடிச்
செய்யவேண்டிய நிர்வாகப்பணி இது.

ஆனால் இந்த அரசு அதை ஆரவாரமான
அரசியல் நடவடிக்கையாக ஆக்கியது.
அதன் முதன்மை முகங்கள்
மேடைமேடையாக இதை ஏதோ
தேசப்பாதுகாப்புப் போர் போல சவடால் அடித்தன.

தேசமெங்கும் இன்றுள்ள அச்சமும் ஐயமும் இவர்களால்
உருவாக்கப்பட்டவை. தற்செயலாக அல்ல, திட்டமிட்டு.
ஓர் அரசியல் நடவடிக்கையாக.

இந்த நடவடிக்கை அஸாமில் எந்த வகையான
பதற்றத்தை உருவாக்கியது என நன்கறிந்த பின்னரே
இந்தியா முழுக்க அதைக் கொண்டுவருவோம் என
அறைகூவினார்கள்.

அதனால் விளைந்ததே இந்தப் பதற்றம்.

கணக்கெடுப்பின் நோக்கத்தையே இவர்கள்
திசைமாற்றினார்கள்.

இது தேசப்பாதுகாப்பு என்னும்
இலக்கைக் கொண்டது அல்ல, சிறுபான்மையினருக்கு
எதிரான ஒர் ஒடுக்குமுறைச் செயல்பாடு என்னும்
எண்ணம் அவ்வாறுதான் உருவானது.

இன்று அவ்வெண்ணத்தை உருவாக்கியமைக்காக
இவர்களே பிறரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இது
தேசப்பாதுகாப்புக்கான சட்டம் மட்டுமே என
கண்ணீர்மல்க கூச்சலிடுகிறார்கள்.

அந்த அச்சத்தை இந்தியா முழுக்க பரப்பி,
நாட்டைக் கவ்வும் கலவரமாக ஆக்கும்பொருட்டு
திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே இந்து அகதிகளுக்கு
மட்டும் குடியுரிமை என்னும் மேலதிகத் திருத்தம்.

உண்மையில் அதனால் இன்று பயன்பெறுபவர்கள்
மிகமிக குறைவானவர்கள். அதிகபட்சம் இருபதாயிரம்பேர்
என்கிறார்கள்.

ஆகவே அது ஒரு சாதாரண நிர்வாகச் செயல்பாடு மட்டுமே.
அதை ஓர் அரசாணை வழியாகவே நிறைவேற்றியிருக்க
முடியும். பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக்
கொண்டுவந்து அதை நாடளாவிய விவாதமாக
ஆக்கவேண்டிய தேவையே இல்லை.
அது உள்நோக்கம் கொண்ட செயல்பாடு.

அஸாம்- வங்க- வடகிழக்கு குடிமக்கள் கணக்கெடுப்புகூட
சூழலைப் புரிந்துகொள்ளவும் எதிர்காலக் கொள்கைகளை
வகுக்கவும் மட்டுமே பயன்படும் என்பதே நடைமுறை
உண்மை.

நேர்மையான ஆட்சி என்றால் இத்தனை பெரிய
அகதிப்பட்டாளத்தை உள்ளே விட்ட ஊழல் மிக்க
அமைப்பின் ஓட்டைகளை அடைக்கவே அதை
பயன்படுத்திக்கொள்ளும்.

மற்றபடி நடைமுறையில் அவ்வாறு
கணக்கெடுக்கப்பட்டு குடியேற்றக்காரர்கள் என
அடையாளம் காணப்பட்டவர்களை என்ன செய்யமுடியும்?

அவர்களை வெளியேற்ற முடியுமா?
எந்த நாடேனும் அவர்களை
ஏற்றுக்கொள்ளுமா?
கோடிக்கணக்கானவர்களை தடுப்பு முகாம்களில்
வைக்க முடியுமா? அதற்கான நிதி நம்மிடம் உள்ளதா?

ஆக, அவர்கள் இங்குதான் இருப்பார்கள்.
அன்னியராக சுட்டிக்காட்டப்பட்டு.
அவர்களை தேர்தலரசியலில் இருந்து அகற்றலாம்.

ஆனால் அதன் விளைவு என்ன? ஒரு மக்கள்திரள்
ஜனநாயக அரசியலில் இருந்து முழுக்க அகற்றப்பட்டால்
அவர்கள் செல்வது வன்முறை அரசியலுக்காகவே
இருக்கும். இத்தனைபெரிய திரளில் பத்துசதவீதம்பேர்
வன்முறையரசியலை நோக்கிச் சென்றால்
இந்தியா தாங்குமா?

அனைத்துக்கும் மேலாக நாடளாவ ஒரு குடிமக்கள்
கணக்கெடுப்பு நடத்துமளவுக்கு இன்றைய சூழலில்
இந்த அரசிடம் நிதி உண்டா?

அஸாம் கணக்கெடுப்பின் செலவே பதினைந்தாயிரம்
கோடி என்கிறார்கள். அதிலும் பெரும்பகுதி ஊழலுக்கே
சென்றது என்கின்றனர்.

உள்ளே இருப்பவர்கள். அதிலுள்ள குளறுபடிகளை
களையவே ஐம்பதாயிரம்கோடி வரை செலவாகும்
என்கின்றனர்.

முழுஅரச நிர்வாகமும் அதற்கே செலவிடப்படுவதனால்
ஆட்சியே உறைந்துவிட்டிருக்கிறது. இந்தியா முழுக்க
அதைச்செய்வதென்றால் ஒருலட்சம் கோடிக்கும் மேல்
செலவு பிடிக்கும். எனில் ஏன் இதைச் சொல்கிறார்கள்?
வெறும் அரசியல் உத்தி.

வெறியோ கூச்சலோ பயனற்றவை.
நடைமுறையில் எது இயலுமோ அதையே
செய்யமுடியும்.

இன்றைய சூழலில் குடியேறிகளின்
எண்ணிக்கையை அறிந்துகொள்வது,
அவர்கள் உள்ளே வரும் வழியை கண்டடைவது,
அதை மூடுவது என்பதற்கு அப்பால் –
இக்கணக்கெடுப்பால் எதையுமே செய்யமுடியாது.
இந்துத்துவர் நினைத்தாலும்கூட செய்யமுடியாது.

உண்மையில் இந்த குடிமக்கள் கணக்கெடுப்பு திட்டமும்,
அதையொட்டி வந்த திருத்த மசோதாவும்
கவனத்தைக் கலைக்க கூரைக்கு தீவைக்கும்
முயற்சி மட்டுமே.

அந்த நோக்கமே கண்டனத்திற்குரியது.
அதன் விளைவாக உருவான ஐயமும் குழப்பமும்
நீடித்த தீங்கு பயப்பவை.

இன்றைய நவீன உலகில் எந்த நாடும் தங்களில்
ஒரு பங்கு மக்களுக்கு எதிராக ஆட்சி செய்ய முடியாது.
எந்தச் சிறுபகுதியினருக்கும் பங்களிப்பே இல்லாமல்
செய்துவிட்டு ஓர் ஆட்சியை வெற்றிகரமாக
நிகழ்த்த முடியாது

அரசின் இந்நோக்கமும் அதன் விளைவும் கேள்விக்
குரியதாக்கும்போது. அப்படியென்றால் ஊடுருவலை
அனுமதிக்கவேண்டுமா, சட்டத்திருத்தங்களால்
பழைய குடிமக்கள் பாதிக்கப்படமாட்டார்களா
என்றெல்லாம் பேசுவது உண்மையை
திசைதிருப்புவது மட்டுமே.

கச்சிதமான வாக்கரசியல் கணிப்பும் இதில் உள்ளது.
இது இந்து இஸ்லாமிய பிரிவினையை
மேலும் வலுப்படுத்தும். இந்த மசோதாவுக்கு எதிரான
எந்த எதிர்ப்பும் இஸ்லாமியர்களின் வன்முறையாகச்
சித்தரிக்கப்படும்,

அவ்வாறு அதை காட்டுவதற்கான எல்லா
வாய்ப்புகளையும் இங்குள்ள இஸ்லாமிய
அமைப்புக்களும் இங்குள்ள இடதுசாரிகளும்
உருவாக்கி அளிப்பார்கள்.

இந்திய எதிர்ப்பாளர்கள், இந்து வெறுப்பாளர்களின்
மேடையாக இந்த எதிர்ப்புப்போராட்டத்தை
மாற்றுவார்கள்.

இப்போதேகூட குடிமக்கள் கணக்கெடுப்பிற்கு எதிரான
போராட்டங்களில் காஷ்மீருக்கு விடுதலை போன்ற
கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. அதன் முகமாக
அறியப்பட்ட ஒர் இளம்பெண் கேரளத்தில்
ஒரு பொதுமேடையில் ஓர்
இஸ்லாமிய அரசுக்காக மட்டுமே
அவர் போராடுவதாக சொன்னதை கேட்டேன்.

இவ்வாறு ஒரு இருமுனைப்படுத்தல் உருவானால்
அதன் விளைவாக பாரதிய ஜனதா நோக்கிய
இந்து வாக்கு நகர்வு மிகுதியாகும்.
அவர்கள் தேர்தலரசியலில் நன்மை பெறுவார்கள்.

பொருளியலை அழித்து வாக்கரசியலில் வெல்லும்
உத்தி இது.

இவ்வாறு வெல்லமுடியும் என்பதனாலேயே
பொருளியலைப்பற்றிய எந்தக்கவலையும்
இல்லாமலிருக்கிறார்கள்.

ஒரு பாதிக்கப்பட்ட குடிமகனாக இதில் என்
கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.

ஜெ.

——————————————————————————————————————————————-

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to C.A.A. (குடியுரிமைச் சட்டத்திருத்தம்) – ஜெயமோகன் என்ன சொல்கிறார்…?

  1. Mani balan சொல்கிறார்:

    “இந்திய பொருளாதாரம் பின்னடைந்தால், அது உலக பொருளாதாரத்தையும் மந்தப்படுத்தும்.
    2019 ஆண்டின் இந்திய பொருளாதார வீழ்ச்சியால் ஏற்கனவே உலக பொருளாதாரத்தை 0.1% சதம் குறைத்திருக்கிறோம்.
    இந்தியா தனது பொருளாதார முதலீட்டில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.”-

    நேற்று வரை இந்திய மீடியாயின் டார்லிங்காக இருந்தவரும், நாளை முதல் படித்த முட்டாள் லிஸ்டில் சேர இருப்பவருமான உலக நிதி மையத்தின் தலைவர் கீதா கோபிநாத்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.