பகுதி-2 – அபூர்வமாக, விதிவிலக்கான சில மனிதர்கள் ….!!


நேற்றைய தொடர்ச்சியாக –

ஐஏஎஸ் அதிகாரி திரு.உதயசந்திரன் சந்தித்த சில மனிதர்கள் –

தன்னலமற்ற சேவை செய்து வருபவரால் சொந்தக் கிராம
மக்களின் மனங்களை ஏன் வெல்ல முடியவில்லை என்று
அவ்வப்போது யோசிப்பதுண்டு. அதுதான் இயல்பா என்றால்
அதற்கு விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னால், கனடா நாட்டின் டொரான்டோ
பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். ஹார்வர்டு, எம்.ஐ.டி.,
பெர்க்லி என உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின்
பேராசிரியர்கள் சூழ்ந்திருக்கிற அறையில்,

– வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் பேச அழைக்கப்படுகிறார்.
பத்தாம் வகுப்பின் பாதியில் பள்ளிப்படிப்பை விட்டவர்.
பெயர் சண்முகம். பத்தாண்டுகள் தன் ஓடந்துறை கிராமத்தில்
செய்த பணிகள் குறித்து அவர் பட்டியலிட்டதைக் கேட்டு
அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

‘கோவையிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள, பத்தாயிரத்தும்
குறைவான மக்கள்தொகை கொண்ட சிறு ஊராட்சி. வருவாயில்
பெரும்பகுதி மின்கட்டணம் செலுத்துவதிலேயே கழிந்துபோக,
சொந்தமாகவே காற்றாலை அமைக்கத் தீர்மானம்
நிறைவேற்றுகிறது.

50 லட்ச ரூபாய் சுயநிதி, ஒன்றரைக் கோடி ரூபாய் வங்கிக்கடன்
என்று அவர்கள் வகுத்த திட்டத்தைப் பார்த்து அதிகாரிகள்
அதிர்ந்துபோனார்கள். அனுமதி கிடைக்கவில்லை.

நீதிமன்றம் சென்று போராடுகிறது ஊராட்சி. விருப்பமின்றி ஒப்புதல்
கொடுக்கிறார்கள் அதிகாரிகள். புதிய அத்தியாயம் பிறந்தது.
உடுமலைப்பேட்டைக்கு அருகில் வாங்கப்பட்ட 3 ஏக்கர் நிலத்தில்
காற்றாலை பிரமாண்டமாக எழுகிறது. சுழலத் தொடங்கிய
காற்றாலையின் கரங்கள், ஓடந்துறை ஊராட்சிக்கு வளர்ச்சிப்
பாதைக்கான வழியைக் காட்டின.

ஓராண்டுக்கு 8 லட்சம் யூனிட் காற்றாலை மின்சாரத்தை
உற்பத்தி செய்கிறது எங்கள் ஊராட்சி. குடிநீர், தெருவிளக்குத்
தேவைகளுக்கு 4 லட்சம் யூனிட் போக, மீதம் உள்ள மின்சாரத்தை
மின் வாரியத்துக்கு விற்பனை செய்கிறோம். அந்தவகையில்
வருடம் 20 லட்ச ரூபாய் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.
வங்கிக்கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டுப் பார்த்தால்,
ஊராட்சியின் நிதிநிலைமை திருப்திகரம்.

இதுமட்டுமா, பொதுமக்கள் பங்களிப்போடு பவானி ஆற்றிலிருந்து
கூட்டுக் குடிநீர்த்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து
வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது.

காலம் மாறுகிறது. இப்போது ஓடந்துறை மகளிர் சுய உதவிக்குழு
தயாரிக்கும் ‘சுகம்’ குடிநீர் பாட்டில்கள் திருப்பூர், மேட்டுப்பாளையம்
பகுதிகளில் வெகு பிரபலம். ஊரில் இருக்கும் மூன்று பள்ளிகளுக்கும்
புதிய கட்டடங்கள் கட்டியிருக்கிறார்கள். எல்லாப் பள்ளிகளிலும்
100 சதவிகிதத் தேர்ச்சி வேறு.

13 கி. மீ. அளவுக்குத் தார்ச்சாலை.
எந்தத் திசையிலும் ஒரு குடிசையைக்கூடப் பார்க்கமுடியாது.
அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, இயற்கை எரிவாயு இணைப்பு,
சோலார் விளக்குகள்…’ என சாதனைகளை அடுக்கிக்கொண்டே
போனார் அவர். அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள்
பெறும் மாணவரைப் பார்த்து வியந்து நிற்பவர்களைப்போல
மாறிப் போனார்கள் அங்கு குழுமியிருந்த பேராசிரியர்கள்.

உலக வங்கி அதிகாரிகள் உட்பட 43 நாடுகளில் இருந்து வந்து
ஓடந்துறை ஊராட்சியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு மேல் ஊராட்சித் தலைவர்களாக அவரும்,
அவர் மனைவியும் பணியாற்றியிருக் கிறார்கள்.
அடுத்த தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிட எண்ணியிருக்கும்
அவரிடம், ‘எப்படி இவ்வளவு சாதித்தீர்கள்’ என்று கேட்டேன்.
கோவைக்கே உரிய கொஞ்சும் தமிழில் பதில் சொன்னார்.
‘ஊழல் ஒரு சதவிகிதம் கூட இல்லை.’

ஓய்வுபெற்ற பின்னாலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும்
நல்லாசிரியர் ஒருவர். உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களுடன்
தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு சாதித்த,
பத்தாம் வகுப்பில் இடைநின்ற மற்றொருவர். அலுவல் பயணத்தில்
சோர்வடைந்து வேகம் குறையும்போதெல்லாம் எனக்கு உற்சாகம்
கொடுப்பது இவர்களுடைய குரல்தான். ஒவ்வொருமுறை
வீழ்த்தப்படும்போதும் மீண்டு வந்து பயணத்தைத் தொடர
வழிகாட்டுவது இவர்களைப் போன்றவரின் முகங்களே.

(நன்றி திரு.உதயசந்திரன் ….)

இந்த இடத்தில் – நண்பர் அஜீஸ் அவர்களிடமிருந்து வந்த
ஒரு காணொளியை பதிப்பிப்பது பொருத்தமாக இருக்குமென்று
நினைக்கிறேன்…. கீழே –

ஒன்று சொல்லத் தோன்றுகிறது. நமக்கு ஒரு சண்முகம்,
ஒரு சுப்ரமணியம் போதாது…. நம்மில் இன்னும் அதிகம் பேர்
சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக மாற இயன்ற வரை
முயற்சிப்போமே… ஒருவேளை நம்மால் முனைந்து
செயல்பட முடியாவிட்டாலும், செய்கிறவர்களை ஆதரித்து
உற்சாகப்படுத்துவோமே …! ஊக்கம் கொடுப்போமே…!!

.
————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பகுதி-2 – அபூர்வமாக, விதிவிலக்கான சில மனிதர்கள் ….!!

 1. புவியரசு சொல்கிறார்:

  புத்தாண்டு தொடங்கியதிலிருந்து நல்ல,
  பயனுள்ள பதிவுகளாக போட்டு வருகிறீர்கள்.
  வாழ்த்துகள்.

 2. புவியரசு சொல்கிறார்:

  // ஒருவேளை நம்மால் முனைந்து
  செயல்பட முடியாவிட்டாலும், செய்கிறவர்களை ஆதரித்து
  உற்சாகப்படுத்துவோமே …! ஊக்கம் கொடுப்போமே…!! //

  இந்த வலைத்தளம் அதைத்தானே செய்து வருகிறது.
  தொடருங்கள். நிறைய பேர் இத்தகைய இடுகைகளின் மூலம்
  செயல்பட தூண்டப்படுவார்கள்.

 3. புதியவன் சொல்கிறார்:

  மக்களுக்கு உதவும்படி பணி புரிவதற்கோ இல்லை வாழ்வதற்கோ, ஏட்டுக் கல்வி அறிவு தேவையில்லை. ஐஏஎஸ் ஆகவேண்டியதில்லை. உதவணும் என்ற எண்ணமும், பிறர் பணத்தை அபகரிக்கக்கூடாது என்ற எண்ணமும், உழைக்கணும் என்ற எண்ணமும் இருந்தால் போதும்.

  மிகப் பயனுள்ள இடுகை. இதுபோல் நிறைய ஊராட்சிப் பணியாளர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். நீங்களும் தேடி அவர்களைப்பற்றி வாய்ப்புக் கிடைக்கும்போது வெளியிடணும்.

  மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் இவர்கள். பிறவிப்பயனை எய்தியவர்கள் இவர்கள்.

 4. appannaswamyAppannaswamy சொல்கிறார்:

  நடந்து முடிந்த ஊராட்சி தலைவர் தேர்தலில் இவர் தோற்கடிக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். இது உண்மை என்றால், அதை விட அவமானம் அடையவேண்டியதில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.