மனசாட்சியின் காவலர்….


இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர்
ராஜாஜி அவர்களை சரியான முறையில்
அறிந்திருக்க மாட்டார்கள்……

சுதந்திர போராட்ட முன்னணித் தலைவர்,
தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்பில் முன்னிலை வகித்தவர்,
வக்கீல், எழுத்தாளர்,
சுதந்திர இந்தியாவின் முதல்(ஒரே…?) கவர்னர் ஜெனரல்,
மத்திய உள்துறை அமைச்சர்,
சென்னை மாகாணத்தின் (தமிழ்நாடு) முதல் அமைச்சர்,
மேற்கு வங்க கவர்னர்,
திருச்செங்காடு காந்தி ஆசிரமத்தை உருவாக்கியவர்,
தமிழ்நாட்டில், முதல்முறையாக கள்ளுக்கடைகளை
அதிகாரபூர்வமாக ஒழித்தவர்…

ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம்,
உப்பு சத்தியாக்கிரகம், ஆகியவற்றை தமிழ்நாட்டில்
முன்னின்று நடத்தியவர்.
இத்தனை பெருமைகளுக்குரியவர் ராஜாஜி.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில்
பிறந்தவர் ராஜாஜி … பிறந்த தேதி – 10 டிசம்பர் 1878

நேற்று – ராஜாஜியின் நினைவு தினம் –
(மறைவு – – 25 டிசம்பர், 1972)

இந்திய சுதந்திர போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாடும்,
அவரது பங்களிப்பும் – சுதந்திரத்திற்குப் பின்னால், உரிய விதத்தில்
நினைவுகொள்ளப்படாமலே போனது. அதற்கான முதல்
காரணம் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி.

இன்றைய மத்திய அரசும் எந்த விதத்திலும்
அவரை நினைவுகொண்டதாகத் தெரியவில்லை….

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான கவர்னர் ஜெனரல்
பதவியை வகித்த ஒரே இந்தியர்… அதுவும் ஒரு தமிழர்…

அவரை நினவுபடுத்தி ஒரு இடுகை எழுத வேண்டும் என்று
நினைத்திருந்தபோது, பங்களூர் பத்திரிக்கையாளர்
திரு. டி.ஆர்.விவேக், ஆங்கிலத்தில் எழுதி
அதை தமிழில் மொழிபெயர்த்து திரு.சாரி எழுதியிருந்த
கட்டுரையை தமிழ் ஹிந்துவில் படித்தேன். இதைவிட அதிகமாக
நாம் என்ன எழுதிவிடப் போகிறோம் என்று தோன்றியது.

எனவே, அதிலிருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன்.

—————————

இந்திய ஜனநாயகத்துக்கு இராஜாஜியின் மிகப் பெரிய பங்களிப்பு –
எதிர்க் கருத்துகளைத் தயங்காமல் துணிச்சலாகத் தொடர்ந்து
தெரிவித்துவந்ததுதான். இதைப் பெரும்பாலும் மற்றவர்கள்
கவனித்ததே இல்லை. சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சரி,
1947-க்குப் பிறகும் சரி; அவரைப் போல காந்தியுடனும் நேருவுடனும்
அடிக்கடி கருத்துகளால் முரண்பட்டு, அதை அவர்களிடமே
விவாதிக்கத் துணிந்தவர்கள் யாருமில்லை.

பொருளாதாரத்தில் தாராளமயக் கொள்கைகளை அவர்
வலியுறுத்தினார் என்பது அவருடைய எதிர்க்குரல் குணாதிசயத்தின்
ஓரங்கம் மட்டுமே.

என்னுடைய மனசாட்சியின் காவலர் என்று இராஜாஜியை அழைத்த
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காங்கிரஸிலிருந்து இரண்டு முறை
விலகியிருந்தார் இராஜாஜி. சுயராஜ்யக் கட்சியினரிடம்
சரணடைந்துவிட்டார் காந்தி என்று கோபித்துக்கொண்டு 1925-ல்
மூன்று ஆண்டுகள் காங்கிரஸிலிருந்து விலகியிருந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில்
சமுதாயப் பணிகளில் ஈடுபட்டார். 1942-ல் காங்கிரஸிலிருந்து
அவர் விலகியது தெள்ளத்தெளிவானது. ‘வெள்ளையனே வெளியேறு
இயக்கம் பொறுப்பற்ற செயல்’ என்று காந்தியிடமே கூறினார்.

பிரிட்டிஷ்காரர்களுடனும் முஸ்லிம்களுடனும் பேசி இந்திய
சுதந்திரத்தை விரைவுபடுத்த வேண்டிய தருணத்தில் புதிய
போராட்டம் தொடங்குவது முட்டாள்தனம் என்றார்.

இராஜாஜி சொன்னார், “காங்கிரஸ் போடும் வெறும் கோஷத்தைக்
கேட்டுவிட்டே பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டுப் போய்விடுவார்கள்
என்று எதிர்பார்ப்பதில் யதார்த்தம் ஏதுமில்லை. பிரிட்டிஷ்காரர்கள்
வெளியேற வேண்டும் என்று கோருவது, அவர்களைவிட மிருக
பலத்துடன் காலனிகளைப் பிடித்துக்கொண்டிருக்கும்
ஜப்பானியர்களுக்கு அழைப்பு விடுப்பதாகிவிடும். இந்தியாவுக்கு
இழைத்த எத்தனையோ கொடுமைகளுக்குச் சிகரம் வைத்தார்போல,
இன்னொரு வெளிநாட்டிடம் சிக்கிக்கொள்ளட்டும் என்று
பெருங்குழப்பத்தில் இந்தியாவைத் தள்ளும் தவறை பிரிட்டன்
செய்யக் கூடாது” என்ற இராஜாஜியின் கருத்தை ‘தி மேக்கர்ஸ்
ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் பதிவுசெய்கிறார் வரலாற்றாளர்
ராமசந்திர குஹா. “காங்கிரஸுடனான தொடர்பைத் துண்டித்துக்
கொண்டுவிட்டு உங்களிடம் இருக்கும் முழு ஆற்றல்,
உற்சாகத்துடன் இந்தப் பிரச்சாரத்தை நடத்துங்கள்” என்று காந்தியும்
அவருக்குக் கடிதம் எழுதுகிறார்.

ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது பற்றித்தான்
இப்போதெல்லாம் கருத்தரங்குகளிலும் புத்தகக்காட்சிகளிலும் அதிகம்
விவாதிக்கின்றனர். அரசு தரும் விருதுகளைத் திருப்பித் தந்து
எதிர்ப்பைக் காட்டும் புதிய நடைமுறை வந்திருக்கிறது. இவற்றில்
பலவற்றை அரசியல் சந்தர்ப்பவாதத்திலிருந்து பிரித்துப் பார்க்க
முடிவதில்லை. இத்தகைய எதிர்ப்புகள் அரசியல் கட்சிகளுக்கு
விளையாட்டுப் பொருள்களாகிவிடுகின்றன.

( நேரு அரசைக் குறித்து அன்று அவர் கூறியது இன்றும் எப்படிப்
பொருந்துகிறது பாருங்கள்… )

நேரு அரசின் தவறுகள் மீது இராஜாஜி கவனம் செலுத்திவந்திருக்கிறார்.
1955 முதல் இது தீவிரமானது, அவருக்கும் நேருவுக்கும் இடையிலான
கடிதப் பரிமாற்றங்களில் சூடேறியது. நாடாளுமன்ற ஜனநாயகம்
சிறப்பாகச் செயல்பட இரு அம்சங்கள் அவசியம் என்று இராஜாஜி
வலியுறுத்தினார். “முதலாவது, அரசின் இலக்குகள் தொடர்பாக
மக்களிடையே பரந்துபட்ட உடன்பாடு ஏற்பட வேண்டும். இரண்டாவதாக,
வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். வலுவான ஆளுங்கட்சிக்கு
எதிராக சிறு சிறு குழுக்களாகப் பல எதிர்க்கட்சிகள் இருந்தால்,
அவற்றால் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது, அதனால் அரசு
சர்வாதிகாரியாக மாறிவிடும்” என்றார்.

“அரசின் கொள்கைகளை அச்சமின்றி விமர்சிக்க வழியில்லை என்றால்
அங்கே ஜனநாயகம் விடைபெற்றுக்கொள்கிறது. சுத்தமான காற்று
உள்ளே வர சாளரங்கள்தான் அவசியம். கண்ணாடிகளாலான முகம்
பார்க்கும் கண்ணாடிகளே உள் முழுவதும் இருந்தால்,
உள்ளே இருப்பவற்றின் பிரதி பிம்பம் மட்டுமே அதில் தெரியும்,
வெளியிலிருந்து புதிய காற்று உள்ளே செல்ல இடம் இருக்காது.
நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் இருந்தாலும் எதிர்க்கட்சிகளைக்
கூச்சல் போட்டே அடக்கும் அளவுக்கு மிருக பல பெரும்பான்மை
ஆளுங்கட்சிக்கு இருந்தால், ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்க அது
போதாது, அரசைப் பகிரங்கமாக விமர்சிப்பதற்கு அது எந்த
வகையிலும் ஈடாகாது” என்கிறார் இராஜாஜி.

இப்போதெல்லாம் அர்த்தபூர்வமான எதிர்ப்புகளைவிட உஷ்ணமான
வார்த்தைகளே மிஞ்சுகின்றன; ஆள்வோர் இவற்றால் ஏற்படும்
புகைத் திரையைப் பயன்படுத்தி தங்களுடைய உண்மையான
செயல்களை மற்றவர்கள் பார்க்க முடியாதபடிக்குத் தப்பித்து
விடுகின்றனர். அறிவுபூர்வமான துணிச்சல், நேர்மை, சுதந்திரம்
இல்லாமல் வேண்டுமென்றே அரசுக்கு எதிராகத் தெரிவிக்கும்
கருத்துகள் வெறும் பகட்டாகத்தான் பார்க்கப்படுகின்றன.

மதாபிமான தேசியத்தை அறுவடை செய்யவே இந்து மதாபிமானத்தை
அரசியல்படுத்துகின்றனர் என்பதை 1930-களிலேயே அடையாளம்
கண்டவர் அவர். இப்படிச் செய்வது மதத்துக்கும் தேசிய அரசியலுக்கும்
கேடு விளைவிக்கும் என்று கருதினார். இந்து மதத்தை உலக மதமாகவோ,
அனைவருக்கும் பொதுவான மதமாகவோ ஆக்க நினைக்கவில்லை.
வேதாந்தம் என்பதன் காரிய சாத்தியத்தையும் இந்து மதத்தின்
பரந்த மனப்பான்மையையும் போற்றியவர் இராஜாஜி.

இராஜாஜி ஒரு ராஜதந்திரி, மக்களிடம் நல்ல கருத்துகளை எடுத்துக்கூற
தக்க தருணங்களைத் தேடியவர். பவித்திரமான பொய்களைச்
சொல்லவும், தவறான உணர்வுகளை ஏற்படுத்தவும் மதங்களைப்
பயன்படுத்தவில்லை அவர்.

மக்களிடையே அறிமுகமாயிருந்த இந்து மதக் கருத்துகளை
ஆக்கபூர்வமான வழியில் திருப்பவே அவர் முயன்றார். அவரைப்
பொறுத்தவரை கலாச்சாரம் என்பது அற்பமானவற்றைத் தவிர்ப்பது,
நேர்மையின்மை, அகங்காரம் ஆகியவற்றை விட்டொழிப்பது மட்டுமே.
பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதையும், அடுத்தவரின் உணர்வுகளைப்
புரிந்துகொள்வதையுமே அவர் கலாச்சாரமாகக் கருதியவர்.

தன்னுடைய எதிர்க்குரலைத் தெரிவிக்க ‘ஸ்வராஜ்யா’ இதழை
அவர் ஆயுதமாக்கிக்கொண்டார். உண்மை, மக்களின் நன்மை
ஆகியவற்றின் அடிப்படையில் தன்னுடைய பத்திரிகையை
சாக்ரடீஸ் பாணியில் நடத்தினார். என்றைக்கு வேண்டுமானாலும்
மூடி, என்றைக்கு வேண்டுமானாலும் மீண்டும் நடத்தக்கூடிய
வகையில் ‘ஸ்வராஜ்யா’ உருவாக்கப்பட்டிருந்தது.

தெளிவான பார்வை, எளிமையான நடை, உயர்வான நோக்கம்
ஆகியவற்றுடன் ‘ஸ்வராஜ்யா’ நடத்தப்பட்டது. “இந்த நாட்டின்
முன்பு பல பிரச்சினைகள் உள்ளன. தனிநபர்களை
அடிமைப்படுத்தாமல் நல்வாழ்வு அரசு நடைபெற வேண்டும்,
மக்கள் செலுத்தும் வரித் தொகை முழுவதும் முறையாகச்
செலவழிக்கப்பட வேண்டும், வீணடிக்கப்படக் கூடாது,
மக்களுடைய உலகாயதத் தேவைகளைப் பூர்த்திசெய்யும்போது
ஆன்மிக விழுமியங்கள் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த நோக்கங்கள் அனைத்தையும் இந்தப் பத்திரிகை
நிறைவேற்றும்” என்று ‘ஸ்வராஜ்யா’ பற்றிக் கூறுகிறார்
இராஜாஜி.

இராஜாஜிக்கும் நேருவுக்கும் தனிப்பட்ட முறையில்
ஏதோ விரோதம், இராஜாஜிக்கு நிறைவேறாத ஆசை ஏதோ
இருக்கிறது என்றெல்லாம் மனம்போன போக்கில் பேசியவர்களுக்கு,
‘ஸ்வராஜ்யா’வில் வெளியான குத்தீட்டிக் கட்டுரைகளே
காரணங்களாக இருந்தன.

இன்றைக்கு ட்விட்டர்களிலும் சமூக வலைதளங்களிலும்
அரசியலைப் பற்றி விவாதிக்கிறவர்கள் நாட்டின் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் நேருதான் காரணம் என்று குற்றஞ்
சாட்டுகின்றனர். அவரை வில்லனாகவே சித்தரிக்கின்றனர்.
நேருவை நீண்ட காலம் தொடர்ந்து விமர்சித்த இராஜாஜி,
இன்று உயிரோடு இருந்தால் இந்த விமர்சனங்களையெல்லாம்
ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த மோனிகா ஃபெல்டன், இராஜாஜி பற்றி
முழுமையான வாழ்க்கைச் சரிதத்தை எழுதிவிடவில்லை
என்றாலும் மிகச் சிறப்பான சரிதையைப் படைத்திருக்கிறார்.

அதில், நேருவைப் புகழ்ந்து இராஜாஜி கூறிய கருத்துகளைப்
பதிவுசெய்திருக்கிறார். 1955-ல்கூட, சுதந்திர இந்தியாவில்
நாட்டுக்குத் தலைமை தாங்கக் கிடைத்த தகுதியான
ஒரே தலைவர் நேருதான் என்று கூறியிருக்கிறார் இராஜாஜி.
அது மட்டுமல்ல, நேரு பிரதமராகப் பதவி ஏற்றிருக்காவிட்டால்
நாட்டைக் குழப்பங்களே சூழ்ந்திருக்கும் என்கிறார்.

“நேரு, தான் எப்படிப்பட்டவர் என்று தனக்கு நன்றாகத்
தெரிந்திருந்தும், தன்னைப் புகழ்கிறவர்கள் கூறுகிறபடியே
தான் இருப்பதாகக் கருதிக்கொள்கிறார் அல்லவா?” என்று
மோனிகா கேட்கிறார். அதற்குப் பதில் அளித்த இராஜாஜி,
“பிரபலமாகிவிட்ட பிரமுகர்களின் பகட்டான போக்கு அது;
நேரு அவர்களில் ஒருவர் அல்ல; மிகவும் நேர்மையானவர்.
தன்னிடமில்லாத சிறப்புகள் தனக்கு இருப்பதாகப் பிறர்
கூறினாலும் அதனால் மதிமயங்கிவிடாதவர். மற்றவர்களைப்
போல புகழ்ச்சிக்கு மயங்கி தன்னை இழப்பவர் அல்ல”
என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இராஜாஜியைத் தலைவராகக் கொண்டு சுதந்திரா கட்சி
உருவாகிறது. தேர்தலில் அக்கட்சிக்குக் கணிசமான வெற்றி
கிட்டுகிறது. எனவே, சுதந்திரா கட்சியை நேரு நேரடியாகவே
தாக்குகிறார். அதை ராஜாக்கள், ஜமீன்தார்கள், பணக்காரர்கள்
கட்சி என்கிறார். பெருந்தொழிலதிபர்களின் நன்கொடை
அதற்கு தாராளமாகக் கிடைக்கிறது என்கிறார். இந்தக்
குற்றச்சாட்டுகள் இராஜாஜியைப் புண்படுத்துகின்றன.

இராஜாஜியும் நேருவும் காவியங்களில் வர்ணிக்கிறபடி
சண்டையிடுகிறார்கள். இருவருடைய அறிவுத்திறமும் ஆழ்ந்த
வாசிப்பும் அதில் வெளிப்படுகின்றன. பரசுராமருக்கும்
பீஷ்மருக்கும் நிகழ்ந்த வில் சண்டைபோல, இருவரும்
சொற்போர் நிகழ்த்துகின்றனர். சீனா, பாகிஸ்தான், காஷ்மீர்
தொடர்பாக இருவரும் ஆரோக்கியமான, அர்த்தமுள்ள
சண்டையில் ஈடுபடுகிறார்கள்.

தீவிரக் கருத்து மோதல்களாக அவை இருந்தாலும் கண்ணியம்
காக்கப்படுகிறது. இந்த அளவுக்குக் கொள்கைரீதியாக
இருவருக்கும் இடையில் மோதல்கள் நடந்தாலும் 1964-ல்
நேரு மறைவுக்கு இராஜாஜி செலுத்திய நினைவாஞ்சலி,
அரசியல் எதிரி ஒருவரிடமிருந்து ஒரு தலைவருக்குக்
கிடைத்த அஞ்சலிகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும்
உருக்கமானதாகவும் அமைந்தது:

“என்னைவிட 11 வயது இளையவர், என்னைவிட 11 மடங்கு
இந்த நாட்டுக்கு முக்கியமானவர், என்னைவிட 1,100 மடங்கு
இந்த நாட்டவரால் விரும்பப்பட்டவர், திடீரென
நம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார்.
அந்த சோகச் செய்தியைக் கேட்கவும் அதிர்ச்சியைத் தாங்கவும்
வேண்டியவனாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
என்னால் இயல்புநிலைக்கு வர முடியவில்லை.
கடந்த பத்தாண்டுகளாக அவருக்கு எதிராக நான் கருத்து
தெரிவித்ததெல்லாம் அவருடைய பொதுக் கொள்கைகளில்
உள்ள தவறுகளுக்காகத்தான். ஆனால், எனக்குத் தெரியும்
அவற்றையெல்லாம் சரிசெய்ய அவர் ஒருவரால் மட்டும்தான்
முடியும் என்று. மிகவும் நேசத்துக்குரிய நண்பர்
மறைந்துவிட்டார், நம் அனைவரிலும் மிகுந்த கண்ணியமானவர்,
பண்பட்டவர் இப்போது நம்மிடையே இல்லை. கடவுள்தான்
மக்களைக் காப்பாற்ற வேண்டும்!”

இராஜாஜி கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்க எழுதும்
கடிதங்களில்கூட நட்புணர்வே மிகுந்திருக்கும். நட்பு என்பது
அரசியல் பண்புகளில் முக்கியமானது என்று கருதினார். த

னி நாடு வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரியபோது,
நட்புணர்வின் அடிப்படையிலேயே அதை ஏற்றார். பாகிஸ்தானுக்கு
எதிரான உணர்வு உச்சத்தில் இருந்தபோது 1960-களில்
‘ஸ்வராஜ்யா’வில் எழுதினார், பாகிஸ்தானுக்கு எதிரான
உணர்வைத் தணித்துக்கொண்டு, துணிச்சலுடன்
பாகிஸ்தானியர்களுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்று
வேண்டுகோள் விடுத்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவான அவருடைய
கருத்தை வினோபா பாவே தவிர வேறு எந்தத் தலைவரும்
அப்போது ஆதரிக்கவில்லை.

ஆரம்பத்தில், கடுமையான அரசியல் எதிரி, கொள்கை வேறுபாடு
கொண்டவர், பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர், பிறகு தமிழ்நாடு
முதலமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் இருந்த கருணாநிதி
1972 டிசம்பரில் தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற வந்தபோது
முகமலர்ச்சியுடன் கருணாநிதியை வரவேற்று, அவருடைய
கைகளை ஆதுரமாகப் பற்றிக்கொண்டு, அவருடைய தலையில்
கைவைத்து ஆசி வழங்கினார் இராஜாஜி. “அரசியல் கருத்து
மாறுபாடுகளுக்காக நட்பை நான் எப்போதும் விட்டுக்கொடுக்க
மாட்டேன்” என்று அப்போது இராஜாஜி கூறியதை அவருடைய
வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராஜ்மோகன் காந்தி
பதிவுசெய்திருக்கிறார்.

19-வது, 20-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஞானிகள் ஸ்ரீ அரவிந்தர்,
ஸ்ரீ ரமண மகரிஷியைப் போல உலகைச் சீர்திருத்துவதைவிட
உங்களுக்குள் புரட்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்று
போதித்தார் இராஜாஜி. எந்த இஸத்தையும் பின்பற்றாமல்
கடுமையான உழைப்பின் மூலம்தான் நாட்டை முன்னேற்ற
முடியும் என்றார் இராஜாஜி.

இந்த எளிமையான வார்த்தைகளுக்காகவே எந்தக் காலத்துக்கும்
உரியவராக இருப்பார் இராஜாஜி.

( நன்றி – https://www.hindutamil.in/news/opinion/columns/531918-

rajaji-memorial-day.html )

….

திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள்,
ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காக
ராஜாஜி இயற்றிய தமிழ்ப்பாடல் “குறையொன்றும் இல்லை…”
அவர்கள் இருவரையும் நினைவுபடுத்தும் விதமாக – கீழே :

.
————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மனசாட்சியின் காவலர்….

 1. புவியரசு சொல்கிறார்:

  நீங்கள் சொல்வதும் உண்மை தான்.
  ராஜாஜியை எல்லாம் யாருக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது !
  வல்லபாய் படேல் மட்டும் தான் இப்போது ஹீரோ !!!

  தீர்க்கதரிசி –

  // நாடாளுமன்ற ஜனநாயகம்
  சிறப்பாகச் செயல்பட இரு அம்சங்கள் அவசியம் என்று இராஜாஜி
  வலியுறுத்தினார். “முதலாவது, அரசின் இலக்குகள் தொடர்பாக
  மக்களிடையே பரந்துபட்ட உடன்பாடு ஏற்பட வேண்டும். இரண்டாவதாக,
  வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். வலுவான ஆளுங்கட்சிக்கு
  எதிராக சிறு சிறு குழுக்களாகப் பல எதிர்க்கட்சிகள் இருந்தால்,
  அவற்றால் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது, அதனால் அரசு
  சர்வாதிகாரியாக மாறிவிடும்” என்றார்.

  “அரசின் கொள்கைகளை அச்சமின்றி விமர்சிக்க வழியில்லை என்றால்
  அங்கே ஜனநாயகம் விடைபெற்றுக்கொள்கிறது. சுத்தமான காற்று
  உள்ளே வர சாளரங்கள்தான் அவசியம். கண்ணாடிகளாலான முகம்
  பார்க்கும் கண்ணாடிகளே உள் முழுவதும் இருந்தால்,
  உள்ளே இருப்பவற்றின் பிரதி பிம்பம் மட்டுமே அதில் தெரியும்,
  வெளியிலிருந்து புதிய காற்று உள்ளே செல்ல இடம் இருக்காது.
  நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் இருந்தாலும் எதிர்க்கட்சிகளைக்
  கூச்சல் போட்டே அடக்கும் அளவுக்கு மிருக பல பெரும்பான்மை
  ஆளுங்கட்சிக்கு இருந்தால், ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்க அது
  போதாது, அரசைப் பகிரங்கமாக விமர்சிப்பதற்கு அது எந்த
  வகையிலும் ஈடாகாது” என்கிறார் இராஜாஜி. //

 2. Fazil சொல்கிறார்:

  why is he called Rajaji – “Ji” in his name is the hindi “ji”

 3. Thiruvengadam thirumalachari சொல்கிறார்:

  To some extent the political jousts between EVR and CR and group rivalry in Congress which exploited it was responsible for the disappearance from the an aims of Indian politics of whom Rev.Fr.De Souza said “Prince among men”ThiruvengadamT

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ராஜாஜி அய்யங்காரில் உள்ள சக்கரவர்த்தி உட்பிரிவை சேர்ந்தவர் .

  சக்கரவர்த்தி என்றோ நல்லான் சக்கரவர்த்தி என்றோ எழுதுவார்கள்
  ஆச்சாரியார் என்றும் போட்டுக் கொள்வதுண்டு .

  அவர் பெயர் ராஜகோபாலன் .
  சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சார்யா என்ற நீண்ட
  பெயரின் சுருக்கம் C .R அல்லது ராஜாஜி .
  ஜெயா ,ஹேமமாலினி – இவர்களும் இதே பிரிவு .

 5. D. Chandramouli சொல்கிறார்:

  I remember this. During my late teen age, I was studying Shorthand. Once Nehru visited Madras and addressed a huge gathering near Gandhi statue. Nehru spoke in his chaste beautiful English. I had carried my shorthand note. and took down Nehru’s eloquent speech to some extent. I was a great fan of Nehru then and naturally, I loved his speech. When I returned home, my co-tenant friend asked me about Nehru’s speech. I checked my notes and told him that Nehru vehemently attacked Rajaji, saying Rajaji was still in bullock cart age while Nehru’s Congress was into a very advanced stage. After a few days, I came across the book titled “I meet Rajaji” penned by Monica Felton. Only after reading this book, my paradigm about Rajaji changed positive. I was also regularly reading Swarajya magazine. I read Rajaji’s encomium on Nehru on the latter;s demise that brought tears to my eyes. Great men had deep disagreements then but still respected each other personally.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.