எல்லாருமே கெட்டவர்கள் அல்ல…..!!!


(அந்தச் சிறு பெண்ணின் முகத்தில் களங்கமற்ற, குழந்தைத்தனமான சிரிப்பும்… அந்த காவலரின் முகத்தில் வெட்கத்துடன் கூடிய இளம் புன்னகையும்———–!!! இந்த வருடத்தின் மிகச்சிறந்த புகைப்படமாக இது அமையக்கூடுமோ…!!! )

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உபி, டெல்லி,
குஜராத், பிகார், மேற்கு வங்கம் என நாடு முழுவதும்
போராட்டம் நடைபெற்று வருகிறது. தடையையும் மீறி
போராடுவதால் துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளனர் போலீசார். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை
போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்கின்றனர்.

இதனால் போலீசார் மீது பொது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி
ஏற்பட்டு வரும் நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர
இப்படியும் முயற்சிக்கின்றனர் சில போலீஸ் அதிகாரிகள்…

—————

பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பெங்களூரு
மத்தியப் பிரிவு இணை ஆணையர் சேத்தன் சிங் ராத்தோர்
பேச்சுவார்த்தை மேற்கொண்டார். எனினும்
போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் சேத்தன் சிங் ராத்தோர்
தேசிய கீதம் பாடினார். உடனடியாக போராட்டக்காரர்களும்
தேசிய கீதம் பாடத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து,
போராட்டக்காரர்கள் அனைவரும் அமைதியாகக் கலைந்து
சென்றனர்.

(-தேசிய கீதம் பாடப்பட்டால் – நிகழ்ச்சி
முடிந்து விட வேண்டுமே….!!! )

டெல்லி ஜன்பாத் பகுதியில் நேற்று இரவும் போராட்டம் நீடித்தது.
அப்போது போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால்,
அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸ் அதிகாரியும்
தேசிய கீதத்தைக் கையிலெடுத்துள்ளார்.
போராட்டக் காரர்களிடம் கலைந்து செல்ல அறிவுறுத்திய அவர்,
அவர்கள் கலைந்து செல்லாததால் தேசிய கீதம் பாடினார்.
இதையடுத்து அவரை சுற்றி நின்ற மாணவர்களும்,
பொதுமக்களும் தேசிய கீதம் பாடிவிட்டு அங்கிருந்து
கலைந்து சென்றனர்….

மறுபக்கம் தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று
போலீஸாருக்கு மாணவிகள் ரோஜா பூக்கள் வழங்கி வருகின்றனர்.

டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள்
போராட்டத்துக்கு அனுமதி மறுத்து தடியடி தாக்குதல் நடத்திய
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களுக்குப்
போராட அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மாணவர்கள்
அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்காக
போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது ஒரு மாணவி அங்கு கூடியிருந்த போலீசார்
ஒருவருக்கு திடீரென சிவப்பு ரோஜாவை கொடுத்தார்.
இதனை அங்கிருந்த சக போலீசார் வியப்புடன் பார்த்தனர்.

அப்போது அங்கு திரண்ட மாணவர்கள்,
”டெல்லி போலீஸ் எங்களுடன் வந்து பேசுங்கள்,
எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்”
என்று கும்பலாக பாடி ரோஜாக்கள் கொடுத்தனர்.
இது மட்டுமின்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து
போலீசாருக்கும் ரோஜாப் பூ கொடுத்தனர்.

” எங்களது உரிமைக்காக நாங்கள் அமைதியாகத்தான் போராடி
வருகிறோம். எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்.
அமைதியைத்தான் நாங்கள் விரும்புகிறோம்” என்று
ஒன்று சேர்ந்து உரத்த குரலில் பாடி
போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

இங்கே எல்லாருமே மனிதர்கள் தானே…
மனிதரில் நல்லவர்களும் இருக்கிறார்கள் –
கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

இதில் காவல் துறை மட்டும்
விதிவிலக்காகி விட முடியுமா…?

எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு
ஜாமியா மிலியா நடவடிக்கைகள் உதாரணம்…

இப்படியும் இயங்க முடியும் என்பதற்கு
பங்களூரு, டெல்லி – காவல் துறையினர்
உதாரணம்.

————–

வாழிய பாரத மணித்திருநாடு…
.
——————————————————————————————————————

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.