சொல்வதென்னவோ நிஜம் தான்… ஆனால்…..!!!திமுகவிலிருந்து விலகம் கடிதம் கொடுத்த பின்னர்,
திருவாளர் பழ.கருப்பையா சில சுவாரஸ்யமான கருத்துகளைத்
தெரிவித்திருக்கிறார்…. அது பற்றி கீழே –

——————————————–

தமிழக இலக்கிய மேடைகளில், அரசியல் மேடைகளில்
விமர்சகராக வலம் வருபவர், முன்னாள் காங்கிரஸ்காரரான
பழ.கருப்பையா. தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துப்
பேசிவந்த இவர், பின்னர் அ.தி.மு.க -வில் இணைந்தார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம்
தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட இவருக்கு
ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். தேர்தலில் வெற்றிபெற்று
எம்.எல்.ஏ ஆனார்.

இவருக்கு சபாநாயகர் பதவி தரப்படலாம் என்று பேச்சு
அடிபட்டது. ஆனால், அந்த வாய்ப்பு தரப்படவில்லை.

அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக
இருந்த நேரத்திலேயே `துக்ளக்’ பத்திரிகை நடத்திய
நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஆட்சியின் செயல்பாடுகளையும்
அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக
விமர்சித்தார்.

அதனால் அவரை அ.தி.மு.க-விலிருந்து ஜெயலலிதா
நீக்கினார். உடனே, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்
பழ.கருப்பையா.

பின்னர், ஏற்கெனவே தான் கடுமையாகச் சாடிவந்த,
தி.மு.க-வில் இணைந்தார். கடுமையாக கருணாநிதியை
விமர்சித்த அவர், தயக்கம் ஏதுமின்றி – திமுகவில் சேர்ந்து,
கடந்த சில ஆண்டுகளாகச் அங்கு செயல்பட்டுவந்தார்.

ஆனால், அங்கு அவருக்கு பொறுப்பு
எதுவும் வழங்கப்படவில்லை. வெறுமனே – தி.மு.க பேச்சாளர்
என்ற அடையாளத்துடன் இருந்த பழ.கருப்பையா இரண்டு நாட்கள்
முன்பு தி.மு.க-விலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.

தி.மு.க-விலிருந்து விலக என்ன காரணம் என்று
பழ.கருப்பையாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

“தி.மு.க கார்ப்பரேட் கட்சியாக மாறிவிட்டது. மக்கள்,
தொண்டர்களை அரவணைத்துச்சென்று கட்சி நடத்தாமல்,
சில தனியார் நிறுவனங்களை நாடி கட்சியை வளர்க்க
வேண்டிய சூழலில் தற்போது தி.மு.க இருப்பது
வேதனையாக இருக்கிறது.

“தி.மு.க-வில் சேருவதற்கு அப்போதே எனக்கு தயக்கம்
இருந்தது. `உங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்கத்தைக்
காக்க வேண்டும்’ என்று சொல்லி கருணாநிதி அழைத்ததால்
தி.மு.க-வில் சேர்ந்தேன்.

இன்றைக்கு, பணத்துடன் வருபவர்களுக்குத்தான்
தி.மு.க-வில் முக்கியத்துவம் தரப்படுகிறது. அறிவுக்கும்
நேர்மைக்கும் அங்கு இடமில்லை.

மக்களை அரவணைத்துப்போகிற தலைமைத்துவம்
அண்ணாவைத் தவிர யாருக்குமில்லை. கலைஞருக்குக்
கொஞ்சமிருந்தது.

ஆனால், ஸ்டாலினுக்கு கொஞ்சம்கூட இல்லை.
கடந்த ஆறு மாதங்களாக நான் அங்குதான்
இருக்கிறேன். ஸ்டாலினும் என்னைப் பார்க்கவில்லை.
நானும் அவரைப் பார்க்கச் செல்லவில்லை. தற்போது,
பா.ஜ.க-வினர் மதவாத சித்தாந்தங்களை அதிகமாகப்
பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதை அழுத்தம் திருத்தமாக எதிர்க்கவேண்டிய தி.மு.க-வும்
அறிக்கை விட்டால்போதும் என்று அறிக்கையோடு
முடித்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் எதற்காக இப்படிச்
செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

இங்கிருக்கும்
எம்.எல்.ஏ -க்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்கள் ( 🙂 )
எதுவுமே இல்லாமல் போய்விட்டது.

நான் பல கட்சிகளிலிருந்து மாறிக்கொண்டிருப்பதால்,
கட்சி மாறி என்று என்னை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைதான். நான் கட்சி மாறுகிறேன்.
ஆனால், கொள்கை மாறாதவன்….!!! ( 🙂 🙂 )

தனித் தமிழ் அரசியலைத்தான் முன்னிறுத்திக்
கொண்டிருக்கிறேன். சுயமரியாதை இழந்து கட்சியில்
இருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. அந்த
வேகத்தில்தான் தி.மு.க-விலிருந்து வெளியேறினேன்.
இது ஒன்றும் தவறில்லையே?” என ஆதங்கப்பட்டார்.

———————

`லக்ஸ் சோப்பை விளம்பரப்படுத்துவதற்கு நடிகைகள்
முன்னிறுத்தப்படுவதைப்போல தி.மு.க-வையும் அதன்
தலைவர் ஸ்டாலினையும் விளம்பரப்படுத்த பிரசாந்த்
கிஷோர் போன்றவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள்’

அதனால்தான், பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை
வேலைக்கு வைத்து, அவர்களுக்கு பல நூறு கோடி
ரூபாயை அள்ளிக்கொடுக்கிறார்கள். கோடிகளை
வாங்கிக்கொண்டு, தி.மு.க-வையும் அதன் தலைவர்
ஸ்டாலினையும் எப்படியெல்லாம் புரமோட் செய்வது
என்று அவர்கள் யோசனை சொல்லப்போகிறார்கள்.

நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் எந்த
அளவுக்கு தொண்டு செய்கிறீர்களோ அந்தளவுக்கு
மக்களிடம் அறியப்படுவீர்கள். அப்படி அல்லாமல்,
மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ, அப்படியாகத்
தங்களை புரமோட் செய்துகொள்ள வேண்டும் என்று
நினைப்பது தவறானது.

நம் கருத்துகளுக்கு ஏற்ப நாம் நியாயமாகச் செயல்பட்டு,
மக்களிடம் நன்மதிப்பைப் பெற வேண்டும். ஆனால்,
இவர்களிடம் அந்த நிலை இல்லை. `லக்ஸ் சோப்
எல்லா சரும வியாதிகளையும் நீக்கும்’ என்று
நடிகைகளால் புரமோட் செய்யப்படுவதைப்போல
இவர்களும் தங்களைப் புரமோட் செய்துகொள்ள
வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இது நல்லதல்ல.

பொய்மையின்மீது கட்டப்படும் மாளிகை.

ஆட்சியில் அமர்ந்துகொண்டு எல்லா பொய்மைகளையும்
செய்வதற்குத்தான் இது வழிவகுக்கும். அரசியல் கட்சி
நடத்துவதற்கான பாங்கு அல்ல. 20 கோடி ரூபாய்
வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் வேட்பாளர்
ஆகலாம் என்றால், அது என்ன நிலை? பணம்
வைத்திருப்பவன் எல்லாம் பல்லக்கில் அமர வேண்டும்,
பணம் இல்லாதவன் பல்லக்கு சுமக்க வேண்டும்
என்றால் எப்படி?

வெறும் 11 லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டுதான்,
தி.மு.க-வை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் அண்ணா.
உங்களால் ஏன் முடியவில்லை. உண்மையின் பேரில்
ஆட்சிக்கு வர முடியுமா, முடியாதா. நீங்கள் அதைச்
செய்யத் தயாராக இல்லை.

கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம்
தங்களைக் காட்டிக்கொண்டு நிலைநிறுத்திக்கொள்கின்றன.
அதைப்போல அரசியல் கட்சிகள் இந்த ஏஜென்சிகளை
வைத்துக்கொண்டு விளம்பரத்தின் மூலம் தங்களை நிலை
நிறுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

அறிவுடையவர்களுக்கு இவர்கள் இடம் கொடுப்பதில்லை.
ஆகவே, பணம் வைத்திருக்கிற செந்தில் பாலாஜி
போன்றவர்கள் வந்தால், அவர்களுக்கு முக்கியத்துவம்
கிடைக்கும். மாவட்டச் செயலாளர் உட்பட எல்லா
முக்கியப் பொறுப்புகளும் கிடைக்கும்.

அதேநேரத்தில் –
அங்கிருந்து வந்த அறிவுடையவர்களுக்கும்
நேர்மையானவர்களுக்கும் தி.மு.க-வில் எந்த இடமும்
இல்லை. ஏனென்றால், அறிவால் தங்கள் கட்சிக்கு
எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கிறார்கள்.
அறிவு பயன்படாத இடமாக தி.மு.க ஆகிவிட்டது” ( 🙂 🙂 )
என்றார்.

(நன்றி – விகடன் செய்தித்தளம்……)

—————————————————————————-

திருவாளர் பழ.கருப்பையா சொல்வதெல்லாம்
உண்மை தான்…. ஆனால் –

இவற்றையெல்லாம் சொல்லும் பழ.கருப்பையா
எப்படிப்பட்டவர்…? அவர் பின்னணி என்ன…?
அவரது பழைய சரித்திரம் எப்படிப்பட்டது –
என்பதெல்லாம் நமக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால்,
இத்தகைய பல உண்மைகளை பளிச்சென்று கொட்டினாலும்
அவர் மீது – எந்தவித மதிப்போ, மரியாதையோ
ஏற்பட மாட்டேனென்கிறதே என்ன செய்யலாம்…???

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சொல்வதென்னவோ நிஜம் தான்… ஆனால்…..!!!

 1. Ramnath சொல்கிறார்:

  அடுத்ததாக பழ.கரு. பாஜகவுக்கே போனாலும்
  ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • புதியவன் சொல்கிறார்:

   பாஜகவிலிருந்து விலகும்போது, ‘பாஜக என்ற மரம் தமிழ்நாட்டில் வளரக்கூடாது, பாசிச சிந்தனை, திராவிடச் சிந்தனையை அழிக்கக்கூடாது என்பதற்காக, விஷத்தை விஷத்தால் முறியடிக்கணும் என்று சொல்வார்களே அதுபோல நான் பாஜகவில் சேர்ந்து அந்தக் கட்சியின் நோக்கம், திட்டம் எல்லாவற்றையும் அறிந்து’ அதை முற்றிலும் வேரோடு அறுப்பதற்காக இப்போது சுதந்திரமாக வெளியே வந்துள்ளேன். இனித்தான் பாசகவுக்குத் தெரியும், திராவிடச் சிந்தனை என்பது வெறும் வாள் அல்ல… அது பிரம்மாஸ்திரம் என்று சனாதனதர்மத்தில் சொல்வார்களே அதைப்போன்றது, அதைவிட வலிமையானது என்று…… இப்படிச் சொல்லிட்டு, எந்தக் கட்சிக்குப் போவார் என்பதைத்தான் இப்போ கணிக்க முடியலை.

 2. புதியவன் சொல்கிறார்:

  பழ. கருப்பையா அருமையான பேச்சாளர். நிறைய படித்தவர். ஆனா பாருங்க, சொந்த வாழ்க்கையில் நல்ல உதாரணமா (அதாவது தன் கொள்கையை மறந்து கட்சி விட்டு கட்சி தாவும் வவ்வால் போன்று ஆகிவிட்டதால்) இல்லாததுனால அவர் என்ன சொன்னாலும், சும்மா டைம் பாஸ் பண்ணுவதுபோல ஆகிவிடுகிறது. இவர், வை.கோ, நாஞ்சில் சம்பத் போன்று நிறைய அரசியல் கோமாளிகளை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அவர்களைப் புறம்தள்ளுவது போல, அவர்கள் அரிதாகச் சொல்லும் நல்ல விஷயங்களையும் புறம் தள்ளிவிடுகிறோம்.

  இதனால்தான் ப.சி., மன்மோகன் சிங் போன்றவர்கள் எந்தக் கருத்தைச் சொன்னாலும், ‘இவரு பெரிய யோக்கியமா? இவர் கிட்ட ஆட்சி இருந்தப்போ ஒண்ணும் செய்யத் தெரியலை…இப்போ பெருசா பேச வந்துட்டாரு’ என்று நினைக்கிறோம். Credibility is very important.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பழ கருப்பையா சொல்வது உண்மை .
  அவர் கட்சி மாறினார் என்பதுவும் உண்மை .
  ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை .

  அதற்காகவே அவர் சொல்லும் கருத்துக்களை மதிக்கலாம் .
  தி மு க என்ற கட்சி குடும்ப சொத்தாக மாறி
  இப்போது கார்ப்பரேட் கம்பெனியுமாக மாறிவிட்டது .
  நைனா, லாபமா ? நட்டமா ? என்ற ரீதியில் இருக்கிறது .

  ஒரு காலத்தில் கண்ணதாசன் . ஈ வி கே சம்பத் ,ஜெயகாந்தன்
  ஒன்று சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்தார்கள் .
  என்ன ஆனது என தெரியாமல் போய் விட்டது .

  ரஜினி அங்கிள் , கமல் மாமா சொல்வதை பத்திபத்தியா
  போடும் பத்திரிகைகள், இவர் சொல்வதை கண்டு கொள்ளாது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.