இலங்கை தேர்தல் முடிவுகளின் – விளைவுகள் எப்படி இருக்கும் ….?


” இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய:
இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?”
என்று தலைப்பிட்டு, பிபிசி செய்திப்பிரிவு விரிவான
ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
அந்த கட்டுரையின் முக்கிய பகுதிகள் கீழே –

( https://www.bbc.com/tamil/india-50473017 )

( இடையிடையே நமது விமரிசன கருத்துகளையும் அதில்
தகுந்த குறிப்புகளுடன் சேர்த்திருக்கிறோம்…)

————————————————

– இலங்கையின் புதிய ஜனாதிபதியாக
கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில்,

இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம்,
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா – இலங்கை
உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின்
அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான
ஆர்.கே. ராதாகிருஷ்ணனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர்
முரளிதரன் காசி விஸ்வநாதன்.

பேட்டியிலிருந்து:

கேள்வி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய
ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள்
சொல்வதென்ன?

பதில்: கடந்த ஏப்ரலில் அங்கு குண்டுவெடிப்புகள் நடந்தபோதே,
அங்கு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தீர்மானமாகி
விட்டது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த
2009ல் புலிகளை வெற்றிகொண்டதிலிருந்து, தேசப் பாதுகாப்பு
என்ற விஷயம் என்பதில் அவரைத் தவிர வேறு யாராலும்
உரிமை கொண்டாட முடியாத விஷயமாகவே இருந்தது.

…..
…..

35 ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதான வேட்பாளர்கள்
இருவர். ஒருவர் கோட்டாபய. மற்றொருவர் சஜித் பிரேமதாஸ.
ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித், தற்போதைய

அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஆனால்,
பொருளாதார ரீதியில் சாதித்தவர் அல்ல. கோட்டாபயவைப்

பொறுத்தவரை, அவர் போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்
என்ற பெயர் இருக்கிறது.

தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சிங்களர்கள்
எல்லாம் திரண்டுவந்து கோட்டாபயவுக்கு வாக்களித்து
விட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம்
இருவருமே இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சிங்களர்களைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவைப்படும்
பாதுகாப்பை அளிக்கக்கூடியவர் கோட்டாபயதான் என
முடிவுசெய்தார்கள்.

( நமது கருத்து – இது தங்களுக்கு பாதுகாப்பை வேண்டி
சிங்களர்கள் எடுத்த முடிவல்ல… சிறுபான்மையினரான
தமிழரை கட்டுப்படுத்தி வைக்கக்கூடியவர் கோட்டாபய
தான் என்று அவர்கள் எண்ணியதாலேயே …)

கே. ஈஸ்டர் தாக்குதலின் காரணமாக, பாதுகாப்பு குறித்த அ
ச்சத்தில் சிங்களர்கள் கோட்டாபயவுக்கு வாக்களித்தார்கள்
என்றால், சிறுபான்மையினருக்கு அந்த அச்ச உணர்வு ஏன்
ஏற்படவில்லை அல்லது அவர்கள் ஏன் அதனை முதன்மையாக
நினைக்கவில்லை?

( தமிழர்கள், இந்த சம்பவத்தை ஒரு அச்சுறுத்தலாக
நினைக்கவில்லை. இந்த தாக்குதல், இலங்கைக்கு
தொடர்புடையதே இல்லை. வெளிநாட்டினரால், இலங்கைக்கு
சம்பந்தப்படாத ஒரு விஷயத்திற்காக நிகழ்த்தப்பட்ட
தாக்குதல் என்பதே அவர்களது எண்ணம்….)

ப. தமிழ் பகுதிகளில் புலிகள் இருந்தபோது, அவர்கள்
தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள். 2009க்கு முன்பாக
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து
ஒருவர் அழைத்துச் செல்லப்படுவது, விசாரணைக்காக
சிறையில் வைக்கப்படுவது என்பது கிடையாது.

அதன் நீட்சியாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள்
பார்க்கிறார்கள். கூட்டமைப்பைப் பொறுத்தவரை, நாம் யாரை
விரும்புகிறோம் என்பதைவிட, யார் வேண்டாம் என்பதில்தான்
முடிவெடுக்க முடிகிறது. அந்த அடிப்படையில் பல தமிழர்கள்
கொல்லப்பட காரணமாக இருந்த, காணாமல் போக
காரணமாக இருந்த கோட்டாபய வரக்கூடாது என்பதில்
மக்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

இலங்கை தேர்தல்: கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ
ஆதரவு பெற்றது எந்தப் பகுதியில்?

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கவனிக்க
வேண்டும். டெலோவைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் இந்த
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தமிழர்களின்
வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென நினைத்தார். ஆனால்,
மக்கள் அவரை விரும்பவில்லை. அதேபோல வட
மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும்
இம்மாதிரி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.

கோட்டாபய, சஜித் ஆகிய இருவரில் யார் வந்தாலும்
தமிழர்களுக்கு ஏதும் செய்வதாகத் தெரியவில்லை;
மக்கள் தங்கள் மனசாட்சியின்படி முடிவெடுக்க
வேண்டுமென அவர் கூறினார். இது கோட்டாபயவுக்கு
சாதகமான ஒரு விஷயம். ஆனால், அதையும் மக்கள்
ஏற்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான்
இன்றைக்கும் தமிழ் மக்களின் பாதுகாவலனாக
இருக்கிறது என்பது இந்தத் தேர்தல் முடிவுகள்
சொல்லியிருக்கின்றன.

( நமது கருத்து – விக்னேஸ்வரன் கோட்டாபயவுக்கு
ஆதரவாக அத்தகைய ஆலோசனையை சொன்னர் என்பது
தவறு…தமிழர்கள் தங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடட்டும்
என்று தான் விக்னேஸ்வரன் கூறினார்….

தமிழர்கள் சிவாஜிலிங்கத்திற்கு ஓட்டளித்தாலும்,
தமிழர்களின் ஓட்டுக்களால் இந்த தேர்தலில் எந்தவித
மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது உறுதியான
நிலையில் தான் அவர் இத்தகைய ஆலோசனையை
கூறி இருக்கிறார்… Choosing Between the Devil
and the Deep Blue Sea ….

நிச்சயம் தோற்றுப்போவார் என்று உறுதியாகத்
தெரிந்து விட்ட வேட்பாளரான
சிவாஜிலிங்கத்திற்கு ஓட்டு போட்டு,
தமிழர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்பது அவர்
கருத்தாக இருந்திருக்கும் … )

கே. இந்தத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுகளைப்
பார்க்கும்போது, மக்கள் இனரீதியாக பிளவுபட்டு
வாக்களித்திருப்பதைப் போலத் தெரிகிறது. ஆகவே
இந்தப் பிளவானது தற்போதைய ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு
தொடர்பாக முடிவெடுப்பதில் ஏதாவது தாக்கத்தை
ஏற்படுத்துமா?

ப. அதிகாரப் பகிர்வு என்பது இனி இலங்கையில் நடக்காது.
13வது திருத்தச் சட்டம் என்பது இனி ஒருபோதும்
நிறைவேறாது. நாம் இனி யதார்த்தமான தீர்வுகளைப் பற்றி
மட்டுமே பேசப்போகிறோம் என கோட்டாபய மிகத்
தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆகவே, அவருடைய
தீர்வில் 13வது திருத்தச் சட்டம், மஹிந்த கூறிய 13வது
திருத்தச் சட்டம் ப்ளஸ் ஆகிய எதுவுமே கிடையாது.
கோட்டாபயவைப் பொறுத்தவரை, ஒரு ஒருங்கிணைந்த
நாட்டிற்குள் தமிழர்கள் வேண்டுமென்றால் இருந்து
கொள்ளலாம், அவ்வளவுதான். அதுதான் நிதர்சனம்.
இதில் இந்தியா செய்யக்கூடியது ஏதுமில்லை.

கே. கோட்டாபய பதவியேற்ற பிறகு பேசும்போது சிங்கள
மக்களின் வாக்குகளால்தான் வெற்றிபெற்றதாகத்
தெரிவித்திருக்கிறார். ஆகவே, இனி தமிழ் மக்கள்,
சிறுபான்மையினரைப் பொறுத்தவரை ஜனாதிபதியை
அணுகுவதென்பது எவ்விதத்தில் இருக்க முடியும்?

ப. அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக இருக்க
வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்
13 கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
அதிலிருந்து ஆரம்பிக்கலாம். தமிழர்கள் என்ன
கேட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷ கொடுக்கப்
போவதில்லை. ஆனால், ஐநா, ஐநா மனித உரிமைகள் சபை,

ஊடகங்களிடம் தமிழர்கள் தங்கள் நியாயமான
கோரிக்கைகளைத் தொடர்ந்து பேச வேண்டும்.

கே. விரைவிலேயே நாடாளுமன்றத் தேர்தலும் நடக்குமென
எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேர்தலின் முடிவுகளிலும்
இந்த வெற்றி எதிரொலிக்குமா?

ப. நிச்சயமாக எதிரொலிக்கும். தமிழ்ப் பகுதிகள் நிச்சயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்பார்கள்.
இஸ்லாமியக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள்
ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ் போன்ற இஸ்லாமியக்
கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். மத்திய இலங்கையில்
சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரசிற்கு சில இடங்கள்
கிடைக்கலாம். இலங்கைப் நாடாளுமன்றத்தில்
மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்கள்
வாக்காளர்களால் தேர்வுசெய்யப்படும். மீதமுள்ள
29 இடங்கள் தேசியப் பட்டியல் எனப்படும் நியமன
இடங்கள். இதில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின்
சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு
செய்யப்படும்.

விரைவிலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப்
பதவியேற்கக்கூடும். ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சித்
தலைவராகலாம். ஆகவே, 2005ல் என்ன நடந்ததோ,
அதுதான் நடக்கும். மறுபடியும் அதே அவலங்கள்தான்
நடக்கும்.

…..
…..

கே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்?

ப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது
ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப்

பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை.
ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர,

தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு

நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த
ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது
தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு
கருவியாகப் பயன்படுத்தத்தான்.

தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை
அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு
பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட,
இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே
முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்த
போதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும்
நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம்
மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில்
புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய
தேவை ஏற்படும்.

( நமது கருத்து – ஐ.நா.சபையில் இலங்கைத் தமிழர்
பிரச்சினையை ராஜதந்திரத்துடன் – சாமர்த்தியமாக
கையாள்வதன் மூலம், இந்தியாவால் நிச்சயம் இலங்கை
அரசுக்கு ஓரளவு அழுத்தத்தை உருவாக்கி,
தமிழர்களுக்கு ஓரளவாவது நிவாரணத்தை பெற்றுத்தர
முடியும்….மிகப்பெரிய, வலுவான, அண்டை நாடான
இந்தியாவை நேரடியாக முறைத்துக்கொள்ளும் தைரியம்
இலங்கை அரசுக்கு இருக்காது.

இந்திய அரசு நினைத்தால், இப்போதும் – இலங்கைத்
தமிழர்களுக்கு உதவ முடியும்… உதவுமென்று
நம்புவோம்….)

கே. ராஜபக்ஷக்களைப் பொருத்தவரை அவர்கள் சீனாவுக்கு
நெருக்கமானவர்கள் என்ற பிம்பம் இருக்கிறது.
இனி என்ன ஆகும்?

ப. நான் ஒரு அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கப்
போகிறேன் என்கிறார் கோட்டாபய. அதாவது
இந்தியாவுடனோ, சீனாவுடனோ நெருக்கமாக இருக்கப்
போவதில்லை என்றிருக்கிறார். ஆனால், மஹிந்தவைப்
பொறுத்தவரை இந்தியா எங்கள் சகோதரன். ஆனால்,
சீனாவுடன் வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறோம்
என்பார். ஆகவே மஹிந்தவின் நிலைப்பாட்டிலிருந்து
கோட்டாபயவின் நிலைப்பாடு மாறுபடுகிறது.

தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பாக, சீனாவின்
கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
நிறுத்தப்பட்டது. எந்த நாட்டிலும் தேர்தல் சமயத்தில்
கூட்டு ராணுவப் பயிற்சி நடக்காது. ஆனால், தேர்தல்
சமயத்தில் சீனக் கப்பல் அங்கு வந்திருப்பது ஒரு
சமிக்ஞையாகத்தான், அதாவது சீனா எந்த நேரத்திலும்
வரவேற்கப்படுகிறது என்பதன் சமிக்ஞையாகத்தான் அது
பார்க்கப்படுகிறது.

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இலங்கை தேர்தல் முடிவுகளின் – விளைவுகள் எப்படி இருக்கும் ….?

 1. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  இந்திய அரசு நினைத்தால் நிச்சியமாக இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடியும் ஆனால் அப்படி ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முனைந்தால் இலங்கையின் மீதான வேறு சில விஷங்களில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை அழுத்தமாக தெரிவிப்பதில் இருக்கும் சிக்கல், மேலும் சீனா அபரிதமாக தன்னுடைய தொழிலை இலங்கையில் விரிவுபடுத்தும் வகையில் எடுக்கும் செயல்பாடுகள்,இந்திய அரசுக்கு இலங்கை மீதான தன்னுடைய அதிகாரத்தை பிரயோகிக்க முடியாததற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது வலுக்கட்டாயமாக ஏதேனும் செய்யப்போனால் விளைவுகள் மீண்டும் விபரீதமாகும் வாய்ப்பு தான் அதிகம்.

  இந்த தேர்தலும் கோத்தப்யாவின் வெற்றியும் பிற இன மக்களுக்கு செய்தியை சொல்லாமல் சொல்லுவது போல் இருக்கிறது.

 2. புதியவன் சொல்கிறார்:

  இந்திய அரசு, தமிழர்களுக்காக என்று எதனையும் செய்யாது. அது அரசியல் ரீதியாகவோ பூகோள ரீதியாகவோ இந்தியாவிற்கு நன்மை பயக்காது. நாம ‘தமிழர்கள்’ என்ற லேபிளில் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. அதற்கான காலம் கடந்து பல வருடங்களாகிவிட்டது.

  இந்திய அரசு வி.புலிகளுக்கான ஆதரவை, ‘தமிழர் நலன்’ என்பதற்காக எப்போதும் கொடுத்ததில்லை. To have some check with Srilanka இந்திய அரசு அதனைச் செய்தது. அவ்ளோதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   மத்திய அரசின் நிலை குறித்த இந்த செய்தியைப் பாருங்கள் –

   ———————
   // கோத்தபய ராஜபக்‌ஷேவுடனான ஜெய்சங்கரின்
   சந்திப்பு குறித்து நேற்று (நவம்பர் 21) கருத்து
   வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை
   அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ,

   “இந்த சந்திப்பின் போது, அமைச்சர் இலங்கையுடனான
   நெருங்கிய மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்தும்,
   வரும் ஆண்டுகளில் இதை மேலும் வலுப்படுத்தும்
   வழிகளைப் பற்றியும் விவாதித்தார்.

   சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்துக்கான
   தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும்
   ஒரு தீர்வை எட்டுவதற்கு –

   – இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க
   செயல்முறையை முன்னெடுக்க வேண்டும் என்ற
   இந்தியாவின் எதிர்பார்ப்பையும் –

   – ஜெயசங்கர் கோத்தபயாவிடம் தெரிவித்தார்”
   என்றார். //
   ——————————-

   – இப்போதைக்கு இதுவே
   பெரிய விஷயம் தான். இல்லையா… ?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. உங்கள் பாசிடிவ் திங்கிங்கைப் பாராட்டுகிறேன்.

    சரத்பவார், விவசாயிகள் பிரச்சனைக்காக பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
    தமிழக மக்கள் நலனுக்காக கருணாநிதி சோனியா சந்திப்பில் பேசப்பட்டது.

    இதெல்லாம் எவ்வளவு நாம நம்பலாமோ அவ்வளவு இந்த மாதிரி அறிக்கைகளை நம்பலாம். ஏன் மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு செலுத்தணும்? (சாதாரண உணர்ச்சியுள்ள மனிதர்களாகிய நமக்கு காரணங்கள் நிறைய உண்டு. அரசாங்கத்துக்கோ தேசத்துக்கோ அத்தகைய காரணங்கள் கிடையாது). ஒரு காரணம் சொல்லுங்க. இந்திய அரசுக்கு இந்தியாவின் நலன் மட்டும்தான் முக்கியம். அதுபோல இலங்கைக்கும் அவங்க நாடு மட்டும்தான் முக்கியம். நமக்கு அங்கு சீன ஆதிக்கம் இருந்தால் பாதுகாப்பு பெரிய பிரச்சனையாகிவிடும், ஏற்கனவே தமிழகம் பிரச்சனைக்குரியவர்களால் (தேசபக்தி இல்லாதவர்களால்) சமூகப் பிரச்சனைகளைச் சந்தித்துவருகிறது. இதனால் சீன, பாகிஸ்தானிய ஆதிக்கம் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை மட்டும்தான் இந்திய அரசு குறிக்கோளாகக் கொள்ளும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.