அமேசான் கிண்டிலில் மனுஷ்யபுத்திரன் போன்றோர் போடும் குப்பை ….!!!


ஒரு எழுத்தின் தரத்தை, ஒரு எழுத்தாளரின் தரத்தை,
சுவாரஸ்யத்தை – அவரது படைப்புகளின் மூலம் வாசகர்கள்
படித்து முடிவு செய்வதே, தமிழ் இலக்கிய உலகில் இதுவரை
இருந்து வந்த வழக்கம்.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக –
வர்த்தக நோக்கத்தில் அமேசான் கிண்டில் நடத்தும்
5 லட்ச ரூபாய் போட்டிகளின் நிபந்தனைகளின்படி,
PEN TO PUBLISH போட்டியில் –

– யார் அதிக விளம்பரங்களின் மூலமும்,
தனது,
தனிப்பட்ட,
குழுவினரின்,
அரசியல் கட்சிகளின் –
செல்வாக்கின் மூலம்
அதிகமாக ஒரு புத்தகத்தை வாங்க வைக்கிறார்களோ –

அந்த புத்தகமே சிறந்த புத்தகமாகவும், அதை எழுதியவரே
மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளராகவும் அமேசான் நிறுவனத்தால்
அறிவிக்கப்படவே வாய்ப்பு.

இந்த வாய்ப்பை –
போட்டி நிபந்தனைகளில் உள்ள பலவீனத்தை –
ஓட்டையை பயன்படுத்திக் கொண்டு –
திமுக தீவிர செயல்பாட்டாளரான மனுஷ்யபுத்திரன்,
திமுக கவிஞர் அணியின் சார்பில், ஒரு எழுத்தாளரையும்,
அவர் எழுதும் புத்தகத்தையும் ப்ரமோட் செய்ய
அதி தீவிர முயற்சி செய்கிறார் என்று தெரிகிறது.

இதன் விளைவு –

தன் எழுத்தை, தானே மிகத்தீவிரமாக உயர்த்திப் பேசி,
தற்புகழ்ச்சி விளம்பரம் செய்துகொள்ளும் ஒரு கேவலமான
நிலைக்கு இதர தமிழ் எழுத்தாளர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

இது குறித்து, திரு.ஜெயமோகன் அவரது தளத்தில்
மிக விவரமாக அலசி இருக்கிறார். அவர் எழுதியிருக்கும்
ஒரு கட்டுரையை வாசக நண்பர்களின் கவனத்திற்காக
கீழே தந்திருக்கிறேன்..

——————————————————————————————————–

எந்த ஊடகமும் அப்பண்பாட்டில் என்ன இருக்கிறதோ
அதைத்தான் கொண்டுவந்து சேர்க்கும். ஊடகம் பெரிது என்றால்

அப்பண்பாட்டில் உள்ளவற்றை பெரிதாக்கிக் காட்டும்.
இதை தொடர்ந்து காணலாம்.

1870 வாக்கில் தமிழில் அச்சு இதழ்கள் வரத்தொடங்கின.
முதலில் சில ஆண்டுகள் அது அறிவுப்பரவலுக்கான ஊடகமாக
இருந்தது. மிகச்சில ஆண்டுகளிலேயே அதில் வணிகக்கேளிக்கை
மட்டுமே கிடைக்கும் என்ற நிலை வந்தது.

குறிப்பாக ஆரம்பகட்ட அச்சுநூல்களில் பெரும்பகுதி
ஆண்மைவிரிவாக்கம் தொடர்பானவை. எஞ்சியவை
பாலியல் நூல்கள். அக்கால ஹிக்கிம்பாதம்சின் முதன்மையான
வணிகம் என்பது பாலியல்நூல்கள், தெரிந்திருக்கும்.

அக்காலகட்டத்தில்தான் தமிழின் தொன்மையான இலக்கியச்
செல்வங்கள் அச்சேறின. தமிழ்மரபே மீட்டு எடுக்கப்பட்டது.
ஆனால் அவை மிகச்சில அறிஞர்களால் மட்டுமே அறியப்பட்டன.

பணமுள்ளவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான்
அந்நூல்கள் வெளியாயின. [அதற்கு கையெழுத்து பெற்றுக்
கொள்ளுதல் என்று பெயர். நூல்களை வாங்கிக்கொள்கிறேன்
என உறுதி அளித்தல், முன்பணம் கொடுத்தல்] ஆனால்
அவற்றிலும் பெரும்பகுதி கொள்வாரின்றி வெளியீட்டாளரிடமே
குவிந்து கிடந்தது. உ.வே.சாமிநாதய்யரின் வீட்டில் அவர்
வெளியிட்ட தொல்நூல்கள் எப்படி வெறும் சரக்காக
குவிந்து இடத்தை அடைத்து மட்கிக்கொண்டிருந்தன என
எஸ்.வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார்.

அதேபோல சினிமா. அது உருவானதுமே நேராக கேளிக்கை
நோக்கியே சென்றது. புராணங்கள், தழுவல்கதைகள்.
இன்றுவரை அப்படித்தான்.

அதில் இன்றுகூட நல்ல கலைக்கு இடமில்லை.
பார்க்க ஆளில்லை. நீங்களே பார்க்கலாம், ஒரு வணிக
சினிமாவுக்கு எத்தனை அறிவுஜீவிகள் மாய்ந்து மாய்ந்து
மதிப்புரை எழுதுகிறார்கள் என. கலைப்படங்களை திரும்பிப்
பார்க்கவே ஆளில்லை

தொடர்ந்து தொலைக்காட்சி வந்ததும், அது அன்று
அரசுத்துறையில் மட்டும் இருந்தமையால், நல்ல
இலக்கியங்கள் திரைவடிவம் கொண்டன.

தமிழில் சா.கந்தசாமி, வண்ணநிலவன் போன்றவர்களின்
நாவல்கள் படமாயின. இந்தியிலும் மலையாளத்திலும்
ஏராளமான இலக்கிய ஆக்கங்கள் அதில் வெளிவந்தன. தில்லி
தொலைக்காட்சி தரமான கலைப்படங்களை வாங்கித்
திரையிட்டது. என் மனைவி உட்பட பலர் அன்றெல்லாம்
காத்திருந்து இந்திய கலைப்படங்களை பார்த்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளில் தனியார்த் தொலைக்காட்சிகள் வந்தன.

அவ்வளவுதான், இன்று அதில் என்ன வருகிறது என
உங்களுக்கே தெரியும். போட்டியில் நிற்கமுடியாமல்
அரசுத்தொலைக்காட்சியும் அதேவழியில் சென்றது.
ஏனென்றால் மக்களிடம் இருப்பது, மக்கள் விரும்புவதே
அதைப்போன்ற வணிக ஊடகத்தில் வரமுடியும்.

அதன்பின் இணையம்.
இணையம் வந்ததும் ஒரு சிறு விழிப்புணர்வு.
பரவலாக இலக்கியம் அறிமுகமாகியது.
நூல்களைப்பற்றிய பேச்சு உருவானது. வலைப்பூக்கள்
வந்தபோது பலர் எழுதவும் தொடங்கினர்.

இன்று பாருங்கள், சினிமா வம்புகள், அரசியல் வசைகள்
அன்றி இணையத்தில் ஏதேனும் உள்ளதா?

சமீபத்தில் வெளிவந்த ஏதேனும் நூல் பேசப்படுகிறதா?
எவராவது ஏதாவது தீவிரமான தலைப்புகளில் பேசுகிறார்களா?

ஏற்கனவே என்ன இருந்ததோ
அதே விகிதம்தான்.

அதன் தொடர்ச்சியே அமேசான். அது ஒர் ஊடகம்.
தமிழில் என்ன இருக்கிறதோ, தமிழருக்கு என்ன தேவையோ
அதுதான் அங்கே வரும்.
விகிதம் இப்படி இருக்கும்.

பெண்களுக்குரிய மென்பாலியல் –
மெல்லுணர்ச்சிக் கதைகள்,

ஆண்களுக்குரிய வன்பாலுணர்ச்சிக் கதைகள்,
பிழைகள் மலிந்த எளிய பயன்தரு நூல்கள்,

மாற்றுமருத்துவம் முதல் மாந்த்ரீகம் வரையிலான
பொய்நூல்கள், கொஞ்சம் சோதிடம் மற்றும்
மதவழிபாட்டு நூல்கள்.

இலக்கியம், அறிவுத்தள நூல்கள் மிகக்குறைவாகவே
இருக்கும். ஏனென்றால் உண்மையில் தமிழ்ப்பண்பாட்டில்
அவற்றுக்கான இடமும் தேவையும் –
அந்த விகிதத்திலேயே.

ஆனால் அச்சுநூல்களில் தரமான நூல்களின் விகிதம்
உண்மையில் மிகுதி. ஏனென்றால் இங்கே அச்சுநூல் என்பது
பெரும்பாலும் கல்விநிலையங்களின் நூலகங்கள் மற்றும்
அமைப்புகளின் நூலகங்களை நம்பி அச்சிடப்படுகிறது.
ஓரிரு எழுத்தாளர்கள் தவிர பெரும்பாலான எழுத்தாளர்களின்
நூல்களில் பத்துபிரதிகள் கூட வாசகர்களால் வாங்கப்படுவதில்லை.

அந்த ‘ஸ்பான்ஸர்’கள் அமேஸான் போன்ற மென்பிரதி
விற்பனையாளர்களுக்கு இல்லை. ஆகவே அங்கே குப்பைகளின்
விகிதம் 99 விழுக்காடு இருக்கும்.
காலம் செல்லச்செல்ல மேலே கூட செல்லும்.

நல்ல ஆக்கங்களை அமேஸானில் எவரும் இயல்பாக
கண்டடைய முடியாது. தேடி அடைவது மேலும் கடினம்.
ஆகவே அதன்வழியாக எவரும் இலக்கியம் நோக்கி
வரமுடியாது.

ஒருவர் முகநூல் வழியாக இலக்கியம் நோக்கி வரமுடியுமா என்ன?
அதேபோலத்தான்.

அதற்கு மீண்டும் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும்
அறிவியக்கச் செயல்பாடுகள், இலக்கியச் செயல்பாடுகளையே
சார்ந்திருக்கவேண்டும்.
இங்கே அறிவியக்கமும் இலக்கிய இயக்கமும் மைய ஓட்டச்
செயல்பாடுகள் அல்ல, அவை மிகச்சிறுபான்மையினரால்
நிகழ்த்தப்படும் மாற்றுச்செயல்பாடுகள் மட்டுமே.

இங்கு மட்டும் அல்ல, உலகமெங்கும் அறிவுச்செயல்பாட்டில்,
கலை இலக்கியச் செயல்பாட்டில் செல்லுபடியாகும்
பொது விதி ஒன்று உண்டு.

எது வணிக வெற்றி பெற்றதோ, எது அனைவருக்கும்
பிடித்திருக்கிறதோ, எது பெரும்புகழ் பெற்றிருக்கிறதோ
அதற்கு எந்த அறிவுமதிப்பும், கலைமதிப்பும் இருக்க
வாய்ப்பில்லை.

ஏனென்றால் அது சராசரியானது. சராசரிகளை முன்னால் கண்டு
உருவாக்கப்பட்டது.
பொதுவான உணர்ச்சிகள், பொதுவான அறிவுத்தரம்
ஆகியவற்றைக் கொண்டது.

கலையும் சரி, மெய்யான அறிவும் சரி அரிதானவை.
ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு ஏற்ப தேடிச்சென்று
கண்டடைய வேண்டியவை. அவை நம் ரசனைக்கும்
அறிவுத்திறனுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டவையாக இருக்காது.

நம் அறிவுத்தரத்தையும் நம் ரசனையையும்
மேம்படுத்திக்கொண்டு, நம் கவனத்தையும் உழைப்பையும்
அளித்து நாம் சென்றடைய வேண்டியவையாகவே இருக்கும்.

பிறிதொன்றிலாத தனித்தன்மையே
மெய்யான அறிவுக்கும் கலைக்கும் முதற்தகுதி.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொதுரசனை –
பொதுப்புரிதல் சார்ந்த ஆக்கங்கள் தொழில்நுட்பரீதியாக
மேம்பட்டவையாக இருக்கும்.
நூல்களோ சினிமாவோ தொலைத்தொடரோ, அவை
இந்தியச்சூழலில் நமக்கு சற்று அறைகூவலை விடுப்பதாகவும்
இருக்கும். நமக்கு அவர்களை அறிந்து கொள்வதற்கான
வேட்கை மிகுதி.

ஏனென்றால் அவர்கள் நம்மை ஆள்பவர்கள்.
அதை நம் ஆழ்மனம் அறியும். அடிமை எப்போதுமே
ஆண்டையை அகத்தால் பின்தொடர்வான். அதோடு நாம் ஒரு
சிறு சூழலில் அடைபட்டவர்கள். உலகை அறியும்
துடிப்பு நம்மில் எழும்போது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே
உலகமாக நம் முன் காட்டப்படுகிறது.

ஆகவே நாம் அவர்களின் வணிகவெற்றிபெற்ற, புகழ்பெற்ற,
பொதுவான நூல்களையும் சினிமாக்களையும் பெருவிழைவுடன்
ஏற்கிறோம்.

உழைப்பை அளித்து புரிந்துகொள்ள முயல்கிறோம்.அதை
அறிவுச்செயல்பாடு என்றும் கலைச்செயல்பாடு என்றும்
எண்ணிக்கொள்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வாறு சில மேற்கத்திய
வணிகப்படைப்புகள், பொதுரசனை ஆக்கங்கள் இங்கே
அறிவுத்தளத்தில் கொண்டாடப்படுகின்றன. நான் அவ்வாறு
குறைந்தது நான்கு அலைகள் வந்துசென்றதை இதற்குள்
கண்டடைகிறேன். இது ஒரு பின்தங்கிய நாட்டில்
வாழ்பவர்களின் அசட்டுத்தனம் மட்டுமே

நாம் ஐரோப்பாவை, அமெரிக்காவைக் கவனித்தால்கூட
அங்கிருக்கும் அறிவுச்செயல்பாட்டை, கலைச்செயல்பாட்டை
மட்டுமே கருத்தில்கொள்ள வேண்டும். அவை அங்கேயே கூட
சிறுபான்மையினருக்குள் புழங்குபவையே.

அங்குள்ள கலைப்படங்கள், அங்குள்ள தரமான இலக்கியம்,
அங்குள்ள அறிவுச் செயல்பாடுகள் அவையே நாம் அறிய
வேண்டியவை. அவர்கள் உலகுக்காகச் சமைக்கும்
கல்யாணச் சமையல்கள் அல்ல.

சென்ற தலைமுறைவரை தமிழ் அறிவியக்கம்
அப்படித்தான் இருந்தது.

பொழுது போகாமல் படம்பார்ப்பவர்கள், படிப்பவர்கள்
அதில் விழுந்து கிடப்பதில் பிரச்சினை இல்லை. அவர்கள்
வேறு எதையாவது செய்து தொலைக்காமல் இருக்கும் வரை
நல்லதும்கூட.

ஆனால் அறிவியக்கத்திலும் கலையிலும் ஈடுபடுபவர்கள்,
அதில் எதையாவது இயற்ற நினைப்பவர்கள்
அந்த பொதுப்போக்கு எனும் சருகுப்புயலில் சிக்கிக்கொண்டால்
இழப்புதான்.

ஆகவேதான் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக
இலக்கிய அறிமுக நிகழ்ச்சிகளை, இந்த இணையதளம் போன்ற
ஊடகங்களை நடத்தவேண்டியிருக்கிறது.

இன்றுகூட இந்த இணையதளம் உட்பட
அனைத்துமே நன்கொடைகளால்
தான் நிகழ்கின்றன – இயல்பான மக்கள் ஆதரவு,
வணிகவாய்ப்பு இல்லை என்பதை மறக்கவேண்டாம்.

உங்கள் வீடிருக்கும் பகுதியை, உங்கள் அலுவலகத்தை,
உங்கள் கல்விநிலையத்தை சுற்றிப்பாருங்கள். குறைந்தபட்ச
அறிவியக்க ஈடுபாடு உடையவர், மிக எளிமையான
அளவிலேனும் புதியவற்றை தெரிந்துகொள்ள முயல்பவர் எவர்?
ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவர். அப்படி இருக்க
அமேஸானில் அல்லது முகநூலில் அல்லது தொலைக்காட்சியில்
மட்டும் எப்படி அறிவியக்கமும்
இலக்கியமும் திகழமுடியும்?

மாற்றம் தொடர்ச்சியான முயற்சிகள் வழியாக உருவாகும்
பண்பாட்டுப் பரிணாமத்தால் மட்டுமே நிகழும். அதற்கு
பொருளியல், கல்விச்சூழல் போன்ற சில புறக்காரணிகளின்
உதவியும் தேவை. எதிர்காலத்தில் வளர்ச்சி நிகழும்
என நம்புவோம்.

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அமேசான் கிண்டிலில் மனுஷ்யபுத்திரன் போன்றோர் போடும் குப்பை ….!!!

 1. கிரி சொல்கிறார்:

  சார் மனுஷ்யபுத்திரன் அவர்கள் மீது எனக்கு எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாது. எனவே, அதைப் பற்றிக் கூற என்னிடம் ஒன்றுமில்லை.

  ஜெயமோகன் கூறி இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இவர், இவரைப்போன்றவர்கள் எழுதுவது தான் எழுத்து மற்றவை குப்பை என்ற எண்ணத்தில் இருப்பவர்.

  ஜெயமோகன் எப்படி எழுதுவார் என்பது நான் கூறி தெரியவேண்டியதில்லை. மிகச்சிறந்த எழுத்தாளர், இன்றும் சலிக்காமல் தொடர்ந்து எழுதி வருகிறார்.

  ஆனால், இவர் கூறியது போல Kindle ல் 99% குப்பைகள் மட்டுமே நிறைந்து இருக்கவில்லை. ஏராளமான நல்ல புத்தகங்கள் உள்ளன.

  நான் கடந்த ஒரு மாதமாக (தான்) படித்து வருகிறேன். ஏராளமான வகையான புத்தகங்களைப் படிக்க முடிகிறது. ஒரு புத்தகம் சலிப்பாக இருந்தால், வேறு புத்தகத்துக்கு உடனடியாக மாற முடிகிறது.

  ஒரே வகையான புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்க வேண்டிவயதில்லை.

  ஜெயமோகன் சாரு போன்றவர்கள் வேறு உலகத்தில் வாழ்பவர்கள்.

  தங்களை எழுத்துக்கு ராஜாவாகக் கற்பனை செய்து கொள்வதும், மற்றவர்கள் எழுதுவது குப்பை என்ற மன நிலையிலும் இருப்பதால் தான் பெரியளவில் உயரம் செல்ல முடியாமல், புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

  எவ்வளவோ பேர் இன்னும் மிகச்சிறந்த எழுத்தை வழங்கி வருகிறார்கள்.

  பொழுதுப் போக்கு எழுத்துக்கு எப்போதுமே வாசகர்கள் அதிகம் இருப்பார்கள், அவை தவிர்க்க முடியாது. இது எதார்த்தம்.

  கடந்த வாரம் ஒரு ஜெயமோகன் புத்தகம் படித்தேன், என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை.

  இவர் ஆபாசம் தான் நிறைந்து இருக்கிறது என்கிறார். இவருடைய இந்த நாவலிலேயே ஒரு பெண் சிறுநீர் கழிப்பது பற்றியும் அது பற்றிச் சில வர்ணனைகளும் வருகிறது.

  இவருக்கு இது ஆபாசமாகவோ அருவறுப்பாகவோ இல்லாமல் இருக்கலாம். இது தான் இலக்கியம் என்று கூறலாம். எனக்கு அப்படியில்லை.

  ஆபாசம் என்பதை எவரும் வரையறுக்க முடியாது. எனக்கு ஆபாசமா தெரிவது இன்னொருவருக்கு இயல்பாக இருக்கலாம். இவர் போன்ற எழுத்தாளர்கள் என்ன எழுதினாலும் அது இலக்கியம் மற்றவர்கள் எழுதினால் ஆபாசம்.

  சாரு ‘தேகம்’ புத்தகம் படித்துப் பாருங்க .. அதைப் படித்து எனக்கு வாந்தி வராமல் இருந்தது வியப்பு தான். இது தான் இலக்கியம் என்கிறார்கள். இரண்டு நாள் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை.

  நானே பல நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளேன் ஆனால், அதற்குக் கிடைக்கும் வாசகர்கள் வருகையைவிடப் பொழுதுபோக்கு கட்டுரைகளுக்குத் தான் வரவேற்பு உள்ளது.

  இது இயல்பு. இருப்பினும் நான் இன்னும் தொடர்வதற்கு படிப்பவர்கள் ஒரு முக்கியக் காரணம்.

  எனவே, நம்முடைய தரத்தையும் குறைத்துக் கொள்ளாமல் அதே சமயம் படிப்பவர்கள் விரும்பும்படியும் நம் எழுத்தை மாற்றிக்கொள்வதே சிறந்தது. படிப்பவர்களைக் குறை கூறுவது தவறு.

  பிகில் வசூலிக்கும் அதே இடத்தில் தான் கைதியும், அசுரனும் வெற்றி பெறுகிறது. பிரச்னை மக்கள் இல்லை, அதைக் கொடுப்பவர்களிடம்.

  ஒத்தை செருப்பு போல ஒரு படத்தை எடுத்துட்டு ஜெயமோகன் சாரு மாதிரி புலம்புவதில் அர்த்தமில்லை. நான் உலகப்படம் எடுக்கிறேன் ஆனால், மக்கள் ரசிக்கவில்லை என்று கூறுவது அரைவேக்காட்டுத்தனம்.

  தற்போது படிப்பவர்களைவிடப் பார்ப்பவர்கள் அதிகம் ஆகி விட்டார்கள். காலம் மாறுகிறது.

  எனவே, காலத்துக்கு ஏற்ப நம் எழுத்திலும் தரத்தை இழக்காமல் மாற்றம் கொண்டு வர வேண்டும். நான் மாறவே மாட்டேன் ஆனால், மக்கள் அதே ஆதரவை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

  முடிவாக, இவர் கூறுவது போல அமேசான் குப்பையெல்லாம் கிடையாது, குப்பையும் உண்டு. நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே முக்கியம்.

  அதோடு இன்னும் பலருக்கு அமேசான் தெரியாததால் பல புத்தகங்கள் இங்கே வரவில்லை. இன்னும் ஐந்து வருடங்களில் அமேசான் மிகப்பெரிய களஞ்சியமாக இருக்கும்.

  எதிர்காலம் இனி அமேசான் போன்ற தளங்கள் தான். இவர்கள் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.

  இவர்களும் ஒரு காலத்தில் இங்கே வரத்தான் போகிறார்கள். வேறு வழியில்லை. இது நடக்கும்.

  அப்படி வரவில்லை என்றால், இவர்களே எழுதி இவர்களே படித்துக்கொள்ள வேண்டியது தான்.

  • புதியவன் சொல்கிறார்:

   கிரி… ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. என் பின்னூட்டத்துக்கு இங்கு வேலையில்லை. நீங்க ரொம்ப சரியா அசெஸ் பண்ணியிருக்கீங்க. பாராட்டுகள்.

   (என் பின்னூட்டம் என்பதால்) – நல்லவேளை இந்த அமேசான் நிபந்தனைகள் கருணாநிதி காலத்துல இல்லை. இருந்திருந்தால், கருணாநிதி திருக்குறள் உரைக்கு (குப்பைக்கு) 20 லட்சம், 30 லட்சம்பேரை வாங்க வைத்து, திருக்குறளை வாங்குகிறவர்கள் 100 பேர்தான் என்பதால், திருக்குறள் மோசமான புத்தகம், கருணாநிதி உரை மிகச் சிறந்த புத்தகம் என்ற நிலைமை வந்திருக்கும். நல்லவேளை. கடவுள் காப்பாற்றினார்.

 2. கிரி சொல்கிறார்:

  சார் இதையெல்லாம் சொல்லிட்டு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் 🙂

  அமேசான் கொடுத்துள்ள நிபந்தனைகளில் எனக்கு உடன்பாடில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கொன்னுட்டீங்க கிரி.

   நல்ல வேளை – உங்கள் இரண்டு பின்னூட்டத்தையும்
   சேர்த்தே ஒரே சமயத்தில் படித்தேன்..

   ஏனெனில், என்னுடைய இந்த இடுகைக்கான
   மூல காரணமே, நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுக்க
   அமேசான் தந்திருக்கும் நிபந்தனைகள் தான்.

   அந்த நிபந்தனைகள் தான் எனக்கும் எரிச்சலூட்டியது.
   பணபலம் உள்ளவர், வலுவுள்ளவர், கட்சிக்காரர்கள்
   ஆகியோர், தீவிர முயற்சியில் ஈடுபட்டு – தங்களிடமுள்ள
   source -களை பயன்படுத்தி –
   உண்மையாகவே நன்றாக எழுதக்கூடிய மற்ற
   எழுத்தாளர்களை தளர்வடையச் செய்து விடுவார்கள்.

   அமேசான், எழுத்தாளர்களுக்கு பரிசளித்து,
   அதிகம் பேரை எழுதத் தூண்ட விரும்பினால் –
   அதிகம் விற்பனையாகும் நூலுக்கு / அதை எழுதியவருக்கு
   பரிசு என்று அறிவிக்கலாம்.

   அதிகம் விற்பனையாகும் நூலாசிரியர் தான்
   சிறந்த எழுத்தாளர் என்று சொல்வது தவறு.

   மற்றபடி 100% அப்படியே இல்லாவிட்டாலும்,
   பொதுவாக நீங்கள் சொல்வது தான்
   எனது கருத்தும் கூட.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Vic சொல்கிறார்:

  கிரி உங்கள் எழுத்தை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டே வருகிறீர்கள் வாழ்த்துக்கள்

 4. புவியரசு சொல்கிறார்:

  அமேசான், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது
  தவறில்லை; ஆனால், அதிகம் விற்கும் புத்தகங்கள்
  தான் பெஸ்ட், அதன் ஆசிரியர் தான் மிகச்சிறந்த
  ஆசிரியர் என்று கூறுவது தான் இங்கே
  பிரச்சினைக்கு வழி வகுக்கிறது.

  மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் கீழ்த்தரமான
  உத்திகள் எல்லாம் உள்ளே வந்து விடுகின்றன.

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கிரி சரியாக எழுதி உள்ளார் – இப்ப சில கேள்விகள்

  கிண்டில் எவ்வளவு பேரிடம் இருக்கிறது ?
  எத்தனை பேர் தமிழில் படிக்கிறார்கள் ?

  ஸ்மார்ட்போனில் கிண்டில் ஆப் டவுன்லோட் செய்து படிக்கலாம் .

  இதில் எதுவும் சும்மா கிடைக்காது .

  அப்புறம் கிண்டில் படிக்கிறவர்கள் தி மு க உறுப்பினர்களா /
  இல்லை தினமும் முரசொலி படிப்பவர்களா ?

  பிரச்சாரம் செய்து பெரிய ஆள் ஆக்குவது குமுதம் ,
  விகடன் செய்யும் வேலை .

  கஞ்சா விற்றவரை ஆன்மீக குருவாக மாற்றி விடுவார்கள் .

  ஜெ மோ ,சாரு போன்றவர்கள் அப்படி பிரபலம் ஆனவர்கள்தான் .

  மனுஷ்யபுத்திரன் ஜெ மோ , சாரு காட்டிலும் மார்க்கெட்டிங் பண்ணுவாரா ?

  கிண்டில் தமிழ் புத்தகங்கள் லிஸ்ட் பார்த்தேன்
  அதில் ஸ்ரீலக்ஷ்மி SriLakshmi என்றவர்தான் டாப் !
  இவர் நூல்கள் யாராவது படித்தது உண்டா ?

  தமிழில் அதிகம் விற்ற நூல் ஆசிரியர் Dr மு வரதராசன் !
  அவர் எழுதிய திருக்குறள் உரை அறுபது ஆண்டுகளுக்கும்
  மேலும் விற்பனை ஆகிறது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.