BBC செய்தி நிறுவனம் தரும் மதிப்பீடு …. பணமதிப்பிழப்பு – 3 ஆண்டுகளில் நிலைமை…!!!


500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடந்த நிலையில்,
இது குறித்து, பிபிசி செய்தி நிறுவனம் ஒரு மதிப்பீட்டை
வெளியிட்டுள்ளது…

நண்பர்களின் கவனத்திற்காக அது கீழே –

https://www.bbc.com/tamil/india-50333832

.
‘நரேந்திர மோதி அறிவித்த பணமதிப்பிழப்பால்
சரிந்த வருமானம் இன்னும் சரியாகவில்லை’:
சிறு வியாபாரிகள் –

பிரமிளா கிருஷ்ணன்
பிபிசி தமிழ்

(இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் பணமதிப்பு நீக்கம்
அறிவிக்கப்பட்டு இன்று மூன்றாம் ஆண்டு நிறைவடைவதை
ஒட்டி வெளியிடப்படும் செய்திக் கட்டுரை.)

“2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்ட
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சரிந்த வருமானம்,
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுகூட சரியாகவில்லை. நடுத்தர
வசதிகொண்ட குடும்பமாக நான் மாற 50 ஆண்டுகள்
உழைத்தேன்.

என் வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் இந்த நாட்களில்
மீண்டும் ஏழ்மை நிலைக்கு போய்விடுவேனோ என அச்சம்
ஏற்பட்டுள்ளது.”

பெருங்குடி பகுதியில் மளிகை கடை நடத்தும் 67 வயது
சண்முகம் எத்திராஜனின் நம்பிக்கையற்ற குரல்தான் இது.
மளிகை கடையில் ஈட்டும் வருமானத்தில் தனது
குடும்பத்திற்கான செலவுகள் மட்டுமின்றி, ஏழை
குழந்தைகளுக்கு கல்வி உதவியும் செய்துவந்தார் சண்முகம்.

”இரண்டு மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.50,000
வீதம் கல்வி உதவி அளித்து வந்தேன். கடந்த இரண்டு
ஆண்டுகளாக ஒரு மாணவனுக்கு மட்டுமே என்னால் செலவு
செய்யமுடிகிறது. அதற்கு கூட என அத்தியாவசிய
செலவுகளை கட்டுப்படுத்தி சேர்த்த பணத்தில் அந்த
மாணவனை படிக்கவைக்கிறேன். நான்கு கோயில்களுக்கு
மாதம் ரூ.1,000 வீதம் கொடுத்துவந்தேன். தற்போது
இரண்டு கோயில்களுக்கு மட்டுமே தரமுடிகிறது.
என் சமூக சேவைகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளேன்,” என சோகத்தோடு
பேசுகிறார் சண்முகம்.

”வியாபாரிகளின் நம்பிக்கையை குலைத்துவிட்டது”

பரபரப்பான சென்னை நகரத்தில் அன்றாட வாழ்க்கைக்காக
உழைக்கும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு
வியாபாரிகளில் ஒருவர்தான் சண்முகம்.

”தினமும் ரூ.25,000 மதிப்புள்ள பொருட்களை விற்ற
இடத்தில் தற்போது வெறும் ரூ.10,000 மதிப்புள்ள
பொருட்களைத்தான் விற்கமுடிகிறது.

பணமதிப்பிழப்போடு, ஜிஎஸ்டி வரியும்
சேர்ந்துள்ளதால், எனக்கு கிடைக்கும் லாபம் பன்மடங்கு
குறைந்துவிட்டது. என் குடும்பசெலவுக்கு பணம் சேர்ப்பதே
சிக்கலாகிவிட்டது. யாருக்கும் உதவுவதாக வாக்கு
கொடுப்பதை நிறுத்திவிட்டேன்,” என்கிறார் சண்முகம்.

இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சண்முகம்
போன்ற சிறு,குறு வியாபாரிகள் பலரின் வாழ்க்கை
முற்றிலுமாக புரட்டி போட்டுவிட்டது என்பதில் வேறுகருத்து
இருக்க முடியாது என உறுதியாக கூறுகிறார் தமிழ்நாடு
வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.

படிப்பு இல்லாவிட்டாலும், அதிகமாக முதலீடு செய்ய
பணம் இல்லாவிட்டாலும் ஒரு மளிகை கடை நடத்தி
பிழைக்க முடியும் என இதுநாள் வரை பல ஏழை மக்கள்
நம்பியிருந்தார்கள். அந்த தன்னம்பிக்கையை
பணமதிப்பிழப்பு குலைத்துவிட்டது என்கிறார் விக்கிரமராஜா.

”அரசு வேலையை எதிர்பார்க்காமல், சொந்த காலில் நிற்க
போராடி வாழும் பல சிறு,குறு வியாபாரிகள் இந்த
பணமதிப்பிழப்பால் அவதிப்பட்டார்கள். அவர்கள் நஷ்டத்தில்
இருந்து மீளமுடியவில்லை.

ரொக்க பரிமாற்றத்தை முடக்கி, டிஜிட்டல் ரீதியாக செலவு
செய்யும் நிலையில் சாதாரண மக்கள் இல்லை. இந்த
அடிப்படை புரிதல் இல்லாமல், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை
திடீரென தடை செய்தார்கள்.

லட்சக் கணக்கான வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன்
வாங்கும் சூழல் ஏற்பட்டது. பணமதிப்பிழப்பில் இருந்து
மீள்வதற்கு முன்பே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.
டெபிட், கிரெடிட் கார்ட் உள்ளிட்ட டிஜிட்டல்
பரிவர்த்தனைகளில் இரண்டரை சதவீதம் வரை கமிஷன்
எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஒரு சிறு வியாபாரி விற்பனை செய்வதில் இரண்டு
முதல் ஐந்து சதவீதம்தான் லாபம் கிடைக்கும்,
அதனை டிஜிட்டல் பரிவர்த்தனையில் இழந்துவிட்டு
என்ன தொழில் செய்யமுடியும்,” என கேள்வி
எழுப்புகிறார் அவர்.

பணமதிப்பிழப்பால் சிறு,குறு வியாபாரத்திற்கு
என்ன தாக்கம் ஏற்பட்டது என அரசு சார்பாக அதிகாரபூர்வ
எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை

– என 2019ல் ஜூலை மாதம் மாநிலங்களவையில்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.

சிறு வியாபாரிகள் நட்டத்தில் இருந்து மீள்வது எப்போது?

சிறு, குறு வியாபாரிகள் சந்தித்த நஷ்டத்தில் இருந்து
மீள்வதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும், அவர்களின்
இழப்பை எந்த வகையில் சரிசெய்ய முடியும் என
பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

”சிறு வியாபாரிகள் நஷ்டத்தில் இருந்து மீள்வது சிரமம்.
எந்த காலக்கெடுவும் சொல்லமுடியாது. ஏனெனில்,
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் இரண்டு
மாதங்கள் கடுமையான வீழ்ச்சியை ஒட்டுமொத்த இந்திய
பொருளாதாரம் சந்தித்தது.

அந்த இரண்டு மாத காலம் சிறு வியாபாரிகள் வாங்கிய
கடன்களை அடைக்க அவர்களுக்கு எந்த உதவித்தொகையும்
கிடைக்கவில்லை.

அவர்கள் கடன் பெற்று வியாபாரம் செய்தார்கள். அதனை
அடைக்கும் முன்னர் ஜிஎஸ்டி வரி மீண்டும் வருமானத்தை
மோசமாக பாதித்துவிட்டது.

இந்த இரண்டு காரணங்களால், வாங்கிய கடனை உடனே
கட்டுவதா, தங்களது செலவுகளுக்கு பணத்தை சேர்ப்பதா
என சிக்கலான நிலையில் இருக்கிறார்கள்,” என்கிறார்
ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

”வங்கிகளில் கடன் வாங்குவதை விட பெரும்பாலான
சிறு வணிகர்கள் தினசரி வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம்
பணம் பெற்று தொழில் செய்வார்கள். பணமதிப்பிழப்பு
காலத்தில் வட்டியை கட்டமுடியாமல், மேலும் கடன்
வாங்கியிருப்பார்கள். இந்த சூழலில் இருந்து அவர்கள்
மீள்வது சிரமம்தான்,”என்கிறார் அவர்.

இந்திய அரசு ஜிஎஸ்டி கூட்டம் நடத்தி, வரிவிதிப்புகளை
குறைப்பது குறித்து கேட்டபோது, ”வரிவிலக்கு பெரிய
முதலாளிகளுக்கு, அதிலும் மளிகை போன்ற
வியாபாரங்களை மேலும் ஒரு தொழிலாக
செய்பவர்களுக்கு மட்டுமே உதவும் வகையில் உள்ளது.

சிறு வியாபாரிகள் ஒரு தொழிலை மட்டுமே நம்பி
வாழ்பவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும்
அளவுக்கு வரி இருந்ததால், கடை நடத்தி, லாபம்
ஈட்டமுடியாது,”என்கிறார் அவர்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் சிறு குறு
வியாபாரிகள் சந்தித்த பாதிப்பை சரிப்படுத்த அரசு என்ன
நடவடிக்கை எடுத்துள்ளது என அதிமுக அமைச்சர்
ஜெயகுமாரிடம் கேட்டோம்.

”40 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்பவர்களுக்கு
வரிவிலக்கு உள்ளது. சிறுகுறு வியாபாரிகள்
பெரும்பாலும் ரூ. 40 லட்சத்திற்கு கீழ் தொழில்
செய்பவர்களாக இருப்பார்கள். அதுமட்டுல்ல, ஜிஎஸ்டி
கூட்டம் நடைபெறும்போது ஒவ்வொரு பொருளுக்கும்
விதிக்கப்பட்ட வரிகளை குறிப்பிட்டு, வரி குறைப்புக்காக
பேசி, குறைத்துள்ளோம். சுயதொழில் செய்பவர்கள்,
எடுத்துக்காட்டாக, கிரைண்டர், பார்லர் நடத்துபவர்கள்,
பொறியியல் வேலை, உணவகம் போன்ற தொழிலில்
ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில்,
ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் பேசி
வரியை குறைத்துள்ளோம்,” என்றார் ஜெயக்குமார்.

தொழில் முனைவோர் மற்றும் சிறுவியாபாரிகளுக்கு
உள்ள பிரச்சனைகளை தீர்த்துவருவதாக கூறிய
அமைச்சர் 28 சதவீத வரி விதிக்கப்பட்ட பல
பொருட்களுக்கு வெறும் ஐந்து சதவீத வரியாக
குறைக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து
வரிகுறைப்புக்காக பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

—————————————————-

பின் குறிப்பு –

தனது மாபெரும் சாதனையொன்றின் 3-வது ஆண்டு
நிறைவின்போது, அரசு வாயே திறக்காமல்,
இதைப்பற்றி எந்த வித செய்தியும், கருத்தும்
வெளியிடாமல் இருப்பது –

எதனைக் குறிக்கிறது…???

.
——————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to BBC செய்தி நிறுவனம் தரும் மதிப்பீடு …. பணமதிப்பிழப்பு – 3 ஆண்டுகளில் நிலைமை…!!!

 1. Ramnath சொல்கிறார்:

  என்ன சார் நீங்க
  ஒரு கொடூரமான திட்டத்தை கொண்டு வந்து
  மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கியதற்காக
  மன்னிப்புக் கேட்கிறோம் என்று அரசு
  அறிவிப்பு வெளியிட வேண்டுமென்று
  எதிர்பார்க்கறீங்களா ?

 2. புதியவன் சொல்கிறார்:

  //ஒரு சிறு வியாபாரி விற்பனை செய்வதில் இரண்டு முதல் ஐந்து சதவீதம்தான் லாபம் கிடைக்கும், அதனை டிஜிட்டல் பரிவர்த்தனையில் இழந்துவிட்டு
  என்ன தொழில் செய்யமுடியும்,// – எனக்கும் இது ஆச்சர்யத்தைத் தருகிறது. நீங்க நிகர லாபத்தைச் சொல்றீங்க. பொதுவா அனேகமா எல்லாப் பொருட்களுக்கும் குறைந்தது 20 சதவிகித லாபம் கிடைக்கும் (established items like Milk etc.). நாங்க மளிகை வாங்கும்போது ஆன்லைன்ல நிகரமா 15% குறைவாகவும், நேரிடையாக டெலிவரி செய்பவர்களிடம் 5% குறைவாகவும் வாங்கறோம் (MRPயில்). ஆனா மளிகைக் கடைல (சிறுவியாபாரி) எம்.ஆர்.பி ரேட்தான் வாங்கறாங்க.

  ஜிஎஸ்டி அக்கவுண்டபிலிட்டியைக் கொண்டு வந்திருக்கு என்று நான் நம்புகிறேன். இதுனால சரியான டேக்ஸ் கட்டவேண்டியிருப்பதும் எரிச்சலா இருக்கலாம். மொபைல் பண பரிவர்த்தனைகளும் நமக்கு நல்லதுதான்.

  ஆனா பொருளாதாரத்தை இது பாதித்திருக்கிறது (டிமானிடைசேஷன்). அதனால் எந்த ஒரு நேரிடையான நன்மையும் (அல்லது மறைமுகமான நன்மையும்) கிடைத்த மாதிரி எனக்குத் தெரியலை. போதாக்குறைக்கு ஒரு புண்ணியவான், மீண்டும் 2000 நோட்டுக்களைச் செல்லாததாக ஆக்கணும்னு ஆலோசனை சொல்லியிருக்கார். மக்கள் ‘என்னவோ சுபிட்சம் வரப்போகுதுன்னு’ நினைத்துக்கொண்டு 6 மாதங்கள் கஷ்டப்பட்டதுதான் மிச்சம். பாருங்க… மோதி மீண்டும் அதிக பலத்தில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இது சொல்லும் சேதி என்ன என்றும் எனக்குக் குழப்பம்தான்.

  //மாபெரும் சாதனையொன்றின் 3-வது ஆண்டு நிறைவின்போது, அரசு வாயே திறக்காமல்,// – நண்பர்கள் மன்னிக்கணும். உதாரணத்தோடுதான் இதனைச் சொன்னால் புரியும். 20+ சட்டசபைத் தொகுதில தேர்தல் வந்தப்போ, உதயநிதியின் பிரச்சாரத்தினால் மக்கள் மனம் கவர்ந்து வாக்குகளை அள்ளி வீசுனாங்க. பாராளுமன்றத் தேர்தல்ல உதயநிதினாலதான் திமுகவுக்கு வாக்கு கிடைத்தது என்று ஸ்டாலின் சொல்லி உதயநிதியை இளைஞர் அணிச் செயலராக ஆக்கினார். இப்போ அவங்கள்ட இருந்த இரண்டு தொகுதிகளும் பணால் ஆன உடன், ‘இடைத்தேர்தலில் ஆளும் கட்சி’ என்று பஞ்சப்பாட்டு பாடறாங்க, உதயநிதி பேச்சே காணோம்..

  அதுமாதிரி, ஒரு திட்டம் சக்ஸஸாக ஆனால், அது யார் செய்திருந்தாலும் ‘என்னால்தான்’ என்று மோதி அவர்கள் சொல்லிக்கறார். அவருக்குச் சம்பந்தமில்லாததற்கும் தாந்தான் காரணம்னு தன்னை முன்னிலைப் படுத்திக்கறார். (சந்திராயன் முழுவதும் சக்ஸஸ்ஃபுல் ஆக ஆகியிருந்தால், தான் இஸ்ரோவுக்குச் சொன்ன ஐடியாதான் என்றும் சொல்லியிருப்பார்). இந்த டிமானிடைசேஷனைப் பற்றி பெருமையாச் சொல்லாததிலிருந்து எல்லோருக்கும் தெரியவில்லையா? இது ஒரு பணால் திட்டம் என்று. எந்தத் தேர்தல் அறிக்கையிலாவது இதனைப் பற்றிச் சொல்லியிருக்காங்களா? சொல்லி எதுக்கு மக்களுக்கு நினைவு படுத்தணும் என்றுதான் யோசிச்சிருப்பாங்க.

  ஆனா, நான் சந்திக்கும் மளிகைக் கடைக்காரர்கள் ஏமாற்றத்துடனும், வெறுப்புடனும் இருக்கிறார்கள். பிஸினெஸ் அவங்களுக்கு மிகவும் குறைந்துவிட்டது. இதுக்கு நான் பெரிய காரணமா நினைப்பது, ஆன்லைன் ஆர்டரிங் மற்றும் ஃப்ரீ டெலிவரி என்று இருப்பது (நான் நகரத்தில் இருக்கேன்). இன்னைக்கு ஆர்டர் பண்ணினால் (குறைந்தது 10% விலை குறைவு) நாளை காலையில் வீட்டில் வந்து கொடுக்கறாங்க (ஆன்லைன்ல). அதுவும் முக்கியமான காரணம்.

  • Raj சொல்கிறார்:

   For once you’re right, but still you can’t sleep without talking about DMK

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //இதுக்கு நான் பெரிய காரணமா நினைப்பது,
   ஆன்லைன் ஆர்டரிங் மற்றும் ஃப்ரீ டெலிவரி
   என்று இருப்பது (நான் நகரத்தில் இருக்கேன்).
   இன்னைக்கு ஆர்டர் பண்ணினால் (குறைந்தது
   10% விலை குறைவு) நாளை காலையில் வீட்டில்
   வந்து கொடுக்கறாங்க (ஆன்லைன்ல).
   அதுவும் முக்கியமான காரணம். //

   ஆன்லைன் ஆர்டரிங்’- ல் விலை குறைவாக
   இருப்பதற்கு காரணம் என்ன; அவர்களுக்கு
   இது எப்படி சாத்தியமாகிறது என்று கொஞ்சம்
   விளக்கமாகச் சொல்லுங்களேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. இந்த ஊபர், ஸ்விக்கி/ஸொமட்டோ/ஊபர் ஈட்ஸ் கான்சப்ட்தான் இதிலும். இந்த ஆன்லைன், ஸ்விக்கி… போன்றவர்கள் நேரடியாக மிடில் மளிகைக் கடைகளை தங்களுக்கு உறுப்பினராக்கராங்க. அவங்க பொருட்களை எவ்வளவு டிஸ்கவுண்ட்ல தங்களுக்குத் தருவாங்க என்று பேசிக்கறாங்க. அதைப் பொறுத்து, அவங்க மொபைல் ஆப் ல, பொருளின் படம், விலை, எவ்வளவு டிஸ்கவுண்ட் என்று போடறாங்க (கடை பேரை போடமாட்டாங்க. இந்த விஷயத்துல ஸ்விக்கி, ஸொமட்டோ போன்றவை கடை பேரைப் போட்டு டிஸ்கவுண்ட் % போடுவாங்க, ஆஃபர் கொடுப்பாங்க). பொருளின் தரத்துக்கு மட்டும் பொறுப்பு ஏத்துக்குவாங்க.

    ஆன்லைன் காரன், பொருளை வாங்கி வச்சு இன்வெண்டரில இன்வெஸ்ட் பண்ணவேண்டாம். கடைக்காரன் கொடுக்கும் %ல், சிறிய அளவு தனக்கு எடுத்துக்கொண்டோ இல்லை எடுத்துக்காமலோ அதனை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். மக்கள் இந்த புதிய முறைக்கு use ஆயிட்டாங்கன்னா, அப்போ ஒருவேளை டிஸ்கவுண்ட் % குறைந்துவிடும்.

    மளிகை கடைக்காரருக்கு 20-30% அனேகமா எல்லாப் பொருளிலும் லாபம் உண்டு. (பிளாஸ்டிக் ஐட்டங்களில், ஆக்சசரீசில் இன்னும் அதிக லாபம் 50%கூட). ஆனால் அவர், 3 லட்சத்துக்கு (அல்லது அதிகமாக) பொருளை வாங்கி தன் கடைல வச்சிருக்கணும். அதுக்குப் பேர், இன்வெண்டரி காஸ்ட். அந்தப் பணத்துக்கு வட்டி போகும். கடை வாடகை, ஆட் கூலி என்று செலவு இருக்கிறது. அதனால் கடைசியில் 6-10% அல்லது 15% லாபம் கிடைக்கும். இந்த ஆன்லைன் காரனுக்கு இந்த extra cost கிடையாது. ஒரு அப்ளிகேஷன், அதை maintain செய்ய ஒரு டீம், coordinate பண்ண ஒரு டீம். அவ்ளோதான். (சுலபமா புரிய இப்படி எழுதியிருக்கேன். நான் இந்த processகளை நன்கு அறிந்தவன். உணவில் இந்த மாதிரி ஆர்டர் செய்வதில் உள்ள உடல்நலச் சிக்கலும் தெரியும். அதை எழுதினால் பெரிதாகிவிடும்)

    வாடிக்கையாளருக்கு அதில் என்ன நன்மை? நிறைய டிஸ்கவுண்ட்ல கிடைக்குது. உதாரணமா, நான் dry grapes கிலோ 300 ரூபாய்க்கும் (பக்கத்து கடைல 400-450 ரூ) குறைவாக வாங்கினேன். பனீர் 65 ரூபாய்க்கு கிடைக்கும் (அருகில் உள்ள கடைகள்ல 80-90 ரூபாய்)டிஸ்கவுண்ட் தூண்டில்கள் இருக்கும்.

    • புதியவன் சொல்கிறார்:

     //உணவில் இந்த மாதிரி ஆர்டர் செய்வதில் // – இதிலும் நிறைய டிஸ்கவுண்ட் உண்டு, ஆஃபர் உண்டு. ஆனால் இதில் கடைகளின் பெயரையும் லோகோவையும், உணவின் படங்களையும் கவர்ச்சியா போடுவாங்க. இதில் இணைந்துள்ள பல ரெஸ்டாரண்டுகள், நேர்ல பார்த்தா, நாம வாங்கிச் சாப்பிடமுடியாதபடி ரொம்ப தரம் குறைந்து இருக்கும். ஆப் ல பார்த்து (ஆஃபரையும் கவர்ச்சிப் படங்களையும் பார்த்து) ஆர்டர் செய்து சாப்பிடுவோம். ஆனால் சில சமயம் ஆட்டோல போகும்போது ஏதேனும் சிறிய உணவகம் வாசல்ல பெரிய ஸ்விக்கி, ஸொமட்டோ ஆட்கள் கியூ இருக்கும். அப்போ அந்த உணவகத்தைப் பார்த்தால், தரம் ரொம்ப சுமாரா இருப்பது தெரியவரும்.

     இந்தப் பிரச்சனை பெரும்பாலும் மளிகைப் பொருள் ஆன்லைன் ஆர்டரில் கிடையாது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     புதியவன்,

     உங்கள் தெளிவான, விளக்கமான
     பதிலுக்கு மிக்க நன்றி.

     இப்போது நீங்களே சொல்லுங்கள் –
     மளிகைக் கடைக்காரர்களின் குறை
     நியாயமானதா – இல்லையா … ?

     உங்களையே ஒரு மளிகைக்கடைக்காரராக
     பாவித்துக் கொண்டு சொல்லுங்கள்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. புவியரசு சொல்கிறார்:

  கி.பி.1350-ல் சுல்தான் முகமது பின் துக்ளக்
  எடுத்த முடிவிற்குப் பிறகு, அதாவது
  கிட்டத்தட்ட 668 ஆண்டுகளுக்குப் பிறகு,
  டெல்லியால் எடுக்கப்பட்ட, நிறைவேற்றப்பட்ட,
  மிகவும் புத்திசாலித்தனமான ஒரு திட்டம்
  அறிவிக்கப்பட்ட நாள் இது.
  ஆடுவோம்; பாடுவோம்; கொண்டாடுவோம்.

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார்… என் மனதில் படுவதைச் சொல்கிறேன்.
  பார்மசிக்கள், மளிகைக் கடைகள் இலவச டெலிவரி, 5% டிஸ்கவுன்ட் என ஆரம்பித்தது ஆன்லைன் போட்டியைச் சமாளிக்கத்தான். தெருமுனை ஆட்டோக்கார்ர்கள் பிசினெஸ் குறைந்தது அவங்க அடாவடி, மீட்டர் போட மாட்டேன், இஷ்டத்துக்கு கேட்பேன் என்று சொல்லியதால்தான் ஊபர் ஓலாவின் அசுர வளர்ச்சி. ஆட்டோக்கள் வந்ததால் குதிரை வண்டிக்கார்ர்கள் வேலை இழந்தார்கள். டைபிஸ்ட், ஷார்ட்ஹாண்ட் என்று வளர்ச்சியால் ஒதுக்கப்பட்டவர்கள் அனேகம். இதுமாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நாம நின்னோம்னா நமக்குக் குறையாத்தான் தெரியும். ஆனா காலம் இவர்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் மேலே போய்க்கொண்டிருக்கும்

  மாற்றத்துக்கு ஏற்றபடி அவங்க மாறணும், இல்லை நம்ம ஊர்க்காரன் என்று நாம அவங்களை ஆதரிக்கணும். மாற்றம் என்பது மானிடத் த்த்துவம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை
   என்பதை நானும் ஏற்கிறேன்.

   ஆனால் ஒரு விஷயத்தை இங்கே
   சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
   ஃப்ரென்சுப் புரட்சி, ரஷ்யப்புரட்சி,
   என்றெல்லாம் நாம் சரித்திர சம்பவங்களை
   5 நிமிடத்தில் படித்துவிட்டு கடந்து போய்
   விடுவோம்.

   ஆனால், கொஞ்சம் அந்த இடத்திலேயே நின்று,
   ஒருவேளை நாம் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தால்,
   எந்தெந்த விதங்களில் பாதிக்கப்பட்டிருப்போம்
   என்று யோசித்துப் பார்த்தால் –

   transitional period என்பது எப்போதுமே
   வேதனைகளையும், துக்கங்களையும்,
   சோக சம்பவங்களையும் உள்ளடக்கியதாகத்தான்
   இருந்திருக்கிறது. இவையெல்லாம் ஏற்கெனவே
   நடந்து முடிந்து விட்ட சம்பவங்கள். எனவே
   நாம் எளிதில் கடந்து போய் விடலாம்.

   ஆனால், தற்போது நடைபெறும் மாற்றங்கள்,
   நம் நிகழ்காலத்தில் நடக்கின்றன. இதில் ரத்தமும்,
   சதையுமாக -பாதிக்கப்பட்ட, படக்கூடிய
   நம் சக மனிதர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

   இந்த மாற்றங்கள் நமக்கு மகிழ்ச்சியை/லாபத்தை
   தருவதாக இருக்கலாம். ஆனால், இவற்றால்
   பாதிக்கப்படுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்
   என்பதை உணர்ந்து,

   மனிதாபிமானத்தோடு, அவர்களுக்குத் துணை நின்று,
   அவர்களையும் நம்மோடு எதிர்காலத்திற்கு
   அழைத்துச் சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பும்,
   கடமையும் நமக்கு இருக்கிறது.

   எனவே, மனதில் இரக்கத்தோடு, மனிதாபிமான
   கண்ணோட்டங்களுடன் இவற்றை அணுக வேண்டும்
   என்பது என் கருத்து.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.