ரஜினிகாந்த் என்னும் பிம்பம் …


கோவா’வில் நடைபெறவிருக்கும் இண்டர்நேஷனல்
ஃபிலிம் ஃபெஸ்டிவலில், இந்தியாவின் பிம்பமாக (icon)
திரு.ரஜினிகாந்த் அவர்களை முன்னிலைப்படுத்துவதாக
மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தின் முன்னணி நடிகர் இந்தியாவின் முகமாக
ஒரு உலகப்படவிழாவில் முன்னிலைப்படுத்தப்
படுகிறார் என்கிற செய்தி, தமிழக மக்களுக்கு நிச்சயம்
மகிழ்ச்சியூட்டும் ஒரு விஷயம்.

ஆனால், சில ஊடகங்கள் ( முக்கியமாக நியூஸ்-18 )
இதை கொச்சைப்படுத்தி விவாதங்கள் நடத்தி வருகின்றன.
பொதுவாக பாஜக-வை தமிழக மக்களுக்குப் பிடிக்கவில்லை
என்பது வேறு விஷயம். ரஜினிகாந்த் அவர்களுக்கு
மத்திய அரசின் சார்பாக, ஒரு கௌரவம்/அங்கீகாரம்
கிடைக்கிறது என்பது முற்றிலுமாக வேறு விஷயம்.

ஏதோ இது, ரஜினி-க்கு – (இதற்குண்டான தகுதி
இல்லா விட்டாலும்) பாஜகவுடன் உள்ள செல்வாக்கு,
நெருக்கம் காரணமாக,அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள
சலுகை என்கிற ரீதியில் இந்த மீடியாக்கள் இந்த
விஷயத்தை கொச்சைப்படுத்தி கேவலமான வர்த்தகத்தில்
ஈடுபட்டிருக்கின்றன.

எந்தவித சந்தேகமும் இல்லாமல், ரஜினிகாந்த் தனது
தனிப்பட்ட, சொந்த தகுதியில் – இந்த மரியாதைக்கு
உரியவர் தான் என்பதை பாரபட்சமற்று இந்த செய்தியை
அணுகுபவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையில் – அற்புதமான பண்புகளுடன்,
அனைவருக்கும் உதாரணமாக வாழும் ரஜினி –
40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த் திரையுலகில்
புகழைத் தக்கவைத்துக் கொண்டு, இன்றளவும் வசூலில்
தமிழகத்திலேயே முன்னணி நடிகராக இருக்கிறார்.

திரைப்படத்துறையிலும் சரி, வெளியே பொதுவாழ்விலும் சரி,
தமிழக மக்களிடம் இவருக்கு இருக்கும் மரியாதை –
இன்றைய தினம் திரைப்படத் துறையைச் சேர்ந்த
வேறு எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

பின் ஏன் இந்த எதிர்ப்பு…?
ஏன் இந்த திட்டமிட்ட அவமானப்படுத்தல்…?

ரஜினி அரசியலுக்கு வந்து விட்டால், தங்கள் எதிர்காலம்
என்ன ஆகுமோ என்கிற கவலையில் இருக்கும்
தமிழக அரசியல்வாதிகள் ஒரு பக்கம்….

பாஜக மீதுள்ள வெறுப்பு காரணமாக – ரஜினி பாஜகவில்
சேர்ந்து விட்டாலோ, அல்லது கூட்டணி வைத்துக்
கொண்டாலோ பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெற்று
விடுமோ என்கிற ஐயம் இன்னொரு பக்கம் –

ரஜினியைப் பற்றி பேசினால் – விளம்பரம் கிடைக்கிறது…
வியாபாரம் கூடுகிறது என்கிற வர்த்தக நோக்கம்
வேறொரு பக்கம்.

ரஜினி அரசியலுக்கு வந்த பின்,
ஒருவேளை அவர் பாஜகவில் இணைவது அல்லது
பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது
என்று முடிவெடுத்தால் –

இவர்கள் செய்கிற விமரிசனங்களில்,
காட்டுகிற எதிர்ப்புகளில் ஒரு நியாயம் இருக்கும்..

ஆனால், பாஜகவில் சேருவதாகவோ,
அல்லது அரசியலுக்கு வரும்போது பாஜகவுடன் கூட்டணி
வைப்பதாகவோ – ரஜினி இதுவரை எந்த இடத்திலும்
சொல்லாதபோது –

தமிழகம் முழுவதும் ஒன்று சேர்ந்து, இந்த அறிவிப்பை
மகிழ்ச்சியோடு வரவேற்பது தான், ரஜினி என்கிற –
தமிழக பொதுவாழ்வில் இருக்கிற ஒரு நல்ல மனிதருக்கு
கிடைக்கக்கூடிய நியாயமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் எப்படி நடந்துகொண்டாலும் –
அரசியல் சம்பந்தப்படாத தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவு
இதை உறுதி செய்யும்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின் சார்பாக
மனமார்ந்த வாழ்த்துகள்.

—————————————————————————

பின் குறிப்பு – நேற்றைய தினமலர் இதழில்
வெளிவந்த, மறைந்த நடிகர் நாகேஷ் எழுதிய – அவரது
சுயசரிதத்திலிருந்து – ரஜினி குறித்து அவர் கூறியிருக்கும்
சில வார்த்தைகளை இங்கே சொல்வது பொருத்தமாக
இருக்குமென்று நினைக்கிறேன்.

————–

அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு.
எனக்கும், மேஜர் சுந்தரராஜனுக்கும் ஒரு காட்சி.
எங்கள் உரையாடல் முடிகிறபோது, கேமரா எங்களை
விட்டு விலகி, படி ஏறி மாடிக்கு செல்ல, அங்கே,
ரஜினி நின்று கொண்டிருப்பார். அப்போது தான்,
நான் ரஜினியை முதல் முறையாக பார்த்தேன்.

என் கவனத்தை கவர்ந்தவை, அவரது அடர்ந்த
தலைமுடியும், சுறுசுறுப்பாக இருத்தலும், சட்டென்று
அடுத்தவர்கள் கவனத்தை கவர்கிற, வசீகர தோற்றமும்
தான்.

‘இது, யாரு புதுசா இருக்காரு…’ என்றார்,
மேஜர் சுந்தரராஜன்.

‘பாலு – கே.பாலசந்தர், புதுசா கண்டுபுடிச்சிட்டு
வந்திருக்காரு போல இருக்கு…’ என்றேன்.

அவரது முகத்தை பார்த்தபோது, உடனே எனக்கு
ஏற்பட்ட எண்ணம்… ‘இவர், வழக்கமான புதுமுகம்
கிடையாது. இவருக்குள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது.
இவருக்கு, சினிமாவில் பிரகாசமான எதிர்காலம்
இருக்கும்…’ என்பது தான்.

அவர் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்ததும், இயக்குனர்,
கே.பாலசந்தரிடம், ரஜினியிடம் நான் கவனித்த
விஷயத்தை பகிர்ந்து கொண்டேன்.
அவர் – ‘ஆமாம்… அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில்
நடிக்க வெச்சிருக்கேன்…’ என்றார்.

இயக்குனர், மணிரத்னத்தின், தளபதி படத்தில்,
மம்முட்டியின் உதவியாளர்களுள் ஒருவராக நான்
நடித்தேன். என்னிடம், 10 நாள், ‘கால்ஷீட்’ வாங்கியிருந்த
போதிலும், படத்தில் நான் நடித்த மூன்றே மூன்று
காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

தளபதி படம் வெளியான பின், ரஜினியை ஒருமுறை
சந்தித்தேன். அப்போது, ‘என், ‘கால்ஷீட்’டை வீணாக்கி
விட்டார், மணிரத்னம். இன்னும் சில காட்சிகளில்
என்னை பயன்படுத்தி இருக்கலாம்…’ என்ற,
ஆதங்கத்தை வெளிபடுத்தினேன்; பதில் ஏதும் சொல்லாமல்,
அவர் வெறுமனே புன்னகைத்தார்.

‘என்னடா இவர்… நான் சொன்னதை ஆதரித்து,
சில வார்த்தைகள் சொல்லலாம்… இல்லையெனில்,
‘படத்தில் இயக்குனர் எடுக்கும் முடிவு தான்
இறுதியானது’ என்று, மணிரத்னத்துக்கு ஆதரவாக
பேசியிருக்கலாம்.

இரண்டும் சொல்லாமல், அமைதியாக இருக்கிறாரே…’
என்று, லேசாக குழம்பினேன்.

பின்னர் தான், ரஜினியின் மவுனத்துக்கு அர்த்தம் புரிந்தது.
ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கிறபோது,
அங்கே, இல்லாத மூன்றாவது நபரை பற்றி குறை
சொல்லி பேசினால், அதை அவர் விரும்புவதில்லை.

மூன்றாம் மனிதரை பற்றி பேசுவதோ, விமர்சிப்பதோ
நாகரிகமில்லை என்பது, அவரது, ‘பாலிசி!’ இதுபற்றி
எனக்கு தெரிய வந்தபோது, அவர் மீதான மதிப்பு,
பல மடங்கானது.

.
——————————————————————————————————-

.
– 01/11/2019 அன்று வெளியான(latest )
விமரிசனம்-காவிரிமைந்தன் பேசு தளம் கீழே –

….

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ரஜினிகாந்த் என்னும் பிம்பம் …

 1. புவியரசு சொல்கிறார்:

  ரஜினியை அரசியல் கண்ணோட்டத்துடன்
  இழிவு படுத்துவது மிகவும் தவறு.
  ரஜினி ஒர் ஜென்டில்மேன். மரியாதைக்குரியவர்.
  ஊடகக்கார்ர்கள் மனசாட்சியோடு
  நடந்துகொள்ள வேண்டும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  ஊடகங்களின் விவாதத்தையோ அல்லது பேச்சுக்களையோ பொருட்படுத்தத் தேவையில்லை. அனேகமாக எல்லா ஊடகங்களும் விலைக்கு வாங்கப்பட்டவையே. யாராவது குறிப்பிட்ட மதம், கட்சி சார்ந்த அரசியல் தலைவர்களைப் பற்றி விவாதமே எழாது. அத்தகைய அரசியல் தலைவர்களிடம் தயங்காமல் கேள்வி எழுப்புபவர்களை நிர்வாகமே வீட்டுக்கு அனுப்பிவிடுகிறது. அதனால் இந்த ஊடகங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. அங்கே விவாதம் செய்கிறவர்களுக்கும் ஒரு விஷயமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தன் கட்சி சார்பாக எதை ஆதரிக்கணும், எதை எதிர்க்கணும் என்பது மட்டும்தான். நேர்மை, நீதி இதெல்லாம் இவங்க யார்கிட்டயும் லவலேசம் கிடையாது.

  ரஜினிகாந்த் வாழ்க்கை ஏணியில் உழைத்து மேலே வந்தவர். பொதுவெளியில் தைரியமாக தன் கருத்துக்களைச் சொல்பவர். அவரை பெரும்பாலும் அரசியல் வாதிகள் விமர்சிப்பதில்லை. ரஜினி என்ற தனி மனிதன், கட்சி ஆரம்பிக்கலாம், இன்னொரு கட்சியுடன் சேரலாம்.

  ரஜினி பாஜகவில் சேர்ந்தால் என்ன, இல்லை தனியான கட்சி ஆரம்பித்தால்தான் என்ன? அவருடைய ரசிகர்கள், ரஜினியின் முடிவு சரி என்றால் அவர் சொல்லும் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறார்கள். பொதுமக்களும் அவருடைய நிலைப்பாடு சரி என்றால், அவருக்கு வாக்களிக்கப்போறாங்க.

  இப்போ ஊடகத்துக்குக் கவலை எல்லாம், தாங்கள் விலைபோன திமுகவுக்கு யாரேனும் போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற அச்சம்தான்.

 3. Ramnath சொல்கிறார்:

  அதுவே தான் காரணம்.
  ரஜினியை அசிங்கப்படுத்துவர்களின்
  பின்னணியில் இருப்பது திமுக தான்.

 4. tamilmani சொல்கிறார்:

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்து கணிசமான இடங்களில் வென்ற
  திமுகவின் வோட்டு இடைவெளி வேலூர் பாராளுமன்ற தேர்தலில் மிகவும் குறைந்தது. விக்கிரவாண்டி , நாங்குநேரி தேர்தலில் அதிமுக வெற்றிவாகை சூடியதை திமுகவால்
  ஜீரணிக்க முடியவில்லை ரஜினிக்கு மத்திய அரசு விருது என்பதை
  திமுக சார்பு டிவி ஊடகங்கள் கொச்சை படுத்தி உளறுகின்றன. 2021 சட்ட சபை தங்களுக்கு என்று மனப்பால் குடிக்கும் திமுகவுக்கு ரஜினி என்றாலே அலர்ஜிதான் . தவிர அவர் பிஜேபியின் பல நல்ல திட்டங்களை ஆதரிக்கிறார், சில திட்டங்களை
  விமர்சிக்கிறார். அவரின் இமேஜ் , ரசிகர்கள் கூட்டம், அந்த நேரத்திற்கு அவருடன் இணைய விருக்கும் கட்சிகள் போன்ற காரணிகள் திமுகவின் ஆட்சிக்கனவை கலைக்க வல்லவை.

  • புதியவன் சொல்கிறார்:

   தமிழ்மணி – இது நடக்க சாத்தியக்கூறு மிகவும் குறைவு. ஒரு புறம் கொஞ்சம் தலைமை வலிவிழந்த அதிமுக. மறுபுறம் பொய் வாக்குறுதி, கவர்ச்சித் திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு மூலம் பலமுடன் இருக்கும் திமுக, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் நாம் தமிழர், கமல் கட்சி. இதில் ரஜினிக்கு எங்கு இடம் உள்ளது? அவர் அரசியலில் இறங்கி, 10-15% வாக்குகள் வாங்கினால், நான் மிக மிக ஆச்சர்யப்படுவேன், அதற்கு சாத்தியக்கூறு கிடையவே கிடையாது என்று நான் கணிக்கிறேன்.

   ரஜினி ஏன் இப்போது தமிழக மக்களின் சாய்ஸாக இருக்கணும்? அதற்கு என்ன அவசியம் உண்டு?

   ஆளும் அரசு அராஜகம் செய்து, இடையில் புயல்போல மக்களின் மனத்தில் உள்ளதை ரஜினி பேசி கலவரம் செய்தால் அவர் வெல்ல முடியும் (96ம் ஆண்டைப்போன்ற நிலை). இப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை. நான் இன்னமும், பாஜக அதிமுகவுடன் சேர்ந்தால் அது அதிமுகவுக்கு பெரும் இழப்பு ஆகி, திமுக+காங்கிரஸ்+ 160-180+ இடங்களில் வெல்லும். பாஜக அதிமுகவுடன் சேராமல் இருந்தால், அதிமுக + பாமக +… கட்சிகள் ஒற்றுமையுடன் களத்தில் நின்றால், 60+ சீட்டுகள் வரை கூட்டணிக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் 30 கிடைத்தாலே அதிகம்.

   பொதுமக்கள் ஸ்டாலினையோ திமுகவையோ ஒரு மனதாக விரும்பவில்லை. ஆனால் வேறு வாய்ப்புகள் தற்போது பொதுமக்களுக்கு இல்லை. இது தமிழகத்துக்கு கேடுகாலம்தான் என்று நினைக்கிறேன்.

   • Ramnath சொல்கிறார்:

    // ரஜினி ஏன் இப்போது தமிழக மக்களின் சாய்ஸாக இருக்கணும்? //

    இந்த வார்த்தைய ரிசர்வில் வைத்துக் கொள்ளுங்கள்.
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்போது,
    இதை நீங்கள் வாபஸ் வாங்க வேண்டியிருக்கும்.

    • புதியவன் சொல்கிறார்:

     நிச்சயம் நினைவில் வைத்திருப்பேன் ராம்னாத். அதிமுக யாரை முன்னிலைப்படுத்துகிறது, ஸ்டாலின் கூட்டணி என்ன என்பதையும் கவனிப்பேன். பாஜக, அதிமுகவுடன் சேரக்கூடாதே, அல்லது அப்படிச் சேர்ந்தாலும் அதற்கு 10 சீட்டுகளுக்கு மேல் கொடுத்துவிடக்கூடாதே என்றும் நினைப்பேன். அதிமுக+பாமக+தேதிமுக+பாஜக (இதை கழட்டிவிட வேண்டும் என்பது என் ஆசை) = 140 + 50 + 20 + 10 + என்றவாறு சீட்டு பிரிக்கப்படவேண்டும் என்று நினைப்பேன். ரஜினி கானல் நீர் என்பதில் எனக்கு இப்போதுவரை சந்தேகமே இல்லை. வாழ்க்கையில் இரண்டாவது முறை யாருக்கும் வாய்ப்பு வந்ததில்லை.

     • Ramnath சொல்கிறார்:

      //இரண்டாவது முறை யாருக்கும் வாய்ப்பு வந்ததில்லை.//

      புதியவன் சார். இந்திரா காந்தியை எப்படி
      மறக்கிறீர்கள் ?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // ரஜினி கானல் நீர் என்பதில் எனக்கு
      இப்போதுவரை சந்தேகமே இல்லை. //

      இது உங்கள் assessment -ஆ –
      அல்லது விருப்பமா…? அல்லது
      விருப்பமே assessment வடிவில்
      வெளிப்படுகிறதா…? 🙂 🙂

      ———————-

      விருப்பமாக இருந்தாலும்,
      assessment ஆக இருந்தாலும்,
      அது பொய்த்துப்போக வேண்டுமென்று
      மனமாற வாழ்த்துகிறேன்… 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      @ராம்னாத் – /இந்திரா காந்தியை எப்படி மறக்கிறீர்கள் ?// – உங்கள் உதாரணம் தவறு. அரசியல் வெற்றி தோல்விகள் சகஜம். (ஜெ.வுக்கு ஏற்பட்டதைப் போல).ஆனால் வாழ்க்கையில் ஒருவருக்கு அபூர்வமாகத்தான் லட்டு போன்ற வாய்ப்பு வரும். (உதாரணம்.. ஜெவுக்கு எம்ஜியார் மறைவில் வந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் பின்வாங்க நினைத்தபோதும் காலம், கருணாநிதி வடிவில் ஜெ.வை விஸ்வரூபம் கொள்ளச் செய்தது. மு.க.அழகிரி தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்கிவிட்டார்)

      கா.மை. சார்… இது என் விருப்பமில்லை. ஆனால் அரசியல் செய்யும் காலத்தை ரஜினி கடந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பாருங்க..விஜயகாந்த் வந்தபோது அவர் வயதென்ன. சில பல தவறுகள் செய்திருந்தாலும் அவர் நிலை இப்போது என்ன? ரஜினி 40-45 வயதில் வந்திருந்தால் தமிழகத்துக்கு ஏதேனும் நன்மை செய்திருக்கலாம். லெவல் ஹெடட் மனிதர், மனசாட்சிக்குப் பயந்து தன் கருத்தை தைரியமாகச் சொல்லுபவர். அவருடைய நல்ல குணங்கள் அனேகம். (முன்னமே படித்த உதாரணம்.. மூன்றாவது மனிதரைப் பற்றி அவர் எப்போதும் பேசுவதோ அல்லது அந்த காசிப்பில் கலந்துகொள்வதோ கிடையாது). ஆனால் நிச்சயம் வயது அவர் பக்கம் கிடையாது. அவரால் அரசியலில் இனி நுழைந்து வெற்றி பெற இயலாது என நினைக்கிறேன். காரணம் சொல்றேன்.

      1. 2021 தேர்தலின்போது அவருக்கு 70 வயசாயிருக்கும். அவருடைய கட்சி அடிப்படைக் கட்டமைப்பு வைத்திருக்காது. 6-10% வாக்குகள் வாங்கினாலே அது உலக அதிசயமாகும். சினிமா ரசிகர்கள் வாக்குகள் பிரிந்து கிடக்கின்றன.
      2. அடுத்த தேர்தல் 2024. அப்போது பாராளுமன்றத் தேர்தல். 6-10% வாக்கு தக்கவைப்பதே சாதனை.
      3. 2026 தேர்தலில் 75 வயதான, அரசியல் பதவிக்குப் புதிய ரஜினியால் என்ன செய்ய முடியும்? இளமையிலிருந்தே இருந்த குடிப்பழக்கமும் சிகரெட் பழக்கமும் அவர் உடல் நிலையை எந்த மாதிரி வைத்திருக்கும்? யோசிங்க.

      அன்புமணி நல்ல சாய்ஸ், ஆனால் அவர் ஜாதித் தலைவர் என்று பெயரெடுத்துவிட்டார். அது மக்கள் மனதிலிருந்து அகலாது. அவரை விட்டால் வேறு நல்ல இளைஞரை (50 வயதிற்குள்) தமிழக அரசியலில் பார்க்க முடியவில்லை.

      எனக்கு ஸ்டாலின் கும்பல், திமுக போன்றவை தமிழகத்திற்கு கேடான கட்சி, தலைமை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பணம் (லஞ்சம் என்று சொல்ல மனம் வரவில்லை) வாங்கிக்கொண்டு கூட்டணி வைக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக, நாட்டைப் பற்றிக் கவலைப்படாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் – இவர்களெல்லாம் திமுகவுக்கு ஆவர்த்தனம். யார் மாற்று என்று காலம் பதில் சொல்லும், மக்களின் வாக்குகள் மூலமாக.

 5. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  வணக்கம் சார், நீங்கள் தாரளமாக அவரை ஆதரிக்கலாம் தவறில்லை அதற்காக தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதெல்லாம் அதிகமாக இருக்கிறது, அவர் ஆகச்சிறந்த மனிதரகாவோ அல்லது சினிமா துறையில் சகலகல வல்லவராகவோ இருந்தால்/ இருப்பதாக கருதினால் அதன் மூலம் இந்த கூட்டு சமூகம் அடைந்த பயன் என்னவென்பதை மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டார்கள் இந்த பரிசு அவர் தேசிய கட்சியுடன் இருக்கும் நெருக்கத்திற்கும், மீனுக்கு இடப்படும் தூண்டில் போல் தான் என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என நினைக்கிறேன்

  • புதியவன் சொல்கிறார்:

   ஜி.எஸ்.ஆர் – இது வரை அரசு கெளரவிக்கும் யாரும், அரசியல் காரணங்களுக்கு மற்றும் ஆதாயங்களுக்காகவே கெளரவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் இதுதான் நிலைமை. சிவாஜியை கெளரவிக்காததற்கும் அரசியல்தான் காரணம், முரசொலி மாறனுக்கு பாராளுமன்றத்தில் படம் வைத்ததற்கும் அதுதான் காரணம், அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி பதவி கொடுத்ததற்கும் அதுதான் காரணம். பலர் அதற்கான தகுதிகளைக் கொண்டிருப்பர், இல்லையென்றால் வளர்த்துக்கொள்வார்கள்.

   காங்கிரஸுக்கு வலிய 10 பாராளுமன்றத் தொகுதிகள் கொடுத்ததற்கு என்ன காரணம்? மீனுக்கு இடப்படும் தூண்டில்தான்.

   கூட்டு சமூகம் யாரால் பலனடைந்திருக்கிறது? லிஸ்ட் எடுத்துப் பாருங்கள். அவங்க யாரையும் so called மக்கள் மதித்தே இருக்க மாட்டார்கள். கேவலமாகத் தோற்கடித்திருப்பார்கள்.

   //என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் // – இதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மக்கள்’ யார்?

   • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    இந்த ஜன நாயாக நாட்டில் பிறந்திருக்கிற நாம் தான் அந்த மக்கள் அதில் நான் உட்பட நீங்களும் அடக்கம், அரசியல் தெரிந்த மக்கள், தெரியாத மாக்கள் ஆகினும் அவர்களும் மக்களே! என்ன சார் இப்பவும் குழப்பம் வருதா?

 6. புவியரசு சொல்கிறார்:

  ஜிஎஸ்ஆர்

  // இந்த பரிசு அவர் தேசிய கட்சியுடன் இருக்கும் நெருக்கத்திற்கும்,
  மீனுக்கு இடப்படும் தூண்டில் போல் தான் என்பதை மக்கள்
  உணர்ந்தே இருக்கிறார்கள். //

  இருக்கட்டுமே. அப்படியே இருந்தாலும் கூட,
  இதற்கு நீங்கள் பாஜகவை வேண்டுமானால் விமரிசிக்கலாம்.
  ரஜினியை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் ?

  • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

   புவியரசு சார் உங்களுக்கு தெரியாததா, பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.

   • புவியரசு சொல்கிறார்:

    ஜிஎஸ்ஆர் ,

    தெரியும் தான். ஆனால் எனக்கென்னவோ,
    இது தான்
    நினைவிற்கு வருகிறது.

    “பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டி” 🙂

 7. NSM Shahul Hameed சொல்கிறார்:

  அரசியல் இல்லாவிட்டால், இந்தப் பாராட்டுக்கு ரஜினியின் தேர்வு வந்திருக்காது என்பது நிதர்சனம். மற்றபடி ரஜினிக்கு தகுதி நிச்சயம் இருக்கிறது. அவரைவிடவும் திரைத்துறை சார்பான இந்தத் தேர்வுக்கு இந்தியாவில் பலர் உள்ளனர் என்பதும் உண்மை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.