சுஜாதா’வின் ஸ்ரீரங்கத்துச் சிறுகதையொன்று….


நல்லது எது கிடைத்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ள வேண்டுமல்லவா…?

சுஜாதா அவர்களின் ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் –
திகட்டாதவை…ஏற்கெனவே படித்திருந்தாலும் கூட,
மீண்டும் படிக்கத் தூண்டுபவை…

அப்படிப்பட்ட கதையொன்று – கீழே ….

இறைவனைப் பற்றிய இந்த தத்துவத்தை,
இதைவிடச் சிறப்பாக, இதைவிட சுவாரஸ்யமாக –
சுஜாதாவை விட்டால், வேறு யாரால் சொல்ல முடியும்…?

அந்த “நடை”, அந்தக் “குறும்பு” –
மீண்டும் மீண்டும் ரசித்துப் படிக்கத் தூண்டுகிற எழுத்து…!!!

————————————————————————————-

*அரசு பகுத்தறிவு சங்கம்*
_*ஶ்ரீரங்கத்து கதைகள்.
– சுஜாதா*_

_உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள். – திருவாய்மொழி_

ஶ்ரீரங்கத்தில் அவ்வப்போது வைணவத்துக்கும்
பார்ப்பனியத்துக்கும் எதிர்ப்புக்குரல்கள் எழும். நாங்கள் –
கீழச்சித்திரை வீதிக்காரர்கள் – அதைக் கண்டுகொள்ளாமல்
தமாஷாகத்தான் எடுத்துக்கொள்வோம்…

சின்னக்கடைவீதி மூலையில் இருந்த கரீம்பாய் கடையில்
பழைய புத்தகங்கள் வாங்கச் அடிக்கடி செல்வேன்.
(வீரமாமுனிவரின் ‘சதுரகராதி’ பழைய பதிப்பு அங்கேதான்
கிடைத்தது). அப்போது பகுத்தறிவு கருத்துகள்
ஒலிபெருக்கியில் காதில் விழும். திராவிடக் கழகத்தைச்
சார்ந்த பண்ணனார் என்பவர் சித்திரை வீதியில் வீடு
வாங்கிக்கொண்டு பால் சப்ளை செய்தார். பால்
வியாபாரத்தையும் பார்ப்பன வெறுப்பையும் கலக்கவில்லை.
பார்ப்பன எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அடிக்கடி தலைமை
தாங்குவார். அவர் மனைவி பாட்டியுடன் தினம் ராத்திரி
நிலவொளியில் பேச வருவாள்.

“என்னடி… உன் புருஷன் பெருமாளே இல்லைங்கறானாமே?”

“அது ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கும்”

“பெருமாள் எப்டிரி, இலைலைன்னு சொல்லப்போகும்…
ஒருநா அவனைக் கேட்டுச் சொல்லேன்…
நீதான் கேளேண்டா.”

“பாட்டி அவாள்லாம் நாஸ்திகாள்” என்பேன்.

“சார்வாகன் மாதிரியா?”

“அதென்னவோ எனக்குத் தெரியாது. அவாள்லாம்
நாஸ்திகர்கள்”

“என்ன எழவோ… பால்ல தண்ணி குத்தாம
இருந்தா சரி கோதாவரி…”

“கோதையம்மா, நான் எப்பனாச்சியும் உனக்குப் பால்ல
தண்ணி விட்டுக் கொடுப்பனா… கள்ளிச்சொட்டு மாதிரி
கொடுக்கறனா, இல்லையா?”

“ஆமா.. ஊத்தறச்சேயே அந்தப் பக்கம் தெரியறது
கண்ணாடி மாதிரி” என்று பாட்டி சொல்லுவாள்.

பண்ணனார் மாசம் பால் பணம் வாங்க வரும்போது
சிலசமயம் “நாளைக்கு வாயேம்பா… இன்னும்
மணியாடர் வரலை.”

“நாளைக்கு திருச்சில பொதுக்கூட்டம் பாட்டியம்மா…
அவசரமே இல்லை… நீங்க எப்பவேணா குடுங்க” என்பதில்
எந்த பிராமண வெறுப்பும் இருக்காது.

“பெருமாள் இல்லைன்னு சொல்றியாமே நீ?”

“அதெல்லாம் மீட்டிங்ல பாட்டியம்மா. எளுதி
வெச்சதைப் படிக்கிறேன்.”

“அதான பாத்தேன் ..நீ ரொம்ப சாதுவாச்சே…
குடுமியை எல்லாம் கத்தரிப்பேன்னியாம்”

“யாரோ புரளி பண்ணிருக்காங்க பாட்டியம்மா. ஒனண்ணு
சொல்றேன் கேட்டுக்க… குடுமியை அறுப்பேங்கறது
உங்க பாப்பாரசாதிப் பையனே!”

அவர் குறிப்பிட்டது ‘அரசு பகுத்தறிவுப் பாசறை’யின்
தலைவன் ஆ.வி.அரசுவை. அவன் பெயர் ஆ.வரதராஜன்.
எனக்கு ரெண்டு மூன்று கிளாஸ் சீனியர். நேஷனலில்
பி.ஏ.படித்தான். திருச்சியில் தனியார் கம்பெனி ஒன்றில்
ஆடிட்டராக வேலையில் இருந்தான்…

என்னைப் பார்த்தால் எப்போதும் புன்னகைப்பான்.
“எப்போது சங்கத்தில் சேரப் போகிறாய்?” என்று கேட்ப்பான்.

ரங்கு கடைக்கு வருவான். அவன் பேச்சை உன்னிப்பாக
கேட்டுக் கொண்டிருப்போம். மார்க்ஸ், மாஜினி, ரஸ்ஸல்
என்றெல்லாம் பேசுவான். சார்வாகத் தத்துவத்தைப் பற்றியும்
பெளத்தத்தைப் பற்றியும் விஸ்தாரமாகப் பேசுவான்.

ரங்குதான் பளிச்சென்று கேட்டான்.

“வரது என்னதான் சொல்ல வரே?”

“என்னை வரதுன்னு கூப்பிடாதே…ஆ.வி.அரசு நானு”

“ஆ.வி.அரசோ…அது என்ன புடலங்காய் அரசோ…
நீ என்ன சொல்ல வரே…?பெருமாள் இல்லைன்னா?”

“பெருமாள் மட்டும் இல்லைடா…சிவன், பிரம்மா,
கிருஷ்ணன், ராமன் யாரும் இல்லை. கடவுள் இல்லை.
எல்லாமே மூடக் கருத்துகள். மக்கள் மனதில் பயத்தை
உண்டாக்கிக் காசு பிடுங்கற உத்திகள்”

“அப்ப எந்தப் பெருமாளைத்தான் இருக்கறதா ஒப்புத்துக்கறே?”

“டேய்! பெருமாளே இல்லைங்கறாண்டா சும்பா.”

“பெருமாளே இல்லையா?”என்றான் வியப்புடன்.

ரங்குவுக்கு அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

“இல்லை”

“பின்ன ஶ்ரீரங்கம் கோயில், ரங்கநாதர்,ஏகாந்த சேவை,
உற்சவம், தைத் தேர்,பங்குனி ரதம், குதிரை வாகனம்,
நித்தியப்படி,திருமஞ்சனம் எல்லாம் வேஸ்ட்டா?”

“வேஸ்ட் மட்டும் இல்லை… பித்தலாட்டம்.”

“என்னடா இப்படிச் சொல்றான்… வரது நீ என்ன வம்சம்
தெரியுமா? உங்கப்பா ஆராமுது ஐயங்கார் கேட்டா ரொம்ப
வருத்தப்படுவார்.”

“எங்கப்பா ஆராமுது ஐயங்கார்ங்கறதுக்காக நான் அவர்
கருத்தையெல்லாம் ஏத்துக்கனும்னு எங்க ரூலு?…

“ஏண்டா உனக்கு இப்படி புத்தி போறது. .?”

“நீங்கள்லாம் சிந்திக்கத் தெரியாதவங்க… சிந்திக்க
மறுக்கறவங்க… கோயிலே பணம் பிடிங்கிக்கோயில்.”

“வரது ஒரு தடவை பெருமாள் சேவிக்கப் போயிருக்கான்…
பெரிய க்யூ இருந்திருக்கு. மணியக்காரரும் நம்ம
உபயக்காரரும் தடுப்புச் சங்கிலியைக் கழட்டிட்டு
பத்துபேரை பெருமாள் சேவிக்க அழைச்சுண்டு
வந்திருக்கார்.அதான் பெருமாள் மேல கோவம்.”

“நாங்கள்லாம் முக்கால் மணியா காத்திண்டிருக்கோம்…
இவருக்கு என்ன சலுகை? பெருமாளுக்கு முன்னால
எல்லோரும் சமம்ங்கறா… இதைக்கூட தடுக்கமுடியலை
இவரால… இவர் என்ன பெருமாள்? கையாலாகாதவர்…

சந்நிதியைவிட்டு எறங்கி வந்து அந்த உபயக்காரரைச்
சவிட்டிருக்க வேண்டாமோ?…”

…ஒருமுறை அவன் தந்தை ஆராமுது ஐயங்கார்
ரங்கு கடைக்கு ஸ்டவ் திரி வாங்க வந்திருந்தார்.

“வரது இங்க வந்தானா ரங்கு?”

“வரது இல்லை… ஆ.வி.அரசு மாமா.”

“எதுக்குத்தான் இப்படி புத்தி போறதோ அவனுக்கு…
ஏம்பா, நீங்கல்லாம் சொல்லக்கூடாதோ?” என்றாரவர்.

“ஒரு கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோ மாமா?”

“நிச்சயம் ஆய்டுத்து… உனக்கு அதைச் சொல்லத்தான்
வந்தேன்”

“பொண்ணு யாரு?” நான் கேட்டதற்கு மாமா ஒன்றும்
சொல்லாமல் போனார்….

அவர் போனதும் “ரங்கு, அந்தப் பொண்ணு எப்படிரா?”

“ரொம்ப பக்திடா… நாலு வேளை கோயிலுக்குப் போகும்…
ஒரு புறப்பாட்டை விடாது… தினம் வீதிப் பிரதட்சணம்
பண்ணும்… பார்த்திருப்பியே…”

“ஓ…அந்தப் பொண்ணா!அதைப் போய் இந்த
நாஸ்திகனுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறாளா…
எப்படி ஒப்புத்துண்டா?”

“அதான் ஆராமுது சொன்னாரே… அவாக்கிட்ட
இதை மறைச்சிருக்கா.”

“அநியாயம்டா!”

“வரதுக்குச் சொத்து நிலபுலன்கள் எல்லாம் உண்டு.
நாஸ்திகனா இருந்தா என்ன ஆஸ்திகனாயிருந்த ஏன்னா?”

“என்ன பப்பு கிராப்பு திடீர்னு?”

“ரங்கு…” வரது போட்டோக்காரங்ககூட என்னைப்
பார்த்துட்டான்… போட்டோக் காரங்களைக் கூப்ட்டு
பாய்கடைலிருந்து பெரிசா காடாத்துணி வெட்டற கத்தரியை

எடுத்துண்டு வந்து இந்த க்ஷணம் கத்தரிப்பேன்னு துரத்தறான்….

தப்பிச்சேன்… பிழைச்சேன்னு மாடி ஏறிக் குதிச்சேன்…
பகுத்தறிவு தினமாம்… ஒரு குடுமியையாவது வெட்டியே
ஆகணுமாம்… நாந்தான் அம்ட்டேனா… ஆளைப் பாரு.”

“அப்றம் என்ன ஆச்சு?”

“அந்தப் பொண்ணு அருமையான பொண்ணுடா…
லோசனா வந்து எங்கம்மாகிட்ட மன்னிப்புக் கேட்டது.
அம்மா விடுன்னுட்டா”

“மன்னிச்சுக்கங்கோ மாமி… இனிமே இந்த மாதிரி நடக்காது”

“ஏண்டி, உன் ஆம்படையானுக்கு இப்படி புத்தி போறது?”

“என்ன பண்றது மாமி…கல்யாணத்தப்பகூட அவாத்தில
யாரும் இவர் இப்படிப்பட்டவர்னு சொல்லை…”

“ஏமாத்திக் கல்யாணம் பண்ணிட்டாளா! சக்கரத்தாழ்வாருக்கு

வேண்டிக்கோ… நாப்பத்தெட்டு நாளைக்கு எழுமிச்சம்பழ
மூடில நெய்விளக்கு ஏத்திண்டு போ… புத்தியைக் கொடுப்பார்.”

“பாக்கலாம் மாமி”

“மத்தபடி எப்படி?”

“மத்தபடி நன்னாத்தான் வெச்சிண்டிருக்கார். பராசக்தி,
ஓரிரவு, “வேலைக்காரி” சினிமாவுக்கு கூட்டிண்டு போனார்.
லாலா கடைல அல்வா வாங்கித்தரார். தவறாம
கனகாம்பரம், கதம்பம், மல்லிப்பூ,பிச்சிப்பூ எல்லாம்
வாங்கிண்டு வரார். அது என்னமோ குடுமியைக் கண்டா
மட்டும் ஆவேசம் வந்துடறது… கத்தரிக்கோலைத் தூக்கறார்.”

“எல்லாம் சரியா போய்டும்…
உங்காத்துக்காரர் என்ன நட்சத்திரம்?”

“உத்திரட்டாதி”

“இப்படித்தான் படுத்தும்… பங்குனிக்குள்ள சரியாய்டும்.”

“பங்குனி வரைக்குமா?…ஹூம்”

“ஏன்?”

“வரவர ஜாஸ்தியாயிண்டு வரது… அடுத்த தடவை
வடகலையார் மொட்டைப் பாட்டிகளுக் கெல்லாம்
பட்டுப்புடவை கட்டிக்கச் சொல்லப் போறாளாம்.
இது எங்க கொண்டு விடுமோன்னு பயமா இருக்கு”

“சக்கரத்தாழ்வார் கோபத்தை கிளப்பாம இருக்கச் சொல்லு..
பூமியே தாங்காது… பூசினாப்பல இருக்கே மூஞ்சி…
உண்டாயிருக்கியா?”

“ஆமாம் மாமி”

“எத்தனை மாசம்?”

“நாலு”

“இரண்யகசிபுவுக்குப் பிரகலாதன் பொறந்தாப்ல உனக்கு
ஒரு பிள்ளை பொறந்து அப்பனைத் திருத்தட்டும்…
ஒரு நடை ஆத்தில ம்ருத்யுஞ்சய ஹோமும்
சுதர்சன ஹோமமும் பண்ணிடு.”

“ஐயோ… என்னை பலிபோட்டுருவார்… அமாவாசைக்கு
அப்பாவுக்கு தோப்பனாருக்கு தர்ப்பணம் பண்ணிவெக்க
வாத்தியார் சுவாமிகளை எல்லாம் விரட்டறார்!”

லோசனா அவன் கொள்கைகளை மாற்ற முயன்றாலும்
அவன் தன் நம்பிக்கையில் தளராமலேயே இருந்தான்.
இடையில் லோசனா மறுபடி உண்டானாள்.

ஒரு நாள், முதல் குழந்தைக்கு ஒரு பெரிய சிக்கல்
ஏற்பட்டது. தடுப்பு ஊசி ஏதோ சரியாகப் போடவில்லையோ,
என்னவோ…

கக்குவான்இருமல் போல வந்தது. குழந்தை ஜுரம் வந்து
கையில் நிற்காமல் கிழிந்த நாராகப் படுத்திருந்தது.
ராத்திரியெல்லாம் டண் டண்ணென்று இருமியது.
தேவி டாக்கீஸ் அருகே பாலாஜி என்கிற குழந்தை டாக்டர்
இருந்தார். அவரிடம் காட்டியதில் ஒன்றும் சொல்ல
வில்லையாம். “உன் புருஷனுடன் வா” என்றாராம்.
இருவரும் அவரிடம் போயிருக்கிறார்கள். “மிஸ்டர்
வரதராஜன். குழந்தையை ஒரு வாரம் முன்னால் கொண்டு
வந்திருக்க வேண்டும்… இப்ப ரொம்ப லேட்…”

“வாட் டு மீன், டாக்டர்?”

“”நெஞ்சில் கபம் கட்டி இருக்கிறது. மூச்சு விடத் திணறுகிறது.

இன்ஜெக்ஷனும் மருந்தும் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை.
மெட்ராஸில் குழந்தைகளுக்கான பெரிய ஆஸ்பத்திரி
எழும்பூரில் இருக்கிறது. அதற்கு அழைத்துச்
செல்வது நல்லது.”

“இல்லைன்னா?”

“இதைவிட அப்பட்டமாக எச்சரிக்க என்னால் முடியாது.
இவ்லைன்னா குழந்தை பிழைக்காது… கிளம்பறதுக்கு
முன்னாடி ஒரு விசை காட்டிடுங்க குழந்தையை.”

இருவரும் பிரமித்துப்போய் மாட்டு வண்டியில் வீடு
திரும்பிபோது லோசனா பிழியப்பிழிய அழுதிருக்கிறாள்.
அழுதுமுடித்து “வாங்கோ”என்றாள்.

“எங்க…மெட்ராஸ்க்கு ராத்திரிதானே வண்டி?”

“அந்த சக்கரத்தாழ்வானை போய் கேட்கலாம்.”

“என்ன சொன்னே? ஆழ்வானா?”

“ஆமாம்.. நீங்க சொல்றது எல்லாம் உண்மை.
பெருமாளும் இல்லை… ஒரு சுக்கும் இல்லை.
நாப்பத்தெட்டு நாள் எலுமிச்சம் பழத்தில் வெளக்கேத்தி
ஊர்ல இருக்கற எல்லா சந்நிதியையும் சுத்தி எல்லா
சுலோகமும் சொல்லியும் என் குழந்தையை
காப்பாத்தலைன்னா என்ன தெய்வம் அது… வாங்கோ,
எனக்கு அவரிடம் கேட்டே ஆகனும்.. நீங்களும் கேளுங்கோ.”

“நான்தான் அப்பவே புடிச்சு அடிச்சுண்டேனே.. தெய்வமே

இல்லைன்னு…”

“அங்க இருக்கிற எல்லா விளக்கையும் உடைச்சு
நாசம் பண்ணி எறியணும்போல வருது…”

இருவரும் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு குழந்தையுடன்

போயிருக்கிறார்கள். அவள் படியருகில் குழந்தையை
வைத்துவிட்டு “பாரு… என் குழந்தையை! உன்னால்
காப்பாத்த முடியலை பாரு.. நீயே பாரு.. என்ன தெய்வம் நீ!”
என்று அழுதிருக்கிறாள்.

வரது அவளை அணைத்துக்கொண்டு “லோசனா,
வா போகலாம்… இதனால ஒரு பிரயோசனமும் இல்லை.

டுட்டிக்கோரின்ல மெட்ராஸ் போக டிக்கெட் ஏற்பாடு
பண்றேன்.”

கிளம்புவதற்குமுன் அதற்கான பலமும் தெம்பும்
குழந்தையிடம் இருக்கிறதா என்று பார்க்க டாக்டரிடம்
எடுத்துச் சென்றிருக்கிறார்கள் . அவர் பரிசோதித்துப்
பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கி “போக வேண்டிய
தேவையில்லை” என்றார்.

குழந்தை துங்குகிறதா, ப்ராணன் போய்விட்டதா என்று
தெரியாமல் சன்னமாக மூச்சு விட்டுக்கொண்டிரூந்து.

டாக்டர் இருவரையும் தனியாக அழைத்தார்.
“என்ன குடுத்தீங்க இதுக்கு?”

“புதுசா ஏதும் குடுக்கலை…”

“என்னவோ செய்திருக்கீங்க. சொல்லுங்கோ..”

“சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எடுத்துண்டு போய் படியில
வெச்சு ‘இன்ன மாதிரி செய்தது நியாமா, நியாமான்னு
இவகேட்டா… உணர்ச்சி வசப்பட்டுட்டா…
இதெல்லாம் தேவையில்லை ன்னு சொல்லிச்
சொல்லிப் பார்த்தேன். இவ கோபம் தணியலை.”

பாலாஜி டாக்டர் “குழந்தைக்கு ஜுரம் இறங்கி இருக்கு.
லங் கிளியரா இருக்கு. பல்ஸ் சீராய்டுத்து” என்றார்.

………….

நான் பெங்களூரில் பொறுப்பேதற்கு முன் ஒரு நடை
ஶ்ரீரங்கம் போயிருந்தபோது வழக்கம போல
ரங்கு கடைக்குப் போனேன். அங்கே கட்டுக் குடுமியும்
பன்னிரண்டு திருமண்ணுமாக ஒரு சுவாமி வீற்றிரூந்தார்.
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து “செளக்கியமா?”
என்றார்.

நான் பவ்யமாக “அடியேன் ரங்கராஜன்… சுவாமி
திருநாமம் என்னவோ?”

ரங்கு அட்டகாசமாக சிரித்து “டேய்…வரதுடா இது!”

“அட, வரதுவா…? எனன ஆச்சு உனக்கு? பகுத்தறிவு,
குடுமி, கழகம், எல்லாம்…”

“அதெல்லாம் ஞாபகப்படுத்தாதே. ரங்கு, ஶ்ரீபாஷ்யத்தில்
ஒரு சூத்ரத்துக்கு எம்பெருமானார் வியாக்கியானம் பாரு
நாப்பது பக்கம்.’

நான் அவனை வியப்புடன் பார்த்தேன்.
“வரது உன் நாஸ்திக வாதமெல்லாம்…”

“புறப்பாடாயிருக்கும்… அப்றம் சந்திக்கலாம்…
நாராயணா ஹரீ ஹரீ. லோச்சி வந்தா
ஆத்துச் சாவியைக் கொடு” என்று சைக்கிளை
எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் போனதும் லோசனா வந்தாள்.
“ரங்கு மாமா, இவர் வந்தாரே…”

“இப்பதான் போனான்… சாவி கொடுத்திருக்கான்.”

“எங்க போறதா சொன்னார்?”

“பெருமாள் புறப்பாட்டுக்கு!”

“இப்பெல்லாம் ஒரு புறப்பாடு,
திருமஞ்சனம் விடமட்டேங்கறார்.”

லோசனா இன்னமும் பூரிப்பாக, அழகாகத்தான் இருந்தாள்.

“பத்தாச்சி, மாமாக்கு அபிவாதயே சொல்லு…
மாமா பெரிய எழுத்தாளர்.”

அருகே குட்டி ராமானுஜர் போல இங்கர்சால் என்று
அழைக்கப்படவிருந்த பரத்வாஜன் நின்று கொண்டிருக்க,
அருகே மற்றொரு …

“பொண்ணு பேர் என்ன?”

“வைதேகி”என்றது சன்னமாக.

“வைதேகி எப்டி இருக்கே?”

வைதேகி மெஷின் போல ‘மாய்கயித் திங்கள் மதி
நியைந்தநன்னா’ சொல்லுவதற்குள் மூச்சு வாங்கியது.

“போறும்…”

“வரது எப்படி இப்படி மாறினான்? நீதான் மாத்தினியா
லோசனா?” ரங்கு கேட்டான்.

“இல்லை ரங்கு அண்ணா! சக்கரத்தாழ்வார்தான்!”
என்று ரங்குவைப் பார்த்து புன்னகைத்தாள்.

“குழந்தை டாக்டர் பாலாஜி குடுத்த மருந்தில
சாயங்காலத்துக்குள்ள சரியா போயிடும்னு சொன்னார்.
அவர்கிட்ட பேசி வெச்சுண்டு பெருசா நாடகமாடி
வரதுவை மனசை மாத்திட்டா ஆழ்வார்….
என்ன லோச்சி?” என்றான் ரங்கு.

“சொல்லாதீங்கோ அண்ணா, மாமா கதையா எழுதிட
போறார்” என்றாள்.

————————————————————
இந்த விளக்கமும் சுஜாதா கொடுத்தது தான் …!!!

———————-

*பாசுரம் – 1*

“உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்;_
_உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்;_

_உளன் என இலன் என இவை குணம் உடைமையில்;
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே…
_பெரியாழ்வார் திருமொழி,_

விளக்க உரை:

-இறைவன் உளன் என்றால் உள்ளவன் ஆவான்;
அப்பொழுது உருவத்தோடு இருக்கும் இப்பொருள்கள்
எல்லாம் அவனுடைய தூல சரீரமாகும்.

இறைவன் இலன் என்றாலும் உள்ளவனே யாவான்;
அப்பொழுது உருவம் இல்லாதனவாய் இருக்கும்
இப்பொருள்கள் எல்லாம் அவனுடைய சூட்சும சரீரமாகும்.
ஆதலால், உளன் என்றும் இலன் என்றும் கூறப்படும் இவற்றைக்

குணமாகவுடைமையின், உருவமும்
அருவமும் ஆன தூல சூக்குமப் பொருள்களை
யுடையவனாய் எங்கும் ஒழிவு இல்லாதவனாகிப்
பரந்து இருகின்றவனே ஆவான் என்பதாம்._

*பதவுரை:*

-உளன் எனில் – ஈச்வனுண்டென்று
(வைதிகர்கள் சொல்லுகிறாப்போலே) சொன்னாலும்

உளன் அலன் எனில் – ஈச்வரனில்லையென்று
(நாஸ்திகர்களின்படியே) சொன்னாலும்

உளன் – ஈச்வரனுண்டெ பதாகவே தேறும்;

அவன் உருவம் அவன் அருவம் –
அப்பெருமானுககு –
ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்.

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சுஜாதா’வின் ஸ்ரீரங்கத்துச் சிறுகதையொன்று….

 1. Prabhu Ram சொல்கிறார்:

  சுஜாதா…. சுஜாதா தான்.
  எவ்வளவு முறை படித்தாலும் அலுக்கவில்லை
  காரணம் அவரது எழுத்தின் ஸ்டைல் –
  தமிழை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இந்தப் பாசுர விளக்கத்தைத்தான் இரு நாட்கள் முன்பு படித்துக்கொண்டிருந்தேன், கேட்டுக்கொண்டிருந்தேன். ‘இது’ இல்லை என்று சொல்லும்போதே ‘இது’ இருக்கிற்து என்று பொருள்பட்டுவிடுகிறது.

  சுஜாதா மிகச் சரளமாக ரசனையான நடையில் எழுதியிருக்கிறார். வாத்தியார் வாத்தியார்தான் இந்த மாதிரி சப்ஜெக்ட்களில்.

  20களில் நாத்திகச் சிந்தனை வராதவர்களும் அரிது. 60களில் ஆத்திகச் சிந்தனை வராதவர்களும் அரிது.

  பகிர்வுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.