விமரிசனம் தளத்தில் ஒரு புதிய முயற்சி…


சிங்கப்பூரில் தீபாவளியை வரவேற்கும்
வண்ண விளக்குகள்…!!!

செய்திக்குள் போகும் முன்னர் முதலில் –

——————

நண்பர்கள் அனைவருக்கும்,
அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் –
எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

——————————————————————————-

இப்போது நமது புதிய முயற்சியைப் பற்றி –

கொஞ்ச நாட்களாகவே என் மனதிற்குள்ளாக
பல விதங்களிலும் யோசித்துக் கொண்டிருந்தேன்…

இத்தனை வயதில் நான் -பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,
அறிந்ததும், உணர்ந்ததும், அனுபவித்ததுமாக எத்தனை
எத்தனையோ விஷயங்கள்.. உள்ளம் நிறைய
நிரம்பிக்கிடக்கின்றன…

அந்தி வந்து விட்டது…
இரவு வர அதிக நாட்களாகாது.

அதற்கு முன்னதாக – என் அனுபவங்களை, சிந்தனைகளை –
இயன்றவரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அத்தனையும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்று
சொல்ல முடியாவிட்டாலும், ஒரு சதவீதம் –
ஒரே ஒரு சதவீதமாகவது அவசியம் மற்றவர்களுக்கும்
பயன்படும் என்று நினைக்கிறேன்.

நான் சொல்லப்போவது அறிவுரைகள் அல்ல.
அந்த யோக்கியதை எனக்கு கிடையாது.
என் அனுபவங்களை, சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள
மட்டுமே விரும்புகிறேன்.

எதை, எப்படிச் செய்ய வேண்டும்
என்று இல்லாவிட்டாலும்,
எதை, எப்படி, செய்யக்கூடாது என்றாவது
என் அனுபவங்களிலிருந்து, மற்றவர்கள் தெரிந்து கொள்ள
முடியுமென்று நினைக்கிறேன்…!!!

நான் சொல்ல விரும்புவது அனைத்தையும் எழுத்தில்
வடிக்க முடியவில்லை…விமரிசனம் வலைத்தளம்
அதற்கு போதுமானதாக இல்லை. அது நடைமுறை
சாத்தியமான விஷயமும் அல்ல. எனவே, சொல் வடிவில்
(audio) அவற்றை எடுத்துச் செல்லலாம் என்று நினைத்தேன்.

இந்த விமரிசனம் வலைத்தளம் வெளிவரும்
wordpress தளத்தில் – audio files -களை பதிவேற்ற
வழியில்லை.

youtube தளத்திலும் audio files-களை பதிவேற்ற
வழி இல்லை… அது video files -களை மட்டுமே
ஏற்றுக்கொள்கிறது.

இறுதியாக, youtube தளத்தில், இதே பெயரில்,
Vimarisanam-kavirimainthan Videos என்கிற தலைப்பில்,
நான் சொல்ல விரும்புவதை பதிவு செய்து வெளியிடலாம்
என்கிற உத்தேசத்திற்கு வந்திருக்கிறேன்.

என் கணிணி அறிவு பூஜ்ஜியத்திற்கு வெகு பக்கம் …!!!
எனவே, அங்கே இங்கே தேடித்தேடி, நண்பர்கள்
சிலரிடம் அதை, இதை – விளக்கம் கேட்டுக் கொண்டு,
தட்டுத்தடுமாறி, ஒரு வழியாக, எனக்கேற்ற –
ஒப்பேற்றும் வழிமுறை ஒன்றை அடைந்திருக்கிறேன்.

அதில் முதல் முயற்சியாக, ஒரு காணொளியை உருவாக்கி,
இங்கே கீழே பதிந்திருக்கிறேன். இதை இன்னும் சிறப்பாகச்
செய்ய நண்பர்கள் ஆலோசனை சொன்னால்,
(அதில் என்னால் இயன்றதை மட்டும்) முயற்சிக்கிறேன்.

இந்த காணொளி-பேச்சு தொடர்பாக – சில விஷயங்களை
இங்கு தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்….

1) காணொளியில் நான் நேரில் தோன்றுவது,
ஒரு விளம்பர முயற்சியாக கருதப்படக்கூடிய வாய்ப்பு
இருக்கிறது என்பதால் – நான் தோன்றுவதாக இல்லை….

என் தோற்றத்தை அங்கே காண முடியாது.
என் குரல் மட்டுமே ஒலிக்கும்.

பேசப்படும் பொருளுக்கேற்ப, ஒலியின் பின்னணியில்
படங்கள்/காட்சிகளை மட்டுமே பதிவது என்று முடிவு
செய்திருக்கிறேன்.

2) இந்த புதிய காணொளி தளத்தில் – தமிழிலக்கியம்,
புத்தகங்கள், வரலாறு, அனுபவங்கள், தத்துவ விசாரணை,
ஆன்மிகம், நாடகங்கள், திரைப்படங்கள், இசை, நிகழ்கால,
கடந்தகால சமுதாய பிரச்சினைகள், முந்தைய தலைமுறைகள்,
கடந்த காலங்கள், மாற்றங்கள் என்று பல தலைப்புகளிலும்
பேசலாம்.

ஆனால் – இந்த தளத்தில் நிச்சயமாக – அரசியல் –
பேசப்படாது…. முற்றிலுமாக தவிர்க்கப்படும்.
நான் இந்த தளத்தை நேர்மறையாக ( positive angle )
மட்டுமே முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

அரசியல் பேசினால் – எதிர்மறை கருத்துகளைத்
தவிர்க்க முடியாது… எனவே இங்கே அரசியல் வேண்டாம்
என்கிற முடிவு….( அரசியலுக்கு – வழக்கம்போல்
எழுத்து வடிவில் இருக்கவே இருக்கிறது விமரிசனம்
வலைத்தளம்…!!! )

3) இந்த காலத்தில், எதுவும் நீண்ட நேரம் பிடிப்பதாக
இருந்தால், பலரும் -அவற்றைக் கடந்து சென்று விடுகிறார்கள்
என்பதை உணர்கிறேன். இதற்கு யாரையும் குறை சொல்ல
முடியாது. வேகமான உலகம் இது. அவரவர்க்கு காத்திருக்கும்
அவரவர் கடமைகள்; தேவைகள்; ரசனைகள்;
இந்த கட்டுப்பாட்டையும் தாண்டி, கட்டிப்பிடித்து உட்கார
வைக்கும் அளவிற்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தாலொழிய
அவர்களை இதில் ஈடுபடுத்த முடியாது. பெரும்பாலும்
திரைப்படங்களால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்கும்,
முன்னேற்பாடுகள் செய்துகொண்டு உட்கார்ந்தால் தான் இயலும்.

எனவே, இந்த தளத்தில், முடிந்தவரை உரைப்பகுதிகள்
(எபிசோடுகள்..? ) ஒவ்வொன்றையும் 15 நிமிடங்களுக்குள்
முடித்துக் கொள்ள முயற்சிப்பேன். ஒருவேளை எடுத்துக்கொண்ட
தலைப்பு, அதற்குள் முடிவதாக இல்லையென்றால் –
அடுத்த பகுதியாக மற்றொரு நாள் அது தொடரும்…!

நண்பர்கள் இந்த முயற்சியை வரவேற்பீர்கள் என்று
நம்புகிறேன்… நமது சிந்தனைகளை, கருத்துகளை,
அனுபவங்களை -அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்
ஒரு முயற்சி இது…. ஓயும் முன்னர் நம்மால் இயன்றதைச்
செய்வோமே என்கிற எண்ணம் தான் இதன் பின்னணி.

பேச்சைப் பதிவு செய்து வெளியிடுவது –
இதுவே எனக்கு முதல் முறை… முன் அனுபவம் இல்லை.

முதலில் கொஞ்ச காலம் தடுமாறவே செய்யும்…
அனுபவத்தில் சரி செய்துகொள்ள முடியுமென்று
நம்புகிறேன்….அதுவரை – நண்பர்கள் பொறுத்துக் கொள்ள
வேண்டும்… ( வேறு வழி…? )

நண்பர்களின் கருத்துகளை/ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
நன்றியும், வாழ்த்துகளும்.

.
-அன்புடன்,
காவிரிமைந்தன்
அக்டோபர், 27, 2019
——————————————-

துவக்கக் காணொளி கீழே –
நமது மகாகவி பாரதியின் பாடலுடன் …..

“மனதில் உறுதி வேண்டும்…”

.
————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to விமரிசனம் தளத்தில் ஒரு புதிய முயற்சி…

 1. appannaswamyAppannaswamy சொல்கிறார்:

  ஓம் ஓம் ஓம்

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்.

  நலமுயற்சி வெற்றிபெற இதயபூர்வ வாழ்த்துகள் ஐயா

 3. Ramnath சொல்கிறார்:

  உங்கள் குரலைக் கேட்க ஆவலாக உள்ளேன்.
  புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
  எல்லாருக்கும் தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.

 4. D. Chandramouli சொல்கிறார்:

  KM, it is nice of you to share your views on various topics, and as usual, I look forward to your YouTube postings also. Thanks

 5. Prabhu Ram சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்களைக் காணவும், கேட்கவும்
  ஆவலாக இருக்கிறோம்.
  அவசியம் திரையில் தோன்றி, பேசுங்கள்

  .

 6. புதியவன் சொல்கிறார்:

  திரையில் நீங்க வரவேண்டாம் என்று முடிவெடுத்தது வரவேற்கத்தக்கதுதான். என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

  இரண்டாவது, 15 நிமிடங்கள் என்பது எனக்கு அதிகமாகத் தோன்றுகிறது. எழுத்தில் 15 நிமிடங்கள் பேசுவதை எழுதினால் இரண்டு இடுகைகளுக்குப் போய்விடும். 5 – 8 நிமிடங்கள் சரியானதுன்னு நினைக்கிறேன். இது என் ஒபினியன்.

  /அந்தி வந்து விட்டது… இரவு வர அதிக நாட்களாகாது.// – இது எல்லோருக்குமானதுதான். அதனால் இது முக்கியம் இல்லை. யாருக்கு அவர்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன் எப்போது வருகிறது என்பது தெரியும்?

  உங்களுக்கு மனம் நிறைந்த தீபாவளி தின வாழ்த்துகள். ஆரோக்கியத்துடன் இருக்க ப்ரார்த்திக்கிறேன்.

 7. Jksmraja சொல்கிறார்:

  திரு புதியவன் அவர்கள் கருத்துடன் 100 சதவிகிதம் உடன் படுகிறேன்.

  இந்த தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 8. புதியவன் சொல்கிறார்:

  //சிங்கப்பூர் தீபாவளி// பற்றி படம் போட்டிருக்கீங்க. எனக்கு சைனீஸ் (சிங்கப்பூரியன்) நண்பர், ‘தப்பூசம்’ என்று சொல்லி நான் சென்றிருந்தபோது எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டியது நினைவுக்கு வந்தது. கொஞ்சம்கூட, சீனன், தமிழன் என்று எந்த வித்தியாசமும் அவர்கள் அணுகுமுறையில் பார்க்கவில்லை.

  அந்த மாதிரி ஒரு சொசைட்டியை கட்டமைத்தவர் மிகவும் பாராட்டுக்குரியவர். அவர் நினைத்திருந்தால் ‘சைனீஸ்’ மட்டும்தான் அதிபராக முடியும், அதிலும் புத்திஸ்ட் மட்டும்தான் இந்தப் பதவிக்கு வர முடியும் என்றெல்லாம் செய்திருக்கலாம். (இலங்கையைப் போல). ‘வந்தேறிகள்’ என்று சொல்லி மற்ற மொழிகளை இனங்களைக் கைகழுவி விட்டிருக்கலாம். இதையெல்லாம் செய்யாமல், ஒரு நாட்டை ஒருங்கிணைத்து உருவாக்கியவரை, என்ன சொல்லி நினைவுகூறுவது?

  சிலைகள், பாலபிஷேகம், கட் அவுட், ஆடம்பரம், இனத்தைப் பிரிப்பது, ‘சிறுபான்மையினர்’ என்று சொல்லி மக்களுக்குள் பிளவு ஏற்படுத்துவது, ‘பெரும்பான்மையினர்’ என்று பேசும்போது, ‘அது சரிதானே..இத்தனை நாட்கள் நாம் புறக்கணிக்கப்பட்டோமே’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது, மத/ஜாதி ரீதியாக வாக்குகள் அளிக்கும்படி மக்களை டிரெயின் பண்ணி வைத்திருப்பது. இந்த ஜாதியினால்தான் இதுவரை நீங்க உயரலை என்று மக்களைப் பிளவுபடுத்தியது… உண்மையிலேயே நேரு முதல்கொண்டு நமக்குக் கிடைத்ததெல்லாம் நல்ல தலைவர்கள்தான், சிலை மட்டும் வைக்கும்படியான தலைவர்கள், அதற்குமேல் ஒர்த் இல்லாதவர்கள். சிங்கப்பூர் தலைவரின் உயரத்தை இவர்களால் அண்ணாந்து பார்க்கத்தான் முடியும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நான் காரணமாகத்தான் அந்த புகைப்படத்தை
   தேர்ந்தெடுத்து அங்கே பதிவிட்டேன்.
   உண்மையான secularism என்பதற்கான
   அடையாளத்தை அங்கே காணலாம்.

   நீங்கள் அதை சரியாகப் புரிந்து கொண்டீர்கள்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பின்னூட்டங்களின் மூலம் கருத்து தெரிவித்த
  அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த
  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 10. புவியரசு சொல்கிறார்:

  மதம், மொழி ஆகியவற்றை நாட்டு மக்கள்
  எல்லாருக்கும் பொதுவாக, ஒரு அரசாங்கம்
  எப்படிக் கையாள வேண்டும்
  என்று தெரிந்து கொள்ள நமது
  அரசியல்வாதிகள் அவசியம்
  ஒரு தடவை சிங்கப்பூர் சென்று வர வேண்டும்.

  • புதியவன் சொல்கிறார்:

   This is too late. எந்தக் கட்சியாவது ‘இடஒதுக்கீடு’ கிடையாது என்று சொன்னால் மக்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னால் அதுக்கு ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? இந்தியாவில் 1950களில் கரன்சியில் இருந்த மொழிகள் மட்டுமே ஆட்சி மொழிகள் என்று சொன்னால் அதை எத்தனைபேர் ஒத்துக்கொள்வார்கள்? நல்லதோ கெட்டதோ, நாம நம்ம தலைவர்கள் செய்வதை ஒத்துக்கொள்ளாமல் உள் காரணம் கற்பிக்கப் பழகிவிட்டோம். சிங்கப்பூரில் சொந்தக் கார் என்பது மிகவும் செலவுபிடிப்பது. துப்பினால் ஃபைன். இதெல்லாம், முதல்ல தமிழர்களுக்கு ஒத்துவருமா? யோசித்துப் பாருங்க.

   நமக்கு சீன லீடர் மாதிரி ‘சர்வாதிகாரி’ வந்து நாட்டை ஐந்து ஆண்டுகளில் சரிப்படுத்தினால்தான் நம் நாட்டு மக்கள் ‘மாறலாமா’ என்று யோசிப்பாங்க. மக்கள் ஒழுக்கம், என்னைப் பொறுத்தவரையில் ஜப்பான், சிங்கப்பூர், தாய்வான் போன்ற வளர்ந்த நாடுகளில் இமய மலை உயரம் என்றால், நாம் பசிபிக் டிரெஞ்ச் அளவு இருக்கோம்.

 11. bandhu சொல்கிறார்:

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள், கே எம் சார்.. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். 5 நிமிட வீடியோ என்பது சரியாக இருக்கும் என்பது என் எண்ணம் கூட!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   bandhu,

   நன்றி நண்பரே.
   நானும் கிட்டத்தட்ட அப்படித்தான்
   யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
   15 நிமிடம் என்று நான் குறிப்பிட்டது
   அதிக பட்சம்… சில சமயங்களில்
   தேவைப்படலாம் என்பதால் சொன்னேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. கிரி சொல்கிறார்:

  சார் வாழ்த்துக்கள்.

  15 நிமிடங்கள் என்பது ரொம்ப அதிகம் சார். 5 நிமிடங்கள் என்பது போதுமான ஒன்று.

  இது போன்ற பாடல்களை இணைப்பதை தவிர்க்கவும். copyright பிரச்னை வந்து உங்கள் கணக்கு முடக்கப்படுவதற்கான வாய்ப்புண்டு.

  மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதைத் தாண்டினால் கணக்கை முடக்கி விடுவார்கள்.

  உங்கள் அனைத்து உழைப்பும் ஒன்றுமற்றதாகி விடும். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.

  YouTube லையே இலவசமாகக் கொடுக்கப்படும் பின்னணி இசையைப் பயன்படுத்தலாம், பிரச்னையில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கிரி,

   உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
   என்னுடைய இந்த புதிய முயற்சிக்கு நீங்களும்
   ஒரு முக்கிய காரணம்.
   ஏற்கெனவே சொன்னது போல் –
   கணிணி சம்பந்தப்பட்ட விஷயங்களில்
   என் அறிவு பூஜ்ஜியம் தான்.

   எனக்கு எதிர்காலத்திலும் உங்கள்
   உதவி/ஆலோசனை அவசியம் தேவைப்படும்.
   (டெக்னிகலாக) நான் செயல்படும்
   விதத்தை தொடர்ந்து கவனித்து உரிய
   யோசனையை/எச்சரிக்கைகளை கொடுங்கள்
   என்று இப்போதே கோரிக்கை வைத்து விடுகிறேன்.

   நானும் 5 முதல் 10 நிமிடங்கள் என்று தான்
   நினைத்திருக்கிறேன்.. ஒருவேளை சில சமயங்களில்
   தேவைப்படலாம் என்பதால் தான், அதிக பட்சமாக
   15 நிமிடங்கள் என்று சொன்னேன்.

   எனக்கு இது முற்றிலும் புதிய அனுபவம்.
   பழக்கமாகும் வரை கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும்.
   நண்பர்கள் துணையிருக்கையில் -எனக்கென்ன கவலை…? 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 13. R KARTHIK சொல்கிறார்:

  Happy Deepavali to all.

  Very happy about your new initiative.

  Kindly consider making it like a podcast. For example IVM has several podcasts (https://ivmpodcasts.com/). There are some interesting podcasts i am currently following, Habit coach (by Asdin doc), Paisa Vaisa (Anupam Gupta), The Origin of Things and Ponniyin Selvan.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கார்த்திக்.

   இந்த podcast விஷயங்கள் எனக்கு பரிச்சயம் இல்லை.
   இதைப்பற்றி சுலபமாக, தெளிவாக –
   புரிந்துகொள்ள எதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.