…
…
…
கதை எழுதப் பஞ்சம் வரும்போதெல்லாம்,
கதாசிரியர்களின் கற்பனைக்கு புகலிடமாக
சரித்திரத்தில் சில பாத்திரங்கள் (charactor)
நிரந்தரமாக உண்டு.
தெனாலிராமன், பீர்பால், முல்லா இந்த மாதிரி சிலரின்
வரிசையில் அசோக சக்கரவர்த்தியும் உண்டு.
அசோக சக்கரவர்த்தியை சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட
குட்டிக் கதைகளில் ஒன்று கீழே –
…
கி.மு. 3-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் அசோகர்.
36 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை
கட்டி ஆண்டவர்.
அவரது ஆளுகை (இன்றைய ஒடிஷா)
கலிங்கத்திலிருந்து, ஆப்கானிஸ்தான் வரை விரிந்து
பரந்திருந்தது. ஆட்சி பீடம் ஏறிய 8-வது ஆண்டில்,
அவர் தெற்கே தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும்
எண்ணத்துடன், கலிங்கத்தின் மீது படையெடுத்தார்.
இரண்டு தரப்பிலுமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
வீரர்கள் போரில் மரணமடைந்தனர்….
போரில் வெற்றி பெற்றாலும், அதனால் ஏற்பட்ட
உயிரிழப்புகளும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின்
அவலமும் சேர்ந்து அசோகரின் மனதை மாற்றின.
புத்த மதத்தை தழுவினார்…. தீவிரமாக சாத்வீகத்தை
கடைபிடிக்கத் துவங்கினார்.
அத்தகைய சமயத்தில் ஒரு நாள் –
அசோகர், நகர் வலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த
ஒரு வயோதிக புத்த துறவி, மன்னரும், அவரது
படை வீரர்களும் செல்ல வழி விட்டு,
ஓரமாக ஒதுங்கி நின்றார்.
அவரை பார்த்த, அசோகர், தம் ரதத்தை நிறுத்தி, இறங்கி
அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.
அவரது சிரம், துறவியின் காலில் பட்டது. மன்னரை
ஆசிர்வதித்தார், துறவி. இதை பார்த்த அமைச்சர்,
சங்கடப்பட்டார்.
‘எப்பேர்ப்பட்ட அரசர் அசோகர்… ஒரு சாதாரண துறவியின்
காலில் விழுவதா… அரச பாரம்பரிய கவுரவம் என்னாவது…’
என்ற எண்ணம், அவரை அலைக்கழித்தது.
அரண்மனை சென்றதும் அரசரிடம், தன் வருத்தத்தை
வெளிப்படுத்தினார், அமைச்சர்.
அமைச்சர் கூறியதை கேட்ட, அசோகர் சிரித்தார்.
அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல், ஒரு விசித்திர
கட்டளையை பிறப்பித்தார்.
‘ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித் தலை மற்றும்
ஒரு மனிதத் தலை, மூன்றும் உடனே எனக்கு வேண்டும்.
ஏற்பாடு செய்யுங்கள்…’ என்றார். மன்னரின் கட்டளை,
அமைச்சரை திகைக்க வைத்தாலும், அதை நிறைவேற்ற
முனைந்தார்.
ஓர் இறைச்சிக் கடையில், ஆட்டுத் தலை கிடைத்தது.
புலித் தலை, ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.
மனிதத் தலைக்கு எங்கே போவது…? கடைசியில்,
சுடுகாட்டுக்கு சென்று, ஒரு பிணத்தின் தலையை
எடுத்து வந்தனர்.
மூன்றையும் பார்த்த, அசோகர், ‘சரி… இந்த மூன்றையும்,
சந்தையில் விற்று, பொருள் கொண்டு வாருங்கள்…’
என்றார்.
ஆட்டுத் தலை, சிரமமின்றி விலை போனது.
புலித் தலையை, வேட்டையில் பிரியமான ஒருவன்,
பாடம் செய்து அலங்காரமாக மாட்ட, வாங்கி சென்றான்.
மீதமிருந்த மனித தலையை பார்த்த கூட்டம்,
அருவருப்புடன் அரண்டு, மிரண்டு பின்வாங்கியது.
அதை வாங்க, யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர், மனிதத் தலையை
வாங்க யாரும் தயாரில்லை என்பதை தெரிவித்தார்.
‘அப்படியானால், யாருக்காவது இலவசமாக கொடுத்து
விடுங்கள்…’ என்றார், மன்னர்.
‘இலவசமாக வாங்கக் கூட, யாரும் முன்வரவில்லை…’
என்றார், அமைச்சர்.
‘பார்த்தீரா, அமைச்சரே… மனிதனின் உயிர் போய்
விட்டால், அந்த உடம்பு, கால் துாசு கூட பெறாது.
இருந்தும், இந்த உடம்பில் உயிர் உள்ளபோது
என்ன ஆட்டம் ஆடுகிறது. செத்த பின் மதிப்பில்லை
என்பதை உணர்ந்தவர்கள் தான், ஞானிகள்.
இத்தகைய ஞானிகளின் காலில் விழுந்து வணங்குவதில்
என்ன தவறு?’ என்றார், மன்னர்.
” மகுடங்கள் தலை மாறக்கூடியவை…
இரக்கமும், பணிவும், மக்கள் நலப் பணிகளும்
தான் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும்” என்றார்
சக்கரவர்த்தி அசோகர்.
புரிந்து கொண்ட அமைச்சர் அமைதியானார்…!!!
——————–
( புத்தகத்தில் படித்ததை –
என் வசதிக்கு மாற்றி இருக்கிறேன்…
தத்துவத்தைச் சொல்ல ஒரு கதை
தேவைப்பட்டது ….
இதை பிடித்துக்கொண்டேன் ….!!!)
.
—————————————————————————————————-
I underst0od the innrer meaning sir. Well said
வாட்சப்பில் இதுபோன்ற கதை வந்தது. உண்மைதான். நமக்கு ரொம்ப காலம் முன்னாலயே சொல்லுவாங்களே.. தாசில்தார் நாய் இறந்தால் துக்கம் கேட்க ஏகப்பட்டபேர் வருவாங்க. தாசில்தார் இறந்தால் துக்கம் கேட்க ஆள் இருக்காது என்று. (அதாவது அதிகாரத்தில் உள்ளவர்-தாசில்தார் என்ற பொருளில்)
//செத்த பின் மதிப்பில்லை என்பதை உணர்ந்தவர்கள் தான், ஞானிகள்// – என்ன இப்படிச் சொல்லிட்டீங்க… சிலை வைப்பாங்க. அதைப் பாதுகாப்பாங்க. பிறந்த நாள், இறந்த நாளுக்கெல்லாம் சிலைக்கு மாலை போடுவாங்க. தினமும் படிக்க பத்திரிகை கொண்டு வைப்பாங்க. (அத்தோட மறந்துடுவாங்க என்பதையும் குறிப்பிடணும்)
புதியவன்,
செத்தவர்கள் உடம்பால் பிரயோஜனம் ஏதுமில்லை.
உண்மை தான்… ஆனால், பெயருக்கு நிறைய “மவுசு”
இருக்கிறதே…!!!
தமிழக அரசியலே, செத்தவர்களின் பெயரைச்
சொல்லித்தானே நடக்கிறது…. இரண்டு முக்கியத்தரப்பிலும்
இறந்தவர்களின் பெயரைச் சொல்லித்தானே
ஓட்டு கேட்கிறார்கள்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்