ஜியோ -வின் வளர்ச்சி நேர்மையானதா…?


ரிலையன்ஸ் ஜியோ எப்படி,
பாஜக அரசின் துணையோடு,
இதர செல்போன் கம்பெனிகளை அழித்து ஒழிக்கிறது
என்பது குறித்து, ஜூனியர் விகடனில்
வெளிவந்திருக்கும் ஒரு இடுகையின் சில பகுதிகளை,
வாசக நண்பர்களின் கருத்து/விவாதத்திற்காக
கீழே பதிந்திருக்கிறேன்.

நான் ஜியோ பயன்படுத்துவதில்லை.
எனவே, ஜியோவை பயன்படுத்தும் நண்பர்கள் தங்கள்
அபிப்பிராயங்களை/அனுபவங்களைச் சொன்னால்
இந்த விஷயத்தை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு
உதவியாக இருக்கும்.

——————————————————–

பாஜக அரசு ஜியோவுக்கு ஆதரவாக செயல்படுகிறது
என்று ஜூ.வி.யில் அபாண்டமாக பழி போடுகிறார்கள்.
இதே ஜியோ, மாறன் சகோதர்களுக்கோ, திமுகவின்
தலைவர் குடும்ப உறுப்பினர்கள் வேறு யாருக்காவதோ
சொந்தமானதாக இருந்திருந்தால்,
ஜூ.வி.இப்படி எழுதுமா…?

மத்திய அரசு எந்த விதத்தில் இதில் தலையிட்டது..?
நிரூபிக்க முடியுமா ? ட்ராய் எடுக்கும் முடிவுகளுக்கும்,
பாஜக அரசுக்கும் என்ன சம்பந்தம் ..? ட்ராய் என்பது
சுயேச்சையான அதிகாரங்களுடைய தனி அமைப்பு.
அதன் முடிவுகளில் மத்திய அரசிற்கு பங்கு இருக்கிறது
என்று சொல்வது உளரல்.

அடுத்த உளரல் 2ஜி-யையும் 4ஜி-யையும் கம்பேர்
செய்வது. ஆ.ராசாவின் 1,76 கோடி ஊழல்
ரெக்கார்டை உலகின் – வேறு எந்த மெகா ஊழலாலும்
மிஞ்ச முடியாது என்பதே நிஜம்.

இது தொழில் உலகம்… வர்த்தக உலகம்… திறமை
உள்ளவன் பிழைக்கிறான். முன்னுக்கு வருகிறான்.
தொழிலதிபர்கள் தங்கள் திறமையால் வளர்ந்தால் –
அதற்கு பாஜக அரசு தான் காரணமென்று சொல்வது
அவர்களின் திறமையை அவமானப்படுத்துவதாகும் …..

( – என்ன ஆயிற்று உங்களுக்கு …
என்று கேட்கிறீர்களா..?

நண்பர்களின் கருத்தை கேட்டிருந்தேன்.. நண்பர்
புதியவன் பின்னூட்டத்தில் என்ன சொல்வாரென்று
கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்…
அவர் சொல்லவிருப்பதை, முந்திக்கொண்டு
நானே சொல்லி விட்டால் – அடுத்து
அவர் வேறு என்ன கருத்து சொல்வாரென்று பார்க்க
ஆவல்…. அதான்.. 🙂 🙂 🙂 )

—————————————————
(ஜூனியர் விகடன் இதழுக்கு நன்றிகள்…)

.
——————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஜியோ -வின் வளர்ச்சி நேர்மையானதா…?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மரணப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும்
  பி.எஸ்.என்.எல்.-ஐ காப்பாற்ற
  வேண்டுமென்கிற நல்ல புத்தியை
  இறுதிக் கட்டத்திலாவது இறைவன்
  சம்பந்தப்பட்டவர்களுக்கு
  கொடுத்திருக்கிறான்…
  மனசாட்சி உறுத்தியதா அல்லது
  பின்னால் வரக்கூடிய தீவிரமான
  கண்டனங்களைத் தவிர்க்கவா என்று
  தெரியவில்லை.

  எப்படி இருந்தாலும், நல்ல முடிவு
  என்பதால் முழுமனதோடு வரவேற்போம்.
  நேற்றிரவு மத்திய கேபினட் மீட்டிங்கில்
  கொள்கை அளவில் சில முடிவுகள்
  எடுக்கப்பட்டிருக்கின்றன.

  பி.எஸ்.என்.எல்-க்கு 4-ஜி அலைக்கற்றைகளை
  20,000 கோடி என்று விலை பேசி, கடனுக்கு
  கொடுப்பது என்பது ஒரு முடிவு.
  VRS திட்டத்தை அமல்படுத்த 30,000 கோடி
  கடன் கொடுப்பது என்று இன்னொரு முடிவு.
  இதே போல், மரணப்படுக்கையில் இருக்கும்
  MNTL-ஐ பி.எஸ்.என்.எல்-உடன் இணைப்பது
  என்று மூன்றாவது முடிவு.

  இந்த கடன்களை, நிறைய ஊர்களில்
  BSNL -க்கு சொந்தமாக இருக்கும் நிலங்களை
  விற்று வரும் தொகைகளின் மூலம்
  அடைத்துக் கொள்வது என்பது 4-வது முடிவு.

  இந்த முடிவுகளை R-jio உருவாவதற்கு முன்பே
  எடுத்திருந்தால் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்…..?
  ஏன் எடுக்கவில்லை…?
  மக்களே யோசித்துக் கொள்ள வேண்டியது தான்.

  .
  -வாழ்த்துகளுடன்
  காவிரிமைந்தன்

 2. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  ஜியோவின் வளர்ச்சிக்கு பிஜேபி அரசு உதவுகிறதோ இல்லையோ ஒரு ஜியோ வாடிக்கையாளராக என்னைப் பொறுத்தவரை ஜியோவின் அசுர வளர்ச்சிக்கு காரணம் ஜியோவின் வருகைக்கு முன்பு வரை தொலைத்தொடர்புத் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த வோடபோன் ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் சுயநல தன்மையே காரணம். அப்போதைய ஒரு ஜிபி கட்டணத்தையும் ஜியோவின் வருகைக்குப் பிறகு அதே நிறுவனங்கள் ஜியோக்கு போட்டியாக அறிவித்துள்ள ஒரு ஜிபி கட்டணத்தையும் ஒப்பிட்டால் அவர்களது கொள்ளை லாபம் தெரிந்துவிடும். மேலும் ஜியோ கையில் எடுத்துள்ள தொழில்நுட்பமானது அனைவருக்கும் பொதுவான ஒரு தொழில்நுட்பம் அதை ஏர்டெல், வோடபோன் பயன்படுத்தக்கூடாது என்று யாரும் இங்கு கூறிவிடவில்லை. இப்படி மாற்றி யோசிக்கும் பொழுது ஜியோ வரவில்லை என்றால் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது எதிர்கால திட்டங்களாக எதை வைத்திருந்தன. இணையவழி தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை ஒருகால் ஏர்டெல்லோ அல்லது வோடோபோனோ அறிமுகப்படுத்தி இருந்தால் இதுபோன்று அடிமாட்டு விலைக்கு சந்தையில் நுழைந்து வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். இங்கு என் தனிப்பட்ட பிஎஸ்என்எல் அனுபவத்தை பதிவிடுவது தற்போதைய பிஎஸ்என்எல் எவ்வாறு இயங்குகிறது இது போன்ற அசுரத்தனமான போட்டிக்கு தன்னை எவ்வாறு ஈடு கொடுக்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவும். எங்கள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை புனரமைப்பிற்காக தோண்டப்பட்டு தொலைதொடர்பு கேபிள்கள் பழுதாகி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகின்றது. ஆயினும் இன்று வரை எனக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து மாதம் மாதம் தரைவழி இணைப்பிற்கான கட்டண அறிவுறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றது. பிஎஸ்என்எல் உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்ட பொழுது உங்கள் பகுதிக்கு தொலைத் தொடர்பு சேவையை வழங்குவதற்கு இன்னும் ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விடும் ஆயினும் உங்களுக்கான கட்டண அறிவுறுத்தல் ஹைதராபாத்தில் இருந்து வருவதால் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறுகிறார். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு தொலைபேசிக்கு அழைத்து நமது குறையை பதிவு செய்யும் பொழுது இரண்டு நாட்கள் கழித்து உங்களது குறை சரி செய்யப்பட்டுவிட்டது என்று ஒரு தகவல் வருகிறது. ஆயினும் சம்பந்தப்பட்ட தொலைபேசி இணைப்பக செயற்பொறியாளருக்கு நன்கு தெரியும் அங்கு பழுதடைந்த கேபிள்கள் இதுவரை மாற்றப்படவில்லை என்று. இணைப்பில் சென்று விசாரித்தால் அது வேறொரு தொழில்நுட்ப மையத்திலிருந்து அனுப்பப்படுவது எங்களுக்கு அதில் தொடர்பில்லை என்று கூறுகிறார்கள்.
  இங்கு நான் கூற வருவது என்னவென்றால் தேசிய நெடுஞ்சாலை புனரமைப்பிற்காக பழுதடைந்த கேபிள்களால் தொலைபேசி இயங்கவில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று அதேநேரம் சம்பந்தப்பட்ட இணைப்பின் வழியாக பழுதடைந்த எண்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து கட்டண அறிவுறுத்துதலை நிறுத்துவதற்கு ஒரு பொதுவான ஆனை கொடுத்திருக்கலாம். ஆனால் நேரில் சென்று இனைப்பகத்தில் விசாரித்தபோது ஒரு கடிதம் எழுதி அதை அருகில் உள்ள இன்னொரு பெரிய இணை பகத்தின் செயற்பொறியாளருக்கு அனுப்பி அவர் ஒப்புதல் கொடுக்கும் பொழுது மட்டுமே உங்களது கட்டணம் சரி செய்யப்படும் என்று கூறுகிறார்கள். பிஎஸ்என்எல் இன் நிர்வாகத்திற்கு இது ஒரு சிறிய சான்று.தொழில் போட்டி மிகுந்த இதுபோன்ற சூழ்நிலைகளில் இருக்கும் வாடிக்கையாளர்களையும் இதுபோன்ற அலைகழிப்புக்கு உட்படுத்தும் போது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான வாடிக்கையாளர் எண்ணிக்கை எவ்வாறு அதிகமாகும். இன்றைய சந்தை பொருளாதாரத்தில் திறமை உள்ளவன் எஞ்சி நிற்பான் என்பது பொதுவான விதி அது ஜியோவாக இருக்கும் பொழுது இருந்துவிட்டுப் போகட்டுமே. என்னுடன் இருக்கும் நண்பர்களில் பெரும்பாலோனோர் அழைப்பு கட்டணமாக 6 பைசா நிர்ணயம் செய்யப்பட்ட உடனேயே நம்பர் போர்டபிலிட்டி பயன்படுத்தி அவர்களுக்கு உகந்த சேவை வழங்கும் நிறுவனத்திற்கு மாறி வருகிறார்கள்.கைபேசியில் இருந்து கைபேசிக்கு இணையதள இணைப்பு வழங்குவது வரை எந்த நிறுவனமாக இருந்தாலும் வாடிக்கையாளரின் தேர்வு மிக முக்கியமானது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெ.க.சந்திரசேகரன்,

   BSNL – ஊழியர்கள் இன்னும் பொறுப்புடனும்,
   அக்கறையுடனும் செயல்பட வேண்டும். தனியார்
   ஊழியர்களுடன் போட்டி போடும் அளவிற்கு
   அவர்கள் தங்கள் திறனையும், செயல்பாட்டையும்
   மாற்றிக்கொண்டாலொழிய அவர்களுக்கு எதிர்காலம்
   இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட
   வேண்டும்.

   இதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

   ஆனால், ஒரு அரசு சார் நிறுவனத்தை அழிந்து போக விட்டு விட்டு,
   அதன் மூலம் ஒருதனியார் நிறுவனம் வளர்ச்சி பெற மறைமுகமாக
   உதவுவது அரசு தர்மமல்ல.
   இந்த கட்டுரை அதைத்தான் சொல்ல முயல்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

    உங்கள் கருத்துடன் நிச்சயம் உடன்படுகிறேன். அதே நேரம் ஒரு தனியார் நிறுவனம் அளிக்கும் சேவை ( அதற்கான விலையை நம்மிடமிருந்தே பெறுகிறார்கள்) அரசு துறைகளில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. வங்கித்துறை ஆகட்டும் வேறு அரசு அலுவலகங்கள் ஆகட்டும் எங்குமே குறிப்பாக பாமரர்கள் அரசு அலுவலக நடைமுறை தெரியாதவர்கள் படும் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். தங்களின் உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் சேவையில் கனிவையும் கவனத்தையும் தருவார்களேயானால் நிச்சயம் அவர்களுக்கான பொதுமக்களிடமிருந்து தன்னெழுச்சியாக வரும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

   • புதியவன் சொல்கிறார்:

    //ஒரு அரசு சார் நிறுவனத்தை அழிந்து போக விட்டு விட்டு,
    அதன் மூலம் ஒருதனியார் நிறுவனம் வளர்ச்சி பெற மறைமுகமாக
    உதவுவது அரசு தர்மமல்ல//

    கா.மை. சார்…. அரசின் கடமை… எங்கு தனியார் நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்கு முன் வருவதில்லையோ அங்கு மக்களுக்காக அரசு சேவை செய்ய முன்வருவது. அரசு மருத்துவமனைகள் சாதாரண கிராமங்களில் தொடங்கப்படணும், அரசு தொலைத் தொடர்பு நிறுவனம் எங்கு தேவையோ அங்கு மட்டும்தான் இருக்கவேண்டும்.

    அரசின் கடமை, வேலை செய்யாத ஊழியர்களைப் பாதுகாப்பது அல்ல. என்னுடைய அனுபவத்தில், அரசு வேலை என்றாலே ‘உழைக்கத் தேவையில்லை… கஸ்டமர்களைக் கஷ்டப்படுத்தி லஞ்சம் வாங்கித் திளைப்பது-வாய்ப்பு இருக்கும் பட்சத்தில்’. இது எழுதும்போது ஒருதலைப் பட்சமாக இருக்கலாம்… ஆனால் அரசு சார்ந்த ஊழியர்களிடம் பொதுமக்கள் எந்த மாதிரி சேவை பெறுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும், இந்தத் தளத்தைப் படிப்பவர்களுக்கும் தெரியும் (உடனே யாரோ ஒருவர், எனக்கு அரசு வேலை கிடைக்காததால்தான் அவர்கள் மீது வெறுப்பு என்று எழுதப்போகிறார்).

    ஜியோ, வோடஃபோன் போன்ற பல நிறுவனங்களில் எத்தனை ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்லில் எத்தனை ஊழியர்கள் (கஸ்டமர்-சேவை செய்யும் ஊழியர்கள்) என்பதை ஒப்பிட்டாலே உங்கள் வாதம் தவறு என்று புரிந்துவிடும். பி.எஸ்.என்.எல்., ரிமோட் இடங்களில் சேவை செய்வதால் அதற்கு நஷ்டம் ஏற்பட்டால் அதனை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளணும். ஆனால் அவர்கள் மற்ற தனியார் நிறுவனங்கள் சேவை தரும் இடங்களில், காம்படிடிவாக சேவை தர முடியாதென்றால் அவற்றை மூடுவதில் தவறில்லை.

    இன்றைக்கு தனியார் நிறுவனங்கள் வரவில்லை என்றால், பி.எஸ்.என்.எல், நம் தலைமீது உட்கார்ந்து அதிகாரம் செய்யும், வாடிக்கையாளர்களை எள்ளி நகையாடும். இதுதான் என்னுடைய அனுபவம், அரசு நிறுவனங்களில்.

 3. புதியவன் சொல்கிறார்:

  உங்க தலைப்புல ‘ஜியோவின் வளர்ச்சி நேர்மையானதா’ என்று கேட்கிறீர்கள். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்… பெரும்பாலும் எல்லா பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நேர்மை என்பது லவலேசம் கிடையாது. எதிக்ஸோடு வியாபாரம் செய்யும் நிறுவனங்களை விரல்விட்டுக்கூட எண்ண முடியாது என்பது என் அனுமானம்.

  இதற்கு முன்னால், நாம், ‘அம்பானி காங்கிரஸ் ஆள்’, ‘அதானி பாஜக ஆள்’ என்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். அதாவது 40 ஆண்டுகளில் ரிலையன்ஸ் அசுர வளர்ச்சிக்கு காங்கிரஸ் காரணம், இப்போ பாஜக அதானியை வளரவிடுகிறது என்று. இப்போ, திடும் என்று நாம், பாஜக ஜியோவை வளர்க்கிறது என்று திருப்பிப்போடுகிறோம். பாஜக சொல்லியா, நாங்களெல்லாம் ஜியோ நம்பரை வாங்கினோம்? ஜியோ, நிறைய டேட்டா, நல்ல ஸ்பீட், குறைந்த விலை கொடுத்தது.

  சன் தொலைக்காட்சி எப்படி அசுர வளர்ச்சி அடைந்தது? எப்படி அவங்க கேபிள் மார்க்கெட்டைப் பிடித்தார்கள்? என்ன என்ன தகிடுதத்தங்கள், திமுக அரசின் ஒரு சார்பு நிலைகள் நடந்தன? எப்படி கலாநிதி மாறனுக்கு அவார்ட் கொடுத்தாங்க?

  காங்கிரஸுக்கு 2ஜி, பாஜகவுக்கு 4ஜி என்று ஜூவி சொல்வதற்குக் காரணம், அவங்க எஜமானர்கள் சொல்படி எழுதவேண்டிய நிர்பந்தத்தால். இப்போ புதிய தலைமுறை தொலைக்காட்சி, பச்சைமுத்து நிறுவனங்களில் நடக்கும் தற்கொலைகளைப்பற்றி விவாதிக்கும், அந்தக் கல்லூரிகளின் கல்விக்கட்டணக் கொள்ளையைப் பேசும் என்று எதிர்பார்க்கமுடியுமா? அந்த நிலைதான் ஜூ.விக்கு.

  பாஜக, அரசு நிறுவனங்களின் சுமையைக் குறைக்க நினைக்கிறது. அது எனக்குப் பெரிய தவறாகத் தெரியவில்லை. எல்லாவற்றிலும் அவுட்சோர்ஸ் செய்வதுதான் அரசுக்கு நல்லது. இது ஏதோ பாஜக மட்டும் செய்ததல்ல. காங்கிரஸ், வெளிநாடுகளில் பாஸ்போர்ட் சேவைகளை பெரும்பாலும் அவுட்சோர்ஸ் செய்துள்ளது. மக்களுக்கு சேவை சரியாகக் கிடைக்கும், சிறிது அதிகமாக பணம் செலவழிந்தாலும்.

  உதாரணத்துக்கு. நாம் எல்லோரும் அனேகமா ஊபர், ஓலா உபயோகப்படுத்துகிறோம். ஏன் அப்போ, நம் தெருமுனை ஆட்டோ ஸ்டாண்ட் காரங்களை உபயோகப்படுத்துவதில்லை (பெரும்பாலும்). காரணம், அவங்க அடாவடி, இஷ்டத்துக்கு ரேட் கேட்பது, மீட்டர் போடுவதே கிடையாது. இந்த நேர்மையின்மைதான் ஊபர் ஓலா அசுர வளர்ச்சிக்குக் காரணம். சரி.. ஊபர் ஓலா (இதைப்போன்றவைகள்.. எம். ஆட்டோ….) நேர்மையானதா? இல்லை என்பது என் பதில். காரணம், அவங்க மார்க்கெட் பிடிக்க ஓரளவு குறைவாகத்தான் ரேட் போடுகிறார்கள், அவங்கள்ட சேரும் ஆட்டோ/டாக்ஸிகளை சிறிது நெருக்குகிறார்கள், ஆசை காட்டுகிறார்கள். (இன்றைய நிலையில் ஓலா, ஊபரை விட 10 + ரூபாய் அதிகம்). நாளை தெருவோர ஆட்டோக்காரர்களே இல்லாதபோது, இருவரும் அதிக ரேட் போடலாம். இன்றைக்கு அவங்க குறைவாக சார்ஜ் பண்ணுவது, இருக்கும் வாய்ப்புகளை அழிப்பதற்காகவும், தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காகவும்.

  இதுபோன்றுதான் ஸ்விக்கி, ஸொமட்டோ, ஊபர் போன்ற பல நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்வதும்.

  இதுபோல ஒவ்வொரு பிஸினெஸிலும் நான் உதாரணங்கள் காட்ட முடியும் (என்னுடைய ரீடெயில் அனுபவங்களால்)

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்..நீங்க என்னைப்பற்றி எழுதுவதை நான் ரசித்தேன், அதில் உண்மை இருப்பதால். என்னுடைய ஸ்டேண்ட்… அரசு நிறுவனங்களால் அங்கு பணிபுரிபவர்களுக்கு சம்பளம், பென்ஷன் வருகிறதே தவிர பொதுமக்களுக்கு அவங்களால, பெரும்பாலும் உபயோகம் இல்லை. அது எந்த அரசு நிறுவனமானாலும் சரி. (மிகச் சிறிய விதிவிலக்குகள் இருக்கலாம்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.