“கூக்குரல்” – விளம்பரம் முடிந்து, வியாபாரம் துவங்கி விட்டது…!!!


காவிரியின் பெயரைச் சொல்லி “கூக்குரல்”
ஊர்வலம் வந்தவர்கள், ஒருவழியாக
தங்கள் துவக்க விளம்பரங்களை அமர்க்களமாக
முடித்துக் கொண்டு, வியாபாரத்தைத் துவக்கி
இருக்கிறார்கள்…

இப்போதைக்கு 30 நாற்றுப்பண்ணைகளை
டெல்டா மாவட்டங்களில் துவக்கி இருக்கிறார்கள்.

விரைவில் இது 300 ஆகுமாம். ( நிரந்தர ஆசிரம
விசுவாசிகளுக்கு வேலையும், வருமானமும் கிடைக்க
வழி செய்ய வேண்டுமல்லவா…?)

இப்போதைக்கு ஒரு சின்ன கேள்வி மட்டும்…

ஆமாம் – இவர்களின் திட்டம் செம்மரம் வளர்ப்பது
தான் என்றால், வளர வளர வெட்டிக்கொண்டே
தானே இருப்பார்கள்… அது தானே வருமானத்திற்கு
வழி செய்யும்…?

மரம் வளர நீர் தேவை. கிடைக்கிற கொஞ்ச நஞ்சம்
காவிரி நீரையும் இந்த மரங்கள் உறிஞ்சிக்கொண்டு
விட்டால், அடுத்து இருக்கும் நெற்பயிரின் கதி
என்னவாகும்…?

அப்புறம் – வளர்கின்ற மரங்களையெல்லாம்
வெட்டிக்கொண்டே இருந்தால், காடு எப்படி உருவாகும்…?
அது மேகத்தையும், மழையையும் எப்படி பெருக்கும்…?

பாவம் தமிழக டெல்டா விவசாயிகள்…
எத்தனை தான் தாங்குவார்கள்…
இன்னும் எவ்வளவு பேர் அவர்களை ஏமாற்றப்போகிறார்கள்… ???

தமிழக ஊடகங்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது,
அவற்றின் நேர்மையில் பெருத்த சந்தேகத்தை
உண்டு பண்ணுகிறது. அவர்களும் வியாபாரத்தில்
“பங்குதாரர்கள்” (business partners…!)
ஆக்கப்பட்டு விட்டார்களா…?

ஊடகங்கள் இருப்பதே, காசு பண்ணத்தானே என்கிறீர்களா..?
இருந்தாலும் அதில் கூட ஓரளவாவது “அறம்” வேண்டாமா…?

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to “கூக்குரல்” – விளம்பரம் முடிந்து, வியாபாரம் துவங்கி விட்டது…!!!

 1. கண்ணன் சொல்கிறார்:

  திட்டம் போட்டு திருடுற கூட்டம்
  திருடிக்கொண்டே இருக்குது.
  அதை சட்டம் போட்டு தடுக்க வேண்டியவரும்
  கூட்டத்துடனேயே சேர்ந்துகொள்கின்றனர்.

  விவசாயிகள் பாவம். ஆனால் அவர்களை
  ஏமாற்றுபவர்கள் நிச்சயம் உருப்பட மாட்டார்கள்.
  இந்த கசடைகளை அடையாளம் காட்ட வேண்டிய
  பொறுப்பு நிச்சயம் ஊடகங்களுக்கு இருக்கிறது.

  இங்கே இதர அரசியல் கட்சிகளும் வாங்கப்பட்டு
  விட்டார்கள் போலிருக்கிறது. யாருமே இது குறித்து
  எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  இந்த திட்டம் குறித்து தமிழக அரசு
  விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  இவர்களுக்கு கொடுத்திருக்கும் அனுமதியை
  வாபஸ் பெற வேண்டும்.
  இவர்கள் instalment -ல் கொஞ்சம் கொஞ்சமாக
  விவரங்களை வெளியிடுகிறார்கள். எனவே
  யாருக்கும் இது குறித்து முழு விவரமும் தெரியவில்லை.
  இந்த திட்டம் குறித்த அனைத்து விவரங்களும்
  முதலில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட
  வேண்டும். விவசாயிகளிடம் முழுவிவரமும்
  வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு, அவர்களது
  கருத்தைப் பெறவேண்டும்.

 3. Subramanian சொல்கிறார்:

  ஒரு கன்று விலை 39 ரூபாய்.
  200 கோடி கன்றுகள் விற்கப்போகிறார்களாம்.
  ஆக மொத்தம் 7800 கோடி ரூபாய்க்கு பிசினஸ் –
  அடேங்கப்பா !
  இதற்குப் பிறகு அதற்கு ஸ்பெஷல் உரம்,
  பசுமை பூச்சி மருந்து etc. etc.
  புதியவகைத் திருடர்கள்.
  12 கோடி லலிதா ஜுவெல்லரி திருட்டு முருகனே மேல்.

 4. புதியவன் சொல்கிறார்:

  //கிடைக்கிற கொஞ்ச நஞ்சம் காவிரி நீரையும் இந்த மரங்கள் உறிஞ்சிக்கொண்டு
  விட்டால், // அப்படி இல்லை சார்… மழை பெய்யும்போது மரங்கள் அவற்றைத் தடுத்து நிலத்தடி நீர் பெருகும். அங்க உள்ள விவசாயிகளுக்கும் நல்லது. இல்லைனா, சென்னைல மாதிரிதான்… மழை செமையா பெய்யும். தண்ணீர் ரோட்டுல தேங்கும், ஆவியாகும்.. ஒருத்தருக்கும் உபயோகம் கிடையாது. அதைப் பற்றிச் சிந்திக்கவே யாருக்கும் நேரம் கிடையாது. ஆனாலும் ஒவ்வொருவரும் மரம் நடணும்னு நீட்டி முழக்குவதில் குறையிருக்காது.

  இவங்க திட்டம் பற்றி எனக்கு பெரிய எண்ணம் இல்லை. ஆனாலும் மரங்களின் உபயோகம் மிக மிக அதிகம்.

  நம்ம ஊர்ல மரம் நடுவீர் என்று சொல்லிக்கொண்டு, நம்ம வீட்டுக்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை வெட்டுவது அதிகமாக நடக்கிறது. என் வீட்டுக்குப் பக்கத்திலும் அப்படி நிறைய நடக்கிறது.

 5. கண்ணன் சொல்கிறார்:

  புதியவன் சார்,

  மழை பெய்யும்போது, மழைநீரில் இந்த மரங்கள் வளரும்.
  ஆனால் மற்ற நாட்களில் இவை எந்த நீரை உறிஞ்சும் ?
  தமிழ்நாட்டில் வருடத்திற்கு எத்தனை நாட்கள்
  மழை பெய்கிறது ? மற்ற நாட்களில் இவை காவிரி நீரையும்,
  நிலத்தடி நீரையும் தானே உறிஞ்சும் ? அது நெற்பயிருக்கு
  போட்டியாகத்தானே அமையும் ? உள்ள காவிரி நீரையும்
  இந்த மரங்கள் உறிஞ்சிக் கொண்டால் நெற்பயிர் எப்படி வளரும் ?

  செம்மரம் முக்கியமா அல்லது நெல் விளைச்சல் முக்கியமா ?
  மக்கள் அரிசி/சோற்றுக்கு பதிலாக மரத்தை சாப்பிடுவார்களா ?
  இது வரவேற்க வேண்டிய விஷயமா ?
  அதுவும் 200 கோடி மரங்கள் ?
  காவிரி டெல்டாவில் எங்கே இருக்கிறது இடம் ?
  இந்த விளம்பரத்தைப் பார்த்தாலே
  இது வியாபாரம் என்று தெரியவில்லையா ?
  இல்லை தெரிந்தாலும் சாமியார்களுக்கு ஆதரவா ?
  இந்த ஆளுக்கு ஏமாற்ற வேறு ஆட்களா கிடைக்கவில்லை ?
  ஏன் டெல்டா விவசாயிகளின் பிழைப்பில் கை வைக்கிறார் ?
  உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மரம் நடுவதும்,
  காவிரி டெல்டாவில் 200 கோடி மரங்கள் நடுவதையும்
  ஒப்பிடுவது சரியா ?

 6. கண்ணன் சொல்கிறார்:

  மேற்கண்ட விளம்பரத்தை இன்னம் ஒரு தடவை
  படியுங்கள் சார். பிறகு சொல்லுங்கள் இது
  வியாபாரமா அல்லது சமூக சேவையா என்று.

  • புதியவன் சொல்கிறார்:

   @கண்ணன் – ஈஷாவை விடுங்கள். இவங்க இப்போ காவிரிக்காக ‘கூக்குரல்’ இடுவதையெல்லாம் நான் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அதனால இந்த சப்ஜெக்ட்லேர்ந்து அவங்களை விலக்குங்க. ஈஷாவும் நம்மை மாதிரித்தான். நம் இடத்தில் மரத்தை வெட்டிவிட்டு, ஊரான் இடத்தில் மரம் நட வேண்டும், அது மழைக்கு நல்லது, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது என்று நாம் சொல்வதுபோலத்தான்.

   நான் சொல்வது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், காவிரி கரையோரம், அதுவும் தனியார் இடங்களில் ஒரு பகுதியில், மொத்தமாக மரம் நடணும் என்பது கான்சப்ட். அது நல்லதுதான்.

   தமிழகத்தைவிட கர்நாடகா, நீர் மேலாண்மையிலும், இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதிலும் எத்தனையோ மைல்கள் உயரத்தில் இருக்கிறது. மரங்கள் நட்டு வளரும்போது அது மேலும் மழை பொழியச் செய்யும். கரையோர ஆக்கிரமிப்புகள் நடக்காது. நிலத்தடி நீர் அதிகமாகும்.

   தமிழகத்தில் ஒரு ஆறு, ஒரு குளம் சரியாக இந்த 60 ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்டிருக்கு என்று நம்மால் சொல்லவே முடியாது. இதோ கண் முன்னால் பீர்க்கங்கரணை பெரிய ஏரி (88ல் நான் பார்த்திருக்கிறேன்..மிகப் பெரிய ஏரி) தூர் வாரப்பட்டு நிலங்களைக் கூறுபோட அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. அடையாற்றின் இரு கரையோரங்களிலும் சட்டத்தை மீறி குடிசைகள் போட்டுக்கொண்டு, பின்னர் காங்க்ரீட் வீடுகளாக்கி, வாக்கு என்ற பெயரால் கொள்ளையடிக்க திமுக செய்தவைகளைப் பார்க்கும்போது, இந்த மரம் நடும் திட்டம் நல்ல திட்டம் என்று நான் நினைக்கிறேன்.

   பெங்களூர் ஒரு முறை போய்ப் பாருங்கள். எப்படி ஏரிகளைச்சுற்றி பூங்கா, கிரில் கேட் போட்டு பாதுகாக்கிறார்கள் என்று.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    கர்நாடகத்தின் நீர் மேலாண்மையைப் புகழ்ந்து
    நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் எனக்கு
    என்ன சொல்வது என்றே புரியவில்லை.
    ஒருவேளை வெளிநாட்டில் இருந்ததால்
    உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

    பங்களூரில் அல்சூர் ஏரி பெற்ற புகழை நீங்கள்
    அறியவில்லை என்று தெரிகிறது. 4-5 ஆண்டுகளுக்கு
    முன்னர், நொப்பும் நுரையுமாகப் பொங்கி வழிந்து,
    நாற்றமெடுத்து, தண்ணீரே கண்ணுக்குத் தெரியாமல்
    அல்சூர் ஏரி – நாட்டின் அத்தனை தொலைக்காட்சிகளிலும்
    பெற்றதே புகழ்….!!! இப்போது கொஞ்சம் திருத்தி
    இருக்கிறார்கள். அவ்வளவே.

    கர்நாடகா மாநிலம் இரண்டு மழை சீசன்-களாலும்
    அபரிமிதமான மழையைப் பெறுகிறது. south west
    monsoon காலத்தில், மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபரிமிதமாகவும், north east monsoon காலத்தில்
    பொதுவாக மாநிலம் முழுவதுமேயும் நல்லமழை
    பெய்கிறது. மேலும் அங்கே உள்ள மலையும், காடும்
    இயற்கை கொடுத்த வரம்.

    கன்னடத்தார்கள், தாங்களாகவே திட்டம் போட்டு
    மரம்/காடு வளர்த்த கதை எதாவது உங்களுக்குத்
    தெரிந்திருந்தால் பட்டியல் போடுங்களேன்… நானும்,
    வலைத்தள நண்பர்களும் தெரிந்துகொள்கிறோம்.

    மீண்டும் ஒரு வேண்டுகோள். விளம்பர வாசகங்களை
    தயவுசெய்து விவரமாகப் படியுங்கள்;

    ” உங்கள் நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையா…?
    தண்ணீரே இல்லையா…?
    வேலையாட்கள் கிடைக்கவில்லையா…?
    விவசாயம் செய்ய நேரமில்லையா..?
    வளமான மண் இல்லையா…?”

    “குறைந்த செலவில் லாபகரமாக
    மரம் வளர்ப்பது குறித்து, விஞ்ஞானபூர்வமான
    பயிற்சி…”

    காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை
    ஒரு நாள் பயிற்சிக்கு கட்டணம் 400 ரூபாய்…

    இதை வக்கணையாக – “உணவு மற்றும் நிகழ்ச்சி
    ஏற்பாடுகளுக்கான செலவுகளை தோராயமாக
    நபருக்கு ரூபாய் 400 வீதம் பகிர்ந்து கொள்ள
    வேண்டும்” என்று சொல்கிறார்கள்.
    (40 பேர் கலந்து கொண்டாலும் 400 ரூபாய் தான்…
    400 பேர் கலந்து கொண்டாலும், 4000 பேர்
    கலந்துகொண்டாலும் அதே 400 ரூபாய் தானா..?
    -விசித்திரமாக இல்லை…?)

    இத்தகைய மோசடிகளை expose செய்ய வேண்டும் –
    விவாதிக்க வேண்டும் என்பது சமூக அவசியம்
    இல்லையா…?

    நீங்கள் ஏன் இவர்களை குறைகூற மனம் இல்லாமல்,
    விஷயத்தை divert செய்கிறீர்கள்…?

    செம்மரம் நட்டு – வளர வளர வெட்டிக்கொண்டே
    இருந்தால் காடு எப்படி உருவாகும்…? அது மழையை
    உருவாக்க எப்படி உதவும் ?

    நெல் விளையும் பூமியில் – பண ஆசை காட்டி,
    செம்மரத்தை வளர்க்கச் சொல்வது உத்தமமான
    காரியமா ?

    இதை மக்கள் மத்தியில் விவாதிக்கச் செய்யவும்,
    இத்தகைய மோசடிகளை expose செய்யவும் –
    நமக்கு கடமை இருக்கிறது.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     கா.மை. சார்…. ஒரே வார்த்தை இவர்களைப் பற்றி… சுத்த வேஸ்ட். சுத்தமா தன்னை நம்பியவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது. நான் பிடதி காணொளிகள் பார்த்தேன். (நித்யானந்தா). உளறலுக்கு அளவே இல்லை. அப்புறம் இந்த கல்கி அவதார் (ஆந்திரா..800 கோடி). இதுமாதிரி இன்னும் நிறையபேர்… தமிழகத்தில். எப்படித்தான் இவங்க தொண்டரடிப்பொடிகள், அவங்கள்லாம் கைநாட்டு இல்லை… மெத்தப் படித்தவர்கள், அவங்க உளறல்களைக் கேட்டு கை தட்டறாங்க..கண்ணைமூடிக்கிட்டு, `அம்மா, குருவே, கடவுளே` என்று பஜனை செய்யறாங்க. இது என்ன மாதிரியான வசியம்னு தெரியலை. இவங்களைப் பற்றிப் பேசுவதே வேஸ்ட்.

     //தாங்களாகவே திட்டம் போட்டு மரம்/காடு வளர்த்த கதை// – இல்லை. ஆனால், அதீத அழுத்தத்தால் இருக்கும் ஏரிகளை இதுமாதிரி பாதுகாக்க முயல்கிறார்கள். ஃப்ளாட்கள் ரொம்பவும் பெருகிவிட்டன. அதனால் இனிமேல் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்ட அனுமதி தரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் (இது இருக்கும் குடியிருப்புகளை விற்பதற்கா என்ற சந்தேகமும் இருக்கு).

     நான் பீர்க்கங்காரணை ஏரியை மூடும் செயலைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினேன். பெங்களூரில், இருக்கும் ஏரிகளைச்சுற்றி மரங்கள்/பூங்காக்கள் வைத்து கிரில் கேட் முழுவதும் போட்டிருக்கிறார்கள் (நான் 4-5 ஏரிகள் பார்த்தேன்). மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தண்ணீருக்காக கஷ்டப்படும் நாம், இதில் கொஞ்சம்கூட கவனம் செலுத்தலையே என்ற ஆதங்கம்தான் என் பின்னூட்டம்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      நீங்கள் கெட்டிக்காரர் என்பதை மீண்டும்
      நிரூபிக்கிறீர்கள்.

      நித்யானந்தா பற்றி எழுதுகிறீர்கள்.
      கல்கி பற்றி எழுதுகிறீர்கள்…

      ஆனால் – ஜக்கி பற்றி, ஈஷா பற்றி …?
      இவர்களின் செம்மரம் வளர்ப்புத் திட்டம்
      என்னும் fraud பற்றி…?
      200 கோடி மரங்கள் பற்றி…?
      காவிரி ஆற்று நீரையும் காலி செய்வது பற்றி…
      நெல்லுக்கு பதில் செம்மரம் வளர்ப்பது பற்றி… ???

      வாழ்த்துகள்…!!!

      .
      -காவிரிமைந்தன்

 7. கண்ணன் சொல்கிறார்:

  புதியவன் சார்,

  //ஈஷாவை விடுங்கள். இவங்க இப்போ
  காவிரிக்காக ‘கூக்குரல்’ இடுவதையெல்லாம்
  நான் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
  அதனால இந்த சப்ஜெக்ட்லேர்ந்து அவங்களை
  விலக்குங்க.//

  அடிப்படையில், ஈஷா செய்யும் ஏமாற்று
  வேலைகளைப்பற்றியது தானே காவிரிமைந்தன்
  சாரின் இந்த கட்டுரையே ?

  சப்ஜெக்டே அவங்க தான் என்கிறபோது
  இந்த சப்ஜெக்டுலேந்து அவங்களை எப்படி
  விலக்க முடியும் ?

  // மரங்கள் நட்டு வளரும்போது அது மேலும்
  மழை பொழியச் செய்யும்.//

  சார் இந்த தத்துவம் எல்லாம் தெரியாத
  அளவிற்கு இங்கு யாரும் மடையர்கள் அல்ல.
  மரம் என்றால், காடு போல் அடர்த்தியாக
  வளர வேண்டும். அப்போது தான் மழை
  மேகம் எல்லாம்.
  செம்மரத்தை நட்டு விட்டு, அது வளர வளர
  வெட்டிக்கொண்டே இருந்தால் அது எப்படி
  மரக்காடு ஆகும் ?
  ஏன் சார் மரவெட்டிக்கு மன்னாடறீங்க ?

  கர்நாடகாவோ, பங்களூரோ நான் பார்க்காதவன்
  இல்லை. அவ்வளவு உணர்வு உள்ளவர்கள்,
  தமிழகத்தில் குடினீருக்கு பயன்படுத்தும் காவிரியில்
  பங்களூரிலிருந்து எவ்வளவு கெமிகல்களை
  கலந்துவிடுகிறார்கள் என்பதை நீங்கள்
  பார்க்கவில்லையா ? அதை கண்டித்தது உண்டா ?

  எல்லா மாநிலங்களிலும் நல்லதும் உண்டு.
  கெட்டதும் உண்டு. மக்களும் அப்படித்தான்.
  நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழர்களையும்
  எப்போதும் மட்டமாகத் தான் எழுதிக்
  கொண்டிருக்கிறீர்கள்.

  இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும்
  ஈஷா கூட்டம் செய்யும் “கூக்குரல்”
  மோசடியைப்பற்றி நீங்கள் ஏன்
  இன்னமும் எதுவும் கருத்து எதுவும் கூறவில்லை ?
  அவர்கள் செய்வதில் தவறேதும் இல்லையென்பது
  தான் உங்கள் அபிப்பிராயமா ?

  • புதியவன் சொல்கிறார்:

   காரணம் நான் மேல சொல்லியிருக்கேன். இதற்கு முன்னும் இந்தக் `கூக்குரல்` பற்றி எழுதியிருந்தேன். //செம்மரத்தை நட்டு விட்டு, அது வளர வளர வெட்டிக்கொண்டே இருந்தால் // – ஹா.ஹா… இவங்க சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு. Strangely நான் சமீபத்தில் வடக்கு நோக்கிச் செல்லும் இரயில் பிரயாணத்தில் ஏகப்பட்ட நிலங்களில் (இரயில் டிராக்குக்கு இரு புறம்) தேக்கு மரங்கள் நட்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு காலத்தில் `தேக்கு மரம் வளர்த்து லட்சாதிபதி ஆகுங்கள்`, `செம்மறியாடு`, `ஈமு கோழிகள்` என்ற விளம்பரம் இல்லாத தமிழ் பத்திரிகைகள் கிடையாது. அந்த ஃப்ராடுகளும் நினைவுக்கு வந்தன.

   /குடிதண்ணீரில் கெமிக்கல்/ – இது பெரிய சப்ஜெக்ட். நான் இதனை எழுதுவதைத் தவிர்க்கிறேன்.

 8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  மரம் வளர்ப்பது நல்லதுதான் .விவசாய நிலங்களை
  ஒழித்து மரம் வளர்ப்பது என்பதுதான் இடிக்கிறது .

  ஒன்றுமில்லாத ஆட்களை சினிமா நடிகரோ இல்லை
  சாமியாரோ பத்திரிகைகள் சகட்டு மேனிக்கு புகழ்ந்து
  தள்ளுகின்றன .
  கல்கி பகவான் சுத்த பிராடு என்று இப்போது நியூஸ் வருகிறது .
  இதில் மேலும் சாமியார்கள் சிக்கினால் தேவலை .

  மழை பெய்யும் போது அதை தேக்கி வைக்க வாய்க்கால் ,
  ஏரி குளம் என்று முன்னால் இருந்தது .

  குளத்திற்கோ ,வாய்க்கால்களுக்கோ பட்டா கிடையாது .
  ஆக்கிரமிப்பு செய்து பட்டா வாங்கிவிடலாம் .
  எல்லாமே சட்டப்படி நடக்கும் .

  இதில் நாலு கட்சிக்காரர்களோ ஒரு DRO வோ உள்ளே
  தூக்கி வைத்தால் தன்னால் அடங்குவார்கள் .

  சென்னையில் குளத்தில் கட்டிய வீடுகளை இடிக்க
  உய்ரநீதி மன்றம் உத்தரவு போட்டது .
  வீடு இடிந்தாலும் , வீடு வாங்கியவர்கள் பேங்க் லோன்
  கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.