அத்தனையும் நிஜமாகவே இருந்தாலும்…. ???


இன்றும், உலகில் மிகச்சிறந்த
பொருளாதார நிபுணர்களில் ஒருவர்..
மும்பையில் நேற்று பேசுகிறார்….
பல செய்திகளை.. ஆலோசனைகளை கூறுகிறார்….

——————————————–

ஒரு காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக
இருந்த மகாராஷ்டிரா மாநிலம் இன்று விவசாயிகளின்
தற்கொலைகளில் முன்னணி மாநிலமாக உள்ளது..
தொழிற்துறை மந்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட
மாநிலமாக மகாராஷ்டிராவும் மும்பையும் உள்ளது.

பணவீக்க விகிதம் குறைவாக இருக்க வேண்டும் என்ற
பிடிவாதத்தினால் விவசாயிகளின் துன்பம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகள்
விவசாயிகளின் வாழ்க்கையை மோசமாக்கி விட்டது.

நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி நான் கருத்துக் கூற
விரும்பவில்லை. ஆனால் பொருளாதாரத்தைச்
சரி செய்வதற்கு அது எதனால் இப்படி நசிந்துள்ளது
என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

பொருளாதாரத்தில் என்ன பிரச்சினை என்பதே
மத்திய அரசுக்கு தெரியவில்லை. மற்றவர்கள் சொல்வதை
கேட்கவும் தயாராக இல்லை….

தற்போதைய பொருளாதார மந்தம் மற்றும் அதை சமாளிக்க
திறமையற்ற அரசு ஆகியவை இணைந்து
இந்த நாட்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இன்றைய அரசு, குறைகளைத் தீர்ப்பதில் கவனம்
செலுத்துவதை விட, எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளைச்
சுமத்துவதில்தான் அதிக கவனம் செலுத்துகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி
மதிப்புக்கும் மேல் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி
செய்திருக்கிறது.

பல பகுதிகளிலும், சீன இறக்குமதி அதிகரிப்பு பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் மூன்றில்
ஒருவருக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது,

இந்த பிரச்சனைகளை சீக்கிரம், சரி செய்யாவிட்டால்,
நாட்டு மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும்.
எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுகிறார்களே தவிர –
பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. பிரச்சனைகள் என்ன என்று
தெரியாமல் இவர்களால் தீர்வு காணவும் முடியாது.

2024-ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன்
டாலரை எட்ட எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டுமெனில்,
ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 முதல் 12 விழுக்காடு வரை
இருக்க வேண்டும்

ஆனால் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும்,
வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

என்னுடைய ஆட்சிக்காலத்தில்
சில பலவீனங்கள் இருந்திருக்கலாம்.
ஆனால் எந்த அரசாக இருந்தாலும், எப்பேற்பட்ட
பொருளாதார பிரச்சினைகளாக இருந்தாலும், ஆட்சிக்கு வந்து
ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தீர்வு கண்டுபிடித்து,

தாராளமாக சரி செய்திருக்கலாம்.
இன்னமும் கூட – ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னரே
முடிந்து விட்ட ஐமுகூ ஆட்சிக்காலத்தை காரணம் காட்டி,
குற்றம் சுமத்த முடியாது.

————

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்
பிரிவை ரத்து செய்வதில், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக
பிரதமா் நரேந்திர மோடியும், இதர பாஜக தலைவா்களும்
பிரசாரம் செய்து வருகின்றனா்.

உண்மையில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா
நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது,
அதை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால்,
அந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நடந்து கொண்ட
விதத்தைத்தான் காங்கிரஸ் எதிர்க்கிறது.சிறப்பு அந்தஸ்தை
ரத்து செய்ததில் மத்திய பாஜக அரசு அடக்குமுறையைக்
கையாண்டது.

———–

மத்திய பாஜக அரசின் ஆட்சியில் முன்னெப்போதும்
இல்லாத அளவில் அதிகாரம் பெற்ற அமைப்பாக
அமலாக்கத் துறை செயல்படுகிறது. ஆனால்,
அந்த அமைப்பை அரசியல் பழிவாங்கும் செயல்களுக்காகப்
பயன்படுத்தப்படக் கூடாது.

————

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா,
முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரானது. இவ்வாறு
பிரிவினைவாத நோக்கத்துடன் ஒரு மசோதா கொண்டு
வரப்பட்டது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை.

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி)
கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, முஸ்லிம்கள் விடுபட்டு
விடுவார்கள் என்று பாஜக எதிர்பார்த்தது….

ஆனால், இந்திய குடியுரிமையை நிரூபிக்க
இயலாத 19 லட்சம் பேரில்
12 லட்சம் போ் வங்கதேசத்தைச் சோ்ந்த ஹிந்துக்கள்.
எனவே, என்ஆா்சி விவகாரத்தை மனிதநேய அடிப்படையில்
அணுக வேண்டும்.

———–

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ்
பங்கேற்றதை நாடே அறியும். ஆனால், அந்தப் போராட்டத்தில்
பாஜகவும், அதன் சார்பு அமைப்பான ஆா்எஸ்எஸ் அமைப்பும்
பங்கேற்கவில்லை என்பதே உண்மை.

——————————————————————————-

…………………

-முன்னாள் பிரதமரும், மிகச்சிறந்த பொருளாதார
நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங் கூறுபவை
நூற்றுக்கு நூறு சரியானவையாக இருக்கலாம்.

ஆனால், நாட்டின் தலைமை நிர்வாகியின் பொறுப்பில்
இருந்துகொண்டு – ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின்
இரண்டாவது பகுதியில் நடந்த மிக மிக மோசமான
பல ஊழல்கள் அத்தனையும் இவர் கண்டுகொள்ளாமல்
விட்டதும்,

கண்டித்து, சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த இவர் –
அத்தனை முறைகேடுகளுக்கும் ஒரு மௌனமான
சாட்சியாக இருந்ததாலும் –

இன்று, எந்த அளவிற்கு நேர்மையான, வெளிப்படையான,
அவசியமான ஆலோசனைகளை கூறினாலும் –
யார் கேட்கப்போகிறார்கள்…?

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to அத்தனையும் நிஜமாகவே இருந்தாலும்…. ???

 1. புவியரசு சொல்கிறார்:

  ம.மோ.சிங் UPA கூட்டணி கட்சிகள் செய்த ஊழல்களை
  அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது அவர் செய்த
  மிகப்பெரிய தவறு. அதன் விளைவாகவே இன்று
  சுயமரியாதையை இழந்து நிற்கிறார். இருந்தாலும் கூட
  அவர் சொல்லும் உண்மைகளை இன்று நாம் பரிசீலனை
  செய்தாக வேண்டிய கட்டத்தில் தான் இருக்கிறோம்.
  அவர் இப்போது சொல்வதில் பலவும் உண்மையே.

 2. புதியவன் சொல்கிறார்:

  பொருளாதாரப் பிரச்சனையை பாஜக சரி செய்யவில்லை. அது சீரழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் அரசு, பொருளாதாரத்தைப் பற்றி ஒரு அக்கறையும் காட்டியமாதிரித் தெரியலை. ஏதோ எல்லாம் நல்லா நடந்துகொண்டிருந்தது, இந்திய கருப்புப்பணம் வெளிநாட்டுக்குப் போய் அங்கிருந்து முதலீடாக இங்கு வந்துகொண்டிருந்தது. ஐஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் பத்தாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனார்கள். ஐம்பது கோடி என்று சொத்துவைத்திருந்த ஜெகத்ரட்சகன்கள் 25,000 கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆனார்கள். ஆனால் பாஜக செய்த டிமானிடைசேஷன், பெரிய பிரச்சனையைக் கொண்டுவந்திருக்கிறது. ஜி.எஸ்.டி கருப்புப் பணத்தை ஓரளவு குறைத்து வெளிப்படைத் தன்மை கொண்டுவந்தாலும், அதனாலும் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றைச் சரிசெய்ய பாஜக அரசு முனையவேண்டும்.

  //சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் மத்திய பாஜக அரசு அடக்குமுறையைக்
  கையாண்டது// – இதில் என்ன தவறு இருக்கிறது? மன்மோகன் சிங் அரசு மாதிரி பொம்மையாக தலையாட்டவேண்டும், மும்பை கலவரத்தில் ஒரு வினையும் ஆற்றாமல் ‘எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன’ என்று இருந்ததுபோல் பயந்துகொண்டு இருக்கணும், கசாப் மற்றும் பல தீவிரவாதிகளை சிறையில் பலவருடங்கள் போட்டு, தேர்தல் சமயத்தில் தீர்த்துக்கட்டணும் என்ற மன்மோகன் சிங் அரசின் பாலிசியை மத்திய பாஜக ஏன் பின்பற்றவேண்டும்?

  /ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் இரண்டாவது பகுதியில் நடந்த// – முதல் பகுதியில் நடந்த கூத்துகளை அதற்குள் மறந்துவிடலாமா? கைநாட்டு டி.ஆர். பாலு பிரதமமந்திரியை மதிக்காமல் பேசியதனால்தானே அடுத்த ஐந்தாண்டு ஆட்சி வரும்போது டி.ஆர்.பாலு அமைச்சராகக்கூடாது என்று மன்மோகன் சிங் கட்டாயப்படுத்தினார்.

  //இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை நாடே அறியும். ஆனால், அந்தப் போராட்டத்தில் பாஜகவும், அதன் சார்பு அமைப்பான ஆா்எஸ்எஸ் அமைப்பும் பங்கேற்கவில்லை// – இதில் ஓரளவு உண்மை இருக்கு. இருந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸுக்கும், இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், ‘கரண்டிக்கும்’ ‘பாதாள கரண்டிக்கும்’ உள்ள ஒற்றுமைதானே. அதை இவர் குறிப்பிட்டிருக்கலாமே. ஏதோ சுதந்திரம் வாங்கித்தந்த காங்கிரஸ்தான் இப்போது உள்ள காங்கிரஸ் என்பதுபோல் பேசுகிறாரே. விட்டால், சுதந்திரப்போராட்ட வீரர்தான் சோனியா என்று இந்த அடிமை சொல்லுவார் போலிருக்கு. தமிழகத்தில் திமுக, தி.க போன்றவர்கள் (அதாவது இந்தக் கட்சியில் இருந்த-அப்போது இந்தக் கட்சிகள் உதயமாகவில்லை) சுதந்திரம் வேண்டாம், தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி என்றெல்லாம் பேசியவர்கள்தானே. சுதந்திரத்திற்குப் பிறகும், தமிழ்நாட்டையும், இந்திய நாட்டையும் காட்டிக்கொடுத்தவர்கள்தானே கருணாநிதியும் வை.கோ போன்றவர்களும். இந்த தேசத்துரோகத்துக்குத்தானே கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அத்தகையவர்களோடுதானே கூட்டுச் சேர்ந்து மன்மோகன் சிங் பிரதமராக இருக்க முடிந்தது.

  //அமலாக்கத் துறை செயல்படுகிறது. ஆனால், அந்த அமைப்பை அரசியல் பழிவாங்கும் செயல்களுக்காகப்// – மேல் தளத்தில் கழுத்தில் கைவைத்து சீட் பேரம், கீழ்த்தளத்தில் தயாளு அம்மாவை சிபிஐ நெருக்கியது. இதெல்லாம் அந்த அந்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட வைத்தபோதா என்றும் மன்மோகன் சிங் கூறியிருக்கலாம். காங்கிரஸ் என்ன செய்ததோ அது இப்போது அவர்களைத் தாக்கும்போது, தனக்கு பிரதமர் பதவி கொடுத்த நன்றியுணர்ச்சியினால் மன்மோகன் சிங் அவர்கள் இப்போது இப்படிப் பேசுகிறார்.

 3. Ramnath சொல்கிறார்:

  6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே காங்கிரஸ்
  ஆட்சி முடிந்து விட்டது. இன்னமும் அவர்களை
  குறை சொல்லி பாஜக அரசு தப்பிக்க முனைவது
  சரியல்ல.இப்போது பேச வேண்டியது தற்போது நடந்து
  கொண்டிருக்கும் ஆட்சியைப்பற்றி தான்.

  ஒருவன் தனக்கு வியாதி இருக்கிறது என்பதை
  ஒப்புக்கொண்டால் தானே, மருந்துகள் உட்கொள்ள
  ஒப்புக்கொண்டால் தானே அவனுக்கு மருத்துவ
  ஆலோசனை சொல்ல முடியும் ?
  படுமோசமான வியாதியால் பீடிக்கப்பட்டிருப்பவன்
  நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறென் என்று
  சொல்லிக் கொண்டிருந்தால் ?
  எழுந்து நிற்கவே சக்தி இல்லாதவன் நான் 800 மீட்டர்
  ஓட்டப்பந்தயத்தில் ஓடப்போகிறேன் என்று சொன்னால் ?
  மத்திய அரசு முதலில் பிரச்சினையை புரிந்து கொள்ள
  வேண்டும்.

  பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள
  வேண்டும். அவற்றை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
  வெத்து சவடால் விட்டுக்கொண்டே இருந்தால்,
  மக்கள் பொறுத்து பார்த்து விட்டு, ஒரு அளவிற்கு மேல்
  போகும்போது தூக்கி கடாசி விடுவார்கள்.
  சும்மா சும்மா பழைய ஆட்சியையே காட்டிக்கொண்டிருந்தால்,
  நீ 6 வருடமாக என்ன பிடுங்கிக் கொண்டிருந்தாய்
  என்று தான் கேட்பார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராம்நாத்,

   உண்மை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியை குறை
   சொல்லிக்கொண்டு இப்போதைய ஆட்சி தப்பி விட முடியாது.

   நிஜத்தை,
   பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கும்
   நிதர்சனத்தை -புரிந்துகொண்டு
   சரியான உடனடி நிவாரணங்களை (REMEDIES)
   தேடிச் செயல்படுத்த வேண்டியது
   மிக மிக அவசியம்… மிக மிக அவசரம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Raghuraman சொல்கிறார்:

  Dear KM sir.

  According to me, he is the only Indian PM who showed that President office more powerful.

  In most cases, better workers do not become better leaders. He is the second person to prove after VP Singh. Both were good as FMs but not as PMs.

  Also please note that these comments do not give any credit to the current office bearers.

  Regards.
  Raghuraman

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரகுராமன்,

   உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.1991-ல்
   ம.மோ.சிங், நிதியமைச்சராக அமைந்தது
   நம் நாட்டிற்கு கிடைத்த வரப்பிரசாதம்.
   அவரது (இந்தியாவுக்கு) புதிதான நிதிக்கொள்கைகளை
   செயல்படுத்த மறைந்த பிரதமர் நரசிம்ம ராவ்
   அவர்கள் அனுமதித்தது அவரது தன்னம்பிக்கையை
   காட்டியது.

   ஆனால், பொருளாதார நிபுணரான, ம.மோ.சிங்
   தனக்கு சற்றும் பொருந்தாத அரசியல் பதவியான
   பிரதமர் பதவியை ஏற்றது தான் அவரது
   வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம்.

   இப்போதும், ம.மோ.சிங் மீது எனக்கு ஒருவித
   அனுதாபமே இருக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  UPA II was one of the worst governments, in terms of corruption and the way Congress leaders like Dig Vijay Singh, Kapil Sibal etc spoke about those in public….. But we should also note the whole world faced recession during 2008 and we should really appreciate the way Indian Banking system protected our country….. Now world is not facing any recession like it was in 2008. There is a slowdown, but no recession. But all Indian banks are facing troubles. This shows that the real trouble is with the people who are handling issues.

  Moreover, BJP was in power for a full five year term with full majority. Even after that, if they blame Congress, that does not look professional.

 6. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I would like to know your comments and opinion about Mr.Savarkar.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   சவர்க்கர் துவக்க காலங்களில், பால கங்காதர
   திலகரின் சீடராக இருந்தவர்.

   இந்தியாவிலும், லண்டனிலும் அவர் பிரிட்டிஷ்
   அரசுக்கு எதிராக நிகழ்த்திய சாகசங்கள் அற்புதம்.
   அசாத்திய துணிச்சல்… நெஞ்சுறுதி கொண்டவராக
   இருந்தார்.

   சவர்கார் பிரிட்டிஷாருக்கு எதிராக,
   இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு,
   50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு
   அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு,
   அனுபவித்த கொடுமைகளைப் படித்தபோதும்,
   பின்னர் திரைப்படங்களில் பார்த்தபோதும்,
   மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.
   11 வருட சிறைவாசத்திற்குப் பிறகு மன்னிப்பு
   கடிதம் எழுதிக் கொடுத்ததன் பேரில்,
   சில நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார்.

   இது வரையிலான அவரது வாழ்க்கைக்காக
   நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவரது
   துணிச்சலையும், தியாகத்தையும் கண்டு
   வியக்கிறேன்.

   ஆனால் அவரது பிற்கால வாழ்வு,
   தீவிர இந்துத்வா கொள்கைகளுக்காக உழைப்பதில்
   செலவிடப்பட்டது… இங்கே நான் வித்தியாசப்படுகிறேன்…

   அவரது தீவிர இந்துத்வா கொள்கைகள்
   நாட்டின் ஒற்றுமையை குலைக்கவே உதவின.
   1966ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கபூர் கமிஷனின்
   அறிக்கையின்படி, அவருக்கும் காந்திஜியை
   கொலை செய்யும் திட்டத்தில் பங்கு இருந்தது
   என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

   ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து
   இந்த மண்ணில் பிறந்த அனைவரும் ஒற்றுமையுடன்
   இங்கு வாழ வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

   எனவே, அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் –
   அவரது நடவடிக்கைகளை என்னால் பாராட்ட
   முடியவில்லை.

   சவர்க்கர், அவரது தியாகங்களுக்காக நிச்சயமாக
   ஏற்கெனவே, இந்திய அரசால் (காங்கிரஸ் ஆட்சியிலேயே)
   உரிய முறையில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
   அவரை இந்திய அரசு புறக்கணித்தது என்று
   பிரச்சாரம் செய்வது தவறானது.

   இப்போது பாஜக இந்த விஷயத்தை கையில்
   எடுத்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் ரீதியானது.
   முக்கியமாக மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற
   தேர்தலுக்கானது… அவ்வளவே.

   நீங்கள் கேட்டதற்காக, என் மனதில் உள்ளதை
   இங்கே அப்படியே வெளிப்படையாகச் சொல்லி
   இருக்கிறேன். மற்றபடி, இந்த சமயத்தில், இதைப்பற்றி
   நான் பேச விரும்பவில்லை.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. புவியரசு சொல்கிறார்:

  நாட்டின் பொருளாதார நிலை குறித்து
  நிதியமைச்சரின் கணவரும் பொருளாதார நிபுணருமான
  பரகலா பிரபாகர் கூறியுள்ள கருத்துகள்.

  ————-
  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், பொருளாதார நிலை குறித்து கவலை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தினை மேம்படுத்த புதிய கொள்கைகளை வகுக்க விருப்பம் காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

  தெளிவான கொள்கை இல்லை மேலும் நேருவின் சோசியலியத்தை விமர்சிப்பதற்கு பதிலாக, பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதற்கு வழி வகுத்த, ராவ், சிங்கின் பொருளாதார மாதிரியை பாஜக பின்பற்ற வேண்டும் என்றும், தி இந்து பத்திரிக்கைக்கு அளித்துள்ள ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  மேலும் பாஜகவுக்கு தெளிவான பொருளாதார கொள்கை என்றும் எதுவுமே இருந்தது இல்லை என்றும், இது தனது கொள்கை இல்லை எனக் கூறிவரும் பாஜக, இதுவரை அதன் நிலையான கொள்கை இது தான் என்று தெளிவுபடக் கூறியதும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

  நாட்டின் மிகப்பெரிய ஆளும் கட்சியாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்தாலும், இது நாட்டில் அதிகப்படியான வாக்குகளை பெற்று, பல இடங்களில் வெற்றி பெற்றாலும், பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார கொள்கைகளினால் அது வெற்றி பெறவே இல்லை. அதை தற்போது வரை பாஜக உணர்ந்ததும் இல்லை என்றும் சாடியுள்ளார்.

  மேலும் நேருவின் பொருளாதாரக் கொள்கைகளை இது வரை பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக விமர்சித்து வருகிறது. இந்த தாக்குதல் அரசியல் தாக்குதலாக உள்ளது. அரசியல் கொள்கைகள் வேறு, பொருளாதார கொள்கைகள் வேறு என்பதைக் கட்சியின் சிந்தனையாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

  பொருளாதாரத்தினை சரிசெய்ய இது தான் சரியான நேரம் மேலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியைப் போல், முன்பு ஏற்பட்ட போது ராவ் மற்றும் மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக முன்வர வேண்டும் என்றும், தற்போது நீரில் மூழ்கும் கப்பலைப் போல் உள்ள உள்ள இந்தியப் பொருளாதார நிலையைச் சீர் செய்ய இதுவே சரியான நேரம் என்றும் பரகலா கூறியுள்ளார்.

  https://tamil.goodreturns.in/news/2019/10/14/fm-nirmala-sitharaman-s-husband-parakala-prabhakar-said-the-bjp-should-adop/articlecontent-pf82228-016400.html

 8. Subramanian சொல்கிறார்:

  பரவாயில்லையே. திரு.பரகலா பிரபாகர்
  வெளிப்படையாக பேசி இருக்கிறாரே.
  பாராட்டிற்குரியவர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.