திமுக, அதிமுக குறித்த சில தமாஷான விவரங்கள் …!!!

அகில இந்திய அளவில், அரசியல் கட்சிகளின்
வரவு – செலவு கணக்குகள் குறித்து “ஜனநாயக
சீர்திருத்தச் சங்கம்” என்கிற அரசு சாரா அமைப்பு ஒன்று,
ஒவ்வொரு ஆண்டும், ஆய்வறிக்கையை வெளியிட்டு
வருகிறது.

2016-17, 2017-18 நிதியாண்டுகளில் –
மாநிலக் கட்சிகளின் சொத்துக்கள் மற்றும்
தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை
ஆகியவற்றில் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்களின்
அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மொத்தம் 41 அரசியல் கட்சிகளின் சொத்துக்கள்
தொடர்பான விவரம் இடம் பெற்றுள்ளது. கட்சியின்
அசையா சொத்துக்கள், கடன், வைப்புத் தொகைகள்,
முதலீடுகள் ஆகியவை அனைத்தும் இதில் அடங்கும்.

இந்த அறிக்கையை தமிழ்நாட்டு நிஜ நிலவரங்களின்
பின்னணியில் ஆராய்ந்தால், சிரிப்புத்தான் வருகிறது….!!!

அரசியல் கட்சிகளின் நிஜத்துக்கும், அவை அரசுக்கு
சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கும் இடையே நிலவும்
மகத்தான வித்தியாசங்கள் பளீரென்று கண்களை
உறுத்துகின்றன…

583.29 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நாட்டிலேயே
மிகப்பெரிய பணக்கார மாநிலக் கட்சியாக சமாஜ்வாதி
உள்ளது. இதில் நமக்கு அக்கறை இல்லை என்பதால்,
மேற்கொண்டு எதுவும் எழுதாமல் விட்டு விடுவோம்.

நமது அக்கறை இதையடுத்து 2-ம் இடத்தில் உள்ள
திமுக மற்றும் 3-ம் இடத்தில் உள்ள அதிமுக ஆகியவை
மீது மட்டும் தான்.

முதலாவது தமாஷ் –

இந்தப் பட்டியலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக
இரண்டாவது இடத்திலும், ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக
மூன்றாவது இடத்திலும் இருப்பது தான்.

திமுகவின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.191.64
கோடி தானாம்….. 40,000 கோடி என்று பரவலாகப் பேசப்பட்டு
வரும் மொத்த சொத்துக்களின் அதிகாரபூர்வமான மதிப்பு
மொத்தமே 191 கோடி தான் என்பது எந்த அளவிற்கு
நம்புதற்குரியது…?

இதே போல், கிட்டத்தட்ட கடந்த 8 ஆண்டுகளாக
தமிழ்நாட்டின் ஆளும்கட்சியாக உள்ள அதிமுக-வின்
மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.189.54 கோடி மட்டும்
தானாம். அதிமுக-வின் சொத்து மதிப்பு அந்த ஆண்டவனுக்கே
தெரிந்திருக்க முடியாதே…!!!

நிஜத்துக்கும், காகிதங்களில் தரப்படும்
கணக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்க வைக்கிறது.

இரண்டாவது தமாஷ் –

சென்ற 2016-17- ஆம் ஆண்டில் 3-ஆம் இடத்தில் இருந்த
திமுக 17-18 -ல் – 2-ஆம் இடத்தில் இருந்த அதிமுகவை
தள்ளி விட்டு, தான் முன்னுக்கு வந்திருக்கிறது.

அதிமுக, 2-ஆம் இடத்திலிருந்து, 3-ஆம் இடத்திற்கு
இறங்கிப் போயிருக்கிறது…!!!

இவை நிஜமா என்று கேட்காதீர்கள்…
இவையனைத்தும் அறிக்கை சொல்லும் உண்மைகள் …!!!

மூன்றாவது தமாஷ் –

பாமக -வின் மொத்த சொத்து மதிப்பே
2.59 கோடி தானாம். அதுவும் 16-17-ல் 2.63 கோடியாக
இருந்தது இப்போது 2.59 கோடியாக குறைந்து விட்டதாம்.

நான்காவது – கடைசி தமாஷ் –

பிரேமலதா-விஜய்காந்த் ஆகியோரின் தேமுதிக-வின்
மொத்த சொத்து மதிப்பு –

16-17-ல் 67.7 லட்சமாக (லட்சம் – கவனிக்கவும்…)
இருந்து, 17-18-ல் 87 லட்சமாக உயர்ந்திருக்கிறது..!!!!

இந்த தகவல்கள் எல்லாம் நிஜமென்று
மக்கள் நம்புவதற்காக கொடுக்கப்படவில்லை….
இந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் எவ்வளவு ஓட்டைகள்
நிறைந்தவை…இந்த மாதிரி சட்டங்களை எல்லாம்
எந்த அளவிற்கு, சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதைக்
நிரூபிக்கவே தரப்படுகின்றன என்றே தோன்றுகிறது.

இன்று போல் என்றும் வாழ்க ஜனநாயக சடங்குகள் …!!!

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to திமுக, அதிமுக குறித்த சில தமாஷான விவரங்கள் …!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  இரண்டு கட்சிகளும் ஆளுக்கு 25 ஆண்டுகளாவது
  ஆண்டிருக்கின்றன. சொத்து விவரங்கள்
  நம்பக்கூடியதாகவே இல்லையே. கடமைக்கு வாங்கி
  ஃபைல் பண்ணி வைத்து விட்டார்கள் போலிருக்கிறது.
  இவையெல்லாம் புள்ளி விவரங்களுக்கு மட்டும் தான் உதவும்.
  நிஜமே வேறு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.