அசிங்கமான தேர்தலும், சொரணை கெட்ட அதிகாரிகளும்….நேற்றிரவு வெளியான ஒரு செய்தியிலிருந்து
சில பகுதிகள் கீழே –

இடைத் தேர்தலை எதிர்கொள்ளும் விக்ரவாண்டி
தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின்,
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும்
முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்
பிரச்சாரம் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த
நிலையில் இன்று அக்டோபர் 14 அதிகாலை முதல்
திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம்
பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது.

தொகுதிக்குள் பணம் வினியோகம் செய்யும் பொறுப்பை
மாவட்ட செயலாளரான பொன்முடியிடம் தராமல்
எ.வ.வேலுவிடம் ஸ்டாலின் கொடுத்துள்ளார்…
இந்நிலையில் ஸ்டாலின் பிரச்சாரம் முடிந்த நிலையில்
நேற்று இரவே தொகுதியில் உள்ள அனைத்து
ஒன்றியங்களிலும் திமுகவின் பணம் பொறுப்பான
ஆட்கள் மூலம் லேண்ட் ஆகிவிட்டது.

வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு லோக்கல்
ஒன்றிய திமுக வினர் இருவர், வெளியூர் திமுகவினர்
இருவர், மத்திய மாவட்ட திமுக சார்பில் இருவர் என
ஆறு நபர்களை கொண்டு பணப்பட்டுவாடா குழு
அமைக்கப்பட்டது.இந்தக் குழு நேற்று இரவே தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட பூத்களில் உள்ள வாக்காளர் பட்டியலை
சரிபார்த்து தயாராக வைத்துக் கொண்டது.

இன்று அதிகாலை ஐந்து மணி முதல் திமுகவுக்கு
வாக்களிக்கும் வாக்காளர்கள், திமுக சார்பாக பொதுமக்கள்
என தேர்ந்தெடுக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு பணப்
பட்டுவாடா தொடங்கிவிட்டது. இன்று இரவுக்குள்
பணப் பட்டுவாடாவை முடித்துவிடுவோம் என்கிறார்கள்
திமுக நிர்வாகிகள்.

அதிமுக எவ்வளவு கொடுக்கப் போகிறது என்பதோ,
எப்போது கொடுக்கப் போகிறது என்பதோ தெரியாத
நிலையில் திமுக இப்படி முந்தி கொண்டதன் காரணம்
என்ன என பணப்பட்டுவாடா குழுவில் இருந்த சிலரிடம்
பேசினோம்.

“பொதுவாகவே கிராமங்களில் முதலில் யார் பணம்
கொடுத்தார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இரண்டாவதாக
கொடுத்தவர்கள் அதிகமாக கொடுத்திருந்தால் கூட முதலில்
தங்களை நாடி வந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள்
யோசிக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஒரு வாரம் அவகாசம்
இருக்கும் போதே பணப்பட்டுவாடா செய்வதன் மூலம்,
பணம் கொடுக்க விடுபட்டிருந்தால் அவர்களைக் கண்டறிந்து
இன்னும் சில நாட்களில் கொடுத்து விடலாம்.

கடைசி நேரத்தில் பணம் கொடுப்பதன் மூலம் விடுபட்ட
வாக்காளர்களுக்கும் தரமுடியவில்லை. நிர்வாகிகளிடமும்
கணக்கும் கேட்க முடியாது. வெளியூர் நிர்வாகிகள்
கொடுத்தது தான் கணக்கு. இந்த மூன்று காரணங்களால்
திமுக பணப்பட்டுவாடா வில் முந்திக் கொண்டது”
என்கிறார்கள்.

(https://minnambalam.com/k/2019/10/14/32/dmk-distributing-money-vikkravandi-byelection)

இந்த செய்தியை, இதுவரை தேர்தல் தொடர்புடைய யாருமே
மறுக்கவில்லை.

——————————

திமுக பட்டுவாடா முடிவடைந்து விட்டது…
அடுத்து அதிமுக பட்டுவாடா துவங்கி அதுவும் செவ்வனே
நடைபெறும். இவர்கள் கொடுத்ததைப் போல் அவர்கள்
இரண்டு மடங்காக கொடுத்தாலும் அதிசயப்படுவதற்கில்லை…
“ஆளும்” கட்சி ஆயிற்றே…!!!

தேர்தல்கள் – எந்தவித முறைகேடும் நடவாமல்,
நேர்மையாகவும், நியாயமாகவும், நடைமுறை
சட்டவிதிகளின்படி நடைபெறுவதையும் உறுதி செய்யும்
பொறுப்பு, இந்திய அரசியல் சட்டத்தால், தேர்தல் கமிஷன்
வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


மத்திய அரசோ, மாநில அரசோ –
ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சிகளோ – வேறு எந்தவித
அமைப்புகளும் தேர்தல் கமிஷனின் அதிகாரத்திலும்
செயல்பாடுகளிலும் குறுக்கிட முடியாது.

தேர்தல் சமயத்தில் – காவல் துறையும் தேர்தல் கமிஷனின்
கண்காணிப்பில் தான் இயங்கும்.

தேர்தலில் நிதி முறைகேடுகள் நடைபெறாவண்ணம்
கண்காணிக்க, வருமான வரி இலாகா அதிகாரிகளும்,
அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், பிரத்தியேகமாக
நியமிக்கப்படுகிறார்கள்.

இதைத்தவிர, வெளிமாநிலங்களைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ்
அதிகாரிகள் பார்வையாளர்களாக தேர்தல் கமிஷனால்
நியமிக்கப்படுகிறார்கள்.

இத்தனை கண்காணிக்கும் அமைப்புகளும்,
கண்காணிப்பாளர்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது,
மேற்படி பணப்பட்டுவாடாக்கள் எப்படி நடைபெறுகின்றன…?

அரசியல்வாதிகள் – அசிங்கப்படுத்தவோ, அசிங்கப்படவோ –
அஞ்ச மாட்டார்கள்; பிடிபட்டால் வெட்கப்படவும் மாட்டார்கள்.

ஆனால், அதிகாரிகளுக்கு என்ன ஆயிற்று….?
மாநில அரசு அதிகாரிகளை விடுங்கள்…
மத்திய அரசு அதிகாரிகளுக்கு என்ன ஆயிற்று…?
வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவுத் துறை
அதிகாரிகளுக்கு என்ன ஆயிற்று…?
இவை அனைத்தையும் இயக்கும், மேற்பார்வையிடும் –
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கும்,

– அவர்களை கண்காணிக்கும் /மேற்பார்வையிடும்
தலைமை தேர்தல் கமிஷனுக்கும் என்ன ஆயிற்று….?

ஒரு பத்திரிகையாளருக்கு கிடைத்திருக்கும் தகவல் கூட
இவர்கள் யாருக்கும் கிடைக்கவில்லையா…? அப்படியானால்,
இவர்கள் எந்த லட்சணத்தில் பணியாற்றுகிறார்கள்.
முதலில் கிடைக்காவிட்டாலும், ஒரு செய்தித்தளத்தில்
இந்த செய்தி வெளியான பிறகாவது யாராவது செயலில்
இறங்கினார்களா…?

அத்தனை பேருமே எருமை மாட்டின் மீது
எண்ணை மழை பெய்வது போல் இருந்தால் எப்படி….?

சம்பந்தப்பட்ட எவருக்குமே மனசாட்சி இல்லையா…?
தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லையே என்று
இதில் ஒருத்தருக்கு கூட மனசாட்சி உறுத்தவில்லையா…?

அத்தனை பேருமா ஊழல் சாக்கடையில் உருளும்
பன்றிகளாகி விட்டார்கள்…?

என்ன கேவலம் இது…?
சாக்கடையாகி விட்ட இந்த நிர்வாகங்களை
யார் சுத்தப்படுத்தப்போவது…?

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அசிங்கமான தேர்தலும், சொரணை கெட்ட அதிகாரிகளும்….

 1. Subramanian சொல்கிறார்:

  பாத்து பாத்து மரத்துப் போச்சு சார்.
  இதையெல்லாம் மாற்றவே முடியாது.
  சகிச்சுக்க பழகிக்குங்க.

 2. Subramanian சொல்கிறார்:

  அம்மணக்காரங்க நெறைஞ்ச ஊர்ல
  கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்.
  நீங்க பைத்தியக்காரன் பட்டம் கட்டிக்கணுமா ?

 3. Narayanan Krishnan சொல்கிறார்:

  பணத்தை கொடுத்து வெற்றி பெரும் கட்சிகள் தொலைக்காட்சியில் அமர்ந்து இது கொள்கைக்கு கிடைத்த வெற்றி, இது பெரியார் பூமி, அம்மா வழி நடக்கும் அரசுன்னு பீல உடுவானுங்க பாரு. இதையெல்லாம் வெறுமனே கடந்து போகக்கூடாது. கண்காணிப்பு அதிகாரிகளை தூக்கி குப்பையில் வீசினால் நல்லது நடக்கும்.

 4. M SEKHAR சொல்கிறார்:

  இந்தத் தளத்தில் வரும் பதிவுகளும் வாசகர்களும் கிணற்றுத் தவளைகளாக இருக்கவிரும்பாமல் தமிழ்நாட்டை மட்டும் சாராத மற்ற மாநில மற்றும் மத்திய அரசு விவரங்ளையும் விவாதிப்பவர் என்பதால் கேட்கிறேன்: இந்த வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்குக்கு இவ்வளவு பணம் என்பது தமிழ் நாட்டில் இருப்பதை போல இல்லை என்று தோன்றுகிறது. ஒரு குழுவுக்கு//சேரிக்கு/பகுதிக்கு/ஜாதிக்கு அதன் opinion leaderக்கு பணமோ, பொருள்களோ கொடுப்பது இருந்தாலும், நம் ஊரில் இருப்பது போல் ரேஷன் காரடைப் பார்த்து தலைக்கு இவ்வளவு என்று பேசி, சாமி படத்தின் மேல் சத்தியம் போல வாங்கி கொடுப்பது இங்கு மட்டும்தான் என்று தோன்றுகிறது. வேறு மாநில மக்களி டம் கேக்கும் போ து இப்படி இல்லை என்று கூறுகிறார்கள், ஒன்று: நடுத்தர மக்களுக்கு தெரியாமல் நடக்க வேண்டும்(ஏனென்றால் நாம் அவர்களிடம் கேட்பது தான் அதிகம்) அல்லது ஊடகங்களில் விவாதம் ஹேஷ்யம் துவங்கவில்லை. அல்லது இவ்வளவு organised way நடப்பதில்லை. எது சரி?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.