விவிஐபி விசிட்……!!!


அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா அவர்கள் இருந்தபோது,
அவர் உள்நாட்டிலேயே மேற்கொண்ட ஒரு பயணம் பற்றிய
காணொளிக்காட்சி ஒன்றைப் பார்த்தேன். அந்த காணொளியை
கீழே பதிந்திருக்கிறேன்.

ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, கார் வரை
நடந்து சென்று மேற்கொண்டு பயணிக்கிறார். இங்கே பொதுமக்கள்
யாருமே சம்பந்தப்படவில்லை. இருந்தாலும் கூட எந்த
அளவிற்கு சீரியசாக பாதுகாப்பு ஏற்பாடுகளை
மேற்கொள்கிறார்கள் பாருங்கள்.

நிறைய ஹெலிகாப்டர்கள் ஒன்றின்பின் ஒன்றாக
வந்துகொண்டே இருக்கின்றன. ஜனாதிபதி எதில் வருகிறார்
என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதே போல், ஏகப்பட்ட கார்கள் நின்றுகொண்டிருக்கின்றன.
அவர் எதில் ஏறிச்செல்லப்போகிறார் என்பதையும் நம்மால்
லேசில் யூகிக்க முடியவில்லை…

அடுத்த சில நாட்களில் சென்னையில் ஒரு விசேஷமான
நிகழ்வு நடைபெறவிருக்கிறது. உலகம் பூராவிலும் உள்ள நாடுகள்
இதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.


ஆனால், வீடியோவில் உள்ளதைப் போல், இந்த தரையிரங்கல்,
ரகசியமாக இருக்காது. சீன ஜனாதிபதி சென்னை
விமான நிலையத்தில் வந்திறங்கும்போது, அவருக்கு
அமர்க்களமான வரவேற்பு காத்திருக்கிறது. வழக்கத்திலிருந்து
மாறுபட்டு விமான நிலையத்திலேயே வரவேற்புடன் கூடவே
கலைநிகழ்ச்சிகள் எல்லாம் உண்டு.

சென்னையிலும், மாமல்லபுரத்திலும்,
பாரத பிரதமரும், சீன ஜனாதிபதியும் கலந்துகொள்ளும்
நிகழ்ச்சிகளை நேரடித் தொலைக்காட்சியில் காட்ட உலகளவில்
மீடியாக்கள் எல்லாம் சென்னையில் வந்து குவிகின்றன.

தமிழ்நாடு, சென்னை, மாமல்லபுரம் – 2-3 நாட்களுக்கு,
அகில இந்திய அளவிலான தொலைக்காட்சிகளிலும் அதிகம்
பேசப்படப்போகும் விஷயமாக இருக்கும்.

தமிழக தொலைக்காட்சி சேனல்களுக்கு இதில் தனி
பொறுப்பு இருக்கிறது. மாமல்லபுரமும், சென்னையும் –
தன்னாலேயே விளம்பரம் பெற்று விடும். கூடவே,
தமிழகத்தில் உள்ள மற்ற சிறப்பான சுற்றுலாத்தலங்களை
பற்றிய துண்டுப்படங்களையும் இடையிடையே காட்டி –
அவற்றிற்கும் விளம்பரம் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

அரிதாக தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை,
தமிழக மீடியாக்களும், தமிழக அரசும் நன்கு பயன்படுத்திக்
கொண்டு, தமிழகத்தை உலக அரங்கில் சிறப்பாக
காண்பிப்பதன் மூலம், நிறைய சுற்றுலாப் பயணிகளை
இங்கே ஈர்க்க முடியும்.

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக, மற்ற மீடியாக்களுக்கு
கிடைக்காத சிறப்பான வாய்ப்பு சென்னை தூர்தர்ஷனுக்கு
கிடைக்கும்.

இந்திய பிரதமருக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையே,
தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் இந்த சந்திப்பு மிகச்சிறப்பாக
நடைபெற வேண்டுவோம்…வாழ்த்துவோம்.

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.