யாரைச் சொல்ல… ரசிகர் சிவாஜியையா அல்லது கலைஞன் நாகேஷையா…???


வெறும் ஒன்றரை நாட்களுக்குள் படமாக்கப்பட்ட
ஒரு காட்சி 54 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை
நம் நினைவையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பது
எத்தகைய அற்புதம்….?

இருவருமே அற்புதமான கலைஞர்கள்.
எந்தவித பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து விடுவார்கள்.

திருவிளையாடல் படத்தில்,
கவிஞர் உருவில் சிவனாக – சிவாஜியும்,
ஏழைப்புலவன் தருமியாக – நாகேஷும் தோன்றிய
அந்த காட்சியைத் தான் சொல்கிறேன் என்பதை
இதற்குள்ளாகவே புரிந்து கொண்டிருப்பீர்கள் ….

இங்கே நாம் சிவாஜி என்னும் மிகப்பெரிய
நடிப்பு மேதையை, ஒரு நடிகராகப் பார்க்காமல்,
ஒரு சிறந்த ரசிகராக, சக நடிகரை வியந்து பாராட்டி
ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான கலைஞராக
பார்க்கிறோம்.

அந்த காட்சி உருவாக்கப்பட்ட விதம் பற்றி நாகேஷ்
தன் வார்த்தைகளிலேயே சொல்வதைக் கேட்டால் –
அந்தக் காட்சியின் மீதும், அதை உருவாக்கிய
கலைஞர்கள் மீதும் நமக்குள்ள காதல் மேலும் கூடும்….

நாகேஷ் சொல்வதைக் கேட்போமா….?

————————————–

ஒருநாள், இயக்குனர், ஏ.பி.நாகராஜன், திடீரென்று கூப்பிட்டு,
‘உங்களுக்கு, என் படத்தில், ஒன்றரை நாள் வேலை இருக்கு,
வர்றீங்களா…’ என்று கேட்டார்.

ஏ.பி.என்., மீது, எப்போதுமே அபார மதிப்பும், மரியாதையும்
உண்டு. எனவே, மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்தேன்.
அந்த படம் தான், திருவிளையாடல்.

காலையில், ‘வாசு ஸ்டுடியோ’வில், படப்பிடிப்புக்கு
போய் விட்டேன். தருமி வேடத்துக்கு ஏற்ப, நான் தயாரானேன்.

சிவாஜிக்கு இன்னும், ‘மேக் – அப்’ போட்டு முடியவில்லை
என்றனர். அப்போது, நான், ‘பிசி’யாக இருந்த காலகட்டம்.

ஒரே கம்பெனிக்கு, எட்டு மணி நேரம், ‘கால்ஷீட்’
தர மாட்டேன். இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம்
என்று பிரித்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகளுக்கு
கொடுப்பேன்.

ஏ.பி.என்., சொன்னாரே என்று, ‘மேக் – அப்’ போட்டு,
காத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘நான் காட்சியை
படிக்கிறேன், கேளுங்க…’

– என்று, தாம் எழுதி வைத்திருந்த வசனத்திலிருந்து
இரண்டு பக்கம் படித்து காட்டினார், ஏ.பி.என்.,
நான் கவனமாக கேட்டுக் கொண்டேன்.

‘உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும். நான் எழுதி
இருக்கிறதை குறைக்க வேணாம்… இதுக்கு மேல
உன் இஷ்டப்படி, காட்சியை எப்படி வேணுமோ அப்படி,
‘இம்ப்ரூவ்’ பண்ணிக்கோ. அதுக்கு உனக்கு,
அனுமதி உண்டு…’ என்றார்.

‘காட்சியை எப்படி, ‘இம்ப்ரூவ்’ பண்ணலாம்…’ என்ற
சிந்தனையிலிருந்த நான், ‘சிவாஜி வர, நேரமாகுமா…’
என்று உதவி இயக்குனரிடம் கேட்டேன்.
‘ஆமாம்…’ என்றார்.

இயக்குனர், ஏ.பி.நாகராஜனிடம், ‘சிவாஜி வர, நேரம் ஆகும்
போல இருக்கே. எனக்கு, இங்க முடிச்சுட்டு, அடுத்த
படப்பிடிப்புக்கு போகணும்… சிவாஜி வருகிற வரை,
நேரத்தை வீணாக்காம, என்னை வெச்சு, ‘சோலோ’வா
கொஞ்சம் எடுக்கலாமே…’ என்றேன். அதற்குள்,
நான் என்ன செய்ய போகிறேன் என்பதை தீர்மானம்
பண்ணிக் கொண்டேன்.

திருவிளையாடல் படத்தில், நீங்கள் ரசித்து பார்த்த,
தருமி கதாபாத்திரத்தில், நான் நடிப்பதற்கு உத்வேகமாக
இருந்தவர், சென்னை, மயிலாப்பூரில் நான் சந்தித்த
கிருஷ்ணசாமி அய்யர் என்றால், உங்களுக்கு
ஆச்சரியமாக இருக்கும்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளக்கரையில்
நின்று, மைய மண்டபத்தை நோக்கி அவர் பேசியது,
எனக்கு மறக்கவே மறக்காது.

‘யூ நோ, மிஸ்டர் கிருஷ்ணசாமி அய்யர்…’ என்று,
அவர் அழைத்தது, வேறு யாரையும் இல்லை.
தன்னைத் தான். ‘பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தக்குளம்
எப்படி இருந்தது… அறுபத்து மூவர் உற்சவம் என்றால்,
ஊரே, ‘ஜே ஜே’ என்று இருக்கும். தெப்ப குளத்தில்
தண்ணீர் நிரம்ப வழியும்… தண்ணீரில் தெப்பம் மிதந்து
போவதை பார்க்க, கண்கொள்ளா காட்சியாக இருக்குமே…

‘இன்றைக்கு, குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது.
பசங்க, குளத்திலே கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த பசுமையான நாட்கள், இனி வருமா… ஊகூம் வராது…
இனி, வரவே வராது…’ இங்கிலீசும், தமிழுமாக, தமக்கு
தாமே பேசிக் கொண்டிருந்த வித்தியாசமான மனிதரை,
பார்த்து வியந்து போனேன்.

அவரை நினைவுக்கு கொண்டு வந்து, கேமரா மேன்,
சுப்பாராவிடம், ‘எது வரைக்கும், ‘லைட்டிங்’ பண்ணி
இருக்கீங்க…’ என்றேன்.

‘இந்த மண்டபம் முழுசும் பண்ணியாச்சு…’ என்றார்.
‘இங்கே, ஒரு, ‘டிராலி’ போட்டால், மண்டபத்தில் நுழைந்து,
பேசிக் கொண்டே நடந்து, மறு கோடி போய், அங்கே உள்ள
படிக்கட்டில் உட்கார்ந்து பேசுவது வரை எடுக்க முடியும்
இல்லையா…’ என்றேன்.

‘ஓ… தாராளமாக எடுக்க முடியும்…’ என்றார்.

இயக்குனரிடம், ‘சார்… ஒத்திகை வேண்டாம். நேரே,
‘டேக்’ எடுத்திடுங்க…’ என்றேன்.

அந்த சமயம் பார்த்து, ‘செட்டில்’ இருந்த இருவர்,
தங்களுக்குள், ‘சிவாஜி, இப்போ வந்திடுவார், இல்லை…
இல்லை… வர தாமதமாகும்…’ என்று பேசிக் கொண்டிருந்தது,
காதில் விழுந்தது. அதையே துவக்கமாக எடுத்துக்
கொண்டேன்.

இயக்குனர், ‘ஆக்-ஷன்’ சொல்ல, கேமரா ஓட துவங்கியது.
‘வர மாட்டான்… வர மாட்டான்… நிச்சயம் வர மாட்டான்…
எனக்கு நல்லா தெரியும்… வர மாட்டான்…’ என, வசனம்
பேசியபடி, உள்ளே நுழைந்தேன்.
மண்டபத்தின் மறு கோடி வரை, புலம்பியபடியே நடந்து
போய், அங்கிருந்த படிக்கட்டில் உட்கார்ந்து, புலம்பலை
தொடர்ந்தேன். மொத்தத்தையும், ஒரே, ‘ஷாட்’டில்
எடுத்து முடித்தார்.

‘ரொம்ப பிரமாதம்… ரொம்ப பிரமாதம்…’ என்று பாராட்டினார்,
ஏ.பி.என்.

அடுத்த சில நிமிடங்களில், பரமசிவனாக, ‘மேக் – அப்’
போட்டு, கம்பீரமாக, ‘செட்டு’க்குள் நுழைந்தார், சிவாஜி.
எனக்கும், சிவாஜிக்குமான காட்சியை விளக்கினார் ஏ.பி.என்.

.,’என்ன புலவரே… புலம்புகிறீர்…’ என்றார், சிவாஜி.

‘ம்… இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை… பேசும்போது,
ரொம்ப இலக்கணமா பேசு… ஆனா, செய்யுள் எழுதும்போது,
கோட்டை விட்டுரு…’ என்றேன்.

சிவாஜி, ஏ.பி.என்., பக்கம் திரும்பி, ‘என்ன, ஏ.பி.என்., நாகேஷ்
பேசறது புதுசா இருக்கே…’ என்று கேட்க, ‘நீங்கள்,
பரமசிவன் .. அவர், அன்றாடங்காய்ச்சி புலவர்;
அவர், ‘லெவல்’ அவ்ளோ தான், ஏதோ புலம்பட்டும்
விட்டுடுங்க…’ என்றார்.

சிவாஜி முன்னால் நடக்க, நான், அவர் பின்னால் நடந்தபடியே
வசனம் பேசுவதாக காட்சி. எனவே, நான் பின்னால் வசனம்

பேசுகிறபோது, வளைந்து, நெளிந்து, ‘ஆக் ஷன்’ பண்ணுவதை,
அவரால் பார்க்க முடியாது. ஒரு வழியாக, சொன்ன
காலக்கெடுவுக்குள், என் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து
முடித்தனர்.

சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு, ‘டப்பிங்’ பேச வேண்டிய கட்டம்
வந்தது. ஏ.பி.என்.,னின் தியேட்டரில், ‘டப்பிங்’குக்கு,
வந்து விட்டார், சிவாஜி. நான் சிறப்பாக நடித்திருப்பதாக
அனைவரும் பாராட்டினர்.

ஆனாலும், மிகுந்த, ‘சஸ்பென்ஸ்’ உடன் அனைவரும்
எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரே விஷயம், காட்சிகளை
பார்த்து, சிவாஜி என்ன சொல்லப் போகிறாரோ என்பது தான்.

‘டப்பிங்’ தியேட்டரில், கடைசி வரிசையில் பதற்றத்துடன்
காத்திருந்தேன். திரையில், காட்சி ஓடியது. பார்த்துக்
கொண்டிருந்த, சிவாஜி, காட்சி முடிந்தவுடன், ஏ.பி.என்.,னை
கூப்பிட்டு, ‘இன்னொரு தடவை, இந்த காட்சியை போடச்
சொல்லுங்க…’ என்றார்.

சிவாஜி, எதற்காக மறுபடியும் இந்த காட்சியை பார்க்க
வேண்டும் என்கிறார் என்று, எனக்கும் புரியவில்லை.
‘இந்த காட்சி, எனக்கு பிடிக்கவில்லை; துாக்கி விடுங்கள்…’
என்று சிவாஜி சொல்லப் போகிறார் என, தோன்றியது.

‘அடடே… நம் உழைப்பு முழுவதும் வீண் தானா…’
என்ற துக்கம், தொண்டையை அடைத்தது.

காட்சி முடிந்ததும், சிவாஜியை நெருங்கினார், ஏ.பி.என்.,
சிவாஜியின் உதடுகள் உச்சரிக்கப் போவதை எதிர்பார்த்து,
காதுகளை கூர்மையாக்கிக் கொண்டேன். நெஞ்சம்
படபடத்தது.

‘இந்த மாதிரி ஒரு நடிப்பை, நான் பார்த்தது இல்லை.
நாகேஷின் நடிப்பு, ரொம்ப பிரமாதம். தயவுசெய்து,
இந்த காட்சியில் ஒரு அடி கூட, ‘கட்’ பண்ணிடாதீங்க…
இந்த காட்சியை பார்க்கிற அனைவரும் பாராட்டுவாங்க…

‘அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம், அவன்
பொறுப்பில்லாத பயல்… ‘டப்பிங்’ ஒழுங்கா பேச மாட்டான்…
அவனை, கரெக்டா, ‘டப்பிங்’ பேச வையுங்க… ஒழுங்கா
பேசலைன்னா, வெளியில விடாதீங்க…’ என்று,
இயக்குனரிடம் சொன்னார், சிவாஜி.

இதையெல்லாம் நானும் கேட்டுக் கொண்டு தான்
இருந்தேன். சிவாஜியே பாராட்டியது, ரொம்ப சந்தோஷம்.
அவர், மாபெரும் நடிகர் மட்டுமில்லை; அற்புதமான ரசிகர்
என்றும், அன்று புரிந்து கொண்டேன்.

———————————–
( இந்த இடுகையை எழுத அடிப்படையாக இருந்து
தகவல் உதவிய தளங்களுக்கு நன்றி….)
———————————–

பி.கு. இந்த சங்கதிகளை எல்லாம் படிக்கும்போதே –
சிவாஜி, நாகேஷ் சம்பந்தப்பட்ட அந்த காட்சி மனதிற்குள்
ஓடி இருக்குமே… இப்போது அதை மீண்டும் ஒருமுறை
பார்க்க வேண்டும்போல் இருக்குமே….

அதனாலென்ன – பார்த்து விட்டால் போச்சு… 🙂 🙂

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to யாரைச் சொல்ல… ரசிகர் சிவாஜியையா அல்லது கலைஞன் நாகேஷையா…???

 1. புதியவன் சொல்கிறார்:

  இதை இப்போதுதான், ஒரு சில நாட்களுக்கு முன்பு படித்தேன் (அல்லது கேட்டேன்). ஓ…தினமலர் வாரமலரில் படித்தேன். சிவாஜி அவர்களைப் பற்றி சில காணொளிகள் (அவரோடு பணியாற்றியவர்கள், பழகியவர்கள் சொன்னது) கேட்டேன். சிவாஜி, நல்ல ரசிகராகவும் இருந்திருக்கிறார். ஒரு காட்சியில், ஒருவர் சிவாஜியிடம் (மன்னர் வேடம்) ஏதோ சொல்லும்போது, கேமரா சிவாஜியை நோக்கி இருப்பதைக் கவனித்து, கேமராவை, தன்னிடம் சொல்பவர் முகத்தை நோக்கித் திருப்புங்க என்று சொன்னாராம் (அவருடைய முகம் சினிமாவில் வரட்டுமே என்று).

  சிவாஜி நினைத்திருந்தால், நாகேஷ் காட்சி பலவற்றையும் தூக்கியிருக்கலாம் (அல்லது ஜால்ரா போல நீர்த்துப்போகச் செய்திருக்கலாம்). ஆனால் ஸ்கிரிப்டில் இல்லாததையும் செய்ய அனுமதித்து அவற்றை வைக்கச் சொன்னது, அவரது ரசிப்புத் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

  நல்ல செய்தியைப் பகிர்ந்ததற்கு பாராட்டுகள்.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM,

  I’m happy that you started with Sivaji as a “rasigan”. Nagesh indeed was at his best in this scene in Thiruvilayadal movie. Sivaji need not have acted at all. His mere presence as “Paramasivan” was stunning. I look forward to more of your articles on Sivaji. Thanks.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.