தமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…!!!


தமிழகத்தைப் பொருத்த வரையில் மிக முக்கியமான –
கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிகளில்,
மத்திய தொல்லியல் துறை சற்றும் அக்கறை காட்டவில்லை
என்பதோடு, சில எதிர்மறையான செயல்களிலும்
ஈடுபட்டு வந்தது… இது அதிகாரிகள் மட்டத்தில் நடந்தது
என்றே நம்புவோம்.

2017-ல், தமிழக அமைச்சரவையில்
திரு.மாஃபா -கே.பாண்டியராஜன் இணைந்தபோது, அவருக்கு
தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை பொறுப்புகள்
வழங்கப்பட்டன.

நாளிதழ்கள் அதை முக்கியத்துவம் இல்லாத அமைச்சரவை
அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வர்ணித்தன.
ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை….
மிகச்சரியான நபரிடம் இந்த துறைகள்
கொடுக்கப்பட்டிருக்கின்றன.. இது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும்
நன்மை பயக்கும் விஷயம் என்று கருதினேன். இதை
இந்த தளத்தில் கூட எழுதியிருப்பதாக நினைவு.

அதை நிரூபிக்கும் வண்ணமே அவர் செயல்படத் துவங்கினார்.
சுணக்கம் காட்டி வந்த மத்திய தொல்துறையிடம்,
தகுந்த முறையில் பேசி –

கீழடி அகழ்வாராய்ச்சியை, தமிழக அரசே மேற்கொண்டு
தொடர்வதற்கான அனுமதியைப் பெற்றார். மத்திய அரசோடு
மோதாமல், அவர்கள் ஈகோவை கிளப்பாமல், இதைச் செய்தது
மிகச்சிறப்பான அணுகுமுறை….

அடுத்து, 4-வது, 5-வது கட்ட அகழ்வாராய்ச்சிகளை ஆர்வத்துடன்
தொடரவும், அங்கே கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பாதுகாத்து,
காட்சிக்கு வைக்க, அங்கேயே தமிழக அரசின் சார்பாக
ஒரு அருங்காட்சியகத்தை அமைக்கவும் முயற்சிகளை
மேற்கொண்டார்.

அவை அனைத்தும் இன்று அற்புதமான பயன்களை
அளித்திருக்கின்றன. உலகமே வியக்கும் வண்ணம் – ஒரு
புதிய கண்டுபிடிப்பு, ஆவண, ஆராய்ச்சிகளுடன் நிரூபிக்கப்பட்டு
இருக்கிறது. கீழடியில், வைகைக்கரையில், தோண்டி
எடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கும் முந்தியவை
என்பது சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது…

தமிழக அமைச்சர் திரு.பாண்டியராஜன் அவர்களுக்கும்,
அவரது குழுவினருக்கும் – நமது உளமார்ந்த பாராட்டுகளை
இந்த வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துக் கொள்வதோடு –
இந்த ஆராய்ச்சிகள் தொடரவேண்டும்… தமிழகத்தின்
பூம்புகார் -காவிரிப்பூம்பட்டினம் போன்ற இதர சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ஆராய்ச்சிகள்
தொடர அவர் தீவிர முயற்சிகளைத் தொடர வேண்டுமென்றும்
கேட்டுக் கொள்கிறோம்.

கீழடி ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி இருக்கும்
இன்றைய செய்தி கீழே –

————————————————————————————————-

கீழடிக்கு வயது 2600
keezhadi-excavation
கீழடி ஆய்வின் முக்கியத்துவம்

தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன
கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில்
கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து
கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில்
சங்க காலம் என்று இதுவரை கருதப்பட்டுவந்தது.

ஆனால், கீழடி பிராமி எழுத்துகள் சங்க காலத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகள் வயதானவை ஆக்குகின்றன.

கங்கைச் சமவெளியின் இரண்டாம் நாகரிகத்துக்கு இணையான
நாகரிகம் எனும் இடத்தைப் பெறும் கீழடியில் வாழ்ந்த மக்கள்
அக்காலகட்டத்திலேயே ரோமுடன் வணிகத் தொடர்பில்
இருந்ததற்கான சாத்தியங்களையும் இங்கு கிடைத்துள்ள
பானை ஓடுகளின் கணிப்பு வயது வெளிப்படுத்துகிறது.

உறுதிப்படும் தமிழின் தொன்மை!

உலகின் முற்பட்ட நாகரிகங்களில் ஒன்று நமது என்பதையும்,
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து பார்க்க வேண்டும் என்பதையும்
மேலும் உறுதிப்படுத்தும் களம் ஆகியிருக்கிறது கீழடி.

2018-ல் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது சேகரிக்கப்பட்ட
ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் மியாமியில் உள்ள,
‘பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வக’த்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்த மாதிரிகளின் காலம் கி.மு. 580 என்று அங்கு
கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘கீழடி கி.மு. 6-ம் நூற்றாண்டு
முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு
கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும்’
என்பது இதன் மூலம் தெரியவருகிறது. அதாவது, வைகை
நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து
தொடங்குகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேலும், கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான
காலக் கணிப்புகள் தமிழ் பிராமியின் காலம் கி.மு. 6-ம் நூற்றாண்டு
எனும் முடிவுக்கும் இட்டுச் செல்கிறது. இதன் மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக
விளங்கியுள்ளதும் உறுதியாகிறது.

“தமிழின் தொன்மை குறித்து இதுவரை நிலவிவந்த சில
கருதுகோள்களுக்கு இவை உறுதியான சான்றுகள் ஆகியுள்ளன”
என்று இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார் தொல்லியல்
அறிஞரான கா.இராஜன்.

தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடி இந்தியாவில்
கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் காலத்தால் தொன்மையானது
4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி வரிவடிவங்களாகும்.

சிந்துவெளி பண்பாடு மறைந்ததற்கும் தமிழ் பிராமி எழுத்துகள்
தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு வரிவடிவம்
இருந்தது. அவ்வரிவடிவத்தினை ஆய்வாளர்கள் குறியீடுகள் என்றும்
கீறல்கள் என்றும் அழைக்கின்றனர். இவை சாதாரண கீறல்கள் அல்ல,
சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழ் பிராமி எழுத்துகளின்
முன்னோடியாகவும் இவை இருக்க வேண்டும். சிந்துவெளி எழுத்துகள்
போன்றே இவற்றைப் படித்தறிதலும் முழுமை பெறவில்லை.

செப்புக்காலப் பண்பாட்டிலும் அதன் தொடர்ச்சியாக பெருங்கற்காலப்
பண்பாட்டில் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.


தமிழ் பிராமிக்கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள்
பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தைப்
பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாகும். கீழடி அகழாய்வில்
கண்டெடுக்கப்பட்டு இத்தகைய கீறல்கள் பொறித்த 1,001 பானை
ஓடுகள் இரும்புக் காலம் தொட்டு இப்பகுதியில் மக்கள்
வாழ்ந்துவருகின்றனர் என்பதை உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்து காணக்
கிடைக்கின்ற வரிவடிவம் தமிழ் பிராமி எழுத்து வடிவமாகும்.

இவ்வெழுத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும்
ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கீழடி அகழாய்வில் தமிழ் பிராமி
எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு தொல்பொருள்
ஆய்வுத் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும்
சேகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற ஆட்பெயர்களும்,
முழுமைபெறாத சில எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை
ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வரும் ‘ஆதன்’ என்ற
பெயர் ‘அதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்தால்
முந்திய தமிழ் பிராமியில் உயிர்க்குறில் வடிவத்திலிருந்து
உயிர்நெடிலை வேறுபடுத்திக்காட்ட ஒலிக்குறியீடு இடும் வழக்கம்
இல்லை என்பதை கா.இராஜன் தமது நூலில் (Early Historic
Writing Sytem: A Journey from Graffiti to Brahmi)
தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலை உயிர் எழுத்துகளில் மட்டுமே காணப்படுகிறது.
எனவே, கீழடி தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் காலத்தால்
முந்தியவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

கைவினைத் தொழில்களும் நுட்பமான தொழிலறிவும்
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள
கனிமங்களை கண்டறியும் சோதனைக்காக இத்தாலியிலுள்ள பைசா
பல்கலைக்கழகத்தின் புவியறிவியல் துறைக்கு வேலூர் தொழில்
நுட்பப் பல்கலைக்கழகம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டன.

இவை உள்ளூரிலேயே வனையப்பட்டவை என்பதை உள்ளூர் மண்
மாதிரியை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம்
கீழடியில் பானை வனையும் தொழிற்கூடம் செயல்பட்டிருக்க
வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

அடுத்து, கீழடியில் கிடைத்த கருப்பு – சிவப்பு நிறப் பானை
ஓடுகள் சிலவற்றின் மாதிரிகள் நிறமாலையியல் பகுப்பாய்வு
(Spectroscopic Analysis) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த
ஆய்வு முடிவுகளின் மூலம், கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகளின்
சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட்
என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது. இக்கருப்பு-சிவப்பு நிறப்
பானைகளை 1100°c வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும்
தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

கீழடியில் கிடைத்த மட்பாண்டங்களின் தொழில்நுட்பம்,
தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை
கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 2-ம் நூற்றாண்டு வரை
ஒரே மாதிரியாக இருந்துள்ளன என இத்தாலியின் பைசா
பல்கலைக்கழக அறிக்கையில் தெரியவருகிறது.

வியக்கவைக்கும் கட்டுமானத் தொழில்நுட்பம்

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து,
கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு
ஆகியவற்றின் மாதிரிகள் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு
பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் சிலிக்கா
மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம்
போன்ற கனிமங்கள் காணக் கிடைக்கின்றன. அவற்றின் கலவை
மற்றும் தன்மை குறித்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளது.

செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக
சிலிக்காவும், பிணைப்புக் காரணியாக அதிகளவு (7%) சுண்ணாம்பு கலந்துள்ளதையும்;

சுண்ணாம்புச் சாந்தில் 97% சுண்ணாம்பு கொண்டிருந்ததையும்
உற்று நோக்கும்போது அக்காலகட்ட மக்கள் மிகத் தரமான
கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது
தெரியவருகிறது.


கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு
கட்ட அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களில்
13 மீட்டர் மீள சுவர் ஒன்றும் அடங்கும். இதில் பயன்படுத்தப்பட்ட
சுட்ட கட்டுமானச் சுவர் செங்கல்களின் பரிமாணமும் சங்ககால
பிற தொல்லியல் இடங்களில் கிடைக்கப் பெற்ற சுட்ட செங்கல்களின்
பரிமாணமும் 1:4:6 என்ற விகிதாச்சாரத்தில் காணப்படுகின்றன.
இதன் தரைத்தளம் சன்னமான களிமண்ணைக் கொண்டு
அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல் ஓடுகளால் ஆன மேற்கூரையும், சரிந்த நிலையில்
காணப்படுகின்றது. அத்துடன், மேற்கூரையை தரையுடன் பிணைக்க
மரத்தூண் நட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருப்பதை இங்கு
வெளிப்பட்ட இரும்பு ஆணிகள் உணர்த்துகின்றன.

மேலும், கூரை ஓடுகளின் தலைப்பகுதியில் காணப்படும் துளைகள்,
அவை சரியாமல் இருக்க கயிறு அல்லது நார் கொண்டு
கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்க உதவுகிறது. கூடுதல் சிறப்பாக
கூரை ஓடுகளின் மீது விழும் மழை நீர் எளிதாகக் கீழே
விழும் வகையில் விரல்களால் அழுந்த அழுத்தி ஓடை போன்ற
அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கீழடியில் வெளிப்பட்ட கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்ததில்
இவற்றை சங்ககாலத்தில் நிலவிய வளர்ந்த சமூகத்தின்
அடையாளங்களாகக் காணப்படுகிறது.

பன்னாட்டு வணிகத் தொடர்பு

கீழடி அகழாய்வுப் பகுதிகளில் வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம்,
குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும்
சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை ரோம் நாட்டுத் தொழில்நுட்பச் சாயல் கொண்டு உள்ளூரில்
வனையப்பட்டவை என்று கருதப்படுகிறது. இவ்வகை ரௌலட்டட்
பானை ஓடுகள் அழகன்குளம் அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க
அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரோம் நாட்டு அரிட்டைன்
பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைக்கப் பெற்றுள்ளது.

இப்பானைகள் கி.மு. 2-ம் நூற்றாண்டில் ரோம் நாட்டில்
புழக்கத்திலிருந்த பானைகளாகும். எனவே, ரோம் நாட்டைச் சார்ந்த
வணிகர்கள் அல்லது அழகன்குளத்தில் தங்கியிருந்த ரோம் நாட்டைச்
சார்ந்த வணிகர் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

நெசவு

இவ்வகழாய்வுகளில் நூல்களை நூற்கப் பயன்படும் தக்களிகள்,
துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு
உபயோகப்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள் கொண்ட
வரைகோல்கள், தறியில் தொங்கவிடும் கருங்கல் மற்றும்
சுடுமண்ணால் செய்யப்பட்ட குண்டு, செம்பினாலான ஊசி, சுடுமண்
பாத்திரம் போன்ற தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறை ஏற்கெனவே மேற்கொண்ட
அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் சாயத்
தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் என்று கூறினர்.

தற்போதைய அகழாய்வுகளிலும் கிடைத்துள்ள நெசவு தொடர்பான தொல்பொருட்கள், இப்பகுதியில் நெசவுத் தொழில் சிறந்து
விளங்கியதற்குச் சான்று பகர்கின்றன.

பொழுதுபோக்குக்குச் சதுரங்க ஆட்டம்


இன்றும் இப்பகுதியில் ‘பாண்டி’ என்றும் பிற பகுதிகளில் ‘நொண்டி’
என்றும் ஆடப்பட்டுவரும் விளையாட்டில் பயன்படுத்தப்படும்
வட்டச்சில்லுகள், தாய விளையாட்டுக்கான பகடைக்காய்கள்,
சதுரங்கக் காய்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. கீழடி
சமூகத்தின் பொழுதுபோக்கு எப்படி இருந்தது என்பதை இவை
சுட்டுகின்றன.

ஆபரணங்கள் சுட்டும் வளமைதங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள்,
கல்மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கல் மணிகள், சங்கு
வளையல்கள், தந்த வளையல்கள் என இங்கு கிடைத்துள்ள
ஆபரணங்களும், நேர்த்தியாகச் செய்யப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப்
பொருட்களும் கீழடிச் சமூகத்தின் வளமையை வெளிப்படுத்துகின்றன.

சமய அடையாளங்கள் இதுவரை இல்லை!

கீழடி அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்றுள்ள சுடுமண்ணாலான
13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள் மற்றும்
தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோகத் தொல்பொருட்கள் கிடைத்துள்ளபோதிலும் வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள்
ஏதும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

முதன்மைத் தொழிலான வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்
கீழடியில் வெளிக்கொணரப்பட்ட 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள்
புனே டெக்கான் ஆய்வகத்தில் பகுப்பாய்வின் தன்மைக்கேற்ப
வகைப்படுத்தப்பட்டன. திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு,
கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்கள்
என்று அவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுப்பாய்வு
முடிவுகள் மூலம் சங்காலச் சமூகம், வேளாண்மையை
முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு, கால்நடை
வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவருகிறது.

ஆய்வுகளின் வெளிச்சத்தில்…

மத்திய தொல்லியல் துறை 2014 தொடங்கி 2017 வரை கீழடியில்
மூன்று கட்டங்களாக அகழாய்வுகளை நடத்தியது. தொடர்ந்து
தமிழக அரசின் தொல்லியல் துறை 2017-18, 2018-19 ஆண்டுகளில்
நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்தியது.

நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின்
தேர்ந்தெடுத்த மாதிரிகள் சர்வதேச ஆய்வகங்களுக்கும் தேசிய
அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன.

ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள்
தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரிபார்க்கப்பட்டு
‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’
என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால்
அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கீழடி மட்டுமின்றி தமிழக தொல்லியல் துறை கடந்த அரை
நூற்றாண்டில் நடத்திய 40 அகழாய்வுகளையும் இந்த அறிக்கை
பட்டியலிட்டிருக்கிறது. தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில்
நடத்தப்பட்ட அகழாய்வுகளை ஒப்பீடு செய்வதோடு
சிந்து வெளியில் கண்டறிப்பட்ட எழுத்துகளுக்கும் கீழடி
எழுத்துகளுக்கும் இடையிலான ஒப்புமைகளையும் இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது.

கீழடி பண்பாடு 2600 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதோடு,
கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு
பெற்றிருந்தனர் என்ற முக்கியமான செய்தியை வெளிக்கொணர்ந்து,
தமிழர்களின் நகர நாகரிகத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகளுக்கு
முன்னகர்த்தியிருக்கும் ஆய்வின் முடிவைப் பகிரும் இந்த அறிக்கை
மிக முக்கியமான ஒரு ஆவணம்.

ஏற்கெனவே, மத்திய அரசால் நடத்தப்பட்ட மூன்று கட்ட
அகழாய்வுகளின் இறுதி அறிக்கைகளும் வெளிவந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் பழங்காலத்திய வரலாற்றில் தமிழகத்துக்குத்
தனிச்சிறப்பான இடம் கிடைக்கும்.

இப்பணிக்காக தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்,
துறையின் முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் இருவரும்
பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள்.

( https://www.hindutamil.in/news/opinion/columns/516414-keezhadi-excavation-6.html )

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to தமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  மாஃபா பாண்டியராஜன் மிகவும் திறமை வாய்ந்த அமைச்சர். அதில் சந்தேகம் இல்லை. அவரைப் பாராட்டுகிறேன்.

  தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த அகழ்வாராய்ச்சி, அதற்கு பணம் செலவழித்து எடுத்து நடத்துவது என்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. (வேஸ்ட் என்றுதான் நான் நினைக்கிறேன்) நம் கண் முன் இருக்கும் கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்ற செல்வங்களையே நாம் ஒழுங்காக வைத்துக்கொள்வதில்லை. எத்தனையோ பெளத்த சமணக் கோவில்கள், சமணப் படுகைகள், கல்வெட்டுகள் என்று எதையுமே நாம் ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு சிமிண்ட் பூசுகிறோம். இதில் புதிதாக இடங்களைத் தோண்டி மண் பாண்டங்கள் லொட்டு லொசுக்கு என்று எடுத்து அதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

  தமிழ் இலக்கியங்கள் அளவு செறிவு வேறு எதிலும் (இந்திய மொழிகளில் சமஸ்கிருதம் தவிர) கிடையாது. உலகின் ஆதி 7 மொழிகளில் தமிழும் ஒன்று. இன்றளவும் உயிர்ப்புடம் இருப்பது தமிழ் ஒன்றுதான். வேறு என்ன பெருமை நமக்கு புதிதாகக் கிடைத்துவிடப் போகிறது?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன் –

  // எனக்கு இந்த அகழ்வாராய்ச்சி, அதற்கு பணம் செலவழித்து
  எடுத்து நடத்துவது என்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.
  (வேஸ்ட் என்றுதான் நான் நினைக்கிறேன்) //

  // நம் கண் முன் இருக்கும் கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்ற செல்வங்களையே நாம் ஒழுங்காக வைத்துக்கொள்வதில்லை.//

  உங்கள் அணுகுமுறை தவறானது என்பது என் கருத்து.
  இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.

  இருப்பனவை செம்மையாக பாதுகாக்கப்பட வேண்டும்
  என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது.

  ஆனால், பழையதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்
  அக்கறை இல்லையா உங்களுக்கு. உங்கள் கொள்ளு தாத்தா,
  அவரது கொள்ளு தாத்தா, அவரது முன்னோர்கள் ஆகியோர்
  எப்படி இருந்தார்கள், வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்ள
  வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு கிடையாதா ?

  துவக்கத்திலிருந்து இன்று வரை தமிழனின் சரித்திரம்,
  அவன் வாழ்ந்த விதம், வளர்ந்த விதம் எதுவுமே
  இதுவரை சரியாக, ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை.
  நிரூபிக்கப்படவில்லை.

  உலக அரங்கில் தமிழ் இன்னமும் அதற்குரிய பெருமைகளுடன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
  எனவே, நம் பழைய சரித்திரத்தை தோண்டி எடுத்து,
  ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
  தொல்காப்பியம் எப்போது இயற்றப்பட்டது என்பதை,
  திருக்குறள் எப்போது, எவரால் இயற்றப்பட்டது என்பதை –
  நம்மால் இன்னமும் சரியாகச் சொல்ல முடியவில்லை என்பது
  உங்களுக்கு முக்கியமான விஷயமாக தெரியவில்லையா ?

  ஆனால் அது எனக்கு வெட்கமாக இருக்கிறது,
  வேதனையாக இருக்கிறது.
  நம்மிடம் இவ்வளவு அருமையான பொக்கிஷங்களை
  வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றை
  உருவாக்கியவர் யார் ? எப்போது,
  எந்த சூழ்நிலையில் உருவாக்கினார் என்று
  தெரிந்து கொள்வதில் தமிழனாகப் பிறந்த எவருக்கும் நிச்சயம்
  அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். அதற்கான
  முயற்சிகளில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று
  நான் நினைக்கிறேன்.

  கடலுக்குள் போய் விட்ட பூம்புகாரையும்,
  மாமல்லபுரத்து மீதிகளையும் பார்க்கும் வாய்ப்புக்காக
  நாம் எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் –
  தப்பே இல்லை.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   இல்லை கா.மை. சார்… இரண்டும் ஒன்றுதான். நான் சரித்திரச் சான்றுகளில், அதைப்பற்றிப் படிப்பதில், பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவன். பழைய கீழடி (அதாவது தோண்டிக் கண்டுபிடித்த சரித்திரம்) இராஜராஜேச்வரம், சமண பவுத்த கோவில்கள். கும்பகோணம் தஞ்சை சுற்றியுள்ள கோவில்கள், பள்ளிப்படைக் கோவில்கள், பல சரித்திரச் சான்றுகள் – இவைகளையே நாம் நன்றாக பராமரிக்கவில்லை. இருப்பதை மிகச் சிறப்பாக பராமரித்து நம் பெருமையை உலகுக்கு இன்னமும் எடுத்துச் சொல்ல இயலும்.

   சரித்திரத்தில் எதையும் அனுமானமாகத்தான் சொல்ல முடியும். அறுதியிட்டுச் சொல்வது கடினம்/சாத்தியமில்லை. 1000 வருடங்களுக்கு முந்தைய சரித்திரத்தையே நம்மால் சரியாகச் சொல்லமுடியாது. ஆனால் நம்மிடம் இருக்கும் கலைப்பொக்கிஷங்களைக் கொண்டு, இவர்கள் இந்த மாதிரி மகோன்னதமாக வாழ்ந்தார்கள் என்று நினைத்துக்கொள்ள முடியும்.

   “மாடமாளிகை சூழ்ந்து அழகாய திருக்குறுகூர்”, “கொடிக்கொள் பொன்மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி”, ‘செம்பொன்செய் கோயில்’ , “புழக்கடை தோட்டத்து வாவியுள்” இந்த மாதிரி பக்தி இலக்கியங்களில் உள்ள வரிகளை வைத்து அந்த அந்த நகரங்கள் (இப்போது ஆளரவமற்ற குக்கிராமங்கள்) பாடல்கள் எழுதப்பட்ட 12-14 நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடியும். அது உண்மையா இல்லை ‘கவிதையில் பொய்மையா, கற்பனையா’ என்பது நாம் அறியாதது.

   சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம்தான். நாம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே உலோகத்தில் அழகிய சிற்பங்கள் செய்திருந்தோம். நம் இதிஹாசங்களில் விளக்கப்படும் வாழ்க்கை முறை, வெறும் கற்பனையில் உதித்திருக்க முடியாது. அதனை நாம் சிற்பங்களாக கோவில்களில் பார்க்கிறோம்.

   என்னுடைய எண்ணம், மிகப் பழைய காலத்தை தோண்டிப் பார்த்து சுட்ட செங்கல், சில பானைகள், ஒரு சில உதிர்ந்த நகைத் துணுக்குகளை வைத்து என்ன சாதிக்க நினைக்கிறோம் என்பதுதான். இவைகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள், நாணயங்கள் ஏற்கனவே இருக்கின்றனவே.

 3. Prabhu Ram சொல்கிறார்:

  இதெல்லாம் கற்பூர வாசனை.
  எல்லாருக்கும் வெளங்காது.

 4. Narayanan Krishnan சொல்கிறார்:

  நண்பர் புதியவன், நீங்கள் என்ன நனைந்த போர்வையா(wet blanket).? இருக்கிற கோயில், சிற்பங்களை நல்லவிதமாக பராமரிக்க வேண்டும்தான். அதற்க்காக புதிய கண்டுபிடிப்புகளை ஆதாரங்களை வேஸ்ட் சொல்ற உங்கள் மனநிலை தவறானது. உங்களுக்கு இது பிடிக்கவில்லையானால் நீங்கள் மூடிகிட்டு இருந்திருந்தால் நமக்கும் இந்த எதிர்வினை ஆற்ற தேவையின்றி இருந்திருக்கும். பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்கள் அன்னியர்களால் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்த சூழலில், கீழடி நாகரிகத்தை தமிழர் நாகரிகம் என்று பெயர் பெற்றுவிடக்கூடாது என்றும் இதை திராவிட நாகரிகம் என்று நிறுவ முயலும் ஒரு துரோக கூட்டத்தையும் கண்டு கொதித்து கிடக்கிறான் தமிழன்.

  • புதியவன் சொல்கிறார்:

   நீங்கள் கீழடியில் என்ன என்ன கண்டுபிடிக்கப்பட்டது, எவை எவை திட்டமிட்டு மறைக்கப்பட்டன என்பதை அறியாமல் பேசுகிறீர்கள். நம் கோவில்கள் காப்பாற்றப்பட்டது தமிழர்களால் அல்ல, திராவிடர்களால், குறிப்பாக தெலுங்கர்களால் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ராஜராஜேச்வரத்தை ‘தமிழர் நாகரீகம்’, அவர்களது நீர் மேலாண்மை (குறிப்பாக சோழர்கள் இதில் மிகத் திறமையானவர்கள், பாண்டியர்களைவிட) அற்புதமானது என்பதை எதிர்க்க எத்தனை எத்தர்கள் தமிழர்களிடையே இருக்கிறார்கள் என்பதையும் படித்திருப்பீர்கள்.

   திராவிட நாகரீகம் என்பது பிற்காலத்தியது. தமிழர் நாகரீகம் என்பது காலத்தால் முற்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, இங்கு திராவிடர்கள் இல்லை, தமிழர்கள் மட்டும்தான் வாழ்ந்தார்கள். வரலாற்றை நன்கு படித்ததனால் நான் எழுதிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.