“ஜனகணமன” – வை – ஹிந்தியில் இல்லை என்பதற்காக தூக்கிப் போட்டு விடுவார்களா …?


இந்தி திணிப்பு: உள்துறை அமைச்சருக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் சீறிய சி.என் அண்ணாதுரை

——

‘இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்’ எனும் பொருளை மையப்படுத்தி
மாநிலங்களவையில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.
அண்ணாதுரை ஆற்றிய உரையின் சுருக்கம்.

இந்திய அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இந்திய நாட்டின் ஆட்சி
மொழியாக இந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு
விடைகொடுக்க இந்திய அரசு முடிவெடுத்த சூழலில் 1963
மே மாதம் அண்ணா ஆற்றிய உரை இது.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான
ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள்,
உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி,
அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.

இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிப்பூர்வமாக
தெரிவிக்கபடும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே
எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின்
ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை.
தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது.

என்னுடைய நண்பர் பூபேஷ் குப்தா (கம்யூனிஸ்ட் கட்சி) இன்றைக்கு
என்று பார்த்து ஆங்கிலத்தை விரட்டியடித்தே தீர வேண்டுமென்று
முடிவெடுத்துவிட்டார். எனவே, ஆங்கிலத்துக்கு
எதிராகக் கடுமையாக ஆங்கிலத்திலேயே பேசிவிட்டார்.

‘இந்தியா ஒற்றை நாடல்ல’

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக
ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில்
வாதாடினர். அது ஏற்கப்பட்டால், இந்தியாவில்
பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக
ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியா ‘ஒற்றை நாடு’ என்று ஏற்றுக்கொள்வோமானால்,
இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், இந்தியா ‘கூட்டாட்சி நாடு’
இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது.
ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது
ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது
போன்றதாகிவிடும். அது மட்டுமல்ல சமூகத்தின்
பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க
முடியாமல் குறைகள் ஏற்படும்.

இந்தியா ஒரே நாடல்ல.
இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும்
மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு.
இதனாலேயே இந்தியாவை ‘துணை கண்டம்’
என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே
மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக
நம்மால் ஏற்க முடியவில்லை.

தேசிய கீதமான ‘ஜனகண மன’ பாடலும்,
தேசத் தாய் வாழ்த்தாக பாடப்படும் ‘வந்தே மாதரம்’
பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல.

‘உள்துறை அமைச்சருக்கு எதிராக முழங்கிய அண்ணா’

இந்தி மொழி முன்னேறிவிட்டது என்று உள்துறை அமைச்சர்
(லால்பகதூர் சாஸ்திரி) எவ்வளவுதான் பேசினாலும்
இந்தியின் நிலை இதுதான்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மொழி
என்னுடையதாக இருக்கும் போது, அதை பொது மொழியாக
என்னால் ஏற்கச் செய்ய முடியாத நிலையில்,
“நன்றாக முன்னேறிவிட்டது; இந்தியைப்
பொது மொழியாக வைத்துக்கொள்ளலாம்” என்று உள்துறை
அமைச்சர் பேசுவதால் எனக்கு ஏற்படும் இழப்புகளை
ஈடுசெய்வது எப்படி?

‘திமுகவால் மட்டும் எழுப்பப்பட்டது அல்ல’
இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது
இந்தி பேசும் மாநிலங்களுக்கு திட்டவட்டமான,
நிரந்திரமான சாதகமாக அமையும், இதைத்தான் ஒரிசாவை
சேர்ந்த பி. தாஸ், டாக்டர் சுப்புராயன் போன்றோர் இந்திய
அரசியல் நிர்ணய சபையிலேயே கூறினர்.

மாநிலங்களவையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, எனது
நண்பர் அவினாசிலிங்கம் செட்டியார் தனது எச்சரிக்கைக் குரலை
எழுப்பினார். ஆகையால், இந்த எதிர்ப்பு திமுகவால் மட்டுமே
எழுப்பட்டது என எண்ணாதீர்கள். இந்த பிரச்சனையில் திமுக சிறிய
பங்கை மட்டுமே வகிக்கிறது.

(இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம் என்ற பொருளில்
அண்ணா பேசிய நீண்ட உரையின் சிறிய பாகம்
மட்டும்தான் இது)

ஒற்றுமையா ஒற்றைத் தன்மையா எனும் பொருளில் அண்ணா
நாடாளுமன்றத்தில் பேசியதன் சிறிய பாகத்தை இங்கே பகிர்கிறோம்.

‘ஒரு பகுதியினர் மொழி’

இந்தியாவில் 100க்கு 40 பேர் இந்தி பேசுவதால்,
இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் 40 சதவீதம் அல்ல; 20 சதவீதம் பேர் இந்தி
பேசுபவர்களாக இருந்து, அந்த 20 சதவீத மக்களும்
இந்தியா முழுவதும் பரவலாக இருந்தால், இந்தியைப்
பொதுமொழியாகவோ அல்லது ஆட்சி மொழியாகவோ
கொண்டு வருவதில் ஓரளவு அர்த்தமிருக்க முடியும்.

ஆனால், ஒரு வாதத்திற்கு இவர்கள் கூறும் 40 சதவீத கணக்கை
எடுத்துக் கொண்டால் கூட, இந்த எண்ணிக்கை உத்தரப் பிரதேசம்,
மத்திய பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு
மாநிலங்களில் அடங்கிவிடுகிறது.

‘பெருமிதம்’

உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி
என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. எங்கள் உயிருடன்,
வாழ்வுடன் கலந்த மொழி தமிழ் மொழி, அந்த தமிழ் மொழி
மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி
தரப்படும்வரை நான் அமைதி பெறமாட்டேன்,
திருப்தி அடைய மாட்டேன்.

நான் தமிழுக்காக வாதாடுகிறேன். அதற்காக இந்திக்காக
வாதாடுபவர்களின் தாய்மொழிப் பற்றை நான் மறுக்கவில்லை.
அவர்கள் இந்திக்காகப் பாடுபடட்டும்.

( நன்றி – பிபிசி தமிழ் )

————————–

இவர்களுக்கு ஹிந்தி தேவை என்றால் வைத்துக்கொள்ளட்டும்.
ஆனால், ( இவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வரவில்லை என்பதால்)
ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்பதில்
இவர்கள் தீவிரம் காட்டுவது ஏன்…?

தென்னிந்தியர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறுவதை
இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்…?

இன்றிருக்கும் இதே நிலை, ஆங்கிலமும்-ஹிந்தியும்
ஆட்சிமொழிகளாகத் தொடர்வதில் ஹிந்திக்காரர்களுக்கு
எந்தவித ஆட்சேபணையும் இருக்க நியாயமில்லை.

ஆனால், சிலர், தங்களுக்கு மெஜாரிடி இருக்கிறது என்கிற
துணிச்சலில், ஆணவத்தில் –
எதை வேண்டுமானாலும் செய்யலாமென்று
நினைக்கிறார்கள். தங்களைத் தடுக்க யாராலும் முடியாதென்று
நினைக்கிறார்கள். தாங்கள் நினைப்பதை,
தங்களது அடிப்படைவாதத்தை மற்றவர்கள் மீது
திணிக்கிறார்கள்.

இது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.
இது என் நாடு. நம் நாடு.
இதனை பிளவுபடுத்தும் முயற்சியில் இவர்கள் இறங்குவதை
நம்மால் ஏற்க முடியவில்லை.

இந்தியாவின் ஒற்றுமை மிக மிக முக்கியம்.
இந்த நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும்
ஊறு விளைவிக்கும் எந்த செயலிலும் ஈடுபடுவதை
அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த நாட்டின் ஒற்றுமையை
விட, வேறு எந்தவித கட்சிக்கொள்கைகளும்
முக்கியமானதல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரும்…
என்கிற உறுதியான நிலை இருந்தால் –

ஹிந்தி தெரியாதவர்கள் நிச்சயம் தாங்களாகவே விரும்பி,
ஹிந்தியை கற்பார்கள்…அந்த நிலையில் தான் – ஹிந்தி மொழி
எந்தவித வற்புறுத்தலும் இல்லாமலே, இயற்கையாகவே,
இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்க உதவும்.

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டுவோம்.

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to “ஜனகணமன” – வை – ஹிந்தியில் இல்லை என்பதற்காக தூக்கிப் போட்டு விடுவார்களா …?

 1. புவியரசு சொல்கிறார்:

  இன்றைய தினம் மிகவும் அவசியமான,
  அர்த்தமுள்ள,
  வரவேற்கப்படவேண்டிய இடுகை.
  வாழ்த்துகள் காவிரிமைந்தன் சார்.

 2. Selvarajan சொல்கிறார்:

  அறிஞர் அண்ணா அன்று ஆற்றிய உரை இன்றைய சூழலுக்கு மட்டுமல்ல எப்போதும் பொருந்தும்படி நாட்டின் நடப்பு இருப்பதால் தான் அவர் ” அறிஞர் ” … !

  // சிலர், தங்களுக்கு மெஜாரிடி இருக்கிறது என்கிற
  துணிச்சலில், ஆணவத்தில் –
  எதை வேண்டுமானாலும் செய்யலாமென்று
  நினைக்கிறார்கள். தங்களைத் தடுக்க யாராலும் முடியாதென்று
  நினைக்கிறார்கள். தாங்கள் நினைப்பதை,
  தங்களது அடிப்படைவாதத்தை மற்றவர்கள் மீது
  திணிக்கிறார்கள்.

  இது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.
  இது என் நாடு. நம் நாடு.
  இதனை பிளவுபடுத்தும் முயற்சியில் இவர்கள் இறங்குவதை
  நம்மால் ஏற்க முடியவில்லை….// என்று கூறியதோடு மட்டுமின்றி

  நான் வங்காளிக்கோ மராட்டியருக்கோ குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னதுபோல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்” என்றும் கூறினார்…!!

 3. புதியவன் சொல்கிறார்:

  அமித்ஷா சொல்லியிருக்கும் ‘நாட்டிற்கு ஒற்றை மொழி’ என்பது சிறிதும் சரியானது அல்ல. ஹிந்தி மொழி என்பதே உருவாகி 100 வருடங்கள்கூட இருக்குமான்னு தெரியலை. நம் நாட்டிற்கு இப்போது இருப்பதுபோலவே, மத்திய அரசு அலுவலக மொழியாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம், மாநில அரசுகளுக்கு அந்த அந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் (+ஹிந்தி) என்றுதான் இருக்கவேண்டும். இதனை மாற்ற முற்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தை உண்டாக்கும். அமித்ஷா, உள்துறை அமைச்சர் என்ற பதவியில் இருந்து இதனைப் பேசுவது கண்டனத்துக்கு உரியது.

  வற்புறுத்தி எவரையும் எதையும் செய்யவைக்க முடியாது. மத்திய அரசு செய்யவேண்டியது, இந்திய மக்கள் எந்த மொழியையும் கற்பதற்குத் தடையாக எந்த மாநில அரசும் இருக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். இந்தியன் தான் விரும்பும் இந்திய மொழியைக் கற்றுக்கொள்ள எந்தத் தடையும் இருக்கக்கூடாது.

  இன்னொரு மொழிக்கான எதிர்ப்பு என்று எந்த அரசியல் கட்சி கிளம்பினாலும், அதனைத் தடை செய்யவேண்டும். (முக்கியமாக திமுக, திக). இவர்கள்தாம் நாட்டு ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் கட்சிகள். எல்லா அரசுப் பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழியை, அதிலும் இந்தியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். அது கூடாது என்று சொல்லும் திமுக கும்பல்களிடமிருந்து மெட்ரிக், சிபிஎஸ்ஸி பள்ளிக்கான அனுமதியைப் பிடுங்கி, அந்தப் பள்ளிகளை அரசுடமையாக்கவேண்டும்.

  //சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம் // – இதையெல்லாம் இந்த அண்ணா செய்தமாதிரித் தெரியலையே… 3% என்று சொல்லி ஒரு சாதிக்கு எதிராக பெரும்பான்மை மக்களைத் தூண்டிவிட்டவரல்லவா இவர்?

 4. புவியரசு சொல்கிறார்:

  இந்த தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு சூடான செய்தி –

  https://tamil.oneindia.com/thiruvananthapuram/stop-hindi-imposition-pinarayi-vijayan-tweet-triggers-the-triggers-the-trend-in-kerala-too-362985.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.11.206.54&utm_campaign=client-rss

  பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்..
  இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!
  Published: Sunday, September 15, 2019, 12:59 [IST]
  திருவனந்தபுரம்: இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர்
  பினராயி விஜயன் செய்துள்ள டிவிட்டுகள் பெரிய வைரலாகி
  உள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் இந்தியை
  திணிக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது.

  இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
  “ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி” என்று க
  ருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து மக்கள்
  இடையே கடுமையான கோபத்தை வரவழைத்து இருக்கிறது.
  முக்கியமாக தென்னிந்திய மக்கள் இந்தி திணிப்பிற்கு
  எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளது.

  இந்தியாவில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகமும்,
  கர்நாடகாவும், வங்கமும் தீவிரமாக நடத்தி வருகிறது.
  தற்போது அந்த போராட்டத்தில் கேரளாவும் இணைந்துள்ளது.
  இந்த நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர்
  பினராயி விஜயன் டிவிட் செய்துள்ளார். என்ன செய்துள்ளார்
  அவர் தனது டிவிட்டில், இந்தி இந்தியாவை ஒன்றிணைக்கும்
  என்று கூறுவதை விட பெரிய அபத்தம் கிடையாது.

  அந்த மொழி பல இந்தியர்களுக்கு தாய் மொழி கூட கிடையாது.
  அப்படிப்பட்ட மொழியை மக்கள் மீது திணிக்க நினைப்பது
  அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமம். இந்தி பேசாத
  மக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர் முழுக்கம் இது.
  இந்தியா எந்த ஒரு இந்தியனும் மொழியை வைத்து
  அந்நியமாக நடத்தப்பட கூடாது. இந்தியாவின் பலமே
  வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். தன்னுடைய
  பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.
  சூழ்ச்சிகளை மக்கள் பார்த்து உணர்ந்து கொள்வார்கள் என்பதை
  அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  மக்களை உண்மையான பிரச்சனையில் இருந்து திசை
  திருப்புவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது
  தெரியும், என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். அவரின்
  இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

  கேரள மக்கள் பினராயி விஜயனின் டிவிட்டை தொடர்ந்து
  மலையாளிகள் தற்போது இந்திக்கு எதிராக குரல் கொடுக்க
  தொடங்கி உள்ளனர். #StopHindiImposition டேக்கை நேற்று
  தமிழர்களும், கன்னட மக்களும் வைரலாக்கி வந்தனர்.
  இந்த நிலையில் தற்போது மலையாளிகளும் இதில்
  வரிசையாக டிவிட் செய்ய தொடங்கி உள்ளனர்.

  • புதியவன் சொல்கிறார்:

   யார் இந்த பினரயி விஜயன்? சபரிமலை கோவிலுக்குள் மாற்று மதப் பெண்களையும் அனுப்பவேண்டும் என்று முயன்று, தன்னுடைய அரசின் காவலர்களை அதில் ஈடுபடுத்தி இந்துக்களுக்கு எதிராக முனைந்து செயல்பட்டு, “வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவரா?

   ஹிந்தித் திணிப்புக்கு எதிராக சரியாகப் பேசியிருந்தாலும் இது ‘சாத்தான் வேதம் ஓதுவதைப்’ போன்றதல்லவா?

   நிற்க… கா.மை. சார்…. எனக்கென்னவோ வேறு ஏதோ முக்கிய நிகழ்விலிருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திருப்ப அமித்ஷா முயன்றிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. பொருளாதார வீழ்ச்சி, ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் 1.76 லட்சம் கோடிகள் என்று வேறு பல விஷயங்களிலிருந்து நம் கவனத்தைத் திருப்பும் முயற்சியா?

 5. Prabhu Ram சொல்கிறார்:

  பாஜகவுக்கு தனி மெஜாரிடி கொடுத்தது தான்
  மக்கள் செய்த தவறு. அந்த மெஜாரிடி கொடுத்த
  திமிர் தான் இந்த மாதிரி தலை கால் தெரியாமல்
  குதிக்கச் செய்கிறது.

  அடுத்து நடக்கும் இடைத்தேர்தல் எதிலாவது
  வாயே திறக்க முடியாத அளவிற்கு பலமான அடி
  கிடைத்தால் வாயும், திமிரும் கொஞ்சம் அடங்கும்.

 6. Prabhu Ram சொல்கிறார்:

  தமிழ்நாட்டிலேயே வந்து அவர்கள் இந்தியில்
  பேசுவதை மக்கள் அனுமதிப்பதால் தான் இந்த
  தைரியம் அவர்களுக்கு வருகிறது.
  அடுத்த தடவை யாராவது இங்கே வந்து
  இந்தியில் பேசினால், மறக்க முடியாத
  அளவிற்கு அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

 7. புவியரசு சொல்கிறார்:

  https://www.hindutamil.in/news/tamilnadu/515851-ramadoss-slams-hindi-imposition.html

  இந்தியை இந்தியாவின் அடையாள மொழியாக
  ஒருபோதும் ஏற்க முடியாது: ராமதாஸ் –

  செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
  இந்தி மொழிக்கு ஆதரவான மத்திய அமைச்சர்
  அமித்ஷாவின் கருத்தை நிச்சயம் ஏற்க முடியாது
  என்றும் அவர் தெரிவித்தார்.

  தொடர்ந்து அவர் கூறுகையில்
  “இந்தியா என்பது ஒற்றை மொழி பேசுகின்ற நாடு அல்ல.
  ஒரே இனத்தைச் சேர்ந்த நாடு அல்ல.
  ஒரு மதத்தைச் சார்ந்த நாடு அல்ல.
  பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள்,
  பல்வேறு மொழிகள் பேசுகின்ற இந்தியாவில்
  ஒரு மொழியை திணிப்பது ஒற்றை மொழி
  என்று சொல்லுவதை நிச்சயமாக ஏற்க முடியாது.

  பிற மொழி பேசுகின்ற மக்கள், இனங்கள்
  இதனை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்”
  என ராமதாஸ் தெரிவித்தார்.

 8. புவியரசு சொல்கிறார்:

  https://www.hindutamil.in/news/tamilnadu/515840-kamal-hassan-s-veiled-attack-on-amit-shah.html

  இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கிய
  மொழி, கலாச்சார சுதந்திரத்தை எந்த ஷாவும்,
  சுல்தானும், சாம்ராட்டும் மாற்ற முயற்சிக்கக் கூடாது
  என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவு செய்துள்ளார்.

  இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை
  நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
  வெள்ளையனை வெளியேற்றியது
  வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.

  “பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து
  உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க
  முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள்
  பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும்
  கலாச்சாரமும் என்பதுதான்.

  1950 இல் இந்தியா குடியரசானபோது அதே சத்தியத்தை
  அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று
  எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட
  முயற்சிக்கக் கூடாது.”

 9. புவியரசு சொல்கிறார்:

  https://www.vikatan.com/government-and-politics/politics/this-is-not-vajpayee-bjp-says-yaswant-sinha

  முன்னாள் பாஜக தலைவரும்,
  மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா,
  கூறியது –
  ” டெல்லியில் இன்று ஆட்சிக்கட்டிலில்
  அமர்ந்திருப்பவர்களுக்கு இந்தியாவைப் பற்றி,
  இந்திய மக்களைப் பற்றித் தெரியவில்லை.

  இந்தி பேசும் மாநிலத்திலிருந்து நான் வந்தாலும்
  உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை
  நான் எதிர்க்கிறேன்.
  இன்றைய பா.ஜ.க வாஜ்பாயினுடைய பா.ஜ.க அல்ல.
  வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா.
  பல மதம், மொழி இதுதான் இந்தியா. இதை
  அறியாததால்தான் ஒரே மொழி ஒரே நாடு என்பதை
  தூக்கிப் பிடித்து வருகின்றனர்”.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.