குஜராத் கலவரங்களின் அடையாளங்கள்….


இரண்டு நாட்களுக்கு முன்னர், இதே விமரிசனம் தளத்தில்,

” கலவரமும், நிலவரமும் ”

என்கிற தலைப்பில், மத நல்லிணக்கத்தையும்,
ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு இடுகை வெளியானது.

இன்றைய தினம் தினமலர் நாளிதழில், அந்த புகைப்படங்களுடன்,
இன்னும் கொஞ்சம் செய்தியும் சேர்த்து –

” குஜராத் கலவரத்தின் அடையாளங்களான
அசோக்கின் கடையை திறந்த குத்புதீன்”

– என்கிற தலைப்பில் ஒரு செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.
அந்த செய்தியையும் புகைப்படத்தையும் கீழே தந்திருக்கிறேன்.


மத நல்லிணக்கம் குறித்து நாம் எழுதிய விஷயங்களை,
இந்த செய்திக் கட்டுரையும் முக்கியப்படுத்துகிறது.

ஒரு வேகமான, புகழ்பெற்ற, நாளிதழ் தரும் முன்னரே,
அந்த செய்தியையும், அதற்கான விமரிசனத்தையும் சேர்த்து
இந்த தளத்தில் நாம் வெளியிட்டிருக்கிறோம் என்பது
ஒரு மகிழ்ச்சியையும், மன நிறைவையும்
தரும் விஷயமாக இருக்கிறது.

—————————————————-
இன்றைய தினமலர் செய்தி, வாசக நண்பர்களின் பார்வைக்காக கீழே –

( https://www.dinamalar.com/news_detail.asp?id=2365839 )

குஜராத் கலவரத்தின் அடையாளங்களான அசோக்கின் கடையை
திறந்த குத்புதீன்
செப் 13, 2019 02:03

————

ஆமதாபாத்:குஜராத் கலவரத்தின் அடையாளங்களாக திகழும்,
அசோக் பார்மர் என்ற ஹிந்து இளைஞரின் காலணிக் கடையை,
முஸ்லிம் இளைஞரான குத்புதீன் அன்சாரி திறந்து வைத்தது,
மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக, அனைத்து தரப்பினராலும்
பாராட்டப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு,
2002ல் நடந்த கலவரத்தின் போது, அனைத்து பத்திரிகைகளிலும்
வெளியான அந்த இரு புகைப்படங்களை, அவ்வளவு எளிதில்
யாரும் மறந்துவிட முடியாது.நெஞ்சை உலுக்கியது.

ஆவேஷமாக கூச்சலிட்டபடி, இரு கைகளையும் உயர்த்தியபடி
வரும் அசோக் பார்மர் என்ற இளைஞரின் படமும்,
கண்களில் கண்ணீருடன், கையெடுத்து கும்பிட்டு உயிர் பிச்சை
கேட்கும் குத்புதீன் அன்சாரி என்ற இளைஞரின் படமும்,
இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும்,
அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது.புகைப்பட கலைஞர்,

செபாஸ்டின் டிசோசா என்பவர் எடுத்த இந்த புகைப்படங்கள்,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அசோக் பார்மர் என்ற
இளைஞர், ஆமதாபாதில், செருப்பு தைக்கும் தொழிலாளியாக
பணியாற்றி வந்தார்.

கோத்ரா கலவரத்துக்கு பின் கைது செய்யப்பட்ட அவர்,
போதிய சாட்சிகள் இல்லாததால், விடுவிக்கப்பட்டார்.

குத்புதீன் அன்சாரி, இந்த கலவரத்துக்கு பின், குடும்பத்துடன்
குஜராத்தை விட்டு வெளியேறினார். சில ஆண்டுகளுக்கு முன்,
மீண்டும் குஜராத் திரும்பிய அவர், தையல் தொழில் செய்து வருகிறார்.

செருப்பு தொழிலாளியாக இருந்த அசோக் பார்மர், தற்போது,
சொந்தமாக ஒரு காலணி கடையை, குஜராத்தில் திறந்துள்ளார்.
இந்த கடையை, கடந்த, 6ம் தேதி திறந்து வைத்தவர், குத்புதீன்
அன்சாரி.’கொல்ல வந்தவர் கடையை, உயிர் பிச்சை கேட்டவர்
திறந்து வைப்பதா?’ என, செய்தியை கேள்விப்பட்ட அனைவரும்
ஆச்சரியப்பட்டனர்.

ஆனால், அன்றைக்கு நடந்தவை குறித்து, அசோக் பார்மர்
கூறியதாவது:குஜராத் மாநிலத்தின் அடையாளமே,
அஹிம்சை தான். ஆனால், 2002 கலவரம் அந்த அடையாளத்தை
சிதைத்தது.

தவறான சித்திரம் கலவரத்திற்கு காரணமான முக்கிய
குற்றவாளிகளில் நானும் ஒருவரைப் போலவும், என்னால்
குத்புதீன் பாதிக்கப்பட்டது போலவும், அன்றைக்கு வெளியான
எங்கள் இருவரின் புகைப்படங்களும், தவறாக சித்தரித்தன.

எங்கள் பகுதியில் ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்படவில்லை.
கேரளாவில், 2014ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய
கருத்தரங்கில் கலந்து கொள்ள, நானும், அன்சாரியும்
அழைக்கப்பட்டோம்.

அன்றில் இருந்து, நாங்கள் நண்பர்கள் ஆனோம். இன்றைக்கு \
குஜராத், அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது. அதை, இந்த
உலகுக்கு எடுத்து சொல்லத் தான், என் கடையை, அன்சாரி
திறந்து வைத்தார்.

இந்த கடை கூட, ஹிந்து – முஸ்லிம் அதிகம் வசிக்கும்
பகுதியில் தான் அமைந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

குத்புதீன் அன்சாரி கூறுகையில், ”குஜராத்தில், 2002 கலவரம்
என்பது, ஒரு விதிவிலக்கு. மற்றபடி, இது அமைதியான
நகரம் தான். அசோக் பார்மரின் காலணி கடையை,
நான் தான் திறக்க வேண்டும் என அழைத்தார்.

”மனிதநேயம் என்பது என்றைக்கு தழைத்தோங்கும்;
அதை எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது என்பதை
உணர்த்தவே, அதற்கு ஒப்புக் கொண்டேன்,” என்றார்.

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.