கலவரமும், நிலவரமும் …


வாழ்க்கை என்னும் ஓடம் –
வழங்குகின்ற பாடம்…!!!

2002-ல் நிகழ்ந்த அந்த படுபயங்கர குஜராத் கலவரத்தின்
கோரத்தை வெளிப்படுத்திய 2 புகைப்படங்கள் அப்போது
இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது….

அதில் ஒரு படத்தில் உயிர்ப் பிச்சை கேட்டு இளைஞர்
ஒருவர் கெஞ்சுவது போன்ற படம்.
அந்தப் படத்தில் இருந்த இளைஞரின் பெயர் குத்புதின் அன்வர்.

அடுத்த படம் கையில் வாளுடன் ஆவேசமாக நிற்கும் நபர்.
அவரது பெயர் அஷோக் பார்மர் என்கிற மோச்சி.
(மோச்சி என்றால் ஹிந்தியில் செருப்பு தைப்பவர் என்று பொருள்..)

இந்த இருவரின் அப்போதைய படங்களும் கீழே –

..

அந்த நேரத்தில் மதக் கலவரத்தின் கோரத்தையும்,
பாதிக்கப்பட்டவரின் மனநிலையையும் – உயிர்ப் பிச்சை கேட்டு
கெஞ்சி அழும் அன்வரின் புகைப்படம் உணர்த்தியதாக
கருத்து எழுந்தது.

அதேபோன்று அஷோக் பார்மர் படமும் மதவெறிக்கும்,
வன்முறைக்கும் – பிரபலமானது.

அமைதியான இயல்பும்,
சகிப்புத்தன்மையும்,
அனைவரிடத்தும் அன்பு காட்டுதலும்,
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் தான் –

வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் என்பது
அப்போது அந்த இளவயது அஷோக் பார்மருக்குப் புரியவில்லை.

ஆனால் காலம் அவருக்கு கற்றுத்தந்த பாடம்
இன்று அனைவருக்கும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக
அமைந்து விட்டது.

கலவரத்தில் ஈடுபட்டதால், வழக்குகளில் சிக்கிய அவர்
தொடர்ந்து, பல வருடங்கள் போலீஸ் காவலிலும், நீதிமன்ற
விசாரணைகளிலும் அலைய நேர்ந்தது.

2005-ல் நீதிமன்றம் அவரை விடுவித்தாலும்,
மேல்முறையீடு காரணமாக அவர் 2014-ம் ஆண்டுவரை
தொடர்ந்து வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தனது வருமானம் அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு
வந்துவிட்ட அஷோக் பார்மர் என்கிற மோச்சியால் திருமணம் கூட செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

( அன்றைய அஷோக் பார்மரும், இன்றைய அஷோக் பார்மரும்….)

வருடங்கள் கடந்தபோது, தொடர்ந்து வறுமையும், துன்பமும்
நிம்மதியின்மையும் வாட்டியபோது வாழ்க்கை அவருக்கு
பல பாடங்களை கற்றுத் தந்தது.

இந்த நாட்டில் அனைவருக்கும் இடம் உண்டு,
அனைவரும் இந்திய மக்களே,
வேற்றுமையிலும் ஒற்றுமை அவசியம் தேவை,
மதத்துவேஷம் அறவே கூடாது
என்பதை எல்லாம் சொந்த அனுபவத்தால் உணர்ந்து
கொண்ட மோச்சி, தன் தவறுகளுக்கு பரிகாரம் தேட முனைந்தார்.

தலித் – இஸ்லாமிய ஒற்றுமைக்காகப் பாடுபடும் இயக்கத்தில்
இணைந்த மோச்சி தான் செய்த கொடுமைகளுக்காக
அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

மோச்சியின் பரிதாப நிலையை அறிந்த கேரள மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு செருப்புக் கடை வைக்க
நிதியுதவி செய்தது.

மோச்சி, தனது கடையை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட –
மேற்படி புகைப்படத்தில் காணப்படும் தையல் தொழிலாளியான
அன்வரைக் கொண்டு, கடந்த வாரம் டெல்லி தர்வாஜா ஏரியாவில்
திறந்து வைக்கச் செய்தார்….

அந்தக் கடையின் பெயர் –
( ஏக்தா சப்பல் கர் ) ஒற்றுமை செருப்புக் கடை…!!!

கடையைத் திறந்து வைத்த பின் பேசிய குத்புதீன் அன்வர்,
தனது நண்பர் மோச்சிக்காக பிரார்த்திப்பதாகக் கூறினார்.
மேலும் அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
இனி நன்றாக இருப்பார். நாங்கள் இருவரும் கடினமான
நாட்களைக் கடந்து வந்துள்ளோம் என்று கூறி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து மோச்சி பேசுகையில்,
”இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு,
எனக்கென்று ஒரு வீடு கூட இல்லை. ஆனால் இந்தப்
புதிய வாழ்க்கை அதை எனக்குப் பெற்றுத்தரும் என்கிற
நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மதங்களைக் கடந்து மனிதநேயம் வென்ற
நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வுக்கு அன்வர் மற்றும் மோச்சியின்
இந்த வாழ்க்கை எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மதங்களையும் தாண்டி,
மனிதத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன்
அவசியத்தை இந்த சரித்திரம் வலியுறுத்துகிறது.

நம் அனைவரின் மனதிலும் இத்தகைய –

மனிதத்துவம் மலர – வேண்டுவோம்.

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கலவரமும், நிலவரமும் …

 1. Venkat சொல்கிறார்:

  Nice message. Proof that life is a big circle. Recently I read an article in vikatan about past root thala. It showed how a college root thala suffered later in his life.

  Violence in the name of religion is the biggest paradox. But history is full of such events…

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  What a horrible photograph. I have never seen such a horrible photograph in my life time.
  I am able to visualize ‘The fear of death’ in that man’s eyes and his STILL photo shows lot
  of. message even the best actor can;t express such fear. Appappa podhudumda sami

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.