பில்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு …


குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு
சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது
நினைவிருக்கலாம்.

அந்த ஆண்டின் மார்ச் 3ஆம் தேதியன்று ஆமதாபாத் அருகில்
உள்ள ராந்திக்பூர் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது,
வேன் ஒன்றில் ஏறித் தப்பிச்செல்ல முயன்ற –
பில்கிஸ் பானோ என்ற பெண்ணின் குடும்பத்தார் மீது
ஒரு கும்பல் கொடூர தாக்குதலை நடத்தியது.

இதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் அவரின் தாயும், பில்கிஸ் பானோவின் 2 வயது
குழந்தையும் அடக்கம்.

இதோடு விடாமல், பல பிணங்களின் நடுவே வைத்து,
அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை
அந்தக் கும்பல் கூட்டாக பலாத்காரமும் செய்தது.

எனினும், பில்கிஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 6 பேர்
அந்தக் கும்பலிடம் இருந்து பலத்த காயத்தின் நடுவே
தப்பியோடி விட்டனர்.

பின்னர் அசாத்திய தைரியத்துடன் பில்கிஸ் பானு,
தனக்கு அந்த கொடுமையை செய்தவர்களின் மீது காவல்
துறையில் புகார் கொடுத்தார். குஜராத் மாநில காவல் துறை
அவ்வளவு சுலபமாக அந்த வழக்கை ஏற்கவில்லை.

சமூக நல அமைப்புகளின் உதவியுடன், வழக்கு
முன்கொண்டு செல்லப்பட்டது. குஜராத்தில் வழக்கு தொடர்ந்தால்,
நீதி கிட்டாது என்று உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள்
வைத்த பிறகு, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு,
குஜராத்திலிருந்து அந்த வழக்கு மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு
மாற்றப்பட்டது.

முதல் மட்ட விசாரணை நீதிமன்றம். இந்த பலாத்கார
வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த விவகாரத்தில் கடமை தவறியதாகவும்,
சாட்சியங்களை அழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட
5 போலீஸார் மற்றும் 2 அரசு டாக்டர்களை
விசாரணை நீதிமன்றம் விடுவித்து விட்டது.

விடுவிக்கப்பட்ட அந்த 5 காவல் துறை அதிகாரிகளும்,
2 டாக்டர்களும் பழைய பதவியில் சேர்ந்ததோடு அல்லாமல்
பதவி உயர்வுகளும் பெற்றனர்…

இந்த தீர்ப்பை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில்
மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை மீண்டும் துவக்கம்
முதல் விவரமாக விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம்,
இவ்வழக்கில் ஏற்கெனவே 12 பேருக்கு ஆயுள் தண்டனை
விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை
உறுதிப்படுத்தியது.

ஆனால், அதோடு நில்லாமல், கீழ்கோர்ட்டால் 5 போலீஸார்
மற்றும் 2 டாக்டர்களை விடுவித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை
மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அவர்களையும், குற்றவாளிகள் என அறிவித்து,
அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கச்
சொல்லி உத்திரவு இட்டது.

இந்த தீர்ப்பை சொன்னவர், தற்போது நாட்டிலுள்ள
25 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில்
மூத்த நீதிபதியாக இருப்பவரும், சென்னை
உயர்நீதிமன்றத் தலைமை
நீதிபதியாக பதவி வகிப்பவரும்,
தனது இட-மாற்றல் உத்திரவின் காரணமாக
குடியரசுத் தலைவருக்கு தனது பதவி விலகல் கடிதத்தை
சமர்ப்பித்துள்ளவருமான பெண் நீதிபதி.

————————–

சரி, இந்த வழக்கைப்பற்றி இங்கு ஏன் விவரமாக எழுதி
இருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா…?

தமிழக மக்களுக்கு இந்த வழக்கைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை என்பதாலும், தற்போது பேசப்பட்டு வரும்,
முக்கியமான ஒரு வழக்கைப்பற்றி, நம் வாசக நண்பர்கள்
தெரிந்து கொள்ள் வேண்டும் என்பதாலும் தான்…!!!

இப்போது அந்த வழக்கைப்பற்றிய செய்திகள் சூடு பிடித்தது
ஏன் என்று கேட்கிறீர்களா…? ஏதோ காரணங்களுக்காக,
இன்னமும் உயிர்ப்போடு இருக்கும் இந்த வழக்கை
விசாரித்து வரும் ஒரு நீதிபதி, அந்த குற்றம் சாட்டப்பட்ட
குஜராத் மாநில 5 காவல் துறை அதிகாரிகளும்,
2 டாக்டர்களும் – இன்னும் எப்படி பதவியில்
தொடர்கிறார்கள்… அவர்கள் மீது குஜராத் அரசு என்ன
நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி கேட்டு விட்டாரே…!!!

தலைமை நீதிபதியின் பணியிட மாற்றல் உத்திரவுக்கும்
இந்த வழக்குக்கும் எதாவது தொடர்பு உண்டா என்று
கேட்கிறீர்களா…?

சேச்சே …. நிச்சயமாக அந்த மாதிரி சந்தேகமே
நமக்கு கிடையாது.

அதான் முந்தாநாளே ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் சொல்லி
விட்டாரே – அப்படி நினைப்பது முட்டாள்தனம் என்று.
அறிவாளியான சந்துரு அவர்களிடம் முட்டாள் பட்டம் பெற
நமக்கு நிச்சயம் ஆசை இல்லை…!!!

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பில்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கு …

 1. புவியரசு சொல்கிறார்:

  இந்த வன்முறை சம்பவங்கள் நடந்த 2002-லும்
  அதற்குப் பிறகு, மாநில போலீசின் ஒத்துழைப்பு
  இல்லாததால் வழக்கு நடத்த முடியாமல்
  திண்டாடிய காலத்திலும், பிறகு மும்பை ஹைகோர்ட்
  தீர்ப்பு வந்த காலத்தில் எல்லாம் அங்கே இருந்தது
  பாஜக அரசு தான். தீர்ப்பை குப்பையில் போட்டது
  அந்த அரசு. அந்த மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து
  பணியில் வைத்துக் கொள்ளப்பட்டார்கள். எந்தவித
  தண்டனையும் இல்லை; மாறாக சிலர் பிரமோஷனும்
  பெற்றார்கள். இப்போது என்ன நடவடிக்கை
  எடுத்தீர்கள் என்று மாநில பாஜக அரசை கேட்டவுடன்
  மேலிடத்திற்கு பொத்துக் கொண்டு வந்திருக்கும்.
  அதன் விளைவே மற்றவையெல்லாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.