கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல ….


கெட்ட பழக்கங்களிலிருந்து விடுவது தொடர்பாக எங்கு
எந்த செய்தி கிடைத்தாலும், தேடிப்படிப்பது என் பழக்கம்.
எனக்குத் தெரிந்தவர்கள், பழக்கமானவர்கள் யாரிடமாவது
இத்தகைய பழக்கங்கள் இருந்தால் – அவர்களை வெளியே
கொண்டு வர அந்த செய்தி எந்த விதத்திலாவது உதவுமா
என்று பார்ப்பேன்.

எழுத்தாளர்-இயக்குநர் ராஜூமுருகன் ஒரு அற்புதமான
சிந்தனையாளர். வித்தியாசமான பல விஷயங்களைப்பற்றி
அவர் மிக அழகாக, ஆழமாக எழுதுகிறார்.
அவரது கட்டுரை ஒன்றில் நான் படித்ததிலிருந்து
ஒரு பகுதி – உங்கள் பார்வைக்கும் வர வேண்டுமென்று
நினைத்தேன். கீழே ராஜூமுருகனின் எழுத்தில் –

“கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல …
பட்டெனத் தூக்கி வீசிவிடு”
என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
நானும் அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் புகையையும்
மதுவையும் தூக்கி வீசினேன்.

….அந்த நண்பன் சொன்னதைப் போல அப்போது எனக்கு
முன்பு வந்து நின்ற பெரும் சவால்…இந்த வெற்றிடம் தான் !
நேரமே போகாமல் மனதைத் தவிக்க வைக்கும் வெற்றிடம்.
அடுத்து என்ன செய்வது எனப்புரியாத தவிப்பும், குழப்பமும்.

ஏக்கம், பிரிவு, கவலை, கண்றாவி என நமது அத்தனை
உணர்ச்சிகளையும் லாகிரி வஸ்துக்களிடம் அடகு வைத்து
விட்டோம் என்பதே அப்போது தான் புரிந்தது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கும், அடுத்து நாம்
செய்வதற்கும் எத்தனை அற்புதங்கள் இருக்கின்றன ?

எழுத்து, வாசிப்பு,
இசை, சினிமா,
நல்ல உரையாடல்கள்,
பயணங்கள், வேலை, உணவு,
யோகா, உடற்பயிற்சி
என எவ்வளவோ விஷயங்கள்….
அத்தனையும் போதை தான் என்பதை இப்போது உணர்கிறேன்.

“நாம பண்ண சீனுக்கு தியேட்டர்ல ஆடியன்ஸ்
கை தட்னாங்கன்னா… அப்ப ஜிவ்வ்வுனு இருக்கும்
பாருங்க..அது தான் உண்மையிலேயே போதை ..”
என்பார் லிங்குசாமி சார்.

“உதவி பண்றதே ஒரு போதைதாங்க… யாருக்காவது
எதாவது பண்ணிட்டா கிறுகிறுன்னு சந்தோஷமா இருக்கும்.
யாராவது வாழ்த்திட்டா பொசுக்குனு பூத்துக்கும். அதை
உணர்ந்துட்டா நாலு பேருக்கு எதாவது பண்ணிக்கிட்டே
கெடப்போம்ங்க” எனத்தோழர் அருளானந்தம் ஒரு முறை
சொன்னபோது – அடடா இதெல்லாம் தானே போதை என
உணர்ந்தேன்.

“..த்தா.. வலியை மறக்கக் குடிக்கிறியா ..?
உங்கம்மாவுக்கும், எங்கம்மாவுக்கும் இல்லாத வலியாடா ..?”
என எப்போதோ சரோ சிம்பிளாகச் சொல்லிவிட்டுப் போனது,
இப்போதும் எக்கோ அடிக்கிறது.

எங்கோ, யாருக்கோ – நாம் உருவாக்கும் கண்ணீரும்
புன்னகையும் கூடப் போதைதான்.

சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு 48 நாட்களும்
அதிகாலையில் எழுந்து, குளித்து, சாமி கும்பிட்டு ஒரு
வாழ்க்கை வாழ்வோமே.. அது அத்தனை போதையானது.

இருமுடி கட்டிக்கொண்டு பரதேசியாகக் கிளம்பும் பயணம் …
ஆன்மிகம் தவிர்த்தும் – ஓர் அற்புதம்.

இந்த மனசையும், மனிதர்களையும் இருமுடியாகக்
கட்டிக்கொண்டு ஆயுசுக்கும் பரதேசியாக வாழ்வதே
ஆகச்சிறந்த போதைதான் !

“சுரண்டல் அரசே – சுரண்டல் அரசே..
அந்நியச் சந்தையில் மக்களை விற்காதே..”
எனத் தகிக்கும் தார் சாலையில் கோஷம்
போட்டுத் திரும்பும்போது வரும் ஒரு சின்ன நிறைவும் –

கெட்ட பழக்கங்களை விடுவதே ஒரு போதைதான்.
“அவுரு இப்போ தண்ணி எல்லாம் அடிக்கறது இல்ல …”
“ஆமாமா … மொகத்தை பாத்தாலே தெரியுதே…
இப்பதான் தெளிவா இருக்கு …” என யாராவது
பேசும்போது மனசு உற்சாகமாகும்.

…..எதற்காக இந்தப் போதைப் பழக்கங்கள் ?

எல்லாவற்றையும் மறக்க என்கிறது எல்லாக் குரலும்.
எல்லாவற்றையும் மறந்து விட முடியுமா ?
எதையும் மறக்க முடியாது ….
கடக்கத்தான் முடியும் ..
என்பதை உணர்ந்து கொள்ளவே இத்தனைக் காலமும் ஆயிற்று.

நினைத்துக் கொள்வதும் –
ஒதுக்கிக் கொள்வதுமே நிதரிசனம் எனப் புரிகிறபோது
எந்தப் போதையும் தேவையில்லை !

.
—————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல ….

 1. sakthi சொல்கிறார்:

  பழக்கத்துக்கு அடிமையாவது தான் போதை. அதாவது நமது உடலில் உள்ள செல்களுக்கு குறிப்பிட்ட பொருளில் உள்ள ஒரு வேதித்தன்மை மிகவும் பிடித்துப்போய்விட்டது என்றால் அதற்கு நம் உடல் மிக விரைவாக அடிமையாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குச் செல்கிறது. இப்படி அடிமையாகும் போதைப் பொருள், லாகிரி வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. …………என்கிறார்கள்.

  அந்த செல்கள் உடலில் இருக்கும் ஆசைகளை மட்டுமல்ல மனத்தில் இருக்கும் எண்ணங்களையும் மயக்கலாம்.தன்னை மறந்த நிலையில் இருப்பது அல்லது தன்னை சுற்றிய சூழலை உணராமல் இருப்பது போதை என்றால்…………

  தொலைக்காட்சித் தொடர்களை தன்னிலை மறந்து அனுபவிக்கும் பெண்களை (சினிமாவில் காட்டும்) நினைவு படுத்துகிறது.
  நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சக்தி,

   உண்மை தான். போதை என்பது
   லாகிரி வஸ்துக்களை மட்டுமே குறிப்பிடுவதில்லை;
   அது நல்ல விஷயங்களுக்கு கூட சில சமயம்
   பொருந்துகிறது.
   ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்றில் போதை…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.