தடை விதிக்கப்பட்ட “தியாக பூமி”..யும் – கல்கியும், எஸ்.எஸ்.வாசனும்…!!!1935-40-50-களில் தமிழுலகம் அறிந்த மிகப்பெரும் சாதனையாளர்கள்
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர்.

ஆனந்தவிகடன் பத்திரிகையின் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன்.
அதன் ஆசிரியர் கல்கி என்கிற புனைபெயருடன் அறியப்பட்ட
ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

பிற்காலத்தில், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரது நண்பரான
எஸ்.சதாசிவம் (திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
அவர்களின் கணவர் ) அவர்களுடன் சேர்ந்து
துவங்கிய வார இதழான கல்கியில்
வெளிவந்த சரித்திரத் தொடரான பொன்னியின் செல்வன் தான்
இதுவரை தமிழில் வெளிவந்த சரித்திர நாவல்களிலேயே
மிகச்சிறந்தது என்று கூறலாம். இன்றைய இளைஞர்கள் கூட
பொன்னியின் செல்வனையும், அதன் மூலம் கல்கியையும்
அறிவார்கள். இன்றும் புத்தகக் கண்காட்சிகளில் அதிகம்
விற்பனையாகும் நாவல்களில் ஒன்று பொன்னியின் செல்வன்.

நான் கீழே எழுதுவது பொன்னியின் செல்வனுக்கும் முந்தைய –
தியாக பூமி’யின் கதை…!!!

————————-

பத்திரிகை தொழிலில் ஓரளவுக்கு பணம், புகழ் ஈட்டிய
ஆனந்த விகடன் வாசன், அடுத்து தேர்ந்தெடுத்தது
திரைப்படத்துறை.

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விகடனில் எழுதிய
‘தியாகபூமி’ தொடர்கதையை திரைப்படமாக தயாரிக்க
முன்வந்தார் டைரக்டர் கே.சுப்ரமணியம்.( புகழ்பெற்ற
பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் அவர்களின் தந்தை….)..
டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் விருப்பத்தை ஏற்ற வாசன்
‘தியாகபூமி’ படத்தை தயாரிக்க அனுமதியளித்தார்.

கல்கி எழுதிய ‘தியாகபூமி’ கதை, ஆனந்த விகடன் வார இதழில்
தொடர்கதையாக வெளிவரத் தொடங்கியபோதே –
ஏறத்தாழ அதே நேரத்தில் – சினிமா படப்பிடிப்பும் தொடங்கியது.

‘தியாகபூமி’ படத்திற்கு பண முதலீடு செய்த வாசன், அதை
விளம்பரப்படுத்த ஒரு புது வியாபார நுணுக்கத்தை கண்டுபிடித்தார்.

சாதாரணமாக தொடர்கதையில் வரும்
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வார இதழில்,
ஒரு வரையப்பட்ட சித்திரம் போடப்படுவது வழக்கம்.

ஆனால் ‘தியாகபூமி’ நாவலுக்கு வாசன்,
அப்போது எடுக்கப்பட்டு வந்த
திரைப்படத்தின் காட்சிகளையே ‘விகடனில்’ பிரசுரித்தார்.

இது நாவலுக்கு நிஜத்தன்மையை ஏற்படுத்தியதோடு அல்லாமல்,
தியாகபூமி திரைப்படத்திற்கு எடுக்கப்படும்போதே, மக்கள் மத்தியில்
ஒரு பலத்த எதிர்பார்ப்பையும், ஆதரவையும் உருவாக்கியது.

படத்தைப் பற்றிய மெகா விளம்பரமாகவும் இது அமைந்தது.
அந்நாளில் யாருமே செய்திராத ஒரு புதுமை இது. வாசன்
ஒவ்வொன்றையும், புதுமையாகவும் நேர்த்தியாகவும் செய்து
முடிப்பதில் விசேஷத் திறமை பெற்றவர். வாசனின் புதுமை
விரும்பும் மனம், அவ்வப்போது ஏதாவது ஒன்றை
புரட்சிகரமாகவோ, புதுமையாகவோ செய்துகொண்டே
இருக்கும். இது வாசனுக்கு இயல்பாக வாய்த்த
சிறப்பான குணம்.

தியாகபூமி தொடர்கதையின் சுருக்கம் :‘தியாகபூமி’ படத்தின் கதாநாயகி சாவித்திரியாக
எஸ்.டி.சுப்புலட்சுமியும், கதாநாயகன் ஸ்ரீதரனாக கே.ஜே.
மகாதேவனும் நடித்தனர். கதாநாயகி சாவித்திரி கிராமத்தில்
பிறந்து வளர்ந்தவள். அதிகம் படிப்பறிவு இல்லாதவள்.
கதாநாயகன் ஸ்ரீதரன் மேல் நாட்டிற்கு சென்று படித்தவன்.

ஏற்கனவே ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் காதல்
வயப்பட்ட அவன், தனது தாயாரின் வற்புறுத்தலால்,
சாவித்திரியை மணக்கிறான். புகுந்த வீட்டில், சாவித்திரி
பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். இதுபற்றி அவள்,
தன் தந்தை சம்பு சாஸ்திரிக்கு (பாபநாசம் சிவன்) எழுதும்
கடிதங்களை, அவளது சித்தி எரித்து விடுகிறாள்.
மாமியார் வீட்டில் இருந்து விரட்டப்படும் சாவித்திரி, ஒரு

ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குழந்தைக்கு (பேபி சரோஜா)
தாய் ஆகிறாள். குழந்தையுடன் அவள் தற்கொலை
செய்து கொள்ள முயல, அங்கே தந்தை சம்பு சாஸ்திரியின்
குரல் கேட்க, குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகிறாள்.

அக்குழந்தையை, தன் சொந்த பேத்தி என்று அறியாமலேயே,
சாருமதி என்று பெயரிட்டு வளர்க்கிறார், சம்பு சாஸ்திரி.
சாவித்திரி, பம்பாய் சென்று தன் பணக்கார அத்தையின்
உதவியினால் உயர் கல்வி பயில்கிறாள். ஏராளமான
சொத்துக்களுடன், நாகரீக மங்கையாக ‘உமாராணி’ என்ற
பெயரில் புகழ் பெற்று விளங்குகிறாள்.

ஐந்தாண்டுகள் உருண்டோடுகின்றன. தன் மகள் என்று
தெரியாமலேயே சாருமதியை சந்தித்து பாசம் கொள்கிறாள்,
உமாராணி (சாவித்திரி).

மோசடி குற்றத்துக்காக கைது செய்யப்படும் ஸ்ரீதரனை
உதவிசெய்து, மீட்கிறாள். தன் மனைவி சாவித்திரி தான்
உமாராணி என்பதை அறியும் ஸ்ரீதரன், அவளுடன் மீண்டும்
வாழ விரும்புகிறான்.

ஆனால், அவன் கோரிக்கையை சாவித்திரி நிராகரிக்கிறாள்.
அவள் தன்னுடன் வாழவேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத்

தொடருகிறான், ஸ்ரீதரன். ஆனால் சாவித்திரியோ, ‘கர்ப்பிணி
என்றும் பாராமல் என்னை விரட்டி அடித்த அவருடன் இனி
வாழமாட்டேன். வேண்டுமானால், நான் வசதியுடன் இருப்பதால்
அவருக்கு ஜீவனாம்சம் தருகிறேன்’ என்று கோர்ட்டில்
கூறுகிறாள்.

இறுதியில், சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை செல்கிறாள்,
சாவித்திரி. ஸ்ரீதரனும், சுதந்திரப் போராட்டத்தில் சிறை
செல்கிறான். பிரிந்த குடும்பம் இறுதியில் ஒன்று சேருகிறது.

—————

1939-ம் ஆண்டு மே 20-ம் தேதி ‘தியாக பூமி’ படம் வெளியானது…
கதையமைப்பு, நடிப்பு, இயக்கம் எல்லாவற்றிலும் படம் சிறப்பாக

அமைந்திருந்தது. டி.கே.பட்டம்மாள் பாடிய, பாரதியாரின்
தேச பக்திப் பாடல்கள் கணீர் என்று ஒலித்தன.

‘ஆணுக்கு பெண் அடிமை இல்லை’ என்ற முற்போக்கான
கருத்தை மையமாக கொண்டிருந்ததால் படத்தை பெண்கள்
மிகவும் விரும்பிப் பார்த்தனர்.

‘தியாக பூமி புடவை’ ‘தியாகபூமி வளையல்’ என்ற பெயர்களில்
சேலைகளும், வளையல்களும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.
படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

படம் திரையிடப்படும்போது, சென்னை மாகாணத்தில்,
ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்ததால்,
சென்சாரில் எந்தவித தடங்கலும் இன்றி வெளிவந்து விட்டது.
ஆனால், 2-ம் உலகப்போர் துவங்கியவுடன், பிரிட்டிஷாரை எதிர்த்து,
ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்து விட்டது.

இதன் விளைவுகள் தியாகபூமி படத்தை பாதித்தன.
படத்தில் இடம் பெற்றிருந்த சில உரையாடல்கள், தேசபக்தி
பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் ஆகியவை காரணமாக
படம் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு –
பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் இந்த படத்தை திரையிட தடை
விதிக்க முடிவு செய்தது.

ஆனால், தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு இரண்டு
நாட்களுக்கு முன்பே இத்தகவல் வெளியே தெரிந்து விட்டதால்,
படத்தை விடிய விடிய இடைவெளியின்றி, மக்களுக்கு
இலவசமாக காட்ட எஸ்.எஸ்.வாசனும், டைரக்டர்
கே.சுப்பிரமணியமும் ஏற்பாடு செய்தனர்.

மக்கள் வெள்ளம் திரண்டு தியேட்டர்களின் வாசலில் மொய்த்தது.
மக்கள் திரளால் சென்னை கெயிட்டி தியேட்டரின் சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்த சம்பவமும் நடந்தது. அப்போது விதிக்கப்பட்ட
தடை, பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திரத்திற்கு பின் தான்
அகற்றப்பட்டது.
( இதில் உள்ள சில தகவல்களுக்காக பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி .. )

———————————————————-

என் குறிப்பு –

கல்கி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ். வாசன் ஆகிய
இருவருமே – என் அப்பாவின் சுதந்திரப் போராட்ட காலத்திய
நண்பர்கள் என்பதை என் அப்பா சிறு வயதிலேயே,
(நாங்கள் வடக்கே இருக்கும்போது ) என்னிடம் சொல்லி
இருக்கிறார். அப்போதெல்லாம் அது பற்றி நான் பெரிதாக
சிந்திக்கவில்லை.

ஆனால், நான் வளர்ந்த பிறகு, என் அப்பா 1945-க்குப் பிறகும்
சென்னையிலேயே தன் வாழ்க்கையை தொடர்ந்திருந்தால்
எனக்கு எப்பேற்பட்ட அற்புதமான தொடர்புகள் எல்லாம்
கிடைத்திருக்கும் என்பதை நிறைய தடவை எண்ணிப்
பார்த்திருக்கிறேன்…!!! (கடைசியாக – இன்று கூட…!!! )

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to தடை விதிக்கப்பட்ட “தியாக பூமி”..யும் – கல்கியும், எஸ்.எஸ்.வாசனும்…!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  மிகவும் வித்தியாசமான விஷயங்கள்.
  நமக்குத் தெரியாத நம் கதை.
  படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
  இந்த மாதிரி பழைய செய்திகளை அதிகமாக
  எழுதுங்கள் சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.