13. 03. 1928 – 04/09/2019 : காலம் போடும் கோலம்…!!!


சில விஷயங்களில் காலம் போடும் கோலங்கள் எத்தகைய
மாறுதல்களை எல்லாம் நமது சமூகத்தில் ஏற்படுத்தி
விடுகின்றன…!!!

ஒரு காலத்தில் நமக்கு மிக முக்கியமாகத் தோன்றியவை
எல்லாம் இன்று அர்த்தமற்றுப் போய் விட்டன.

அந்தக் காலத்தில், நினைத்துப் பார்க்கவே முடியாத சில
விஷயங்கள் எல்லாம் இப்போது சர்வ சகஜமாக நடந்து
கொண்டிருக்கின்றன.

———————-

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள்,
1895-ல், தனது 23-வது வயதில், திருச்சிராப்பள்ளியில்,
சட்டக்கல்வியை முடித்த பிறகு, ஒட்டப்பிடாரத்தில்
வக்கீலாக பணியைத் துவக்கினார்.

பிறகு சென்னை வந்த அவர், ராமகிருஷ்ணா மடத்தைச்
சேர்ந்த துறவி ராமகிருஷ்ணானந்தரைச் சந்தித்தார்.
“இந்த தேசத்திற்கு எதாவது செய்யுங்கள்” என்று
சொல்லிய அந்தத் துறவி, அவரை சுப்ரமணிய பாரதிக்கு
அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் பாரதியாரும், வ.உ.சியும் மிகச்சிறந்த நண்பர்கள்
ஆயினர்.. பிறகு, இவர்களுடன் சுப்ரமணிய சிவாவும்
சேர்ந்துக் கொள்ள மூவருமே – சுதந்திர போராட்ட காலத்து –
முந்தைய தலைமுறைத் தலைவரான – கோகலேயின் சீடர்கள்
ஆயினர்…

இதெல்லாம், காந்திஜி – மஹாத்மா ஆவதற்கும்
முன்னர், அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே
நிகழ்ந்தவை.

பின்னர், இந்த மூன்று பேரும் சுதந்திர போராட்டத்தில்
ஆற்றிய பங்கு நாம் அறிந்ததே… இரட்டை ஆயுள் தண்டனை
கொடுக்கப்பட்டும், வக்கீல் தொழில் செய்யும் உரிமை
பறிக்கப்பட்டும், சிறையில் தள்ளப்பட்டு சொல்லொணாக்
கொடுமைகளுக்கு உள்ளான வ.உ.சி. அவர்கள் பிற்பாடு
தண்டனை குறைக்கப்பட்டு, சிறையிலிருந்து வெளிவரும்போது,
மிகவும் உடல்நலம் குன்றி இருந்தார்…

வ.உ.சி. திருநெல்வேலிக்கு திரும்ப வர வெள்ளையர் அரசு
தடை விதித்திருந்ததால், தன் மனைவியோடும், 2 மகன்களோடும்
சென்னைக்கு வந்தார்… பிழைப்பிற்கு – மளிகை சாமான்கள்
விற்றும், மண்ணெண்ணை விற்றும் தொழில் செய்தார்…

பின்னர் கோவைக்கு நகர்ந்தவர், தன்னை மீண்டும் வக்கீல்
தொழில் புரிய அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு
போட்டார்….அவர் மீது இரக்கம் கொண்ட வெள்ளைக்கார ஜட்ஜ்
(Judge E.H. Wallace), அவருக்கு மீண்டும் வக்கீல் தொழில்
புரியவும், திருநெல்வேலி திரும்பவும் அனுமதி கொடுத்தார்….

ஓரளவு தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்னர்,
வ.உ.சி. அவர்கள் தனது 56-வது வயதில், 13. 03.1928 அன்று,
மாலை 6 மணிக்குக் காரைக்குடி காந்தி செளக்கத்தில்
சிவஞான யோகிகள் தலைமையில் ஆற்றிய உரையை
வலைத்தளத்தில் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.

இந்த தளத்து வாசக நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள
வேண்டும் என்று தோன்றியது… அதன் சில பகுதிகளை கீழே
தருகிறேன்….

———————————————————————————

” கல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் ”

—————–

தலைவர்களே! சீமான்களே! சீமாட்டிகளே ! நமது தேசத்தில்
இப்பொழுது கல்வி கற்பிக்கும் முறை பொருத்தமானதாயில்லை.

அதனைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டுவரத் தலைவர்கள்
ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள், அம்முடிவை நீங்கள்
நன்கு ஆராய்ந்து நன்மையெனத் தோன்றும் பட்சத்தில் அதனைக்
கவர்மெண்டுக் கலாசாலைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்கள்
ஏற்படுத்தியுள்ள கலாசாலைகளிலும் நடைமுறைக்குக்
கொண்டுவர முயற்சியுங்கள். புதிதாக ஏற்படுத்தப்பெறும்
கலாசாலை, பாடசாலைகளிலும் இத்திருத்தங்களைச்
செய்ய வேண்டும்.

நம் தேசத்தினர் கலாசாலைகளில் படித்து வெளிவந்தவுடன்
கவர்ன்மெண்டு உத்தியோகங்கட்கும், கிளர்க்கு வேலைகட்கும்
முயற்சி செய்கின்றனர். அவர்கள் அவ்வேலைகட்கன்றி
வேறு வேலைகட்கு உபயோகமானவர்களாக இருக்கவில்லை.

கவர்ன்மெண்டிலும் எத்தனை பேருக்குத்தான் உத்தியோகம்
கிடைத்தல் கூடும்?

இந்தியாவில் ஸ்கூல்பைனல் பரீட்சையில் தேறியவர்கட்கு
எத்தனை பேருக்கு உத்தியோகம் கிடைக்கிறதென்று
கணக்கிட்டால், ஆயிரத்துக்கு ஒரு பேரும்,
எப்.ஏ., பி.ஏ., எம்.ஏ.,க்களில் ஆயிரத்துக்கு இருபத்தைந்து
பேருக்குமேல் உத்தியோகம் கிடைப்பதில்லை. மற்றவர்க்குப்
பிழைப்புக்கு வழியில்லாமலிருக்கிறது.

வக்கீல் உத்தியோகத்தில் எனக்குள்ள அனுபவத்தைக்
கூறுகிறேன். 1924-ஆம் வருஷத்தில் மீண்டும் நான் வக்கீல்
தொழிலில் புகுந்தேன். அப்போது சராசரி மாதம்
ரூபாய் ஆயிரம் எனக்கு வரும்படி வந்தது. அவ்வமயம்
இருபது வக்கீல்கள் என்னுடனிருந்தனர். இப்பொழுது
நாற்பது வக்கீல்கள் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது
மாதம் ரூபாய் நானூறு, ஐந்நூறுதான் வருகின்றது.
பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைக்குக் காரணம்
உத்தியோகமென்றே கூறலாம்.

தொழிற்கல்வி

நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும்.

பணமுள்ளவர்கள் தேச்சரித்திரம், பூகோள சாஸ்திரம்,
தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுதற்கு
வேண்டிய கல்வியைக் கற்கலாம்.

சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும், பேசவும்.
அவசியமானால் உபந்யாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக்
கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்க வேண்டும்,
தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள
விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப்
போதிக்க வேண்டும்.

நன்செய், புன் செய், தோட்டம் ஆகிய வற்றில் மாணவ
மாணவிகளுக்குப் பயிற்சியளித்தல் அவசியமாகும். எல்லா
விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல்
அவசியமாகும், ஆனால் அவர்கள் அதற்குத் தகுதி
யுடையவர்களா என்று பார்க்கின், இல்லை. ஏன்?
அவர்கட்குக் கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்குக்
கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

புஞ்சை, நஞ்சைகளில் வேலை செய்வதற்குக் கூட கல்வி
அவசியமாவெனக் கேட்கலாம்.

இருபது வயதுவரை வெயிலில் நின்று வேலை செய்யாத
பழக்கத்தால், இருபது வயதுக்கு மேல் நன்செய். புன்செய்
ஆகியவற்றில் வேலை செய்தல் கஷ்டமாக இருக்கின்றது.
எனவே, சிறு வயதிலேயே அப்பயிற்சியை அளித்தல் வேண்டும்.,

நான் ஜெயிலில் இருக்கும் பொழுது மீண்டும் வக்கீல் தொழில்
செய்வதில்லையென்று சத்தியமும் செய்து கொள்வதுண்டு,
ஆனால் வெளியில் வந்து பத்திரிகை ஆபிசில் உதவி
ஆசிரியனாக இருந்தேன். நெய் வியாபாரம் செய்தேன்.
ஆனால் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

எனக்கு நிலங்கள் உண்டு. எனினும், சிறு போழ்தில்
வெயிலில் வேலை செய்து பழக்கமின்மையால், விவசாயம்
செய்து ஜீவிக்க முடியவில்லை. என் மனைவி மக்களும்
அவ்வாறே இருக்கின்றார்கள். என் செய்வது..!

இனி, கலாசாலைகளில் ஒருமணி நேரம் தொழிற் கல்வியும்
கற்பித்தல் வேண்டும். கைத் தொழில், விவசாயம்
ஆகியவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்தல் அவசியமாகும்.

ஆதித்திராவிடர்கள்

நேற்று ஸ்ரீமான் மெய்யப்ப செட்டியார் (ஜெயங் கொண்டபுரம்
மெ.ராம. மெ.) அவர்களால், ஆதித் திராவிடர்களுக்காக
வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக் கூடத்தையும்,
மேல் ஜாதியாருக்காக வைக்கப் பெற்றிருக்கும் பள்ளிக்
கூடத்தையும் பார்த்தேன். ஆதித் திராவிட பள்ளிப் பிள்ளைகட்கு
வேட்டி வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்னும் வேண்டும்
சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறார்கள்.

எனினும் அங்குக் கொடுக்கப்படும் கல்வி முறையைக்
கண்டபொழுது எனக்கு ஒரு சந்தேக முண்டாயிற்று.
அதனை இங்கும் தெரிவிக்கிறேன்.

தனவைசியர்கட்குப் பணமுடை யில்லாதிருக்கலாம்.
அவர்கள் நாற்பதினாயிரம் ஜனங்கள்தான், மற்ற ஜனங்கள்
அவ்வாறில்லை, எனவே, அவர்களுக்குத் தொழிற்கல்வி
போதிக்க வேண்டும். அத்தொழிலில் வரும் வரும்படியை
அவர்கள் பெற்றோர்கட்குக் கொடுத்துவிடலாம்.

ஆதித் திராவிடர்கள் நன்கு படித்துவிட்டாலும் உத்தியோம்
கிடைத்தா லல்லாவா சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்?

படித்தவர்கள் எல்லோருக்கும் உத்தியோகம் கிடைத்து விடுமா?

ஒவ்வொரு கலாசாலையிலும், குருகுலம் போல தோட்டம்,
நன்செய், புன்செய் முதலியன ஏற்படுத்தித் தொழிற்கல்வி
போதிக்க வேண்டும்.

ஆதித் திராவிட மாணவர்கட்குப் பன்னிரண்டு மணி வரை
விவசாயமும், அதற்குமேல் பாஷா ஞானமும் போதிப்பது
மேன்மை தரும்.

பணமில்லாமல் ஒருவனும் ஒரு வேலையும் செய்ய முடியாது.

தரித்திரனாக ஒருவன் இருப்பானாயின் அவன் அறிவு
திறம்பட வேலை செய்வதில்லை. அரசாங்கத்தாரால்
அனைவருக்கும் உத்தியோகம் கொடுக்க முடியுமா
என்பதுபற்றி நான் ஒன்றும் கூற முடியாது.

அரசியல் விஷயங்களைக் குறித்து நான் ஒன்றும் இப்பொழுது
அதிகமாய்ப் பேசுவதில்லை. சாரமாகச் சொல்வதுண்டு.

அரசியலைப் பற்றிப் பேச நண்பர்களான திரு ரங்கசாமி
ஐயங்கார், சத்தியமூர்த்தி அவர்களே தகுதியுடையவர்கள்.
ஏனென்றால், சில சமயங்களில் பொய் பேச நேரலாம்,
புகழும்படி நேரலாம். எனவே நான் அதற்குச் சிறிதும்
அருகனல்ல. நான் பேசினேனானால் “ஸ்பிரிட்’ உண்டாகிவிடும்.
உடனே என் மனதில் உள்ளன வெல்லாம் வெளியில்
வந்துவிடும்.

உடனே இன்னும் நான்கு வருஷமோ, நாற்பது வருஷமோ.
ஜெயிலுக்குப் போகவேண்டுவதுதான். பின்னர் என் பெண்டாட்டி,
பிள்ளைகளெல்லாம் சாப்பாட்டிற்குத் திண்டாட வேண்டியதுதான்,

பொருளில்லாமல் ஒரு வேலையும் செய்ய முடியாது. அதற்குத்
தொழிற்கல்வி, விவசாயம் கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

சட்டசபை மெம்பர்களிடம் சொல்லிக் கட்டாயமாக விவசாயம்,
கைத்தொழில் ஆகியவற்றைப் போதிக்க வேண்டுமென்று மசோதா
கொண்டு வரச் செய்யுங்கள். அதனை அவர்கள் செய்யாவிட்டால்,
அடுத்த தேர்தலில் அவர்கட்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள்,

தன வைசியர்கள் கலாசாலை போன்றவைகளுக்குப்
பொருள் நல்குவது சந்தோஷத்தைத் தருகின்றது. ஆனால்,
பணத்தைப் பிறரிடம் தொடுத்தால் எடுத்துக் கொண்டு
விடுவார்களோ என்று பயப்படக் கூடாது. எனினும்

வறுமையுடையவனிடம் பணப்பொறுப்பை விடுதல் தகாது.
ஏனெனில், தனக்குத் தேவையிருக்கும்போது அப்பணத்தை
உபயோகப்படுத்தி விடுவான்.

பெண்மக்கள் நிலை

நம் நாட்டில் பெண்மக்களைச் சமைக்கும் இயந்திரமாகச்
செய்து விட்டனர். இந்நாட்டில் இது இல்லையென எண்ணுகிறேன்.

பிள்ளைபெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம்.
நம்மைப் போல் பெண்கட்கும் சமஉரிமை இருத்தல் வேண்டும்.
எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல்
அவசியமாகும்.

ஆனால், அவர்கள் அதற்குத் தகுதியுடைவர்களா என்று
பார்க்கின், இல்லை.. ஏன்? அவர்கட்குக் கல்வி இல்லாமையே.
எனவே பெண்கட்குக் கல்வி கற்பிக்க வேண்டியது
அவசியமாகும்,

இந்நாட்டில் மனைவியோடு பேசுவது கஷ்டமென்று எனது
நண்பர் சொன்னார். இது மிக மோசமானது. பெண்களும் தங்கள்
கணவர்களை நன்கு மதித்து நடக்க வேண்டும்.

எச்சில் இலையில் சாப்பிடும் வழக்கம் எங்கள் ஜாதியில்
உண்டு. இங்கு உண்டோ என்னமோ தெரியவில்லை.
(உண்டு, உண்டு என்று ஜனங்கள் கூறினர்.) பிராமண
வீட்டிலும் இருக்கிறதா? (இருக்கிறது – என்றனர்.)
நாகரிகமில்லாதவர் என்பவரிடத்தில் கூட
இக்கொடுமை இல்லை ,

அயலூருக்கு விருந்துக்குப் போயிருந்தாலும், ஆயிரம்பேர்
சாப்பிட்ட இலைகளில் என் இலையைத் தேடிப் பார்த்து
அதிலேயே என் மனைவி சாப்பிடவேண்டும். அதில் மண்
விழுந்திருக்கும். இன்னொருவருடைய இலையில் அப்பளங்கள்
விழுந்திருக்கலாம். அவைகளைக் கவனிப்பதில்லை.
எச்சில் இலையை நாய்களன்றோ தின்னும்?
முருங்கைக் காயைக் கடித்து மென்று தின்று விட்டுத்
துப்பியிருப்பேன்; (சிரிப்பு) அதில் உண்ண வேண்டும், அப்படி
யில்லாவிட்டால் புருஷன்மேல் பற்றில்லாதவளென்று
கூறப்படுகிறது.

எச்சிலிலையில் சாப்பிடாவிட்டால், “புருஷன் இலையில்
சாப்பிடாத தேவடியாள்’ என்று சொல்லுகின்றனர்.

எனக்குக் கல்யாணம் ஆனது முதல், எச்சில் இலையில்
உண்ணக் கூடாது என்று என் மனைவிக்கு உத்தரவிட்டு
விட்டேன். பெண்கட்கும் சம சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
ஆனால், கல்வி இல்லாத அக்காலத்தில் தீர்ப்பளிக்கும்
உரிமை புருஷனிடம் இருக்கவேண்டும். உரிமை பெறப்
பெண்கள் போராடுதல் வேண்டும்.

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 13. 03. 1928 – 04/09/2019 : காலம் போடும் கோலம்…!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  அவசியம் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள்.

 2. venkat சொல்கிறார்:

  Amazing speech for this age! Now please compare this with the new education policy. One thing is sure, from time to time we need to upgrade/change/adapt to the current reality. This change is not easy to digest but only those to digest and accept will move forward. In the US, few years back the education policy and methods were drastically revised after seeing Asian kids over taking US kids in several areas. Now STEM ( Science, Tech, Engineering and Math ) are given importance in all schools where white kids are majority. Many parents opposed to this saying this will stress the kids, elevate depression etc., But government moved on and kids are adjusting to new reality.

  Thanks KM sir. only by bringing such old time conversation, letter, speech etc., one can understand the history and most importantly, accept that ‘change is the only permanent thing’

 3. புவியரசு சொல்கிறார்:

  .“The devil can cite Scripture for his purpose.
  An evil soul producing holy witness
  Is like a villain with a smiling cheek,
  A goodly apple rotten at the heart.
  O, what a goodly outside falsehood hath!”

  ― William Shakespeare,

 4. Karthik சொல்கிறார்:

  Arumai. Kaneer vandhu vittathu.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.