பாஜக தலைமைக்கு “புத்தி…..”…? சொல்லும் அமைச்சரவை சகா …!!!


மத்திய பாஜக கூட்டணி அரசின் ஒரு முக்கிய பங்காளியான
சிவசேனா கட்சி, நாட்டில் சீரழிந்திருக்கும்
பொருளாதார நிலை குறித்து அதிர்ச்சியும், கவலையும் கொண்டு,
தனது பார்ட்னரான பாஜக தலைமைக்கு சில ஆலோசனைகளை
கூறியுள்ளது….!!!

சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே கூறியிருப்பது குறித்து
ஹிந்து தமிழ் தளத்தில் வந்திருக்கும் செய்தியிலிருந்து –

https://www.hindutamil.in/news/india/514155-shiv-sena-backs-manmohan-singh-says-he-understands-india-s-economy.html

——————————————-

நடப்பு நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி
5 சதவீதமாகச் சரிந்தது. ஆட்டோமொபைல் துறையின்
விற்பனை தொடர்ந்து 3-வது மாதச் சரிவை நோக்கி சென்று
கொண்டிருக்கிறது.

நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் 8 முக்கியத் துறைகளின்
உற்பத்தியும் 2.1 சதவீதமாக ஜூலை மாதத்தில் உள்ளது.

இதுதொடர்பாக அந்தக் கட்சி்யின் மூத்த தலைவரும்,
பொருளாதார வல்லுநரும், முன்னாள் பிரதமருமான
மன்மோகன் சிங் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டார்.
அதில் ” நாட்டின் பொருளாதாரம் இன்று ஆழ்ந்த,
வேதனையளிக்கும் விதத்தில் இருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி
5 சதவீதமாக இருப்பது, வளர்ச்சி குறைந்திருப்பதைக்
காட்டுகிறது.

வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு
தகுதியானது நமது தேசம். ஆனால் அனைத்து
வகையிலும் மோடி அரசின் தவறான, மோசமான
நிர்வாகத்தால் இந்தப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு
ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அரசின் கொள்கைகளின் விளைவால்,
வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் 3.50 லட்சம் பேருக்கும்
அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.

பழிவாங்கும் அரசியலைத் தூரவைத்து விட்டு, அனைத்து
விவேகமுள்ளவர்களின் ஆலோசனையை ஏற்று, சிந்தித்து,
நம்முடைய பொருளாதாரத்தை மனிதத் தவறுகளில்
இருந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசை
வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான
சாம்னாவில் மன்மோகன் சிங் கருத்தை ஆதரித்து தலையங்கம்
வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

”பொருளாதார மந்தநிலை காரணமாக, நாட்டில் மிகப்பெரிய
பொருளதாரச் சிக்கல் வரப்போகிறது என்று சில ஆண்டுகளுக்கு
முன் முன்னாள் பிரதமர் மனமோகன் சிங் எச்சரித்து இருந்தார்.

மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார
சூழலையும் நன்கு அறிந்து, எந்தவிதமான வெறுப்பு,
விருப்பின்றித்தான் பேசுகிறார்.

தேசத்தின் பொருளாதாரம் சரியான பாதையில்
செல்லவில்லை, மோசமாக இருக்கிறது என்று கூறும்
மன்மோகன் சிங்கின் வார்த்தை மீது நாம் நம்பிக்கை
வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல்
மத்திய அரசு மன்மோகன் சிங் என்ன எச்சரிக்கை
விடுக்கிறாரோ, என்ன அறிவுரை கூறுகிறாரோ
அதைக் காது கொடுத்து கவனிக்க வேண்டும்.

பொருளாதாரம் உற்சாகம் இழந்து மந்தநிலையில்
இருக்கிறது. காஷ்மீர் விவகாரமும், பொருளாதார
மந்தநிலையும் வெவ்வேறான விஷயங்கள்.

ஆளும் அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கூட
பொருளாதார வளர்ச்சிக் குறைவு என்று சொல்பவர்களுக்கு
எதிராகப் பேசலாம். ஆனால் முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங் வார்த்தைகள் அனைத்தும்
உண்மையைச் சொல்லும் வெடிகுண்டுகள்.

மன்மோகன் சிங் போன்ற தேர்ந்த பொருளாதார வல்லுநர்,
பொருளாதார மந்தநிலையில் அரசியல் செய்யமாட்டார்கள்.

பொருளாதாரச் சூழலைச் சரிசெய்வதற்கான ஆலோசனையை
தான் வழங்குவார்கள். தேசத்தின் நலன் கருதி
மன்மோகன் சிங் கூறும் ஆலோசனைகளை, அறிவுரைகளை
மத்திய அரசு கேட்க வேண்டும்.

தேசத்தின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில்
35 ஆண்டுகளுக்கும் மேலாக மன்மோகன் சிங் தொடர்பில்
இருந்து வருகிறார். நாட்டின் பொருளாதாரம் குறித்துப்
பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு மன்மோகன் சிங் குறித்து
பிரதமர் மோடி பேசுகையில், மழைகோட் அணிந்துகொண்டு
மன்மோகன் சிங் குளிக்கிறார் என்றார்.

ஆனால், எங்களுக்கு மன்மோகன் சிங் மீது
எந்த வருத்தமும் இல்லை. மன்மோகன் சிங்
பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர். நாட்டின்
பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தபோது,
அவரின் கடினமான முயற்சியால், மீண்டும்
நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தவர்.

பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும் பொருளாதாரச்
சரிவுக்கு முக்கியக் காரணம். பண மதிப்பிழப்பு தோல்வி
அடைந்துவிட்டது.

ஜிஎஸ்டி வரி தொழில் துறையினரையும்,
வர்த்தகர்களையும் கழுத்தை இறுக்கிப் பிடித்து,
தொழில்துறையை அச்சுறுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜக தேர்தலில்
வெற்றி பெறுவது குறித்தும், குதிரை பேரத்திலும் மட்டுமே
கவனமாக இருந்ததால், பொருளாதாரம் உற்சாகம்
இழந்துவிட்டது. ஆதலால், இந்த விஷயத்தில் அரசியல்
செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை அரசு கேட்க வேண்டும்”.

———————————————————————————

– இந்த அட்வைசின் மூலம் உதவ் தாக்கரே
என்ன எதிர்பார்க்கிறார்…? உதவ் தாக்கரேவுக்கு கொஞ்சமாவது
“புத்தி” வேண்டாமா…? தான் சொல்வதை பாஜக தலைமை
கேட்கும் என்று நிஜமாகவே அவர் நம்புகிறாரா…?

யாருக்கு, யார் புத்தி சொல்வது…?
பாஜக தலைமைக்கு உதவ் தாக்கரேயா…?
உதவ் தாக்கரே சொல்லி கேட்கும் நிலையிலா
பாஜக தலைமை இருக்கிறது…?

மேலும், பாஜகவில் ஏற்கெனவே அறிவாளிகளுக்கா பஞ்சம்…?
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை விடவா…?
அவர் கதியை பார்த்தாவது தாக்கரே –
புரிந்துகொள்ள வேண்டாமா…?

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பாஜக தலைமைக்கு “புத்தி…..”…? சொல்லும் அமைச்சரவை சகா …!!!

  1. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    தனக்கு எல்லாமும் தெரியும் என்று தன்னைத்தானே நம்புவதால் வந்த வினை, விருப்பு வெறுப்பின்றி நாட்டின் நலன் கருதி தகுதியான திறமையானவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும், ஏழை சொல் அம்பலம் ஏறாது எனும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது

  2. Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! நம் தேசம் பலவித சூழ்நிலைகளில் இருந்தாலும் … ஒரு சில அர்ப்பணிப்பாளர்களை நினைவு கூறும் விதமான நன்னாள் இன்று — கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள்பிறந்த நாள் — அன்னை தெரசா நினைவு நாள் — சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் … ! இம்மூன்று முக்கியமானவர்களை கொஞ்சமாவது நினைவு கூர்ந்தால் எல்லாம் நன்மையே …!!

    அதிலும் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வப்பள்ளியாரின் பிறந்த நாளை… ” ஆசிரியர் தனமாக ” கொண்டாடுவதில் தனி சிறப்பு உண்டு .. அந்த ஆசிரியர் தனத்தைப்பற்றி
    முனைவர் கமல. செல்வராஜ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை … மிகவும் அருமை … பார்வைக்காக :–

    // ஆசிரியர்கள் கடவுள்களை உருவாக்குபவர்கள் – ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை // https://tamil.indianexpress.com/lifestyle/teachers-day-sarvepalli-radhakrishnan-birthday-teachers-day-essay/

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      இவர்கள் மூவருமே அவசியம் நினைவுகூறப்பட வேண்டியவர்களே.

      ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவர்கள்.

      சுதந்திரப் போராட்ட வீரர் /தியாகி – வ.உ.சி. அவர்கள்…
      மனித குலத்திற்கு சேவை செய்யவே பிறந்த
      அன்னை தெரசா அவர்கள்…
      கல்வி, பண்பாடு, உயர் குணம் –
      ஆகியவற்றிற்கான சிறந்த
      எடுத்துக்காட்டாக டாக்டர் ராதாகிருஷ்ணன்
      அவர்கள்.

      அவர்களைப் போன்ற உத்தமர்கள் மீண்டும்
      இந்த மண்ணில்பிறந்து வந்து
      இந்த நாட்டை நல்வழிப்படுத்த
      வேண்டுவோம்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.