சர்-ராமசாமி முதலியார் சத்திரம், குதிரை-டிராம், ஜட்கா ….


வடக்கே “டோங்கா”

நவீன தொழில் நுட்பங்கள், டெக்னாலஜியின் வளர்ச்சி
ஆகியவை நமது வாழ்க்கையை மேலும் மேலும்
வசதியாகவும், சௌகரியமாகவும், மேம்பட்டதாகவும்
ஆக்கினாலும் –

அந்தக்கால ( 60-70 ஆண்டுகளுக்கு முந்தைய ) வாழ்க்கையில்
இருந்த நிம்மதியும், கூட்டுக் குடும்ப சந்தோஷமும்,
உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும்,
அக்கம்பக்கத்தினரிடையேயும் இருந்த நெருக்கமும் –

இப்போது நினைத்துப்பார்த்தாலும், ஆச்சரியத்தையும்,
சந்தோஷத்தையும் அளிக்கிறது என்பதை, அவற்றை
அனுபவித்தவர்கள் உணர்வார்கள்.

வாழ்க்கைத் “தரம்” என்பது எது…?
வசதிகள் கூடிய வாழ்வா அல்லது
“தரமான” மனிதர்களுடனான வாழ்வா…?

( என்னை இந்த இடுகையை எழுதத்தூண்டியது,
அந்தக்காலத்து “மெட்-ராஸ்” பற்றிய சில அடிப்படைத்
தகவல்களை வைத்து – தினமலர்.. ஜோல்னாபையன்
எழுதிய ஒரு கட்டுரை… அந்த கட்டுரையிலிருந்து
நிறைய செய்திகளை இங்கே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
அதற்காக அவர்களுக்கு நன்றி… )

—————

கிழக்கு இந்திய கம்பெனி சென்னையில் வந்திறங்கிய சமயத்தில்,
ஆங்கிலேயர்கள், சென்னையில் தங்களின் போக்குவரத்திற்கு,
பல்லக்கு, மாட்டு வண்டி, குதிரை மற்றும் குதிரை வண்டி
போன்றவற்றையே பயன்படுத்தினர்.

அந்தக்கால சென்னை மாகாணத்தில் உள்ள –
முக்கிய நகரங்களுக்கு இடையே சாலைகள் போடப்பட்ட பின்,
போக்குவரத்து அதிகரிக்கத் துவங்கியது.

ரயில் கண்டுபிடிக்கப்பட்டு, ராயபுரம் மற்றும் சென்ட்ரல்
ரயில் நிலையங்கள் வந்த பின், வெளியூர்களிலிருந்து, சென்னை
வருவோரின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.

ரயில் நிலையங்களில் வந்திறங்கியவர்களுக்கு வரப்பிரசாதமாக
வந்தவை தான், ஒற்றை குதிரை பூட்டிய, ஜட்கா வண்டிகள்.

நம்ம ஊர் ஜட்கா…

இந்த காலத்தில், குடும்பத்துடன் இலவசமாக தங்கும் வசதி
எந்த ஊரிலாவது இருக்கிறதா…?

அந்தக் காலத்தில், நல்ல மனம் படைத்த செல்வந்தர்கள்,
குடும்பங்களுடன் பயணம் செய்வோர், புதிய ஊர்களில்,
பத்திரமாகத் தங்குவதற்காக சத்திரங்களை கட்டி வைத்தார்கள்.
சில சத்திரங்களில் இலவசமாக சாப்பாடும் போடப்பட்டது.

ஒரு காலத்தில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில்,
சர் ராமசாமி முதலியார் சத்திரம் என்று ஒன்றிருந்தது.

( இப்போது அதைச்சுற்றியுள்ள இடம் தான் சென்னை
மெட்ரோவின் பாதாள ரெயில் நிலையமாக உருமாறி
இருக்கிறது…. இந்த கட்டிடத்தை மட்டும் “ஹெரிடேஜ் பில்டிங்”
என்று இப்போதும் இடிக்காமல் அப்படியே பத்திரமாக
வைத்திருக்கிறார்கள்….இதை ரெயில் மியூசியமாக மாற்ற
உத்தேசித்திருக்கிறார்கள்….!!! )

1957-ல் வடக்கேயிருந்து சென்னைக்கு வந்த எங்கள் குடும்பம்
இந்த சத்திரத்தில் ஒரே ஒரு நாள் தங்கி இருந்தது இப்போதும்
என் நினைவில் இருக்கிறது…….!!!

அதேபோல், எழும்பூர் ரயில் நிலையம் அருகில்,
கண்ணன் செட்டியார் சத்திரம் இருந்தது.
இப்படி, இன்னும் சில சத்திரங்கள், சென்னை நகரில்
ஆங்காங்கே இருந்தன.

இவை அனைத்துமே இலவச தங்குமிடங்கள்.
புதிதாக மெட் ராசுக்கு வருபவர்களை
அதிக பட்சம் 3 நாட்கள் வரை குடும்பத்துடன்
தங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள். குடும்பத்துடன்
தங்க பாதுகாப்பான இடம்.

இவற்றின் வாசல்களில், நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய
ஜட்கா வண்டிகள் ( வடக்கே இதை “டாங்கா”
என்று கூறுவோம் …) வரிசைகட்டி நிற்கும்.

ஜி.பரமேஸ்வரன் பிள்ளை, ‘நகரங்களின் வினோத
சரித்திரம்’ நுாலில், ஜட்கா வண்டி பற்றி
இப்படி எழுதியுள்ளார்:

இப்போது சென்னையில் சில ஆட்டோக்காரர்கள் செய்யும்
அதே தகிடுதத்தங்களை வேலைகளை, அப்போதைய
சென்னையிலுள்ள ஜட்கா வண்டிக்காரர்களும் செய்திருக்கின்றனர்.
அதிக பணம் கேட்டு அடாவடி செய்வது, வேறு இடத்தில் இறக்கி
விட்டுச் செல்வது போன்றவை, அப்போதே நடந்திருக்கிறது.
இதுபற்றிய செய்திகள், அந்தக் கால பத்திரிகைகளில்
ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் இடம்பெற்றுள்ளன.

வண்டிக்குள், சிறிய இடத்தில் நான்கு பேர், அதிக நெருக்கத்தால்
உட்கார முடியாமல், கால், இடுப்பு வலி பின்னியெடுக்கும்.

மேலும், அவ்வண்டிக்காரர்களிடம், திருவல்லிக்கேணிக்கு
என்று பேசி, வண்டி ஏறினால், திருவல்லிக்கேணி
கடைத்தெருவிலே நிறுத்தி, ‘இதுதான், திருவல்லிக்கேணி
இறங்குங்கள்…’ என்பர். பின், என்ன எடுத்துரைத்தாலும்
அவர்கள் கேட்பதில்லை. நடுவழியில் சற்று இறங்கி,
அந்த வழியாக வந்த நண்பரிடம் பேசி விட்டு வருகிறோம்
என்றாலும் சம்மதிப்பதில்லை.

இவ்விதமான பல காரணங்களால், சச்சரவு உண்டாகி,
சென்னை பட்டணத்தில், ஜட்கா வண்டிகள் விவகாரம்,
போலீசுக்கு போகாத நாளில்லை.

‘இதென்ன வீண் தொல்லையாய் இருக்கிறது…’ என்று, போலீஸ்
அதிகாரிகள், ‘ஜட்கா வண்டிகளுக்கு, இவ்வளவு துாரத்திற்கு
இவ்வளவு கூலி கொடுக்க வேண்டும்; பயணியர் இறங்க
வேண்டிய இடத்திலேயே வண்டியை விட வேண்டும்…’
என்ற விதியை ஏற்படுத்தினர். ஆயினும், மாற்றம் ஒன்றும்
ஏற்படவில்லை.

( இது – இன்றைக்கு 70 வருடங்களுக்கு முந்தைய நிலை…
இப்போது மட்டும் என்ன வாழ்கிறது..?
ஜட்காவுக்கு பதில் இப்போது ஆட்டோக்கள் …
மற்றபடி அதே நிலை தானே…..!!! )

டிசம்பர், 1879ல், ‘ஜனவிநோதினி’ புத்தகத்தில்
உள்ள ஒரு செய்தி:

ஜட்கா வண்டிக்காரர்கள், காந்திஜியையும் விட்டு
வைக்கவில்லை. ‘கோட், சூட்’ போட்டுக் கொண்டிருந்த
காலத்தில், ஒருமுறை சென்னை வந்தார், காந்திஜி.
சென்னை, தம்புசெட்டி தெருவில் இருந்த எழுத்தாளரும்,
பதிப்பாளருமான, ஜி.ஏ.நடேசன் வீட்டிற்கு செல்ல,
ஜட்கா வண்டியில் ஏறினார்.

அந்த ஜட்காக்காரர், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, தம்புசெட்டி
தெருவில், காந்திஜியை இறக்கி விட்டு, அதிக காசு
பிடுங்கி விட்டார்.

இப்படி சண்டை சச்சரவுகள் இருந்தாலும், இத்தகைய ஜட்கா
வண்டிகளைத் தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அரசு பொது மருத்துவமனையிலிருந்து, பிரேதங்களை எடுத்துச்
செல்லக்கூட இந்த வண்டிகள் தான் பயன்பட்டன.

சென்னைவாசிகளுக்கு, அதன்பின், ‘டிராம்’ வண்டி
அறிமுகமானது. அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும்,
‘டிராம்’ வண்டி தான் இருந்தது.

( நீங்கள் யாராவது குதிரை இழுத்துச் செல்லும்
டிராம் வண்டி பார்த்திருக்கிறீர்களா…?
நான் ஒரு நண்பர் மூலமாக கிடைத்த இத்தகைய
ஒரு வீடியோவை சேமித்து வைத்திருந்தேன்…
எங்கே வைத்தேன் என்று நினைவில்லை… உடனடியாக
கண்டுபிடிக்க முடியவில்லை….! தேடிக்கண்டுபிடித்து,
அதையும் இடுகையில் அவசியம் போடுகிறேன்…)

– 1895ல், ‘எலெக்ட்ரிக் டிராம்’கள் ஓட துவங்கின.
டிராமில் கட்டணம் குறைவாக இருந்ததால்,
மக்கள் ஜட்காவை கழற்றி விட்டு, ‘டிராமி’ற்கு மாறினர்.

அதோடு, கை ரிக்-ஷா வண்டிகளும் அதிகமாகி விட்டதால்,
இவற்றையெல்லாம் தாக்குபிடிக்க முடியாமல்,
ஜட்கா வண்டிகள் பட்டணத் தெருக்களில் இருந்து
ஒரேயடியாக மறைந்து விட்டன.
( ஆனல், திருச்சியில், உறையூர் வண்டி ஸ்டாண்டில்
இப்போது கூட குதிரை ஜட்கா வண்டி இருக்கிறது…!!! )

சென்னையின் இன்னொரு அடையாளமாக,
இன்று வரை இருப்பது, ‘மெட்ராஸ் பாஷை!’

மெட்ராஸ் பாஷையின் அழகே, அதன் வேகமும்,
எளிமையும் தான். கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் தெலுங்கு,
கொஞ்சம்உருது என, இந்த பகுதியில் புழங்கிய அத்தனை
மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்தெடுத்து,
தமிழோடு அதைப் பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ் சோறு
மொழி தான், மெட்ராஸ் பாஷை.

அந்தக் காலத்தில், ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய
ரிக்-ஷாக்காரர்கள் தான், மெட்ராஸ் பாஷையின்,
வாத்தியார்கள்.

‘உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா…’ என, அலுத்துக் கொள்வர்.

அதற்குள் ஒரு ஆங்கில சொல் இருக்கிறது என்பதை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த காலத்தில், ஆங்கிலேயர்கள். இங்கிலாந்தில் இருந்து
கப்பலில் வந்திறங்குவர், இன்று, வெளியூர்வாசிகளை
ஆட்டோக்காரர்கள் கையை பிடித்து இழுப்பதை போல,
ரிக் ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்தனர்.

இதனால், கடுப்பான ஆங்கிலேயர்கள், ‘டோன்ட் பேட்ஜர் மீ’ –
‘என்னை நச்சரிக்காதே…’ என்று சொல்லி தவிர்த்திருக்கின்றனர்.

வெள்ளைக்காரன் சொன்ன, ‘பேட்ஜர்’ என்ற வார்த்தையை,
ரிக் ஷாக்காரர்கள், தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று,
‘பேஜார்’ ஆக்கி விட்டனர்….!!!

ஆங்கிலம் மட்டுமின்றி, மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில்
கலந்திருக்கின்றன. ‘பஜாரி’ என்ற சொல், உருது மொழியிலிருந்து
உருவானது. உருதுவில், பஜார் என்றால், சந்தை என்று அர்த்தம்.
இதனால், சந்தைக் கடையில் நின்று சத்தம் போடுபவர்கள்,
சண்டைக்கார பெண்மணிகள் பஜாரி ஆகி விட்டனர்…!!!

‘பேக்கு’ என்பது கூட, உருது மொழியிலிருந்து வந்தது தான்.
‘பேவ கூஃப்’ என்றால், உருது மொழியில், முட்டாள்
என்று அர்த்தம். சென்னைவாசிகள் இந்த, ‘பேவ கூஃபை’
சுருக்கி, ‘பேக்கு’ ஆக்கி விட்டனர்….!!!

ஒரு காலத்தில் -‘வா வா வாத்யாரே ஊட்டாண்ட…’ என்ற
மெட்ராஸ் பாஷை பாடல் (சோ+மனோரமா…),
தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அலறியது
நினைவிருக்கலாம்.

தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை
ரசிக்கப்படுவதற்கு, முக்கிய காரணம், அதில் இருக்கும்
வேகமும், ஒலி நயமும் தான். ‘அடக் படக்,
டிமிக் அடிக்கிற டோலு மையா, டப்ஸா’ போன்ற சொற்களுக்கு
எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும், அந்த ஓசை கேட்பவர்களை,
திக்குமுக்காட வைத்து விடுகிறது.

ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும்,
இன்று பேசப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
ஆனாலும், புது புது சொற்களை அப்படியே அல்லது
நம் வசதிக்கு ஏற்ப உருமாற்றி பயன்படுத்துவது என்ற
பாரம்பரியம் மட்டும், இன்றளவும் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது.

ஆனால், எவ்வளவு பெரிய, வயதான மனிதர்களையும்
சிலசென்னைபிறப்புகள் – “வா, போ, நீ” என்று ஒருமையில்
அழைப்பது இன்றும் கிராமங்களிலிருந்து வருபவர்களுக்கு
அதிர்ச்சி தரும் விஷயமாகவே இருக்கிறது.

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சர்-ராமசாமி முதலியார் சத்திரம், குதிரை-டிராம், ஜட்கா ….

 1. Ganesh சொல்கிறார்:

  Till now, there is one sourashtra choultry at Raghava Chetty Street, Choolai and one can stay there around 3 days.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கணேஷ்,

   உங்கள் தகவலுக்கு நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. D. Chandramouli சொல்கிறார்:

  We cannot forget the movie Sabash Meena wherein Chandra Babu acted as a rickshaw puller, Delightful comedy. He made Madras Bhasa very popular with his excellent delivery and right accent. I was told that he demanded from the movie producer that he should be paid at least one rupee over Sivaji’s payment. Seems that Sivaji had no objection in giving his approval.

 3. c.venkatasubramanian சொல்கிறார்:

  Anything(way of life,lifestyle,-People, technology money,relationship) should give peace of mind-SHANTHI

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.